வர்ணம் 3
வீட்டின் பின்புறத்தில் இருந்த கிணற்றடிக்குச் சென்றார்கள் தோழிகள் இருவரும்.
அங்கே, பழமையான செங்கற்களால் கட்டப்பட்டு, பாசி படர்ந்த சுவர்களுடன் கூடிய அந்தப் பழைய குளியலறை இருந்தது. சாரு லேசான தயக்கத்துடன் அதன் கதவைத் திறந்து பார்த்தாள். வெளியே பழையதாகத் தெரிந்தாலும், உள்ளே சுத்தமாகக் கழுவி, துடைத்து வைக்கப்பட்டிருந்தது.
“ஹப்பா… வெளியைப் பார்த்து பயந்துட்டேன்டி சாரு! உள்ள நல்லா சுத்தமாதான் இருக்கு,” என்றாள் ராஷி புன்னகையோடு.
முதலில் ராஷி குளிக்கச் சென்றாள். கிணற்றிலிருந்து புதிதாக இறைத்து ஊற்றப்பட்டிருந்த குளிர்ந்த நீரை வாலியில் இருந்து சொம்பால் மொண்டு தலைக்கு ஊற்றியபோது, பயணத்தின் களைப்பெல்லாம் பறந்து போனது.
அப்போது ராஷிக்குச் சென்னையில் உள்ள தன் பங்களா குளியலறை நினைவுக்கு வந்தது. சுவரில் இருக்கும் பட்டனைத் தட்டினால் வெதுவெதுப்பாகக் கொட்டும் ‘ஷவர்’, விதவிதமான நறுமண சோப்புகள், நவீனக் குழாய்கள்…
அதை நினைத்துப் பார்த்த ராஷி, சொம்பில் தண்ணீரை மொண்டு தன் மீது ஊற்றிக் கொண்டே உரக்கச் சிரித்தாள்.
“ஷவர், பாத் டப்னு ஆடம்பரமா குளிச்ச நமக்கு, இப்படி வாலியில தண்ணியை பிடிச்சு சொம்புல மொண்டு குளிக்கிறது கூட செம்ம ஜாலியாதான் இருக்கு!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
அடுத்து சாருவும் குளித்து முடிக்க, இருவரும் எளிய காட்டன் குர்தி அணிந்து, கையில் வரைபடப் புத்தகமும் கேமராவுமாகத் தயாரானார்கள்.
வீட்டின் பூட்டைப் பூட்டி சாவியைப் பத்திரப்படுத்திக் கொண்டு, ஊர் தலைவர் சொன்ன வழிகாட்டுதலின்படி அந்தத் தெருவின் கடைசியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
அருளின் வீட்டின் அருகே செல்லச் செல்ல, “டக்… டக்… டக்…” என்ற அந்த மரத்தறியின் கம்பீரமான ஓசை, இருவரையும் கைநீட்டி அழைப்பது போலத் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது!
தெருவின் கடைசியாக இருந்த வீட்டின் வாசலில் வந்து நின்றனர். அது ஒரு பழமையான ஓட்டு வீடு. வாசலில் பெரிய திண்ணையும், வீட்டிற்குள் நுழைந்ததும் நடுநாயகமாக மரத்தறியும் அமைந்திருந்தன.
அருள் தன் தறியில் அமர்ந்து, நூல்களின் இழைகளைச் சரிசெய்து கொண்டிருந்தான். பட்டு நூலின் அடர் நீல நிறமும், மெல்லிய தங்கச் சரிகையும் அவன் விரல்களுக்கிடையே மாயாஜாலம் செய்துகொண்டிருந்தன. அவனுக்கு தறி நெய்வது வெறும் பிழைப்பல்ல; அது அவனது பரம்பரை வழியே வந்த உயிர் மூச்சு.
“அருள்… அந்த நீல நூல் சிட்டு முடிச்சு விழுந்திருக்கு பார்,” என்று தறியின் பக்கத்தில் அமர்ந்து கம்பளி நூலைச் சுற்றிக் கொண்டிருந்தபடியே சொன்னார் அவனது தந்தை முத்தையா. அறுபது வயதைத் தாண்டிய அவரது கண்களில் பார்வைத்திறன் குறைந்திருந்தாலும், அனுபவம் வாய்ந்த கைகள் நூலின் தரத்தைத் தொட்டே சொல்லிவிடும்.
“சரிங்கப்பா, நானே பாத்துக்கறேன். நீங்க கொஞ்ச நேரம் கண்ண மூடி ஓய்வெடுங்க,” என்றான் அருள் அக்கரையாக.
