எந்தன் சிறகுகள் உனக்காக 11 – 2

காயத்ரியும், ஸ்ரீதரும் விக்கித்து போய் அவரை பார்த்துக் கொண்டு நின்றனர்.

கமலமோ “மினி என்னடி இது?.. தம்பிக்கு காயத்ரிய கொடுக்கிறதுல உனக்கு அப்படி என்ன பிரச்சனை?…” என்று கேட்க

“நான் இதுவரைக்கும் அப்படி யோசிச்சதே இல்லம்மா.. இப்போ திடீர்னு வந்து என் பொண்ண தான் கட்டிப்பேன்னு சொன்னா, இது நாள் வரைக்கும் என் பொண்ணுக்கு எப்படி எல்லாம் மாப்பிள்ள எடுக்கணும்னு எனக்கும் ஒரு ஆசை இருந்து இருக்கும்ல்ல.. நேத்து வரைக்கும் நீங்களும் நானும் காயத்ரிக்கு எப்படி எல்லாம் மாப்பிள்ள பாக்கணும்னு ஒரு கனவு கோட்டையே கட்டி வச்சிருந்தோமே.. அந்த கனவு கோட்டைக்குள்ள ஸ்ரீ வரமாட்டான்…” என்று சொல்ல

கமலத்தால் எதுவும் சொல்ல முடியவில்லை. அது என்னவோ உண்மைதான், ஸ்ரீதருக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்யவும், காயத்ரியின் படிப்பு முடிய அவளுக்கும் வேறொரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று எப்போதும் பேசிக் கொள்வது தான். ஆனால் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று தோன்றியதே கிடையாது.

இதுவரை தமக்கையின் மற்றுமொரு பரிமாணத்தை பார்த்து ஸ்தம்பித்து நின்ற ஸ்ரீதர் உள்ளுக்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து, தன்னை திடப்படுத்திக் கொண்டவன்

“அக்கா எனக்குமே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் காயத்ரிக்கு வெளியில மாப்பிள்ள பாத்து, நல்ல இடத்துல கட்டி கொடுக்கணும்னு தான் ஆசை.. ஆனா இப்போ இவள என் கைக்குள்ளயே வெச்சிக்கோணும்னு தோணுது..இவ இல்லன்னா எனக்கு வாழ்க்கையே இல்லனு தோணுது.. இவள என்னால வேற யாருக்குமே விட்டுக் கொடுக்க முடியாதுக்கா.. எனக்கு உன் மனசு புரியுது, திடீர்னு நான் என் விருப்பத்தை சொன்னதால உனக்கு குழப்பமா இருக்கும்.. இப்போதைக்கு இத இப்படியே விட்டுரலாம்.. கொஞ்ச நாள் போனதுக்கு பிறகு யோசிச்சு முடிவு பண்ணலாம்…” என்று சொல்ல

“எத்தன நாள் போனாலும் என்னோட முடிவு இதுதான்…” என்று உறுதியாக பத்மினி கூற

“மினி ஸ்ரீ உன் தம்பிடி.. அவனுக்கு காயத்ரிய குடுக்கக் கூடாது என்ற அளவுக்கு வரப்போர மாப்பிள்ளைய பத்தி அப்படி என்ன யோசிச்சு வச்சிருக்க?…” என்று கமலம் கேட்க

“அம்மா நான் என் தம்பிய உதாசீனப்படுத்தல.. தப்பா பேசல.. அவனும் நல்லா வாழனும்னுதான் பாத்து பாத்து பொண்ணு முடிவு பண்ணி வச்சிருக்கேன்.. அதே மாதிரி என் பொண்ணுக்கும் வரப்போர மாப்பிள்ள அவளுக்கு ஏத்த மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. கண்டிப்பா அந்த எதிர்பார்ப்புக்குள்ள ஸ்ரீ வரமாட்டான்…” என்று பத்மினி அழுத்தமாக சொல்ல

“அம்மா!…” என்று காயத்ரி பேச முயற்சிக்க

“குட்டி!…” என்று கையை நீட்டி அவளை பேச விடாமல் தடுத்த ஸ்ரீதர், “அப்படி என்ன எதிர்பார்ப்பு க்கா…” என்று உடைந்து போன குரலில் கேட்க

“நம்மள விட வசதியான ஒரு குடும்பத்துக்கு காயத்ரிய கட்டி கொடுக்கணும்னு நினைச்சேன்…” என்று தனது முதல் எதிர்பார்ப்பை கூற

