“சேச்சே! அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லை அம்மா. ஒண்டும் அமையேல்லையே எண்டு எங்கட வாழ்க்கை முறைக்குப் பொருந்தாத அவாவைக் கட்டி, ரெண்டு தரப்புக்கும் நிம்மதி இல்லாமப் போயிடாதா எண்டுதான் யோசிச்சனான். இங்க நான் மட்டுமே இல்லை எல்லாம்மா. அக்கா அத்தான் இருக்கினம். சிவா இருக்கிறான். அவனுக்கு எண்டும் ஒருத்தி நாளைக்கு இந்த வீட்டுக்கு வருவா. எல்லாரையும் யோசிச்சுத்தானே ஒரு முடிவை எடுக்கோணும்.”
அவர் மகன் எப்போதும் இப்படித்தானே. குடும்பம்தான் அவனுக்கு எப்போதுமே. “பேசாம அவாவோட ஒருக்கா கதைச்சுப் பாருங்கோவன் தம்பி. அப்ப அவவைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளங்கும் எல்லோ.” என்றார் கனிவுடன்.
“சேச்சே! அதெல்லாம் வேண்டாம்.” ஆவல் உள்ளே பெருமளவில் இருந்தாலும் அவசரமாக மறுத்தான். அவள்தான் என்று முடிவெடுத்துவிட்டுப் பேசுவதற்கும் அவளா, இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காகப் பேசுவதற்கும் வித்தியாசம் உண்டே! இரண்டாவது அவளை அவமானப்படுத்துவது போலாகாதா? இன்றைய காலத்தில் இரு தரப்பும் கதைத்துப் பேசித்தான் முடிவுக்கே வருகிறார்கள் என்றாலும் அவனால் அது இயலவில்லை.
மகன் மனம் புவனாம்பிகைக்கும் புரிந்தது. “உங்கட இந்த நல்ல மனதுக்குச் சந்தோசமான வாழ்க்கை அமையும் தம்பி. அதைவிட, அம்மா அப்பாவோட இருக்கேக்க செல்லப் பிள்ளையா இருக்கிறதும், குடும்பம் குட்டி எண்டு வந்ததும் பொறுப்பான குடும்பத் தலைவியா மாறுறதும் பொம்பிளைப் பிள்ளைகளுக்கு நடக்கிறதுதான். அதால சும்மா எதையும் யோசிக்காதீங்கோ.” என்றுவிட்டுப் போனார் அவர்.
அக்கா முதலும் அப்படி இல்லையே என்று ஓடிய எண்ணத்தைத் தடுத்து நிறுத்திவிட்டு, கைப்பேசியில் சிரித்துக்கொண்டிருந்தவளை எடுத்துப் பார்த்தான்.
மனக்கண்ணில் ஜீன்ஸ் டொப்பில் நவநாகரிக நங்கையாய் நளினமாக நடந்து வந்தாள் அவள். தன் காந்த விழிகளால் அவனையே பார்த்தாள். அவன் கோபத்தைக் கண்டு அவள் கண்களில் கலக்கம் பிறந்தது. ஏன் இந்தக் கோபம் என்று வினவினாள். அவன் கடந்துபோனதும் அவள் முகம் அப்படியே கூம்பிப்போனது.
அந்தளவில் அவன் கோபம் அவளைப் பாதிக்கிறதா? அவன் இதழ்கடையோராம் சின்னதாய் ஒரு முறுவல். அவளையே பார்த்தான். உள்ளிருந்து ஏதோ ஒன்று மிக அழுத்தமாய்ப் பிறக்க அவளுக்கு முத்தமிடப் போனான். கடைசி நொடியில் சுதாரித்துக்கொண்டவனுக்குத் தன்னை எண்ணியே சிரிப்பாயிற்று. ‘உனக்கு விசர் தான்டா பிடிக்கப் போகுது!’ பின் தலையில் தட்டிவிட்டுப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்துவிட்டான்.
மூடிய விழிகளுக்குள்ளும் வந்து, அவனின் இரவு நேரத்து இரகசியக் கனவுகளைத் திருடிக்கொண்டாள் அவள்.
*****
ஒரு வழியாகச் சம்பந்தக் கலப்பு நடந்து முடிந்தது. இருவீட்டு விருந்தும் முடிந்திருந்தது. அதன் பிறகாவது அவன் தன்னுடன் பேச முயல்வான் என்று கானவி பெரிதும் எதிர்பார்த்தாள். அது நடக்கவேயில்லை.
