இடைவெளி வலிக்குதே 6 – 1

அத்தியாயம் 6

புவனாம்பிகை சொன்னதுபோல் அவன் அடுத்தநாள் சமாதானமாகவில்லை. மாறாக அவள் முகம் பார்த்துப் பேசக்கூட மறுத்தான். அந்தளவில் அவன் பட்ட அவமானம் அவனைத் தின்றுகொண்டிருந்தது.

அன்றைக்கு எப்போதும்போல வகுப்புக்குப் போனவன் ஆரம்பத்தில் இருந்தே மாணவர்களிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான். அதைப் பெரிதாக எடுக்காமல் வகுப்பை ஆரம்பித்தான். ஒரு கட்டத்துக்குமேல் முடியவில்லை. கரும்பலகையில் எழுதிக்கொண்டு இருந்தவன், “அங்க என்ன சத்தம்?”என்று அதட்டியபடி திரும்பியபோது, ஒரு மாணவன் கைப்பேசியை மறைப்பதைக் கண்டுவிட்டான்.

கண்மண் தெரியாத கோபம் வந்தது. “என்ன அது? ஃபோனா? வெளில எடும் கெதியா?” அவன் முன்னே சென்று கையை நீட்டினான்.

“சொறி சேர்.” பயத்துடன் எழுந்து நின்றான் அவன்.

“ஃபோன எடுக்கச் சொன்னனான்!”

நடுக்கத்துடன் காற்சட்டைப் பைக்குள் இருந்து எடுத்து நீட்டினான் அவன்.

“வகுப்பைப் கவனிக்காம அப்பிடி என்ன பாத்தனீர்?” தவறான வீடியோக்கள் எதுவுமோ என்கிற யோசனையுடன் ஓன் பண்ணிப் பார்த்த செந்தாளனின் முகம், ஆத்திரத்திலும் அவமானத்திலும் சிவந்து போயிற்று. நொடி நேரம் அதையே வெறித்தான். பின் நிமிர்ந்தவனின் முகம் எப்போதும் போன்று கடினத்துடன் இருந்தது.

“எனக்குக் கலியாணம் நடந்தது உங்க எல்லாருக்கும் தெரியும்தானே? பிறகும் என்ன பாக்கக் கிடக்கு இதில? இதுதான் கடைசித்தரம். இனி வகுப்பைக் கவனிக்காம இப்பிடி ஏதும் நடந்துதோ அதுக்குப் பிறகு என்ர வகுப்பில இருக்கவே மாட்டீர்!” கடுமையாக எச்சரித்துவிட்டு வகுப்பை எடுத்தாலும் அவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.

எவ்வளவு பெரிய தலையிறக்கம்? அதுவும் கற்பிக்கும் மாணவர்கள் முன். வெளியே காட்டிக்கொள்ளவில்லையே தவிர ஒரு கணம் கூனிக் குறுகிப் போனான்.

அதைத்தொட்டுப் பாடசாலையிலும் செய்தி பரவிற்று. “டீச்சர்ஸ் எண்டாப்போல நாங்க வாழக் கூடாதா என்ன சேர்?” என்று சக ஆசிரியர்கள் ஒருவர் கேட்டுவிட, முகம் மாறாமல் காக்க பெரும் பாடுபட்டுப் போனான்.

“மனுசின்ர பக்கம் நல்ல வசதி போல.” என்கிற பேச்சு, என்னவோ அவன் அந்த வசதிக்கு ஆசைப்பட்டுக் கட்டியது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிவிட, கேட்டவரின் முகத்தை உடைக்கும் அளவுக்கு எழுந்த கோபத்தைப் பல்லைக் கடித்து அடக்கினான்.

அன்றிலிருந்தே அவனைப் பார்க்கும் பார்வை மாறியதோ எனும் ஒரு உணர்வு அவனிடத்தில். நேசித்துக் கற்பித்த கல்லூரியில் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் செய்துவிட்டவளை நினைக்க நினைக்க அவ்வளவு ஆத்திரம் வந்தது.

மூன்று நாள்கள் ஓடிப் போயிருந்தன. கணவனின் பாரா முகத்தில் முற்றிலுமாகச் சோர்ந்து போனாள் கானவி. அவள் என்ன மன்னிப்புக் கேட்டும் அவன் இளகவில்லை. கோபம் வந்துவிட்டால் கையாள்வதற்கு இத்தனை கடினமானவனாக இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

வீட்டினரும் இருவரையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தனர். சமாதானம் செய்கிறோம் என்று அவர்களுக்கு நடுவில் போய், இன்னும் எதையும் பெரிதாக்க விருப்பமில்லை. கூடவே, அந்தச் செய்தியை ஆறப்போட்டு, பழையதாக்கி, அதை அப்படியே கடக்க வைக்கவே முயன்றனர்.

