ஆதித்யன் தூக்கியதில் நித்திலனின் பிஞ்சு மனம் லேசாகினாலும் அழுகை மட்டும் நின்றபாடில்லை. அழுததால்தான் இந்த சலுகை. அதை நிறுத்தி விட்டால் சலுகை தீர்ந்துவிடும் என்று நினைத்தானோ?
“நிலன் நல்ல பிள்ளையல்லோ? ஏன் அழுகுறீங்க எண்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான்தான் சொல்லுறேனே மயூ பிள்ளையோட கதைப்பா எண்டு…” என்றவன்,
“மயூ! நீங்க நிலன் அண்ணாவோட நேசம்தானே? (பழம் விடுறது) பிள்ளையின்ர கோபம் போயிட்டல்லோ?”
“ஓமப்பா… நான் நேசம். அவரை இஞ்ச பார்க்கச் சொல்லுங்கோவன்…” என்றவள் தம்ப்ஸ்அப் செய்து நேசம் காட்டினாள்.
“அங்க பாருமன் நிலன், மயூ நே காட்டுறா…” தன் தோளில் மறைத்திருந்த அவனின் முகத்தை வலுக்கட்டாயமாகப் பிரித்து மயூவைக் காட்டினான்.
ஓரக் கண்ணால் அதைப் பார்த்தவன், மீண்டும் அவன் தோளில் புதைத்துக் கொண்டு விசும்பினான்.
“இன்னும் என்ன வேணுமாம் நிலனுக்கு? அதான் மயூ நேசம் சொல்லியாச்சே… இனி மகியோட சேர்ந்து அவாவும் உங்களோட விளையாட வருவா.” என்று அவன் அழுகையை நிறுத்த அவன் சமாதானம் சொல்ல, அவனோ அவனையே குற்றம் சொன்னான்.
“மயூவுக்கு மட்டுமில்லை, ஹ்ம்ம்… ஹ்ம்ம்… உங்களுக்கும்தானே என்னில கோவம்? மயூவுக்கு அடிச்சதெண்டுதானே நீங்க என்னைக் கண்டாக் கதைக்கிறேல? அந்… அந்… அந்தக் கோவத்திலதானே… அண்டைக்கு அம்மா என்னை அடிச்சதுக்கும் அவாவைப் பேசேல? ஹூம்ம்… ஹூம்… இனி நான் அவாக்கு அடிக்கவேமாட்டன். அவாக்கு மட்டுமில்லை. ஹூஹூம்… ரெண்டு மான்குட்டிக்கும் அடிக்கவேமாட்டன். அவையைப் பேசக் கூட மாட்டேன். ஹூஹூம்…” என்றவன் தன்னைக் கட்டியிருந்த அவன் புறங்கையில் தன் உள்ளங்கையை வைத்து, “இது அம்மாவில சத்தியம்” என்றான்.
சத்தியம் செய்தால் பேசி விடுவார்கள் என்று மகி சொன்னதை வைத்துத் தாயின் தலைக்கு இருமுறை செய்வினை வைத்து விட்டதையெல்லாம் எண்ணிக் கவலையில்லாமல்,
“இனி எல்லாரும் என்னோட கதைப்பிங்களோ?” என்று விசும்பலோடு எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக ஆதித்யன் முகம் பார்க்க,
ஆதித்யனுக்குள் அடையாளம் இல்லாத ஏதோ ஒன்று உருகி, அதன் ஈரப்பதத்தில் நித்திலனின் முகம் ஒட்டிக்கொண்டது.
அன்று மயூவின் அழுகைக்குக் காரணம் மகன் என்று அறிந்ததும் சாதனா அடித்த அடிகள் அவனுக்கான தண்டனையாக மட்டுமல்ல, மகன் மாறிவிட்டான் என்ற நம்பிக்கை பொய்த்துப் போன அவளின் ஏமாற்றத்தின் வெளிப்பாடும்தான்.
ஏமாற்றத்தின் வீரியம் கூடிப் போனதால் ஒரு நிமிடத்துக்குள்ளாகவே நித்திலன் முதுகு, தோள் என்று அடிகள் சரமாரியாக விழுந்து விட்டிருந்தன. அவள் கை அசைந்த வேகத்தில் மற்றவர்கள் திகைத்துப் போய் விட்டிருந்தார்கள்.
இறுதியில் ஆதித்யன்தான் “நிப்பாட்டுறீங்களோ?” என்று கேட்டு அவளைத் தடுத்தவன், பிள்ளைகள் இருக்கவே வாய்மொழியாலன்றி விழிகளில் அவளுக்கான பழைய எச்சரிக்கையைக் காட்டியிருந்தான்.
