“என்னப்பு, தம்பி எழுதி அனுப்பேல்லையோ? விவரம் எல்லாம் சுருக்கமா எழுதி அனுப்பப் சொல்லிச் சொன்னனானே…” என்று யோசனையாக இழுத்துவிட்டு, “பெயர் கானவி. இருபத்தியாறு வயசு தம்பி. என்ன, ஏ எல் ஓட படிப்பை நிப்பாட்டிப் போட்டாவாம். படிப்பில ஆர்வம் இல்லையாம். மற்றும்படி குணமான பிள்ளையாம் எண்டு அயலட்டையில விசாரிச்ச இடத்தில சொன்னவே.” என்று அவர் சொன்னவற்றை அவன் எங்கே கேட்டான்? காதில் இருந்த கைப்பேசியை எடுத்து மீண்டும் புலனத்திற்குச் சென்று பார்த்தான்.
அங்கே, அவளின் புகைப்படத்துக்குக் கீழே அவள் பற்றிய தகவல்களையும் சேர்த்துத்தான் சிவரூபன் அனுப்பியிருந்தான். இவன்தான் கவனிக்கவில்லை. அவள் எங்கே கவனிக்க விட்டாள்?
தலையைக் கோதித் தன்னைச் சமாளித்துவிட்டு, மீண்டும் கைப்பேசியைக் காதில் வைத்து, “அம்மா, அவாக்கு விருப்பம்தானா எண்டு வடிவாக் கேளுங்கோ, என்ர ஃபோட்டோ பாத்தவாவா எண்டும் கேளுங்கோ. மற்றும்படி எனக்கு… வேண்டாம் எண்டு சொல்ல ஒண்டும் இல்ல.” என்றான்.
புவனாம்பிகைக்கு மகனின் மனம் பிடிபட்டுப் போயிற்று. முறுவல் மலர, “சந்தோசமய்யா. நல்ல சந்தோசம். உங்கட திருப்திக்காக நான் இன்னொருக்காவும் கேக்கிறன். எனக்குப் பெருசாப் படிக்க இல்லையே, அதால வேண்டாம் எண்டு சொல்லிப்போடுவீங்களோ எண்டு அது ஒரு யோசின இருந்தது. நீங்க போதுமான அளவுக்குப் படிச்சிருக்கிறீங்கதானே தம்பி. அக்கா, அத்தான், நீங்க, தம்பி எண்டு எல்லாரும் வேல. அப்பா தோட்டமே கதி எண்டு இருப்பார். நான் தனியாவே இருக்கிறன். அவாவும் வந்தா என்னோடயே இருப்பாவே.” என்று அவர் தன் கற்பனைகளையும் அவனிடம் கொட்ட, என்ன ‘ஏ எல்’லா என்று அதிர்ந்து, மீண்டும் தம்பி அனுப்பியவற்றைச் சரிபார்த்தான்.
உயர்தரம் என்றுதான் இருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக இத்தனை முறை கவனம் பிசகியிருக்கிறான். நினைக்கவே வெட்கமாக இருந்தது.
‘ஏ எல் முடிச்சுப்போட்டு இவ்வளவு காலமும் சும்மாவா இருந்தவளாம்?’ வாய் நுனி வரை வந்துவிட்ட கேள்வியைக் கேட்டு, அவர் சந்தோசத்தைக் குறைக்க மனமில்லை. அவ்வளவு நேரம் மனத்துக்குள் இருந்த துள்ளல் மட்டுப்பட்டுவிட்ட உணர்வு. கிட்டத்தட்டப் பதினெட்டு வயதிலிருந்து இருபத்தியாறு வரையிலும் மேலே படிக்கவும் இல்லை, வேலைக்கும் போகவில்லை என்பது அவளைச் சற்றே அவனுக்குக் குறைத்துக் காட்டிற்று.
அதையும் தாண்டிக்கொண்டு அவள் பார்வையும் சிரிப்பும் ஈர்த்தன. அவளை வேண்டாம் என்று சொல்ல வாய் வரவில்லை.
“சரி அம்மா. மேற்கொண்டு என்ன எண்டு பாருங்க. எனக்கு நேரமாகுது.” அழைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்த்தான்.
