இடைவெளி வலிக்குதே 3 – 1

அத்தியாயம் 3

இரண்டு நாள்களில் புது இலக்கத்திலிருந்து அவனுக்கொரு அழைப்பு வந்தது. யார் என்று தெரியாமல் ஏற்றான்.

“நான் கானவி.”

அவனால் நம்பவே முடியவில்லை. “என்ர நம்பர் எப்பிடிக் கிடைச்சது?”

“ஏன், நீங்க தராட்டி எங்களுக்குக் கிடைக்காதோ?” துள்ளும் குரலில் திருப்பிக் கேட்டாள் அவள்.

“எப்பிடிக் கிடைச்சது எண்டு கேட்டனான்!”

“சொல்ல மாட்டனே!”

அவனோடு விளையாடுகிறாள் என்று தெரிந்தாலும் அவன் கொடுக்க மறுத்த ஒன்றை அவள் கண்டுபிடித்தது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“என்ன விசயம்?” என்றான் சுருக்கமாக.

“இது என்ன கேள்வி. உங்களோட சும்மா கதைக்கத்தான் எடுத்தனான்.”

“அதுக்கு நான் என்ன வேலை வெட்டி இல்லாமலா இருக்கிறன்?”

“நாங்க மட்டும் சும்மாவா இருக்கிறம். எங்களுக்கும் ஓராயிரம் அலுவல் இருக்கு!” ரோசத்துடன் சொன்னாள் அவள்.

“அப்ப அதைப் பார்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு, அவள் மீதிருந்த கோபத்தில் பைக்கை உதைத்துக் கிளப்பினான்.

கைப்பேசி மீண்டும் சிணுங்கிற்று. விழிகளை ஒரு முறை மூடித் திறந்து நிதானத்தை வரவழைத்துக்கொண்டு, “இப்ப என்ன?” என்றான்.

“கலியாணத்துக்கு முதல் மெகந்தி பங்க்ஷன் இருக்கு. அதுக்கு எல்லாம் இப்பவே பிளான் பண்ணோணும். அதுதான் அதுக்கு நீங்களும் வருவீங்களா எண்டு கேக்க எடுத்தனான்.”

அவனுக்கு இன்னுமே ஏறிப் போயிற்று. “அதென்ன மெகந்தி பங்க்ஷன்?” ஒருமாதிரிக் குரலில் வினவினான்.

“என்ன சொல்லுறீங்க? மெகந்தி பங்க்ஷன் தெரியாதா?”
இது கூடத் தெரியாமல் இருப்பானா எனும் அதிர்ச்சி அவளுக்கு.

“தெரியாம இருக்க அதென்ன கம்ப சூத்திரமா? இதெல்லாம் நாங்க எந்தக் காலத்தில கொண்டாடினனாங்க இப்ப கொண்டாட? உன்ன மாதிரி ஆக்களுக்குக் காசு மெத்திப் போனதால வந்த தடிப்புக்குணம் இதெல்லாம். புதுசு புதுசா ஒவ்வொண்டையும் ஆரம்பிச்சு, ஊர் முழுக்கப் பரப்பி விடாமப் பாக்கிற வேலையப் பார். முக்கியமா இனி எனக்குச் சும்மா சும்மா எடுக்கிறேல்ல!” மிகுந்த கண்டிப்புடன் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

ஒரு கணம் தடுமாறிப் போனாள் கானவி. நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படியொரு கடுமையை அவள் எதிர்கொண்டதில்லை. நெஞ்சை முணுக்கென்று ஒரு வலி தாக்கிற்று. எதிர்காலக் கணவனாக நிச்சயிக்கப்பட்டவன் ஆசையாய், ஆர்வமாய், ஆவலாய்ப் பேசாவிட்டாலும் பரவாயில்லை, தன்மையாய்த் தன்னும் பேசக் கூடாதா?

அன்றைய அவன் பார்வைக்கே அவளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு வீட்டுக்குப் போனபோது நன்றாகத்தானே பழகினான். திரும்பவும் இப்போது எதற்கு இவ்வளவு கோபம்? மெகந்தி பங்க்ஷன் நம் பழக்கம் இல்லைதான். என்றாலும் அதைக் கொண்டாடுவது அவ்வளவு பெரிய தவறா என்ன?

எவ்வளவு யோசித்தும் அவனின் இந்தக் கோபம் அதிகப்படி என்றே தோன்றிற்று அவளுக்கு.

