“வெளிநாட்டுல இருந்து வாற காசால இங்க இருக்கிற பிள்ளைகள் கெட்டுப் போயினம் எண்டால் இங்க இருக்கிற பிள்ளைகள் என்ன அம்மா அப்பா இல்லாத அநாதைக் கூட்டமோ? வெளிநாட்டில இருந்து காசு வருது எண்டதும் பிள்ளைகள் என்ன செய்யினம், அவேக்கு என்ன தேவை, என்ன தேவை இல்ல எண்டு யோசிக்காம பிள்ளைகளை அவிட்டுவிட்ட மாடு மாதிரி நீங்க விடுவீங்க. அவங்கள் இருக்கிற கெட்ட பழக்கம் எல்லாம் பழகி, கெட்டு நாசமாகி வருவாங்கள். பிறகு வெளிநாட்டுக்காரரில பழி. நீங்க சொல்லுற மாதிரிக் கோப்பை கழுவியோ, நிலம் மொப் பண்ணியோ உழைக்கிற காச இங்க அனுப்போணும் எண்டு அவேக்குத் தலையெழுத்தா என்ன? எங்கட சொந்தபந்தம் நல்லா இருக்கட்டும் எண்டு பாசத்தில செய்றது. அத முறையாப் பயன்படுத்தி நல்லா வராம நாசமாப் போறது இங்க இருக்கிற சனம். ஒருசில வெளிநாட்டுக்காரர் பகட்டுக்குச் செய்யலாம். அதுக்காக இங்க இருக்கிற சனம் பாக்கிற கேடு கேட்ட வேலை எல்லாத்துக்கும் அவேய குறை சொல்லாதீங்க.” முறைப்புடன் சொல்லிவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.
இப்படி ஆழமான சிந்தனையோடு அவளிடமிருந்து ஒரு பேச்சு வரும் என்று உண்மையில் அவன் எதிர்பார்க்கவேயில்லை. ஆனாலும் அவள் மீதிருந்த கோபமும், அவளின் மாமாவின் பேச்சு உண்டாக்கிய சினமும் அவனுக்கு அடங்க இரண்டு நாள்களாயிற்று. அதன் பிறகே அவளோடு சமாதானமானான்.
*****
அன்று சனிக்கிழமை. தனியார் வகுப்புகளுக்காகத் தயாராகிக்கொண்டிருந்தான் செந்தாளன். அவனிடம் வந்தாள் கானவி.
“இண்டைக்குப் பின்னேரம் டைம் இருக்கா?”
“என்ன அலுவல்?” ஜீன்சுக்கு பெல்ட்டை மாட்டியபடி வினவினான்.
“உடுப்பு எல்லாம் பழசாயிற்றுது…” என்று ஆரம்பிக்கையிலேயே முறைத்தான் அவன். “போன மாதம் வாங்கினது எல்லாம் உனக்குப் பழசாயிற்றுது?”
“என்ன கதைக்கிறீங்க? அது போ…ன மாதம் வாங்கினது. முப்பது நாளும் போட்டடிச்சாச்சு. அதையே திரும்ப திரும்பப் போடேலுமா?”
அவள் விளையாட்டுப் பேச்சு அவனுக்கு இரசிக்கவில்லை. “இப்பிடிக் காச வீணாச் சிலவழிச்சு, ஊதாரித்தனமா இருக்காத கானவி. ஒவ்வொரு காசும் வேர்வை சிந்தி உழைச்சு வந்தது. அதின்ர அருமை தெரியாம நடக்காத! என்ர உடுப்பை வச்சு எடுக்கிறதுக்கு இடமில்லாத அளவுக்கு அலமாரிக்க உன்ர உடுப்பு நிறைஞ்சு வழியுது. அதுகளை முதல் போட்டு முடி. எத்தின சனம் ஒரு நேரச் சாப்பாட்டுக்கு…” என்றவனை மேலே பேசவிடாது ஓடிவந்து அவன் வாயைப் பொத்தினாள்.
“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்! திரும்பவும் வகுப்பெடுத்து என்னை நித்திரை கொள்ள வைக்காதீங்க! எனக்கு இண்டைக்கு நிறைய வேலை இருக்கு.” என்றதும் அவளை இன்னும் நன்றாக முறைத்தான்.
வேகமாக அவனிடமிருந்து விலகி நின்று, “ஓகே ஓகே! உங்கட கோபம் எனக்கு விளங்குது. ஆனாலும் இண்டைக்கு நேரத்துக்கு வாறீங்க. நாங்க கடைக்கு உடுப்பு வாங்கப் போறம். சரியா? இப்ப நல்ல பிள்ளையா வெளிக்கிட்டுக்கொண்டு போங்க பாப்பம்!” என்றுவிட்டு ஒரே ஓட்டமாக வெளியே ஓடித் தப்பித்திருந்தாள்.
அன்று மாலை நான்கரை வரைக்கும் வருவானா என்கிற சந்தேகத்துடனேயே நேரத்தைக் கடத்தினாள். வரவில்லை என்றதும் அவனுக்கு அழைத்தாள்.
“உனக்கு எத்தின தரம் சொல்லுறது கானவி, சும்மா சும்மா காசை வீணாக்காத எண்டு. இங்க எனக்கு இன்னும் வகுப்பு இருக்கு. அத விட்டுப்போட்டு உன்னோட ஊர் சுத்த வரேலாது. வை ஃபோனை!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
‘சரியான சிடுமூஞ்சி! அறைக்க மட்டும் அந்தக் கொஞ்சு கொஞ்சுவான்!’ மனத்துக்குள் அவனைத் தாளித்தவள் கடம்பனை வரவழைத்து, அவனோடு கடைக்குச் சென்று உடைகள் வாங்கிக்கொண்டு வந்தாள்.