அப்போதும் அவனைப் பார்த்துக் கண்கள் மின்னச் சிரித்துக்கொண்டிருந்தாள் அவள்.
‘படிக்காம இந்த எட்டு வருசமும் என்னடியப்பா செய்தனி? வீட்டில இருந்து சாப்பிட்டியா?’ சோம்பேறியாக இருப்பாளோ? அப்படி எப்படி ஒரு பெண்ணால், அதுவும் இந்தக் காலத்துப் பெண்ணால் இத்தனை வருடங்கள் சும்மா இருக்க முடியும்? அவனுக்கு அது விளங்கவே இல்லை.
‘சரி, அவள்தான் எனக்கு எண்டா அவள்தான்!’ என்னவோ விருப்பமே இல்லாதவன் போன்று முடிவெடுத்துக்கொண்டான். ‘கட்டி வரட்டும். எதையாவது படிக்கச் சொல்லுவம்.’ கடைக்காரர் ஊற்றி வைத்திருந்த தேநீரை ஒரே வாயாக வாய்க்குள் கவிழ்த்துவிட்டு, அடுத்த வகுப்பை நோக்கி நடையைக் கட்டினான்.
*****
கானவியின் வாழ்க்கை அவன் யோசித்தது போன்று இல்லை.
அவள் பார்க்கும் கொரியன் தொடர்கள் எத்தனை? தமிழ் நிகழ்ச்சிகள் எத்தனை? கையில் இருக்கும் கைப்பேசி வழியாக அவள் காணும் உலகத்துக்கு அளவேது?
இவற்றைத் தாண்டி மேக்கப் என்பது அவளுக்கு ஒரு கலை. தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் அலாதி விருப்பம் கொண்டவள். அதற்கான வகுப்புகள் இணையவழியாகவோ நேராகவோ நடந்தால் தவற விடவே மாட்டாள். கற்றுக்கொண்டதை அயலட்டையில் இருக்கும் அனைவருக்கும் போட்டுப் பார்த்துக்கொள்வாள்.
தன்னை விதம் விதமாக அலங்கரித்து, சுயமிகளை எடுத்துத் தள்ளுவாள். அவற்றையெல்லாம் ஃபில்டரில் போட்டு இன்னும் நிறமாக்கி, வெளிச்சம் கொடுத்து, அழகூட்டி, முகப்புத்தகம், இன்ஸ்டா எங்கும் பதிவேற்றுவாள். யாரெல்லாம் வந்து அழகாய் இருக்கிறாய், நன்றாக இருக்கிறாய் என்று இதயங்களையும் இமோஜிகளையும் பறக்க விடுவார்கள் என்று காத்திருப்பாள். பதில் போட்டவருக்குப் பதில் போட்டு, அந்தப் பதிலுக்கு இன்னொரு பதில் வாங்கி என்று, அவள் உலகம் நேரம் போதாமல் சுழன்றுகொண்டிருந்தது.
இதற்கு நடுநடுவே தம்பி கடம்பனோடு சேர்ந்து ஊர் சுற்றுவது, விதம் விதமாக உடைகள் வாங்குவது, புதிதாய் என்ன டிசைனில் உடைகள் வந்திருக்கின்றன என்று இணையம் முழுவதும் தேடுவது, படம் பார்க்கப் போவது, உணவகங்களுக்குச் சாப்பிடச் செல்வது என்று அவள் உறங்குவது என்னவோ ஒருசில மணி நேரங்கள் மட்டும்தான்.
அவளுக்குச் சின்ன வயதில் இருந்தே படிப்பில் பெரிய நாட்டமில்லை. சாதாரண தரத்தைத் தாண்டி, உயர் தரத்துக்கு வருவதற்கே பெரும் பிரயத்தனங்கள் செய்திருந்தாள். உயர்தரம் எப்போதடா முடியும் என்று காத்திருந்து முடித்தவளுக்கு அதற்குமேல் படிக்கும் எண்ணம் துளியும் இல்லை.
