இடைவெளி வலிக்குதே 7 – 1

அத்தியாயம் 7

“குட் மோர்னிங் சிந்து மச்சாள்!” பக்கத்து வீட்டில் சிந்துவின் தலையைக் கண்டுவிட்டு உற்சாகமாய்ச் சொன்னாள் கானவி.

“குட் மோர்னிங் குட்டி மச்சாள்!” பதில் வாழ்த்துச் சொன்ன சிந்துஜா, மலர்ந்து விகசித்திருந்த கானவியின் முகத்தை வைத்தே அனைத்தையும் கண்டுகொண்டாள்.

“என்ர தம்பியோட சமாதானம் ஆகியாச்சுப்போல இருக்கே.” என்றாள் வேண்டுமென்றே.

“இதென்ன கத? சமாதானமாக நாங்க எப்ப சண்டை பிடிச்சனாங்க?” என்று அளவுக்கதிகமாகவே விழிகளை விரித்தாள் அவள்.

பக்கென்று சிரித்துவிட்டு, “சண்டை பிடிக்காமையா இந்த முகம் கொஞ்ச நாளா அழுது வடிஞ்சது?” என்றாள் கேலியாக.

“இல்லையே! அப்பிடி ஒரு சம்பவம் இங்க நடக்கவே இல்லையே.” சிரிப்பை அடக்கிய குரலில் அடித்துச் சொன்னாள்.

“அடிப்பாவி!” என்று பொய்யாக வாயைப் பிளந்தாள் சிந்துஜா. அங்கே, முற்றம் கூட்டிக்கொண்டிருந்த புவனாம்பிகையை நோக்கி, “பாத்தீங்களாம்மா உங்கட மருமகளை? எங்கட கண்ணுக்கு முன்னாலேயே சோத்துக்க முழுப் பூசணிக்காயை மறைக்கிறா.” என்று வம்பிழுத்தாள்.

புவனாம்பிகையும் காலையில் எழுந்ததில் இருந்தே அவளிடம் தெரிந்த உற்சாகத்தைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

அதில், “ஆயிரம்தான் சண்டை எண்டாலும் மனுசன விட்டுக் குடுக்கேலுமா?” என்றார் மருமகளின் பக்கம் நின்று.

“அப்பிடிச் சொல்லுங்கோ மாமி! சிந்து மச்சாளுக்கு ஒண்டும் தெரியேல்ல! எங்கட மனோகரன் அண்ணா பாவம்.” என்றுவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

“என்ர கடவுளே! இவ்வளவு நாளும் சோக கீதம் வாசிச்சுப்போட்டு என்ன கதை கதைக்கிறீர்!” என்றவள் பேச்சு அவர்களின் அறை வரையில் கேட்க, கலகலவென்று சிரித்தாள் கானவி.

கல்லூரிக்குத் தயாராகிக்கொண்டிருந்த செந்தாளனும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். “சமாதானமானத ஊருக்கே சொல்லுவியா?” என்று பொய்யாய் அதட்டினான்.

“நான் எங்க சொன்னனான்? என்ர முகம் காட்டிக் குடுக்குது போல!” என்றாள் அவனைப் பாராமல்.

உண்மைதான். இந்தச் சில நாள்களாக இருந்த வாட்டம் மறைந்து அவள் முகம் மலர்ந்து விகசித்திருந்தது. தன் கோபமும் பாராமுகமும் அவளை ஆழமாகப் பாதிப்பதை எண்ணித் தனக்குள் சிரித்தவன், அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டுவிட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டான்.

*****

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என்மீது மோதுதம்மா
செந்தாழம்பூவில்…

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் என்கிற பாடல் வரிகளைச் சுமந்து சிணுங்கிற்று கானவியின் கைப்பேசி.

அங்கே தன் மேசையில் அமர்ந்திருந்து, நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த செந்தாளன் திரும்பிப் பார்த்து அவளை முறைத்தான்.

இந்தப் பாட்டை ரிங்க் டோனாக வைத்து வீட்டில் அவன் மானத்தை வாங்கிக் கொண்டிருந்தாள் அவள். மாற்று என்று எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. இவனிடம் எதையும் பேசியதில்லையே தவிர, “செந்தாழம்பூ என்னவாம்?” என்று இவன் இல்லாத பொழுதுகளில் அவளை மனோகரன் சீண்டுவது வரை அவனுக்குத் தெரியும்.

“காதலிக்கத் தெரியாத முசுட்டு வாத்திக்கு மனுசியாகி நான் படுற பாடு இருக்கே…” என்று புறுபுறுத்தபடி ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள் கானவி.

