ஆழியே மெளனம் ஏனோ 14 – 1

மௌனம் -14

‘ஆழினி சிறு வயது முதலே படிப்பில் மிகவும் சுட்டி. பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் ஒவ்வொரு பாடத்தையும் முழு கவனத்துடன் கேட்டு மனதில் பதித்துக் கொள்வாள்.

படிப்பு மட்டுமல்லாமல், பள்ளியில் நடைபெறும் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டுப் போட்டி என எந்தப் போட்டி நடந்தாலும் முதலிடம் பிடிப்பது அவளது வழக்கமாக இருந்தது.

அவளின் திறமையும், விடாமுயற்சியும் ஆசிரமத்தின் மதரின் கவனத்தை ஈர்த்தது. “இந்தப் பெண்ணுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் மிகப் பெரிய இடத்தை அடைவாள்,” என்று எண்ணியவர், அவளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தார்.

ஆனால் அதற்கான வசதி இல்லாததால் மனதில் வருத்தத்துடன் நாட்களைக் கடத்தினார்.

அந்த நேரத்தில்தான் முதன்முறையாக செழியனின் பிறந்தநாளிற்காக, அவர்களின் குடும்பம் அந்த ஆசிரமத்திற்கு வந்ததனர்.

அங்கிருந்த குழந்தைகளுடன் நேரம் செலவிட்டவர்கள், அனைவருக்கும் உணவு, உடை, பரிசு என தேவையான உதவிகளைச் செய்தனர்.

இனியன், “ ரொம்ப மனதுக்கு நிறைவா இருக்குங்க.” என்றவர், அவரிடம் ஒரு பெரிய தொகையை டொனேஷனாக வழங்கினார்.

அப்போது மதர், “நீங்கள் ஆசிரமத்திற்கு உதவி செய்றது மிகவும் நல்ல விஷயம். அத்தோடு இன்னொரு உதவியும் செஞ்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும்‌.” என்றுத் தயக்கத்தோடு கூறினார்.

கவிதாவோ,“ என்ன உதவினு சொல்லுங்க மதர். எங்களால முடிஞ்சதை செய்றோம்.” என்றார்.

நான்கு, ஐந்து பெண்களுக்கு சீரியஸாக ஏதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பத்து வயதான ஆழினியை காட்டி,

மிகவும் திறமையான குழந்தை. நல்ல பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தால் எங்கேயோ உயர்ந்து நிற்பாள். நீங்க மட்டும் அவளது படிப்பிற்கு ஸ்பான்சர் செய்தால், அவளுடைய எதிர்காலமே மாறிவிடும்.

பொதுவா ஆசிரமத்திற்கு உதவுவதற்கு நிறைய பேர் வருவாங்க. பிறந்தநாள், கல்யாண நாள், நினைவுநாள்னு சாப்பாடு, டிரஸ், பணம்னு ஏதாவது குடுப்பாங்க.

அது இல்லனாலும் நாங்க எப்படியாவது மேனேஜ் பண்ணிப்போம். இருக்கிறது வச்சு வாழ இந்த குழந்தைகளையும் பழக்கியிருக்கோம்.

ஆனால் படிப்புன்றது இடைவிடாமல் தரமானதாக இந்த பொண்ணுக்கு கிடைச்சா இந்த பொண்ணோட எதிர்காலம் நல்லா இருக்கும்னு தோணுது. அதான் கேட்கிறேன். உங்களால முடிஞ்சா உதவி செய்யுங்க. இல்லன்னா விட்டுடுங்க. பரவாயில்லை மிஸ்டர் இனியன்.” என்றுக் கூறினார்.

சற்று தள்ளியிருந்த அந்தச் சிறுமியின் முகம் தெளிவாகக் தெரியவில்லை என்றாலும், ஒருக் குழந்தையின் கல்விக்காக உதவிக் கேட்கும் போது அவர்களாலும் மறுக்க இயலவில்லை. அந்த உதவியும் அவர்களால் முடியாததும் இல்லை. எனவே

“அவளுடைய படிப்பை நாங்களே பார்த்துக்குறோம்,” என்று இருவரும் ஒரு சேர கூறினர்.

அதைக் கேட்ட மதரின் கண்கள் நன்றியால் கலங்கின.

“ரொம்ப நன்றி தம்பி. நல்ல பள்ளி பார்த்து, கட்டணம் குறைவாக இருக்கும் இடத்தில் சேர்க்கலாம். நான் விசாரிச்சிட்டு சொல்றேன். அதுக்கப்புறம் நீங்க ஸ்பான்சர் பண்ணினால் போதும்,” என்றார்.

இனியனோ,”அதெல்லாம் வேண்டாம் மதர். எங்க பசங்க படிக்கிற அதே பள்ளியிலேயே அந்தப் பொண்ணையும் சேர்த்துவிடலாம். நான் அந்த ஸ்கூல் ப்ரின்ஸிபல் கிட்ட பேசிடுறேன்.” என்றார்.

அதன்படியே ஊட்டியில் உள்ள பிரபலமான பள்ளியில் ஆழினியை சேர்த்து வைத்தார்.

வீட்டிற்கு திரும்பிய செழியன், நடந்ததை தன் தாய் லட்சுமியிடம் கூறினான்.