“ஏன்டி இது ஒரு காரணம்னு நீ தூக்கி வளத்த தம்பியவே வேணும்னு சொல்லுவியா?…” என்று கமலம் ஆதங்கமாக கேட்க

“என்ன எதுக்கு என் புருஷனுக்கு கட்டிக் கொடுத்தீங்க? அதே நேரம் நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி வேற வரணும் வந்துச்சு தானே.. ஆனாலும் நம்ம குடும்பத்த விட வசதி அதிகம்னு, நம்ம பொண்ணு அங்க போனா இங்க இருந்தத விட சீரும் சிறப்புமா வாழ்வானு தானே கட்டிக் கொடுத்தீங்க.. எனக்கும் அதே எதிர்பார்ப்பு தான்.. என்ன விட என் பொண்ணு வசதியான ஒரு இடத்துக்கு வாக்கப்பட்டு போகணும் என்றது இதுல என்ன தப்பு…” என்று பத்மினி தன் பக்கத்து நியாயத்தை கூற

“நீ சொல்றது சரிதான் க்கா.. இது மட்டும் தானா இல்ல வேற எதுவுமா?…” என்று உள்ளுக்குள் உடைந்து சிதறிக் கொண்டிருக்கும் இதயத்தின் வலியை வெளியே காட்டாமல் முயன்று குரலை சீர்படுத்திக் கொண்டு கேட்க

“முக்கியமா இதுதான்.. இதுக்கு காரணம் நிறைய இருக்கு.. காயத்ரி தனக்குன்னு ஒரு லட்சியத்தோட படிச்சிட்டு இருக்கா, உனக்கே தெரியும்.. அவளுக்கு பெரிய ஆடிட்டர் ஆகணும் என்றது கனவு.. அதுவும் அவளோட ரோல் மாடல் லண்டன்ல சி.ஈ.ஓவா இருந்தவங்க அதனால லண்டன்ல இருக்குற ஒரு மாப்பிள்ளய பாக்கணும்னு நினைச்சேன்.. அப்போதான் உன் மாமாவோட தங்கச்சி அம்பிகா லண்டன்ல செட்டில் ஆனது தெரியும்.. அவளோட மகனுக்கு காயத்ரிய கட்டிக் கொடுக்கணும்னு இவ பொறந்த அப்பவே சொல்லிட்டு தான் இருந்தா.. நான் தான் என் புகுந்த வீட்டு ஆட்கள் மேல இருக்கிற கோபத்துல அத பத்தி யோசிக்கல.. ஆனா இப்போ கொஞ்ச நாள் முன்னாடி தான் இப்பவும் கூட அம்பிகாவுக்கு காயத்ரிய தன் பையன் அரவிந்த்க்கு கட்டி வைக்க விருப்பம்னு தெரிஞ்சுச்சுது.. நானும் காயத்ரி படிப்பு முடியட்டும்னு இப்போதைக்கு எதுவும் யோசிக்காம விட்டுடேன்..

…நீயே சொல்லு இப்போ இவள படிப்பிக்க, கல்யாணத்துக்கு காசு சேக்க, நகை நட்டு சேக்கன்னு அதுக்கு தான் உன்னோட வருமானம் சரியா இருக்கு.. பின்னுக்கு இவள லண்டன் அனுப்பி அவளுக்கு புடிச்ச வேலைய செய்ற அளவுக்கு உன்னால பாத்துக்க முடியுமா?.. இன்னும் நாலஞ்சு வருஷத்துல இவ ஆடிட்டர்.. ஆனா நீ ஒரு டிகிரி தான் வச்சிருக்க.. இந்த வயலும் தோப்பு தான் உனக்கான அடையாளம்.. கையிலேயே என் பொண்ணு நல்லா இருக்க கூடிய ஒரு வரன் இருந்தும், என் தம்பி என்ற காரணத்துக்காக உனக்கு நான் ஏன் இவள கட்டி வைக்கனும்…” என்று

தான் கொட்டும் வார்த்தைகள் எதிரே இருப்பவனின் விரிசல் விட்ட இதயத்திற்கு, அமிலமாக சென்றடைந்து சிதைக்கின்றது என்பதை புரியாமல், தன் மனதில் இருப்பவை எல்லாவற்றையும் கூறி முடித்தார்.

தன் கீழ் உதட்டை அழுந்த கடித்து தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.

ஆறடி ஆண்மகனை கத்தி இன்றி ரெத்தம் இன்றி மொத்தமாக சாய்த்து இருந்தார் பத்மினி.