இல்லையோ கைப்பேசியைப் பறித்து வைத்தாலும் வைத்துவிடுவான். அப்படி ஒருநாள் நிறைய நேரம் போனிலேயே இருந்துவிட்டாள் என்று காலையில் எடுத்து ஒளித்து வைத்துவிட்டு அவன் போய்விட, அன்று பள்ளிக்கூடம் முடிந்து வரும் வரையில் தேடியும் அவளால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பிறகு கெஞ்சிக் கூத்தாடித்தான் திரும்பவும் வாங்கியிருந்தாள்.

சற்று நேரத்தில் மீண்டும் உள்ளே வந்து, “மாமா உங்களோட கதைக்கவாம்.” என்று கொடுத்தாள்.

வாங்கிப் பேசினான்.

“எப்பிடி இருக்கிறீங்க தம்பி?”

“நல்லாருக்கிறன் அங்கிள். நீங்க?”

“எங்களுக்கு என்ன தம்பி, விடிஞ்சா பொழுதுபட்டா வேலை எண்டு போகுது.” என்றவர் நல்ல முறையிலேயே அவனோடு கொஞ்சத்துக்கு உரையாடிவிட்டு, “பிறகு தம்பி? வெளிநாட்டுக்கு வாற ஐடியா ஏதும் இருக்கா?” என்றார் மெதுவாக.

பதில் சொல்ல முதல் கானவியைத் திரும்பிப் பார்த்தான். அவள் அறையில் இல்லை. இதை அவர் பேசட்டும் என்றுதான் வெளியில் போனாளோ என்று உள்ளே ஓட, “இல்லையே. அப்பிடி எந்த எண்ணமும் இல்லை எண்டு சொல்லச் சொல்லிக் கலியாணம் பேசேக்கையே அத்தானிட்டச் சொன்னனானே. அத்தான் சொல்லேல்லையோ?” என்று வினவினான்.

“இல்லையில்லை. அவர் சொன்னவர்தான். அப்பிடி நினைச்சு நானும் கேக்கேல்லை. முதல் அவாக்கு வெளிநாட்டிலதான் பாத்தானாங்க. அது அமையாததாலதான் உள்ளூரிலையே பாக்கவேண்டியதாப் போச்சுது. ஆனா, அவாக்கு வெளிநாடுதான் விருப்பம். அதான் உங்களுக்கும் விருப்பம் எண்டால் அதுக்கான வேலையைப் பாக்கலாம் எண்டு நினைச்சன். இல்லாட்டி கடம்பனுக்குப் பாக்கலாம்.”

“நீங்க கடம்பனுக்கே பாருங்கோ!” என்று சுருக்கமாய் முடித்துக்கொண்டவனுக்கு உள்ளே சுறுசுறு என்று ஒருவித எரிச்சல் பொங்கிற்று.

அவள் கைப்பேசியைத் தூக்கிப் போட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் கவனம் செலுத்த முயன்றான். முடியவில்லை.

வெளிநாட்டில் பார்த்து அமையாமல் போனதால்தான் இங்கே உன்னைப் பார்த்தோம் என்று சொன்னதும், வெளிநாட்டுக்குப் போவதுதான் அவளுக்கு விருப்பம் என்றதும் அவனைத் தொந்தரவு செய்தன.

ஒன்றிரண்டுமுறை வெளிநாட்டுக்குப் போவதைப் பற்றிக் கதைத்திருக்கிறாள்தான். அவன்தான் இந்தளவில் யோசித்ததில்லை. கொஞ்ச நேரம் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் அவளையே அழைத்து விசாரித்தான்.

“உனக்கு வெளிநாட்டுக்குப் போக விருப்பமா?”

“ஏன், போனா என்ன?”

“இங்கயே உடம்பு வளையாத உனக்கு அங்க போய்க் கோப்பை கழுவ ஆசையா இருக்கோ?” என்றான் வேகமாக.

அவனை முறைத்தாள் கானவி. “இந்த நக்கல் நையாண்டிக்கு ஒண்டும் குறைச்சல் இல்ல. வெளிநாட்டுக்குப் போனா இன்னும் நல்லா இருக்கலாம்தானே. நீங்க என்ன, காலம் முழுக்க தொண்டை கிழியக் கத்திக்கொண்டே இருக்கப் போறீங்களா?” என்று அவள் பதிலுக்குக் கேட்கவும் அவனுக்கு நன்றாகவே ஏறிற்று.

“நான் தொண்டை கிழியக் கத்திறதால வாற காசிலதான் நீ குந்தி இருந்து சாப்பிடுறாய். அது பிடிக்காட்டி உன்ர மாமாட்டச் சொல்லி வெளிநாட்டுக்காரன் எவனையாவது கட்டியிருக்க வேணும்! என்னை இல்ல!” என்றான் பட்டென்று.