அன்றைக்கு நான்கு மணிபோல் வீட்டுக்கு வந்துவிடு என்று முதல் நாளே செந்தாளனிடம் சொல்லியிருந்தான் மனோகரன். காரணம் கேட்டபோது சொல்லவில்லை. முக்கியமான விடயம், வராமல் இருந்துவிடாதே என்று மட்டும் வலியுறுத்தியிருந்தான்.

மனோகரன் அவசியம் இல்லாமல் எதையும் சொல்கிறவன் இல்லை என்பதால் செந்தாளனும் வந்தான். வந்து பார்த்தால் அவன் மனைவி வீட்டினரும் அங்கே முற்றத்தில் அமர்ந்திருந்தனர். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்களிடம் நலம் விசாரித்து, நல்ல முறையில் பேசிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.

சோபாக்கள் ஒரு கரையாக இழுத்துவிடப்பட்டிருக்க, விறாந்தை சோடிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கச் சுவரில் ‘ஹாப்பி பேர்த்டே’ என்கிற ஆங்கில எழுத்துகள் அரை வட்ட வடிவில் குத்தப்பட்டிருந்தது. அதன் நடுவில் ‘சற்குணம்’ என்கிற பெயரும், அதன் கீழே திகதியும் எழுதப்பட்டிருந்தன. அதன் முன் போடப்பட்டிருந்த மேசையில் ஒரு கேக். அதன் மீது இலக்கம் எழுபதைச் சொல்லும் மெழுகுதிரிகள்.

அவனுக்குச் சிரிப்பதா திகைப்பதா என்று தெரியாத நிலை. யாரும் சொல்லாமலே இது யாரின் வேலை என்று தெரிந்து போயிற்று.

‘இவளுக்கு வேற வேலையே இல்ல!’ நினைத்து முடிக்க முதலே ஒரு அறைக்குள் இருந்து வெளியே வந்தார் சற்குணம். அதுவும் ஜீன்ஸ் ஷேர்ட்டில். பார்த்தவன் முகத்தில் இளநகை அரும்பிற்று.

இதுவரையில் ஜீன்ஸ் அனிந்தேயிராதவருக்கும் மகனைக் கண்டதில் கூச்சமாயிற்று. “நான் வேண்டாம் என்டுதானப்பு சொன்னனான். மருமகள்தான் விடேல்ல. அவவின்ர ஆசைக்காக…” என்னவோ ஐந்து வயதுக் குழந்தை போன்று அவர் வெட்கப்படவும் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

காட்டிக்கொள்ளாமல், “அதுக்கென்னப்பா? உடுப்பு உங்களுக்கு நல்லாருக்கு!” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்தவனின் மனநிலையே மாறியிருந்தது. விழிகள் மனைவியைத் தேடின.

அவள் குசினிக்குள்தான் நின்றிருந்தாள். அவன் வந்தது, முதலில் திகைத்தது, பின் ஒவ்வொன்றாகக் கவனித்தது, சற்குணத்தைக் கண்டுவிட்டுச் சிரிப்பை அடக்கியது, அவரிடம் பேசியது என்று ஒன்றையும் விடாமல் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்.

துணிந்து அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்த போதிலும் கணவன் என்ன சொல்லுவானோ என்று அவள் நெஞ்சு நடுங்கிக்கொண்டுதான் இருந்தது. அவன் சிரித்த பிறகுதான் அந்தப் பயம் அகன்றது. கையில் கிடைக்கிற எதையாவது மாட்டிக்கொண்டு வரப்போகிறான் என்று அறைக்கு விரைந்தாள்.

குளிப்பதற்காக அணிந்திருந்த சட்டையைக் கழற்றிக்கொண்டிருந்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். கானவிக்கு உள்ளே உதறியது. அவன் புறம் திரும்பவே இல்லை. நேராகச் சென்று, அவனுக்கென்று வாங்கி வைத்த உடையை அலமாரிக்குள் இருந்து எடுத்து, கட்டிலில் வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக வெளியே ஓடி வந்துவிட்டாள்.

சிங்கத்தின் குகையிலிருந்து தப்பிய உணர்வில் அவள் மூச்சை இழுத்து வெளியே விட, “என்ர தம்பி எண்டா அவ்வளவு பயமா?” என்றது சிந்துஜாவின் கேலிக்குரல்.

மாட்டிக்கொண்ட சிரிப்புடன், “லைட்டா!” என்றாள் கண்ணடித்து.

