சண்டையும் சமாதானமுமாக நகரும் அவர்களின் வாழ்வில் இரவுகள் எப்போதுமே அழகானவைதான். அவன்தானா இவன் என்று சந்தேகிக்கும் அளவில் இருக்கும் செந்தாளன் காட்டும் நெருக்கம்.
அதுவே வீட்டினரின் முன் அவள் அருகில்கூட வரமாட்டான். அவள் தன்னிச்சையாக அவனை நெருங்கி நின்றாலோ, கையைப் பிடித்தாலோ பார்க்கும் பார்வையாலேயே தள்ளி நிற்க வைத்துவிடுவான். “முசுட்டு வாத்தி!” என்று வாய்க்குள் முணுமுணுப்பாள் கானவி. பைக்கில் ஒட்டிக்கொண்டு இருப்பது, நடக்கையில் அவன் கையைப் பற்றுவது எல்லாம் அவளுக்குப் பிடித்த விசயங்கள். அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது.
எங்காவது வெளியே செல்வது என்று வந்துவிட்டால் அவளின் மேக்கப் பொருட்கள் முழுவதும் மேசையில் பரவிக் கிடக்கும். அதைப் போடுவதா, இதைப் போடுவதா என்று அலமாரியில் கிடக்கும் உடைகளில் பாதி கட்டிலில் கிடக்கும்.
பார்க்கிற அவனுக்கு விசர் வந்துவிடும். இப்படி இருக்காதே கானவி, முதலே ஒன்றைத் தெரிவு செய்து, அதையே போடு என்று எவ்வளவு சொன்னாலும் அது அவள் காதில் விழாது.
வெளியே போய்வந்த பிறகு அறையை ஒதுக்கவும் மாட்டாள். என்ன இது என்று கேட்டால் உடைகளை அள்ளி அலமாரிக்குள் அடைவாள்.
அடுத்த முறை தயாராகும்போது அதைக் காணவில்லை, இதைக் காணவில்லை என்று திரும்பவும் அனைத்தையும் கவிழ்த்துக் கொட்டுவாள். சில நேரங்களில் கடுமையாகவே கண்டித்துவிடுவான். அந்த நேரத்துக்கு முகத்தை நீட்டிக்கொண்டு அனைத்தையும் ஒழுங்கு செய்கிறவள் மறுபடியும் அதே வேலையைத்தான் பார்ப்பாள்.
சில நேரங்களில் ‘என்ன பெண் இவள்’ என்றுகூடத் தோன்றி விடுவதுண்டு. பின், ‘சேச்சே, அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது’ என்று தன்னையே அடக்கிவிடுவான்.
அதுவும் எங்காவது செல்ல வேண்டுமென்றால் சொல்லும் நேரத்தில் புறப்படவே மாட்டாள். ஒருநாள் அவன் அத்தை விருந்துக்கு அழைத்திருந்தார். முற்றத்தில் காத்திருந்து காத்திருந்து அவனுக்குப் பொறுமையே போயிருந்தது.
இவனைக் கடந்து வீட்டுக்குள் போன சிவரூபன், “அண்ணா என்ன அண்ணிய இரவுச் சாப்பாட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகப் போறாரோ?” என்று அன்னையின் காதில் முணுமுணுத்தது, அவன் பின்னால் தண்ணீர் அருந்த வந்த இவன் காதிலும் விழுந்திருந்தது.
அந்தக் கோபத்தில் அறைக்குள் நுழைந்து, “இன்னும் அஞ்சே நிமிசம். நீ வந்திடோணும். இல்லையோ அடுத்த ஆறாவது நிமிசம் இந்த மேக்கப் சாமான் ஒண்டும் இங்க இருக்காது!” என்றுவிட்டு வந்திருந்தான்.
அபாய மணி அடித்ததில் நான்காவது நிமிடமே அவன் முன்னால் நின்றாள் கானவி.
*****
கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது. அன்று மாலை வீடு வந்த செந்தாளனின் முகம் சரியில்லை. இதில் வந்ததும் வராததுமாக அறைக்குள் சென்று அடைந்துகொண்டிருந்தான்.
ஒன்றும் விளங்காமல் புவனாம்பிகையைத் திரும்பிப் பார்த்தாள் கானவி. இப்போதெல்லாம் அவன் பைக் சத்தம் கேட்டாலே கைப்பேசியை எடுத்து வைத்துவிட்டு அவனோடு நேரம் செலவளிக்கத் தயாராக இருப்பாள் கானவி. அவனுக்கும் அவளின் அந்த மாற்றம் பிடிக்கும் என்று தெரியும். இன்றானால் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லையே!