*****

“ஆரம்மா கானவிக்கு என்ர நம்பர் குடுத்தது?” வீட்டுக்குள் வந்த செந்தாளன் கேட்ட முதல் கேள்வியே இதுதான்.

“நாங்க ஒருத்தரும் குடுக்கேல்ல தம்பி.” என்றவருக்கு அவன் கேள்வியின் பின்னிருக்கும் பொருள் விளங்கவில்லை. இன்னும் கொஞ்ச நாள்களில் அவனுக்கு மனைவியாகப் போகிறவளுக்கு அப்படி யாராவது கொடுத்தால்தான் என்ன?

“நீயா?” அங்கே சமையல் கட்டில் ஏறி அமர்ந்திருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சிவரூபனைப் பார்த்துக் கேட்டான்.

“இல்லையே அண்ணா. நான் குடுக்கேல்லயே.” என்றவனுக்கும் கொடுத்தால்தான் என்ன என்கிற கேள்விதான்.

“உங்களோட எடுத்துக் கதைச்சவாவா?” இத்தனை நாள்களில் அவள் குணம் என்ன என்பது அவருக்கும் கொஞ்சம் பிடிபட்டிருந்ததில் சிரிப்புடன் வினவினார் புவனாம்பிகை.

“ம்!”

“அதுக்குச் சந்தோசம் எல்லாப்பு படவேணும். உங்களில அவ்வளவு விருப்பம் இருக்கப்போய்த்தானே தேடி எடுத்துக் கதைக்கிறா.” அவனுக்குப் பருகத் தேநீரைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.

ஏனோ அவனால் அப்படி எடுக்க முடியவில்லை. அவன் மறுத்ததை அவள் மீறியதாகவே பட்டது. “கொஞ்சம் விளையாட்டுத்தனம் கூட மாதிரி இருக்கம்மா.” சிவரூபனை விடவும் ஒரு வயது கூட. அப்படியிருந்தும் அவனிடம் இருக்கும் பொறுப்பில் பாதியும் அவளிடம் இல்லாதது பெரிய குறையாகத் தெரிந்தது அவனுக்கு.

உண்மையில் பச்சுலர் பார்ட்டி, மெகந்தி பங்க்ஷன், சங்கீத் என்று புதிது புதிதாக முளைக்கும் இவற்றிலெல்லாம் அவனுக்கு விருப்பமே இல்லை. வெளிப்படையாகச் சொல்லப்போனால் வெறுத்தான்.

அதையெல்லாம் படங்களிலும் நாடகங்களிலும் பார்த்துவிட்டு, அதன் பொருள் அறியாமல், அது நம் வழக்கமா என்று உணராமல், நம் வேர் என்ன என்பதை மறந்துவிட்டு, ஒருவிதக் கொண்டாட்ட மனநிலையோடு, அர்த்தமற்றுக் கொண்டாடுவதைக் காண்கையில் எரிச்சலாக இருக்கும்.

இவர்கள் எல்லாம் சிந்திக்கத் தெரியாதா முட்டாள்களா என்று எண்ணியிருக்கிறான். இப்படி, அவனுக்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாதவர்கள் செய்வதை அறிந்தாலே எரிச்சல் கொள்கிறவனுக்கு அவன் மனைவியாக வரப்போகிறவளே செய்யப் போகிறாளாம் என்றால் எப்படி இருக்கும்?

“அண்டைக்கே சொன்னனான்தானே. எனக்கு அவேன்ர வீட்டை போன நேரமே அப்பிடித்தான் தெரிஞ்சது. அவவின்ர அம்மா, அப்பா, தம்பி மூண்டு பேரும் மூச்சு விடுறதுக்குக் கூட அவவின்ர முகத்தைத்தான் பாக்கினம்.” என்ற சிவரூபனைப் புருவம் சுருக்கிப் பார்த்தான் செந்தாளன்.

“விருந்துக்குப் போன நேரம் அவாவும் கடம்பனும் ஒரே மாதிரி உடுப்பு. மாமி மாமாவும் அதுக்கு மச்சிங்காத்தான் போட்டிருந்தவே. வீடு டெக்கரேஷனும் அதேதான். எனக்குப் பாக்கவே சிரிப்பா இருந்தது.” என்றதும் செந்தாளனின் முகம் கறுத்துப் போனது.