அடுப்படியிலிருந்து சூடான சுக்குக் காப்பியுடன் வந்தாள் அருளின் தாய் பார்வதி. “இந்தாப்பா காப்பி… ராப்பகலா இப்படித் தறியில் உட்கார்ந்தா உடம்பு என்னத்துக்கு ஆவுறது? இந்த மாசம் கூட்டுறவு சங்கத்துல போட்ட துணிக்கு இன்னும் கூலி வரலையாமே?” என்று கவலையோடு கேட்டாள்.
“வரும்மா… இடைத்தரகர் கொஞ்சம் இழுத்தடிக்கிறாரு. ஆனா, நாம நெய்ற இந்தத் தறி நெசவு ஆடைக்கு இருக்கிற மதிப்பு அவருக்குப் புரியல. மிஷின் துணியை விக்கிற உலகத்துல நம்ம கைக் கால்களோட உழைப்பை மதிக்க ஆள் குறைஞ்சு போச்சு,” என்று பெருமூச்சு விட்டான் அருள்.
அவனது முகத்தில் தன் கலை மீதான கம்பீரமும் சுயமரியாதையும் குறையவில்லை. தன் குடும்பத்தின் பசியையும், பாரம்பரிய நெசவுக் கலையின் பெருமையையும் தோளில் சுமக்கும் இளைஞனாகவே அவன் வாழ்ந்து வந்தான்.
அப்பொழுது சாரு “சார்… சார்…” என்று மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.
ஹாலின் நடுவே தறியில் அமர்ந்து, விரல்களால் நூல்களை நேர்த்தியாகக் கோர்த்து நெய்து கொண்டிருந்த அருள், அந்த புதிய குரலைக் கேட்டுத் தறியை இயக்கிக் கொண்டிருந்த தன் கால்களை மெல்ல நிறுத்தினான்.
“அம்மா… வாசல்ல யாரோ நம்மள கூப்பிடுற மாதிரி இருக்கே!” என்றான் அருளின் கவனமும் கண்களும் தறியின் இழைகளிலேயே இருக்க.
“இரு தம்பி… இதோ நான் போய் யாருனு பார்க்குறேன்,” என்றபடி வெளியே வந்தாள் அருளின் தாய் பார்வதி.
நன்றாக மெழுகப்பட்ட அகலமான வாசற்படியைக் கடந்து திண்ணைக்கு வந்தவர், அங்கே தோளில் கேமரா பையுடனும், நகரத்து உடைகளுடனும் நின்றிருந்த ராஷியையும் சாருவையும் பார்த்தார். அந்நியமாக நின்ற இரு இளம் பெண்களைக் கண்டதும் பார்வதிக்கு ஒரு நிமிடம் யோசனையாக இருந்தது.
கண்களைச் சுருக்கிப் பார்த்தபடி, “சொல்லுங்கம்மா… யாரு நீங்க? யாரைப் பார்க்கணும்?” என்று அன்பும் தயக்கமும் கலந்த குரலில் கேட்டார்.
ராஷி புன்னகையோடு முன்வந்து, “வணக்கம்க்கா… இது அருள் சார் வீடுதானே?” என்றாள்.
பார்வதியின் முகத்தில் ஒரு தாய்க்கே உரிய பெருமிதப் புன்னகை அரும்பியது. “ஆமாம்மா… என் பையன் அருள் வீடுதான். என்ன விஷயம்மா?” என்றார்.
“நாங்க அவரைப் பார்க்கத்தான் வந்திருக்கோம். ஊர் தலைவர் பெரியய்யாதான் எங்களை இங்க அனுப்பினாரு…” என்று ராஷி சொல்லி முடிப்பதற்குள், உள்ளிருந்து அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அருள் தறியிலிருந்து எழுந்து வந்தான்.
“அம்மா! அவங்களை உள்ள வரச் சொல்லும்மா… பெரியய்யா காலையிலேயே ஆள் அனுப்பி என்கிட்ட விஷயம் சொல்லியிருந்தார்!” என்று உள்ளிருந்து அருளின் கம்பீரமான குரல் ஒலித்தது.
பார்வதி உடனே தன் தயக்கத்தையெல்லாம் விட்டுவிட்டு, முகத்தில் கனிவான சிரிப்போடு விலகி வழிவிட்டார்.
“அப்படியா விஷயம்! உள்ள வாங்கம்மா… வெளியவே நிக்கிறீங்களே, வாங்க உள்ள வந்து உட்காருங்க,” என்று உபசரித்து அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த ராஷியும் சாருவும் அந்தப் பழமையான ஓட்டு வீட்டை பார்வையால் அலசியபடி போனார்கள்.