மருமகளிடம் முகம் கொடுக்காமல் சென்ற மகனைப் புவனாம்பிகையும் கவனிக்காமல் இல்லை. என்னவோ மனம் சரியில்லை போலும் என்றெண்ணிக்கொண்டு தேநீரை அவனுக்குப் பிடித்த பதத்தில் ஆற்றி, அதை அவள் கையில் கொடுத்து, “இதக் குடுத்துப்போட்டு மெல்ல என்ன எண்டு விசாரிங்கோம்மா.” என்று சொல்லிவிட்டு, இங்கிதமாகத் தோட்டத்துக்கு நடையைக் கட்டினார்.
அவள் தேநீருடன் அறைக்குச் சென்றபோது தலையைக் கையில் தாங்கியபடி அமர்ந்திருந்தான் செந்தாளன்.
“தேத்தண்ணி.” கோப்பையை அவனிடம் நீட்டியபடி சொன்னாள்.
அவன் நிமிரவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தாள். அப்படி என்னதான் ஆயிற்று என்கிற கேள்வி மண்டையைக் குடைந்தது. கோப்பையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, “வாத்திக்கு இப்ப என்ன கோவம்? இல்ல, என்ன பிரச்சினை? ஒண்டும் சொல்லாம இப்பிடித் தலையைக் குனிஞ்சுகொண்டு இருந்தா என்ன எண்டு நினைக்கிறது?” என்றபடி அவன் முகம் பற்றி நிமிர்த்தினாள்.
படக்கென்று அவள் கைகளைத் தட்டிவிட்டவன், “பேசாமப் போறியா அங்கால!” என்றான் ஆத்திரத்தை அடக்கிய குரலில்.
அதிர்ந்து நின்றுவிட்டவளுக்கு முகம் கன்றிப் போயிற்று. திருமணத்துக்கு முன்னான அவனின் கடுமை நினைவில் வந்தது. திருமணத்திற்குப் பிறகும் கோபித்துக் கண்டித்திருக்கிறானே தவிர இந்தக் கடுமை? இமைக்க மறந்து அவனையே வெறித்தாள். அடுத்த நொடியே விருட்டென்று அறையை விட்டு வெளியே வந்திருந்தாள். என்ன நடந்தது என்று சொல்லாமல் இப்படித்தான் நடப்பானா என்று பொருமித் தீர்த்தாள்.
அதே நேரம், நீ கோபமாக இருந்தால் இருந்துகொள், எனக்கென்ன என்றும் இருக்கவும் முடியவில்லை. அவன் கோபத்துக்கான காரணத்தை அறிந்து, சமாதானம் செய்துவிடவே விரும்பினாள். மீண்டும் வந்து அறை வாசலில் நின்றாள். அவள் வைத்த தேநீர்க் கோப்பை அப்படியே இருந்தது. அவனும் அப்படியேதான் இருந்தான்.
சற்று நேரம் அவனையே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, “எனக்குத் தெரிஞ்சு நான் ஒண்டும் செய்யேல்ல. நீங்களா வாயத் திறந்து சொல்லாம என…” என்றவளை இடையிட்டது அவன் சினக்குரல்.
“நீ ஒண்டும் செய்யேல்லையா? நீ செய்யாமையா ஊரே என்னைப் பாத்துச் சிரிக்குது?” என்று கைப்பேசியை எடுத்துக் காட்டினான்.
அதில், அவள் ஹெலியில் வந்து இறங்கியது சிறு கிளிப்பாக ஓடிக்கொண்டிருந்தது. கூடவே, அவன் கற்பிக்கும் கல்லூரியின் பெயரைக் கொட்டை எழுத்துகளில் குறிப்பிட்டு, அக்கல்லூரியின் ஆசிரியரின் திருமணம் பிரமாண்டமாக நடந்தபோது, மணப்பெண் ஹெலியில் வந்து இறங்கினார் என்று தலைப்பு வேறு போட்டிருந்தார்கள்.
இதில், “மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு ஆசிரியரின் திருமணம், இத்தனை பகட்டோடு நடந்திருப்பது மக்களிடையே முகம் சுளிக்க வைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.” என்று பின்னிருந்து குரல் வேறு கொடுக்கப்பட்டிருந்தது.
கானவி நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை. தொண்டைக்குழிக்குள் சுவாசம் அடைபட்ட உணர்வு. பயத்துடன் அவன் புறம் பார்வையைத் திருப்பினாள்.