ஏன் இப்படி இருக்கிறான்? அவளுக்கு இருக்கும் இந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் அவனுக்கு இல்லையா? அன்றைக்கு அப்படிப் பார்த்தானே? அதன் காரணம் என்ன? இப்படி அவளுக்குள் அவனைக் குறித்து நிறையக் கேள்விகளும் குழப்பங்களும் எழுந்தன.
ஒருசில முறைகள் இருவரும் பார்த்துக்கொண்டபோதிலும் தனியாகப் பேசக் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான். அதற்குமேல் அவன் அனுமதிக்கவும் இல்லை, அவளோடு கதைப்பதற்குத் தனியான ஆர்வம் காட்டவும் இல்லை.
தன்னைப் பிடிக்கவில்லையோ என்று வேறு யோசித்தாள்.
பார்க்கிற பொழுதுகளில் எல்லாம் கேள்வியோடும் குழப்பத்தோடும் தன்னைத் தொடரும் அவள் பார்வையை செந்தாளன் கவனிக்காமல் இல்லை. ஆனாலும் கூட, தன்னை அலங்கரித்துக்கொள்வதில் அவள் காட்டும் ஆர்வம், ஆடை அணிகலன்களில் தெரியும் செழிப்பு எல்லாம் அவளைச் சற்றே இறுக்கிப்பிடி என்று அவனிடம் சொல்லிக்கொண்டே இருந்ததில் அவன் அசையவில்லை.
எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேரின் கண்களையும் சுற்றிவிட்டு அவனையே வட்டமடிக்கும் அவள் விழிகள் அவனைக் கவராமல் இல்லை. அவனோடு கதைத்துவிட அவள் எடுக்கும் முயற்சிகள் கண்டு பலமுறை தனக்குள் சிரித்துக்கொண்டிருக்கிறான். ஆனாலும் கூட பிடி கொடுக்கவில்லை.
அன்று பூசை என்று கோயிலில் இரு குடும்பமும் சந்தித்துக்கொண்டார்கள். நிச்சயிக்கப்பட்ட இருவரையும் அருகருகே நிறுத்தியிருந்தனர். அப்போது கிடைத்த தனிமையில், “ஏன் அண்டைக்கு அப்பிடிப் பாத்தனீங்க?” என்று வினவினாள் கானவி.
“எப்ப?” தெரிந்துகொண்டே தெரியாதது போன்று புருவம் சுருக்கிக் கேட்டான் அவன்.
“அங்க டவுனில வச்சு.”
“அங்க எதேற்சையாக் கண்டன், பாத்தன்.” என்றான் வேண்டுமென்றே.
“இல்லையே. நீங்க சும்மா பாக்கேல்லை. ஏதோ மாதிரிப் பாத்தனீங்க.” இப்போதும் அவன் முகத்தைப் பார்வையால் ஆராய்ந்தபடி சொன்னாள் அவள்.
அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. “ஏதோ மாதிரி எண்டா?” என்றான் முகத்தில் எதையும் காட்டாமல்.
“லைட்டா கோவமா, கொஞ்சம் முறைப்பா…” என்று அவள் இழுக்க, ‘ஆக, அவன் பார்வை சரியாக அவளைச் சென்று சேர்ந்திருக்கிறது’ என்று ஆனந்தம் கொண்டான் அவன்.
நீ என்னைப் பாராமல் போன கோபம் அது என்று சொல்ல முடியாமல், “இப்ப என்ன பிரச்சினை உமக்கு? சும்மா பாத்ததுக்கு எல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பீரா?” என்று அதட்டினான்.
“இதென்ன உமக்கு, எமக்கு எண்டுகொண்டு. நீங்களும் நானும் என்ன ஆரோவா?”
“பின்ன வேற ஆர்?” என்றதும் அவள் முகத்தில் மெல்லிய சிவப்பேறுவது அப்படியே தெரிந்தது.
அவன் பார்வை வேறு அவள் முகத்திலேயே படிந்து நிற்க, பார்வையை வேகமாக விலக்கிக்கொண்டு, உதட்டுச் சிரிப்பை அடக்க முயன்றுகொண்டிருந்தாள்.
“கேட்ட கேள்விக்குப் பதில் வரேல்ல.” என்றான் அவன் இப்போது.
“ம்… உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் படிப்பிக்கிற வாத்திக்கு உயிர்மெய் எழுத்தைப் பற்றித் தெரியாதாம்!” வாய்க்குள் முனகியவள் பார்வையாலேயே அவனை வெட்டிவிட்டுப் போனாள்.