விக்கித்து நின்றுவிட்டாள் கானவி. மனம் ஒரு மாதிரி அடிபட்டுப் போயிற்று. இன்றைய நிலையில் வெளிநாட்டைப் பற்றியெல்லாம் அவள் யோசித்ததே இல்லை. ஆனால், சிறு வயதிலிருந்து அவள் கொண்ட ஆசை அது. அதனால்தான் போனால் என்ன என்று வெகு சாதாரணமாகப் பதில் சொன்னாள். அதற்கு என்ன சொல்லிவிட்டான்? அவனை நன்றாக முறைத்துவிட்டுச் சென்று பேசாமல் படுத்துக்கொண்டாள்.

செந்தாளனுக்கு உள்ளே எரிந்துகொண்டிருந்த ஒருவித எரிச்சல் அடங்கவே இல்லை. வெளிநாடு வேண்டுமாம் வெளிநாடு என்று சினம் பொங்க, “யாழ்ப்பாணத்தானுக்கு வீட்டுக்கு ஒரு மாமாவோ சித்தப்பாவோ வெளிநாட்டில இருந்துடுவான் எல்லாரையும் கெடுக்கிறதுக்கு.” என்றான் அவளுக்குக் கேட்கட்டும் என்றே. “பெரிய வெளிநாடு! என்னவோ அங்க போய் அரசாங்க உத்தியோகம் பாக்கற மாதிரி!”

கோபத்தில் இருந்த அவளும் அதையெல்லாம் கேட்டுக்கொள்ளத் தயாராயில்லை. “அவே என்ன உத்தியோகம் பாத்தாத்தான் உங்களுக்கு என்ன? வாழ்ந்த வாழ்க்கையையும் பழகின மனுசரையும் மறக்காம அங்க உழைச்சு இங்க அனுப்பிறதாலதான் இங்க எல்லாரும் நல்லாருக்கினம்.” என்றாள் தானும் சுள்ளென்ற தொனியில்.

“ஓ! அப்ப நாங்க எல்லாம் உழைக்கேல்ல?”

“நீங்க உழைக்கிறதுகள் உங்கட வயித்துக்கு மட்டும்தான் காணும்!” என்றாள் அவளும் விடாமல். “2009ல உருத்தெரியாம அழிஞ்சாலும் அந்தத் தடமே தெரியாம இண்டைக்கு யாழ்ப்பாணம் எழும்பி நிக்கிறதுக்குப் பெரும் காரணம் நீங்க சொல்லுற அந்த வெளிநாட்டுக்காரர்தான். அதெல்லாம் நினைவில வராதே உங்களுக்கு. சுனாமி வந்தா வெளிநாட்டுக்காரர் காசு அனுப்போணும், ஆருக்கு என்ன கஷ்டம் எண்டாலும் உடனே ஒரு வீடியோ எடுத்துப் போட்டு ‘புலம்பெயர் உறவுகளே உதவி செய்ங்க’ எண்டு கேப்பீங்க. கோயில் திருவிழா, கும்பாபிஷேகம், அது இது எண்டு என்னத்துக்கு எண்டாலும் அவே வேணும். எல்லாத்தையும் வாங்கி வயித்தையும் வீட்டையும் நிறைச்சுப்போட்டுப் பிறகு குறை சொல்லுறது.” என்றாள் சூடாக.

“இப்ப என்ன சொல்லுறாய்? இண்டைக்கு இருக்கிற இளம் சமுதாயம் கெட்டுப்போறதுக்கு வெளிநாட்டுக்காரர் காரணம் இல்லை எண்டா?”

“அவே உங்களிட்ட வந்து சொன்னவையா கெட்டுப் போங்கோ எண்டு. இல்ல, உங்களை எல்லாம் கெடுக்கவேணும் எண்டு பிளான் பண்ணிக் காச அனுப்பினமா? முதல் இதெல்லாம் ஆரு கதைக்கிறது தெரியுமா? வெளிநாட்டில ஆக்கள் இல்லாம இருக்கிற உங்களை மாதிரி ஆக்கள்தான்!” என்றாள் பட்டென்று.

அவன் முறைக்க அவள் அலட்டிக்கொள்ளவில்லை. “ஆரு கதைக்கோணும் தெரியுமா? வெளிநாட்டில சொந்தபந்தம் இருந்து, அவே காசு தந்தாலும் ‘உங்கட காசு வேண்டாம், எங்களுக்கு நாங்க உழைக்கிறதே போதும்’ எண்டு சொல்லுற ஆக்கள்தான் கதைக்கோணும். அப்பிடி ஆரும் சொல்லுவினம் எண்டு நினைக்கிறீங்க?” என்றாள் அவள் இப்போது நக்கலாக.

error: Alert: Content selection is disabled!!