“பாத்தியா நீ செய்த வேலைக்கு நான் எப்பிடிக் கேவலப்பட்டு நிக்கிறன் எண்டு? இதெல்லாம் தேவையா எனக்கு? கீழ வந்திருக்கிற கொமண்ட்ஸ்களை வாசிச்சுப் பார்! அசிங்கமா இருக்கு. என்ர மரியாதை சந்தி சிரிக்குது!” என்றான் வெறுப்புடன்.
அவள் விழிகள் கலங்கின. நிச்சயம் அவனுக்கு இது பெரும் அவமானம்தான். கல்லூரியில் என்ன சொன்னார்களோ? அதை எப்படி எதிர்கொண்டானோ? “சொறி.” எச்சில் கூட்டி விழுங்கியபடி சொன்னாள்.
“இப்ப சொறி சொல்லி என்ன பிரயோசனம்? என்னட்ட ஒரு வார்த்த கேட்டியா? அதுசரி, சொன்னா மட்டும் கேக்கிற ஆளா நீ? நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்கிறது எண்டு நீ நினைச்சதைச் செய்றவள்தானே.” என்றதும் அவள் விழிகளில் கண்ணீர் திரண்டது. உள்ளுக்கு இழுத்தபடி நின்றாள்.
அவனுக்கு அதுவும் எரிச்சலைத்தான் கிளம்பிற்று. “இப்ப என்னத்துக்கு அழுறாய்? உன்னக் கட்டினதுக்கு நான்தான் அழவேணும்! இவ்வளவு காலமும் நான் சேத்து வச்ச மரியாதை மொத்தமும் போச்சு! ச்சேய்!” என்றதும் துடித்துப்போனாள். கன்னத்தில் கண்ணீர் உருண்டு ஓடிற்று. அதற்குமேல் அவன் முன்னே நிற்க முடியாமல் வீட்டின் பின்பக்கம் ஓடினாள்.
மெல்ல மெல்ல வீட்டினர் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். செய்தி அவர்கள் காதுக்கும் போனது. அழுத விழிகளும் கன்றிச் சிவந்த முகமுமாக இருந்தவளை இரக்கத்துடன் நோக்கினர். அது கூட அவளைக் குன்ற வைத்தது. மிகுந்த அவமானமாய் உணர்ந்தாள். அவர்களை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
சிந்துஜாவும் புவனாம்பிகையும் அவளைத் தேற்றினர். அழுகையை அடக்கிக்கொண்டு தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள். ஆனாலும் மனம் ஆறவில்லை. இத்தனை நாள்களாக இல்லாததாகத் தன் வீட்டையும் வீட்டினரையும் தேடினாள்.
செந்தாளனின் கோபத்தில் இருக்கும் நியாயம் வீட்டினருக்குப் புரிந்துதான் இருந்தது. ஆனாலும் அவனைச் சமாதானப்படுத்த முயன்றனர். செந்தாளன் செவிமடுக்கவே இல்லை. அன்றிரவு உண்ணாமலேயே சென்று படுத்துக்கொண்டான். சிந்துஜாதான் என்னவெல்லாமோ சொல்லி, பால் அருந்த வைத்திருந்தாள்.
“நாளைக்குச் சமாதானம் ஆயிடுவானம்மா. ஒண்டையும் யோசிக்காமப் போய்ப் படுங்கோ.” என்று அவளையும் தேற்றி அனுப்பிவிட்டு, அவர்கள் சிந்துஜாவின் வீட்டுக்கு நடையைக் கட்டினர்.
கானவி அறைக்குள் போகவே பயந்தாள். விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு சோபாவிலேயே அமர்ந்திருந்தாள். அவன் வீசிய வார்த்தைகள், பார்த்த பார்வை, செயல் என்று அனைத்தும் திரும்ப திரும்ப நினைவில் வந்து அவளைப் புண்படுத்திக்கொண்டே இருந்தன.
அவன் ஆசிரியன் என்கையில் அவள் செயல் இன்னுமே அதிகமாகக் கவனிக்கப்பட்டு, அளவுக்கு அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பது விளங்கிற்று. தவறுதான். புரிகிறதுதான். என்றாலும்…
எவ்வளவு நேரம் கடந்ததோ! ஒரு பெரிய மூச்சுடன் எழுந்து அறைக்கு நடந்தாள். அவன் உறங்கிவிட்டது தெரிந்தது. சத்தம் இல்லாமல் சென்று படுத்துக்கொண்டாள்.