வேகமாக முகத்தைத் திருப்பித் தன் சிரிப்பை மறைத்துக்கொண்டான் செந்தாளன். எவ்வளவு துடுக்காகப் பதில் சொல்கிறாள்? மனம் மிகுந்த உல்லாசத்தில் மிதந்தது.
அன்றைக்குப் பிறகாவது தன்னோடு கதைப்பான் என்று பெரிதளவில் எதிர்பார்த்தாள் கானவி. அவனோ அப்போதும் அவள் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கினான.
அதுவே அவனோடு கதைப்பதற்கான முயற்சியை இன்னும் பலமாக அவளை எடுக்க வைத்தது.
அவள் வீட்டுப் பெரியவர்கள் மூலம் அவன் வீட்டுப் பெரியவர்களுக்குத் தகவல் சென்று, “அவாவோட ஒருக்கா கதையன் தம்பி. வெளில எங்க எண்டாலும் கூட்டிக்கொண்டு போடா! உன்ர அத்தான் வேற என்ன இது எண்டு கேக்கிறார்.” என்று சிந்துஜா சொன்னபோதிலும் சரி, “அவாவும் பாவமெல்லா தம்பி. ஒருக்கா கதைங்கோவன்.” என்று புவனாம்பிகை சொன்னபோதிலும் சரி அவன் அசையவில்லை.
தலைமகனாக நின்று, வீட்டின் அனைத்துப் பொறுப்புகளையும் தாங்கும் அவனிடம் அதற்குமேல் அவர்களாலும் எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று.
அடுத்த வாரத்தில் பொன்னுருக்கல் நடக்க இருந்ததில் செந்தாளன் வீட்டில் வேலைகள் நிறைந்து வழிந்தன. அவனுடைய தந்தை எழுபது வயதைத் தொட்டவர். அமைதியான மனிதர். தான் உண்டு தன் தோட்ட வேலைகள் உண்டு என்று வாழ்பவர். பெரிதாக எதுவும் கதைக்கமாட்டார். செந்தாளன்தான் மனோகரனையும் சிவரூபனையும் உதவிக்கு வைத்துக்கொண்டு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை நேர வகுப்புகளை நிறுத்திவிட்டு வெளியே செல்லத் தயாராகிக்கொண்டிருந்தான்.
அந்த நேரம் பார்த்து அவர்கள் வீட்டின் முன்னே பைக் ஒன்று வந்து நின்றது. யார் என்று எட்டிப் பார்த்த புவனாம்பிகை ஆனந்தமாக அதிர்ந்துபோனார்.
வந்தது கானவி, கடம்பன். இந்தத் திடீர் வருகையை எதிர்பாராதபோதும், “வாங்கோம்மா, வாங்கோ தம்பி. ஆர் எண்டு பாக்க, நீங்க.” என்று வாசலுக்கே ஓடிச் சென்று வரவேற்றார்.
துணிந்து வந்துவிட்டபோதிலும் அவரைக் கண்ட கணத்தில் கானவிக்குள் மெல்லிய சங்கடமும் கூச்சமும் உண்டாயிற்று. “சொல்லாமல் கொள்ளாமல் வந்ததில குறை ஒண்டும் இல்லையே மாமி? கலியாண கார்ட் டிசைன்ஸ் கொண்டுவந்து தந்திட்டுப் போனவே. அதுதான் உங்க எல்லாரிட்டையும் காட்டி, எது நல்லாருக்கு எண்டு கேக்க வந்தனாங்க.” மெல்லிய தயக்கத்துடன் அவர் முகம் பார்த்துச் சொன்னாள்.
“இதென்ன கேள்வி? இனி இதுவும் உங்கட வீடுதான். இங்க வாறதுக்கு யோசிக்கிறதோ? நீங்க வாங்கோ!” என்று அவள் கரம்பற்றி அழைத்துக்கொண்டு வந்தார் அவர்.
அவரின் திடீர் உற்சாக வரவேற்பில் அப்படி யார் என்று வந்து பார்த்த செந்தாளனும் அவளைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. அவள் தன்னோடு கதைத்துவிடுவதற்கு எடுக்கும் முயற்சிகள் தெரியும்தானே. என்றாலும் இப்படி வீடு வரை வந்து நிற்பாள் என்று நினைக்கவே இல்லை.
“நேரத்துக்கே எந்த டிசைன் எண்டு செலக்ட் பண்ணிக் குடுத்தாத்தான் அவேயும் நேரத்துக்கே தருவினம். அதான்.” அவருக்குப் பதில் சொன்னவள் பார்வை செந்தாளனைத் தொட்டு என்னவோ சொன்னது.