அவர்கள் நிலை நடுத்தர வர்க்கத்தை விடவும் கீழாக இருந்தாலுமே, மாமாக்கள் தயவினால் எந்தக் குறையும் இல்லை. மாதா மாதம் தவறாமல் வந்துவிடும் வெளிநாட்டுக் காசினால் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு ஒப்பான ஒரு நிலையில்தான் வளர்ந்தாள். தேவைகளற்ற அந்த நிலை மேலே படிப்பதைப் பற்றியோ, படித்து ஒரு வேலையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றோ அவளை யோசிக்க விடவில்லை.
பெற்றோரின் தொழில் விவசாயம். அவர்கள் இருவரும் வெயிலிலும் மழையிலும் கிடந்து வாடியபோதிலும் பிள்ளைகள் இருவரையும் நோக விட்டதில்லை. அவளை நல்லவன் ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும் வரையில் தமக்குச் செல்லப்பிள்ளையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தனர். கூடவே, வராத படிப்பைப் படி படி என்றால் எப்படிப் படிப்பாள் என்பது, அவர்கள் கருத்தாய் இருந்தது.
அவளின் அன்னை விசாலாட்சிக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் சுவிஸிலும் மற்றவர் ஜெர்மனியிலும் இருந்தனர். இருவருக்குமே தம் ஒற்றைச் சகோதரி இலங்கையிலேயே தங்கிவிட்டதில் மிகுந்த வருத்தம். அதைவிட, விவசாயத்தில் பெரிய வருமானம் என்றும் இல்லை. அதனாலேயே, அவருக்கும் அவர் குடும்பத்துக்குமானதைக் கடைசிவரையிலும் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.
ஜெர்மனியில் இருக்கும் கணேசனுக்கு அவளையும் அவள் தம்பி கடம்பனையும் வெளிநாட்டுக்குக் கூப்பிடத்தான் விருப்பம். முதலில் அவளுக்குத் திருமணத்திற்கு வெளிநாடுகளில்தான் பார்த்தார். செவ்வாய்க் குற்றம் இருந்ததில் பொருந்தவே இல்லை. வயது போகிறது, இனியும் இப்படி இருக்க முடியாது என்றுதான் இங்கே பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
பதினைந்து, பதினாறு வயதிலிருந்தே வெளிநாட்டுக்குப் போகப்போகிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு இது சற்று வருத்தமாய்த்தான் போயிற்று. தம்பியை மாமா எப்படியும் கூப்பிட்டுவிடுவார், அவளும் போனபிறகு அம்மா அப்பாவைக் கூப்பிட்டுவிட்டால் எல்லோரும் அங்கு என்று கற்பனைக் கோட்டை கட்டியிருந்தாள். பரவாயில்லை, திருமணத்திற்குப் பிறகு கணவனை அனுப்பிவிட்டு, பின்னால் போய்க்கொள்ளலாம் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.
இப்படி இருக்கையில்தான் செந்தாளனின் குறிப்புப் பொருந்தி வந்திருந்தது. அவள் பெற்றோருக்கு இருபத்தியாறு வயதாகியும் மகளுக்கு ஒரு இடமும் பொருந்திப் போகவில்லையே என்று இருந்த கவலையும் தீர்ந்து போயிற்று. நன்றாகப் படித்த, ஆசிரியர் தொழில் பார்க்கும், ஒரு குறை சொல்ல முடியாத ஒருவன் கிடைத்துவிட்டதில் பூரித்துப் போயினர்.
வாத்தியா என்று கொஞ்சம் மிரண்டாலும் கானவியின் மனத்தைக் கவர்ந்திருந்தான் செந்தாளன். அவன் எண்ணிக் கவலையுற்றது போன்று, அவளுக்கு அவன் மீது எந்தக் குறைகளும் இல்லை. புகைப்படத்துக்கே சிரிக்காமல் நின்றவன், ‘நான் கொஞ்சம் கண்டிப்பானவன்’ என்று முதல் பார்வையிலேயே சொன்னான். அதுதான் அவளை ஈர்த்ததே!
‘அப்பிடி என்ன பெரிய கண்டிப்பு? அதெல்லாம் இந்தக் கானவிட்ட நடக்காது!’ தலையைச் சிலுப்பியவளின் தலையணையின் கீழே செந்தாளன் இடம் பிடித்துக்கொண்டான்.