சிந்துஜாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆரம்பத்தில் வெளிநாட்டுக் காசு வரும் நினைப்பில் எப்படி நடப்பாளோ என்கிற மெல்லிய பயம் அவளுக்கு இருந்ததுதான். யாரோ ஒருவர் மாடாக உழைத்து அனுப்பும் காசில் சொகுசாக வாழ்கிறவர்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும். நிலவரம் அப்படியா இருக்கிறது?

குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல், கூச்சமென்பது மருந்துக்கும் இல்லாமல், சும்மா இருந்து தின்பதை என்னவோ பெருமையாக எண்ணிக்கொண்டு, பீற்றிக்கொள்வதுதானே நடக்கிறது. ஆனால், அவள் அப்படி இல்லை. நன்றாகவே அவர்கள் எல்லோருடனும் பழகினாள். இன்னும் சொல்லப்போனால் அவளுக்குப் போலவே இவளுக்கும் உடைகள் வாங்குவது, புருவங்களைத் திருத்திவிடுவது, முகத்துக்குப் பேஷியல் செய்வது என்று தன்னை மாதிரி இவளையும் மாற்றிவிடத்தான் முயன்றாள். புவனாம்பிகை, அயலட்டைப் பெண்கள் என்று எல்லோரிடமும் அப்படித்தான்.

அப்படி, எல்லோருடனும் அன்பாகப் பழகுவதாலேயே சிந்துஜாவுக்கு அவளைப் பிடிக்கும். அதில், அவளுக்காகப் பேச வேண்டும் என்று தம்பியைத் தேடிச் சென்றாள்.

*****

தன்னைப் பார்ப்பதைக் கவனமெடுத்துத் தவிர்த்தபடி உடைகளை எடுத்துக் கட்டிலில் வைத்துவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடிய மனைவியைக் கண்டு மெல்லிய சிரிப்பு உண்டானாலும் செந்தாளனுக்குள் வருத்தம் எழத்தான் செய்தது. கோபத்தில் அவளை வாட்டி எடுத்துவிட்டு அவனும் ஒன்றும் சந்தோசமாய் இல்லையே!

ஒரு நெடிய மூச்சுடன் அவள் எடுத்து வைத்த உடைகளை எடுத்துப் பார்த்தான். அவன் அளவுக்குச் சரியாக, டார்க் மெரூன் ஜீன்சும் பீச் கலரில் ஷேர்ட்டும் இருந்து கண்ணைப் பறித்தன. உண்மையில் அவள் தெரிவுகள் எப்போதும் தனித்துவமானவைதான். அவன் கணிப்புச் சரியென்றால் இதே நிறக் கலவையில்தான் அவள் உடையும் இருக்கும். சிறு சிரிப்புடன் அவற்றை அவன் மடித்து வைக்கையில் உள்ளே நுழைந்தாள் சிந்துஜா.

“என்னக்கா?”

“என்ன என்னக்கா? பள்ளிக்கூடத்தில காட்டுற கடுமையையும் கண்டிப்பையும் வீட்டிலயும் காட்டுற பழக்கத்தை எப்ப நிப்பாட்டப் போறாய்?” தமக்கையாய் அதட்டினாள் அவள்.

“இப்ப நான் ஆரிட்ட என்ன கண்டிப்பக் காட்டினான்?” ஒன்றுமே தெரியாதவன் போன்று வினவினான்.

“விளையாடாத தம்பி! அவள் தன்ர ஆசைக்குச் செய்தது. அதுவும் எங்களிட்டச் சொல்லிப்போட்டுத்தான் செய்தவள். நீ கோபிப்பாய், வேணாம் எண்டு சொல்லுவாய் எண்டு நாங்கதான் உனக்குச் சொல்லேல்ல. சரியோ பிழையோ அதெல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு. அவளோட சமாதானமாகு. பாவம், உனக்குப் பயந்து பயந்து ஒவ்வொண்டையும் செய்றாள்.” என்று எடுத்துச் சொன்னாள்.

அவனும் அதைக் கவனித்தான்தானே. ஒன்றும் சொல்லாமல் தமக்கை சொன்னதைக் கேட்டுக்கொண்டான்.

அவன் எண்ணியது போன்று அதே டார்க் மரூனும் பீச் கலரும் சேர்ந்த சுடிதார் செட்தான் அவள் அணிந்து வந்தாள். இதில், அம்மாவும் அப்பாவும் ஒரே நிறக்கலவை. போதாக்குறைக்குச் சிந்துஜா மனோகரன் இன்னொரு நிறக்கலவை. பாவம் சிவரூபன் மட்டும் சோடி இல்லாததால் ஏதோ ஒன்றை அணிந்திருந்தான். இது என்ன கோமாளித்தனம் என்று சிரிப்பு வந்தாலும் அவன் விழிகள் மனைவியையே தொடர்ந்தன.

error: Alert: Content selection is disabled!!