விரக்தியாக சிரித்தவன் அங்கு இருந்த இருக்கையில் தோய்ந்து அமர்ந்து விட,

“ஐயோ என் புள்ள!…” என்று பதறி ஸ்ரீதரின் அருகில் வந்த கமலம் “அடியே உன்னால தான் இவன் மேல் படிப்பு படிக்காம ஊரோட இருந்தான்.. உழைச்சு உனக்கு குடுத்தான்.. இப்போ இவனயே ஒன்னும் இல்லாதவன்னு சொல்றல்ல…” என்று ஆதங்கமாக கேட்க

“அம்மா!…” என்று உரக்க குரல் குடுத்து அவரை மேற் கொண்டு பேச வேண்டாம் என்பது போல் தலையை இடவலமாக ஆட்டினான்.

காயத்ரியால் அவனை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. வாயை மூடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

கமலம் கேட்ட கேள்வி சுருக்கென்று பத்மினியை குத்தினாலும், அவர் முடிவில் எந்த மாற்றமும் வரவில்லை.

நீண்ட அமைதி அவ்விடத்தை ஆட்சி செய்ய, ஆழந்து யோசித்து, ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தவனாக எழுந்து நின்றான் ஸ்ரீதர்.

“சரிக்கா.. இப்ப என்ன உன் பொண்ணோட லட்சியத்துக்கு மேல மேல தூக்கி விடுற அளவுக்கு ஒரு மாப்பிள்ள வேணும்.. உன் பொண்ணு பெரிய ஆடிட்டர்ன்னா உன் மாப்பிள்ளையும் அதே மாதிரி பேர் சொல்லிக்கிற அடையாளத்தோட வேணும் அவ்வளவு தானே.. காயத்ரி படிச்சு முடிக்கட்டும்.. குட்டியோட படிப்பு முடிஞ்சு கல்யாணம் பண்ணி குடுக்கலாம்னு நீ யோசிக்கும்போது நீ எதிர்பார்த்த எல்லா தகுதிகளோடையும் நான் வந்து நிற்கிறேன்.. ஒருவேள நான் திரும்பி வராம போயிட்டா நீ நினைச்ச மாதிரி ஒரு மாப்பிள்ளைய பாத்து கட்டி கொடுத்துடு…” என்று சொல்ல

அவன் முடிவில் அணைவரும் ஆடித்தான் போயினர்.

காயத்ரியால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. கண்ணீரோடு மொட்டை மாடிக்கு ஓடி விட்டாள்.

“டேய் என்னடா? என்னனென்னவோ சொல்ற?…” என்று கமலம் புரியாமல் கேட்க

“அம்மா!…” என்று அவரின் இரு தோள்களையும் ஆதுரமாக பிடித்தவன் “நான் எனக்கான அடையாளத்த தேடி போறேன்.. கண்டிப்பா என் காயூ குட்டிய கல்யாணம் பண்ணனும் என்றதுக்காகவே ஜெயிச்சு திரும்பி வருவேன்.. இங்க இருந்தா அக்கா சொல்ற மாதிரி இது மட்டும் தான் என் அடையாளம்னு நின்னு போயிடும்.. அது மட்டுமில்ல நான் தான் காயூ குட்டிய என் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்கேன், நான் அவ கண்ணு முன்னாடி இல்லனா எங்க ரெண்டு பேரோட நேசம் குறஞ்சிடும்னு அக்கா சொல்லுது அது உண்ம இல்ல.. மாமனா நான் காட்டுன பாசத்துக்காக என்ன திரும்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்னு காயத்ரி சொல்லல.. அவளுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்னு எங்களோட காதல நிருபிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.. அதுக்காக தான் போறேன்…” என்று சொன்னவன்.

பத்மினியிடம் திரும்பி “நான் இல்லனாலும் இந்த வீட்டோட எல்லா பொறுப்பும் என்னோடது தான்.. அதனால நீ எதப் பத்தியும் கவலைப்படாத.. காயத்ரியோட படிப்பு இந்த வீட்டோட செலவு எல்லாமே உன் கைக்கு வார மாதிரி பண்ணிடுறேன்.. நீ நெனச்ச மாதிரி கண்டிப்பா திரும்பி வருவேன்.. அதுவரைக்கும் இந்த வீட்டுக்கு வரமாட்டேன், என் சம்பந்தப்பட்ட தகவல் கூட வராது…” என்று உறுதியாக கூறியவன்

காயத்ரியை பார்க்காமல் தனது அறைக்கு சென்று, ஐங்கரனுக்கு அழைத்து வீட்டிற்கு வர சொன்னான்.

error: Alert: Content selection is disabled!!