அத்தோடு உடனடியாக அவர்களை வீட்டுக்கும் அனுப்பி வைத்திருந்தான். அவர்கள் பிணக்குகளுக்கு முன் மகளைப் பார்க்க வேண்டுமே என்று!
மகளை ஓரளவு கதைத்து சரிக்கட்டிய பின், சாதனாவுக்கு அழைத்து நித்திலனை மேலே ஒரு அடி அடிக்கக் கூடாது என்றும் இன்றைய நிகழ்வை மனதில் வைத்து அவனை இங்கு அழைத்து வராமல் விடக்கூடாது என்றும் எப்போதும் போல் அவன் வந்து போகட்டும். ஆனால் கொஞ்ச நாளைக்கு மயூவிடம் விடவேண்டாம், மகியோடு சேர்ந்து விளையாடட்டும் என்றும் அவனுக்கு சாதகமாக சாதனாவுக்குக் கட்டளையிட்டு விட்டுத்தான் அவன் அடுத்து கிளினிக்கைப் பார்க்கவே போனான்.
அது தெரியாமல் அவன் தன்னை வெறுத்து விட்டான் என்று ஏங்கி ஏங்கி அழுதவனைப் பார்த்த ஆதித்யன் அவனின் பிழையான நினைப்பை நீக்கவென்றே அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.
முதல்முறை மகள்களை அன்றி ஒரு குழந்தையை முத்தமிடுகிறான். மகள்களின் தோழர்களிடம் சகஜமாகப் பேசுவான் என்றாலும் இப்படித் தூக்கிக் கொஞ்சியதில்லை.
இந்த சின்னவன் ஏதோ ஒரு வகையில் அவனைத் தனக்கு மிகவும் நெருக்கமாக்குகிறான் என்று உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்டவன்,
“உங்களுக்கு ஆர் நிலன் சொன்னது, நான் நீங்க மயூக்கு அடிச்சதாலதான் உங்களோட கதைக்கேல எண்டு?” மென்மையாகக் கேட்டான்.
“ஒருதரும் சொல்லேலை. நீங்கள்தானே என்னைக் கண்டாலும் காணாத மாதிரிப் போறனீங்கள்? கோவத்திலதானே என்னைத் திரும்பியும் பார்க்கிறேல்ல! அதை வச்சு நான்தான் நினைச்சுக் கொண்டனான்.”
“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை இல்லை, நிலன். எனக்குக் கொஞ்சநாளா சரியான வேலை. மயூ, மகியிட்ட கூட நான் நிண்டு கதைக்கிற இல்லை. வேணுமெண்டா அவையிட்டயே கேளுங்கோ…”
“ஓம் நிலனண்ணா. அப்பா சரியான பிஸி.” இருவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
“அப்ப உங்களுக்கு என்னில கோபம் இல்லையோ?” விழிகள் மின்னக் கேட்டான்.
“அப்பிடியெண்டும் சொல்லேலாது. எனக்கு உங்களில கோபம் இருந்ததுதான்.” என்றவும் அவன் முகம் கூம்பினான்.
ஆதித்யனுக்கு அவனைப் பார்க்க சிரிப்பாக வந்தது. ஏன் தன்னை நினைத்தும் கூடத்தான்.
இதுவரைக்கும் தன் மகள்கள் இருவருக்கும் கூட அவன் இவ்வளவு விளக்கங்களும் சமாதானங்களும் சொன்னதில்லை.
அப்பா சொன்னால் அது மட்டும்தான் சரி என்று ஏற்றுக் கொள்ளும் அற்புத செல்வங்கள் அவன் மகள்கள்!
ஆனால் இவன் அப்படியல்லவே! அதனால் அவனுக்கு இன்னும் கொஞ்சம் விளக்கப் பாடம் எடுத்தான்.
அவனைப் பற்றி அறிந்ததிலிருந்து எப்படியாவது அவனை நெறிப்படுத்தி விட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. அதற்கு அவன் எவ்வளவு தூரம் ஒத்துழைப்பான் என்று தெரியாதே!
“நிலன்! நீங்க மயூவை அடிச்சா எண்டில்லை ஆரை அடிச்சாலும் எனக்கு அது பிடிக்காது, கோவம் வரும். நீங்களே சொல்லுங்கோ ஒராளை அடிச்சுத் துன்புறுத்திறது எல்லாம் நல்ல பழக்கமோ? நிலனை மாதிரி அச்சாப் பிள்ளை இப்பிடிப் பிழை செய்யலாமோ?” அவன் கேட்ட பாணியில் நித்திலன் தலை தன்னால் இல்லை என்று ஆடியது.