மூத்தவனின் அந்த முகமாற்றம் நல்ல அறிகுறியாகப் புவனாம்பிகைக்குப் படவில்லை. அந்தக் கோபத்தில், “தம்பி! என்ன கதபேச்சு இதெல்லாம்? எங்கட வீட்டில என்ன செய்றதா இருந்தாலும் அக்காவே அண்ணாட்ட ஒரு வார்த்த கேட்டுட்டுத்தான் செய்றவா. அப்பிடித்தான் அங்கயும். அதக் குறையாச் சொல்லுறதா?” என்று சின்னவனைக் கண்டித்தார்.

கூடவே பெரியமகனிடமும் திரும்பி, “தம்பி, இங்க பாருங்கோ. அவா இந்தக் காலத்துப் பிள்ளை. செல்லமா வளந்தவா. அதெல்லாம் அவாக்குப் பிடிச்ச விசயங்கள். அதையெல்லாம் விளங்கி, விட்டுக்குடுத்து, சமாளிச்சுப் போறதுதான் வாழ்க்கை. குணம் சரியில்லை எண்டா அது வேற. அண்டைக்குத் தானாவே வீடு தேடி வந்த பிள்ளை, எவ்வளவு அன்பாப் பண்பாப் பழகினவா எண்டு பாத்தனீங்கதானே? அவ்வளவுதான் உங்களுக்குத் தேவையானது.” என்று எடுத்துச் சொன்னார்.

அதன்பிறகு செந்தாளனும் அதைப் பற்றி மேலே பேசவில்லை. ஆனால், அவள் மீதான அதிருப்தி அடிநெஞ்சில் அதிகரித்துப் போயிற்று. இதில் அவளின் முகப்புத்தகத்தை ஆராய்ந்து, அங்கே அவள் போட்டு வைத்திருக்கும் போட்டோக்கள், அதற்கு வந்து குவிந்திருக்கும் புகழ் மாலைகள் எல்லாவற்றையும் பார்க்க பார்க்க எரிச்சல் மண்டிற்று.

வீட்டுக்குப் பின்னால் சென்று வேகமாக அவளுக்கு அழைத்தான்.

“ஹலோ!” தன்னைச் சமாதானம் செய்யத்தான் எடுக்கிறானோ என்று வேகமாய் அழைப்பை ஏற்றவள் குரலில் பெரும் ஆர்வம்.

“முதல் வேலையா பேஸ்புக்ல போட்டிருக்கிற எல்லா ஃபோட்டோசையும் டிலீட் பண்ணு!” என்றான் அதிகாரமாய்.

“ஏன்?” என்றாள் அதிர்ந்து. “நான் ஒண்டும் பிழையாப் போடேல்லையே.”

“பிழையாப் போடேல்லத்தான். ஆனா பாக்கிறவன் எல்லாம் எப்பிடிப் பாப்பான் எண்டு உனக்குத் தெரியுமா? இல்ல கொமெண்ட் பண்ணி இருக்கிறவன் எல்லாம் என்ன உள்நோக்கத்தில பண்ணி இருக்கிறான் எண்டுதான் தெரியுமா?”

அவளுக்குப் பேச்சற்றுப் போயிற்று. திடீர் என்று அவன் காட்டும் கோபத்தையும் எறியும் கேள்விக் கணைகளையும் சமாளிக்க முடியவில்லை.

“அதில உனக்குக் கொமெண்ட் பண்ணி இருக்கிற எல்லாரையும் தெரியுமா உனக்கு?”

“இல்ல.”

“பப்ளிக்ல போட்டோஸ் போடுறது ஆபத்து எண்டு தெரியுமா தெரியாதா?”

“தெ…ரியும்.”

“பிறகும் என்னத்துக்கு… முதல் எல்லாத்தையும் டிலீட் பண்ணு. இன்னும் பத்து நிமிசத்தில செக் பண்ணுவன். ஒரு ஃபோட்டோ இருக்கக் கூடாது!” என்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்தான்.

அவளுக்கு அவனுடைய கடுமையிலும் கோபத்திலும் நெஞ்சமெல்லாம் நடுங்கிற்று. அசையக்கூட மறந்தவளாக அமர்ந்திருந்தவள் நேரம் போகிறதே என்று பதறி, வேக வேகமாய் அத்தனை ஃபோட்டோக்களையும் அழித்தாள்.

error: Alert: Content selection is disabled!!