அதை கேட்ட லட்சுமி சற்றுக் கடுமையாக,

“பணம் கொடுத்து உதவி பண்ணது சரி. அதுதான் நம்மால முடிஞ்ச நல்ல காரியம். ஆனால் அந்தப் பொண்ணை நம்ம பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ல எதுக்கு சேர்க்குற?
அப்புறம் நம்ம பிள்ளைகளோட பழகி உறவு வச்சுக்க போகுது.
எதுக்கு இந்தச் தேவை இல்லாத வேலை எல்லாம் பார்க்குறீங்க?” என்றார்.

“அம்மா அந்தப் பொண்ணு யாருன்னே எங்களுக்கேத் தெரியாது. அந்தப் பொண்ணுக்கும் எங்களைத் தெரியாது. நீங்களா ஏதாவது கற்பனைப் பண்ணிக்காதீங்க.” என்றார்.

அந்த வார்த்தையில் சமாதானம் ஆன லட்சுமி அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

ஆனால் விதி அமைதியாக ஒரு பந்தத்தை உருவாக்கியிருந்தது.

ஆசிரமத்தில் இருந்த கொஞ்ச நேரத்தில நித்யமயூரிக்கும், ஆழினிக்கும் இடையே வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பாசம் மெல்ல முளைக்கத் தொடங்கியது.

இனியனும், கவிதாவும் மதருடன் பேசிக் கொண்டிருக்க,

“அம்மா! நான் அங்கப் போய் விளையாடுறேன்…” என்று நித்யமயூரி நச்சரிக்க,

“சரி… போ,” என்று புன்னகையுடன் அனுப்பிவைத்தவரோ,
பதினாறு வயதான செழியனை நோக்கி, “செழியா… தங்கச்சிய பார்த்துக்கோ,” என்றார்.

“சரிம்மா…” என்று பொறுப்புடன் தலையசைத்தவன், தங்கையைத் தொடர்ந்து சென்றான்.

ஆழினிக்கு அருகே சென்ற நித்திய மயூரியோ, ஆர்வமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மற்ற குழந்தைகளுக்குக் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஆழினி, தன்னருகே நிழலாடவும் நிமிர்ந்துப் பார்த்தவள், நித்யமயூரியைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவளது இதழ்களில் மலர்ந்த அந்த மென்மையான புன்னகை, நித்திய மயூரியின் தயக்கத்தை ஒரு நொடியில் கரைத்துவிட்டது.

“எனக்கும் சொல்லித் தருவியா?” என்று மெதுவாகக் கேட்டபடியே அவள் அருகில் அமர்ந்தாள்.

கணக்கு என்றாலே நித்திய மயூரிக்கு எப்போதும் கசப்புதான். ஆனால் ஆழினி சொல்லிக்கொடுக்கும் விதமோ வேறு. கடினமான கணக்குகள்கூட கதையைக் கேட்பது போல எளிதாகப் புரிந்தது.

வெறும் பத்து வயதிலேயே, தானறிந்ததை மற்றவர்களுக்குப் பொறுமையாகக் கற்றுக் கொடுக்கும் அந்தச் சிறுமியின் முதிர்ச்சியும், அமைதியும், அன்பும் நித்திய மயூரியின் மனதை ஆழமாகத் தொட்டது.

அன்றே… அந்த நொடியிலேயே… ஆழினி அவளது மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டாள்.

******************
ஒரு வாரம் சென்றிருக்க, பள்ளி வகுப்பறைக்குள் அமர்ந்திருந்த நித்திய மயூரி, ஆசிரியரின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

“ஹாய் ஸ்டூடன்ட்ஸ்! இவங்க ஆழினி. இனிமேல் நம்ம கிளாஸ்லதான் படிக்கப் போறாங்க. எல்லாரும் வெல்கம் சொல்லுங்க.”

“வெல்கம் டூ அவர் ஸ்கூல்.”என்று வகுப்பறையில் உள்ள எல்லா மாணவ, மாணவிகளும் அவளை வரவேற்றனர்.

இதுவரை ஆசிரமத்தைத் தாண்டி வேறெங்கும் வாழ்ந்திராத ஆழினி, படிப்பிற்காக முதல்முறையாக போர்டிங் பள்ளிக்கு வந்திருந்தாள்.

அதே ஊர்தான் என்றாலும்… அது அவளுக்கு முற்றிலும் புதிய உலகம்.

புதிய முகங்கள்…

புதிய சூழல்…

புதிய வாழ்க்கை…

பயம் அவளது சிறிய மனதை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

அவளை அழைத்துவந்த மதர், அவளது தலையை வருடி,

“உன் நல்லதுக்காகத்தான் அனுப்புறேன் ஆழினி… நன்றாகப் படி. படிப்புதான் இனிமேல் உன் வாழ்க்கையை மாற்றப் போகுது. பயப்படாத… ஒவ்வொரு வார இறுதியிலும் வந்து உன்னைப் பார்த்துட்டுப் போறேன்…” என்றார்.

அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்த அணை போல வழிந்தது.

மதரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டவள், பிரிய மனமில்லாமல் நின்றாள்.

“ஆழினி! பயப்படாதே. இங்க உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் என் கிட்ட கேளு.” என்ற வகுப்பாசிரியர் அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு வகுப்பறைக்கும் அழைத்து வந்தார்.

error: Alert: Content selection is disabled!!