“ஆஆ… பாருங்கோ நீங்களே பிழை எண்டுறீங்கள்! பிழையான விஷயத்தை செய்தா ஆருக்கெண்டாலும் கோவம் வரத்தானே செய்யும்? அதுவும் எனக்குப் பிடிச்சாக்கள் பிழை செஞ்சா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ரெண்டு தரம் சொல்லிப் பார்ப்பன். அவை என்ர சொல்லுக் கேட்காம குழப்படி செஞ்சா, அவையோட கதைக்கிறதையே நிப்பாட்டிடுவன். இனி நீங்க இப்பிடி செய்வீங்களோ?” என்று அவன் கிடுக்குப் பிடியாக கேட்கவும்,
“இல்லை…” என்ற நித்திலனின் தலை கழன்று விழும் அளவுக்கு கிடைத் திசையில் கிடுகிடுவென்று ஆடியது.
அதைப் பார்த்து வந்த புன்னகையை அடக்கிக் கொண்ட ஆதித்யன்,
“குட் போய்! இனி வெரி குட் போயா இருக்கோணும்.” என்று அவன் நெற்றியில் செல்லமாக முட்டியவன், அவனுக்கு கிளினிக்கிற்கு நேரமாகவே நித்திலனை இறக்கி விட்டான்.
“அப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்குமோ?” அவன் பேச்சில் இருந்து புரிந்து கொண்டதைக் கேட்டான்.
“ஓமெண்டுதானே இப்ப சொன்னனான்?” என்றான் செல்லமாய் சலித்து.
“அப்ப இனி மான்குட்டியளைத் தூக்கேக்க என்னையும் தூக்குவீங்களோ, இண்டைக்குத் தூக்கின மாதிரி!” ஏக எதிர்பார்ப்பை விழியில் ஏந்திக் கேட்க, ஆதித்யனுக்கு மனம் கனத்துப் போனது.
ஏழுவயதில் அவனுக்குள் இருக்கும் ஏக்கங்களைக் கடத்தத் தெரியாமல்தான் இவ்வளவு அட்டகாசங்கள் செய்கிறானோ இவன் என்று அவனைக் கனிவு ததும்பப் பார்த்தான்.
அவனுக்கே அப்படியென்றால் மகனின் கேள்வி சாதனாவை எப்படி வதைத்திருக்கும்? ஏற்கனவே மகனுக்கு உரியது எதையும் தன்னால் சரியாகக் கொடுக்க முடியவில்லை என்ற குற்றவுணர்ச்சியில் இருப்பவளுக்கு இது இன்னும் சுருக்கென்றது.
தந்தைதான் தவறிப் போய்விட்டான். தாயாகத் தானும் அரவணைக்க முடியாத ஒரு நிலையை என் மகனுக்கு ஏன் கொடுத்தாய் ஆண்டவா என்று இறைவனிடம் முறையிட்டாள்.
சற்று முன்பு வரை ஆதித்யன் மகனைக் கையாண்ட அழகை வியந்து பார்த்திருந்தவளுக்கு, தன்னால் ஏன்
இது முடியவில்லை என்ற கேள்வி அரித்ததென்றால் இப்போது என் மகனுக்கு நான் தேவையா என்ற கேள்வி முளைத்தது.
இவனை இப்படியே இங்கேயே விட்டு விட்டு நான் மட்டும் கண்காணாது எங்கேனும் தொலைந்து போனால் என்ன என்று கூடத் தோன்றிவிட்டது.
நான் இல்லையென்றால் என் மகன் கத்தியற்றுப் போய்விடுவான் என்று தன் தாயிடமே சொன்னவளுக்குள் இந்த எண்ணம் உதித்திருக்கிறதென்றால், ஆதித்யன் குடும்பத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும்?
அதிலும் முக்கியமாக ஆதித்யன் மேல்! அவனின் சமூகப் பொறுப்புணர்வு பற்றி நன்கு அறிந்தவள் ஆதலால், தான் தொலைந்து போனாலும் தன் மகனை உரிய பாதையில் அழைத்துச் சென்று அவன் எதிர்காலத்துக்கு நல்ல வழி செய்வான் என்று அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை.
ஆனால் ஆதித்யனோ, நித்திலனை நல்வழிப்படுத்த நீ இல்லாமல் போகவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, நீ இருக்கும்போதே நான் அதற்கான எல்லாம் செய்வேன் என்று அடுத்த வாரமே இவள் முன் நின்றான்.
பேச்சு வார்த்தையின் முடிவில் அவன் முயற்சியை அவள் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட, இருவரின் பேச்சுக்கும் மௌன சாட்சியாக நின்றிருந்த பரமேஸ்வரி அம்மாவோ, நித்திலனுக்கு செய்ய அவளிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லாது உரிமையாய் செய்ய சாத்தியமுள்ள ஒரே ஒரு வழிமுறைக்கான விதையை இருவர் மத்தியில் தூவி விட்டிருந்தார்.