திண்ணையைத் தாண்டி ஹாலுக்குள் நுழையும்போதே, பட்டு நூல்களின் நறுமணமும், மரத்தறியின் பழமையான வாசமும் ராஷியை ஈர்த்தன.வீட்டின் நடுநாயகமாக இருந்த தறியின் அருகே நின்றிருந்த அருளை நோக்கியபடி உள்ளே வந்தனர் ராஷியும் சாருவும்.
அருள் தன் தோளில் கிடந்த துண்டால் கைகளைத் துடைத்தபடியே, ராஷியையும் சாருவையும் அமைதியாக உற்றுப் பார்த்தான். அவனது கண்கள் அவர்களின் கைகளில் இருந்த வரைபடப் புத்தகத்தையும், தோளில் கிடந்த கேமரா பையையும் கவனித்தன.
“வாங்க… உட்காருங்க,” என்று ஹாலின் ஓரத்தில் போட்டிருந்த மர நாற்காலிகளைக் காட்டினான் அருள்.
“பரவாயில்லைங்க சார்… நாங்க இப்படியே நிக்கிறோம்,” என்றாள் ராஷி புன்னகையோடு.
அப்போது தறியின் அருகே அமர்ந்திருந்த முத்தையா ஐயா, தன் பார்வைக் குறைவான கண்களைச் சுருக்கி, “யாருப்பா அருள் வந்திருக்கிறது? குரல் கேட்க நகரத்து ஆளுங்க மாதிரி இருக்கே?” என்று கேட்டார்.
அருள் தன் தந்தையின் அருகில் சென்று, அவரது தோளைத் தொட்டு, “ஆமாங்கப்பா… சென்னையில இருந்து வந்திருக்காங்களாம். பெரியய்யா தான் அனுப்பி வச்சிருக்காரு. நெசவுத் தொழிலைப் பத்திக் கத்துக்க வந்திருக்காங்களாம்,” என்றான் கனிவோடு.
ராஷி மெல்ல முத்தையா ஐயாவின் அருகே சென்று, “வணக்கம் ஐயா, என் பேரு ராஷி. இது என் தோழி சாரு. நாங்க சென்னையில ஆடை வடிவமைப்பு படிச்சிருக்கோம்,” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
முத்தையா ஐயா முகத்தில் மெல்லிய புன்னகை பூத்தது. “நல்லதும்மா… இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு நம்ம பாரம்பரியக் கலை மேல ஆசை வர்றதே பெரிய விஷயம். உட்காருங்க தாயி,” என்றார்.
அதற்குள் பார்வதி அம்மாள் சமையலறையிலிருந்து ரெண்டு பித்தளை டம்ளரில் ஆவி பறக்கும் சுடச்சுடச் சுக்குக் காப்பியைக் கொண்டு வந்து இருவரிடமும் கொடுத்தார்.
“இந்தாம்மா… காப்பி குடிங்க. காலையிலேயே கிளம்பி வந்திருப்பீங்க,” என்றார் பார்வதி தாய்மையோடு.
“ரொம்ப நன்றிங்கம்மா!” என்று வாங்கிக் கொண்ட ராஷி, காப்பியைப் பருகியபடியே அருளைப் பார்த்தாள்.
அருள் தன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான்: “பெரியய்யா என்கிட்ட சொன்னாரு… நீங்க ஏதோ ரிசர்ச் பண்ண வந்திருக்கீங்களாமே? ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியல. சென்னையில கோடிக்கணக்கில் மிஷின்களை வச்சு துணி நெய்யுற உலகத்துல இருக்குற உங்களுக்கு, இந்தச் சின்னக் கிராமத்துல ஓடுற மரத்தறியைப் பத்தித் தெரிஞ்சுக்க என்ன இருக்கு?”
அருளின் குரலில் லேசான சுயமரியாதையும், சந்தேகமும் கலந்திருந்தது. நகரத்து மனிதர்கள் சிலர் வந்து போட்டோ எடுத்துக்கொண்டு போய், தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதை அவன் பார்த்திருக்கிறான்.
ராஷி அவனது கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்டாள். அவனது கண்களை நேராகப் பார்த்து நிதானமாகப் பேசினாள்:
“சார்… மிஷின் துணியில வண்ணங்கள் இருக்கும், துல்லியம் இருக்கும். ஆனா, மனித உழைப்பும் ஆன்மாவும் இருக்காது! நூல்களை வெறும் நூல்களா பார்க்காம, அதுல தன் உயிரைக் குழைச்சு நெய்யுற உங்களோட இந்த உழைப்புதான் உண்மையான கலை. மிஷின் யுகத்துல அழியற நிலைமையில இருக்குற நம்ம பாரம்பரியக் கைத்தறி நெசவுக்கு உலக மேடையில ஒரு பெரிய அங்கீகாரம் கிடைக்கணும். அதுக்காகத்தான் நாங்க வந்திருக்கோம்.”
ராஷியின் இந்தப் பேச்சைக் கேட்டு அருள் ஒரு கணம் மௌனமானான். அவளது வார்த்தைகளில் பொய்ப் பூச்சோ, மேல்தட்டு வர்க்கத்தின் அகந்தையோ இல்லை; உண்மையான லட்சியமும், நெசவுக் கலையின் மீதான மரியாதையும் மட்டுமே இருந்தது.
அருளின் முகத்தில் இருந்த இறுக்கம் மெல்லத் தளர்ந்தது.
“நல்ல விஷயம்மா…” என்று சொன்ன அருள், தன் தறியின் பக்கம் நடந்து சென்றான்.
“நெசவுங்கிறது புத்தகத்துல படிச்சு மனப்பாடம் பண்ற விஷயம் இல்லைங்க. அது கண்ணால பார்த்து, கையால தொட்டு, மனசால உணர வேண்டிய கலை! ”
பட்டு நூல்களும், தங்கச் சரிகைகளும் பின்னிப் பிணைந்திருந்த அந்தத் தறியின் அருகே ராஷி ஆசையோடு எட்டிப் பார்த்தாள்.
அருள் தறியைக் காட்டி, “இதோ… இந்த தறியில இருந்துதான் உங்க முதல் பாடம் தொடங்குது,” என்று சொன்ன நொடியில், ராஷி மெல்லத் தன் பார்வையை அவன் பக்கம் திருப்பினாள்.
அவன் தறியின் மரச்சட்டத்தில் ஒரு கையை ஊன்றி, தோளில் கிடக்கிற துண்டால் நுனி நெற்றியில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக் கொண்டு நின்றிருந்தான். காலைச் சூரியனின் இளங்கதிர்கள் வீட்டின் கூரை வழியே ஊடுருவி அருளின் மேல் விழ, அவனது நிமிர்ந்த நன்னடையும், கண்களில் வெளிப்பட்ட கலை மீதான கம்பீரமும் அவனை ஏதோ ஒரு புதிய ஒளியில் காட்டின.
நகரத்து ஆடம்பர மனிதர்களிடம் எப்போதும் வீண் பூச்சுகளையும் அகந்தையையும்தான் பார்த்துப் பழகியிருந்த ராஷிக்கு, அருளிடம் இருந்த அந்த இயற்கை அழகும், கலையின் மீது அவன் கொண்டிருந்த சுயமரியாதையும் அவளை ஒரு நொடி திகைக்க வைத்தன.
அவனையே அறியாமல் சில நொடிகள் இமைக்க மறந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அருள் தன் கூர்மையான பார்வையால் ராஷியை நோக்கித் திரும்பியதும், சட்டென்று தன் திகைப்பை உணர்ந்தவளாய், அவசர அவசரமாகத் தன்னைச் சரிசெய்து கொண்டாள்.
தன் கையில் இருந்த வரைபடப் புத்தகத்தின் பக்கங்களை சலசலவென சும்மாவே திருப்பியபடி, நெஞ்சுக்குள் எழுந்த மெல்லிய படபடப்பை மறைக்க ஒரு போலிப் புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்.
“ஆ… ஆமாங்க சார்! நிச்சயமாக… முதல் பாடத்தை எதிலிருந்து தொடங்கலாம் சொல்லுங்க?” என்று தன் குரலை இயல்பாக்க முயன்றபடி, தறியின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள் ராஷி.
ஆனால், அதற்குள் ராஷியின் இந்தச் சின்னப் தடுமாற்றத்தைக் கவனித்துவிட்ட சாரு, அவளது தோளை லேசாகத் தட்டி, ‘என்னடி ஆச்சு உனக்கு?’ என்பது போலப் புருவத்தை உயர்த்திக் காட்டி மெலிதாகச் சிரித்தாள்!
சாருவின் அந்தச் குறும்புச் சிரிப்பைப் பார்த்ததும் ராஷிக்கு முகம் லேசாகச் சிவந்தது. சாருவை முறைத்துப் பார்த்தபடி, தன் கையில் இருந்த பேனாவை இறுகப் பற்றிக் கொண்டு அருள் பக்கமாகத் திரும்பினாள்.
அருள் அவளது தடுமாற்றத்தை அதிகம் கவனியாதவன் போல, தறியின் பாகங்களை நோக்கித் தன் கைகளைக் காட்டினான்.
“முதல்ல தறியோட அமைப்பைப் புரிஞ்சுக்கணும்ங்க,” என்று நிதானமான குரலில் தொடங்கினான் அருள்.
வர்ணம் மிளிரும்