அன்று இரவு, நல்ல உறக்கத்தில் இருந்தவனைத் தட்டி எழுப்பினாள்.
நாள் முழுக்க வகுப்பெடுத்தவனுக்கு மிகுந்த களைப்பு. “என்ன கானவி? படுக்க விடு!” என்றபடி புரண்டு படுத்தான்.
“ஒரேயொரு நிமிசம். ப்ளீஸ் ப்ளீஸ்!”
அவள் விடமாட்டாள் என்று தெரிந்து சிரமத்துடன் விழிகளைத் திறந்தான். அவன் முன்னே குட்டிக் கேக் ஒன்று. அதன் மீது மெழுகுதிரி ஒன்று ஏற்றப்பட்டிருந்தது.
“இண்டைக்குப் பிறந்தநாளா? இல்லையே!” என்றான் குழப்பத்துடன்.
“எங்கட நூறாவது கலியாண நாள்!” சுடர் விட்டு எரிந்துகொண்டிருந்த மெழுகுத்திருக்குப் போட்டியாக விழிகள் ஒளிரச் சொன்னாள் அவள்.
அவனுக்குச் சுர் என்று ஏறிற்று. “லூசாடி நீ? என்னவோ நூறு வருசம் வாழ்ந்தவள் மாதிரி நூறாவது நாள் கொண்டாடுறாவாம். அண்டைக்கெல்லா சொன்னனான் இந்த விசர்க் கூத்து எல்லாம் போடாத எண்டு.” நல்ல உறக்கத்தைக் கலைத்த எரிச்சலில் எரிந்துவிழுந்தான்.
ஒரு நொடி முகம் சுருங்கினாலும், “சரி சரி எழும்பினதுதான் எழும்பினீங்க. கேக்க வெட்டுங்க.” என்று பிடிவாதம் பிடித்தாள் அவள்.
வேறு வழியற்று அவள் சொன்னதைச் செய்தான். இல்லாமல் விடமாட்டாளே! இதில் ஒரு பரிசு வேறு. அதை வைத்துவிட்டு அவன் படுக்கப் போக, “என்ன எண்டு பாத்திட்டுப் படுங்க.” என்றாள்.
அலுப்புடன் அதைப் பிரித்தான். ஒரு பென். அதுவும் விலையானது. ‘அநியாயக் காசு…’ என்று உள்ளே ஓடினாலும், “நல்லாருக்கு.” என்றுவிட்டுப் படுத்துக்கொண்டான்.
“நீங்க எனக்கு ஒண்டும் வாங்கித் தரேல்ல!” மனச்சிணுக்கத்துடன் சொல்லிவிட்டு அவன் மார்பிலேயே தலை சாய்த்தாள் கானவி.
தன்னிச்சையாய் ஒரு கை அவளை அணைத்துக்கொண்டாலும் அவளின் இப்படியான செயல்கள் கவலையளித்தது அவனுக்கு.
அவனோடு முதன் முதலில் பேசிய நாள், அவர்கள் முதன் முதலில் நேரில் பார்த்த நாள், முப்பதாவது திருமண நாள் என்று தொடங்கி 50வது, 75வது என்று அது ஒரு பக்கம் என்றால் இந்தப் பக்கம் வீட்டில் யாருக்குப் பிறந்தநாள் வந்தாலும் அவளிடமிருந்து தப்பாது.
அவள் கொண்டாடினால் பரவாயில்லை. அவனையும் வா என்பதுதான் அவன் பொறுமையைப் பறித்துக்கொண்டிருந்தது. அவனும் முடிந்தவரையில் சமாளிக்கத்தான் பார்க்கிறான். எல்லா நேரமும் முடிய வேண்டுமே!
அவளால் வகுப்புகள் கட்டானது, படிப்பிக்க வேண்டிய பகுதிகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. அங்கே அவன் முடிக்க வேண்டிய பகுதிகளை வேகமாக முடிக்க நினைக்கையில் ஒன்றும் விளங்காமல் விழிக்கும் பிள்ளைகளைப் பார்க்கையில் கையாலாகாக் கோவம் ஒன்று கிளம்பிற்று. அது மனைவியின் திசை நோக்கித் திரும்பியது. சில நேரங்களில் அடக்கிக்கொண்டாலும் பல நேரங்களில் அப்படியே காட்டியும் விடுவான்.
அவள் வாடி வதங்கி நிற்கையில் அதுவும் வலித்தது.
இப்படியெல்லாம் நடக்காதே என்று எவ்வளவு சொன்னாலும் விளங்கிக்கொள்வதே இல்லை. மாதா மாதம் இவளின் இந்த அர்த்தமற்ற செலவுகளுக்கென்றே ஒரு தொகை ஒதுக்கவேண்டி இருந்தது.
சேமிப்புக்கு ஒரு தொகை, நாளாந்த வாழ்க்கைக்கு ஒரு தொகை, நாளைய தேவைகளுக்கு ஒரு தொகை என்று திட்டம் போட்டு வாழ்கிறவன் அவன். இப்போது அவர்கள் இருப்பது சிவரூபனுக்குப் போகப்போகும் வீடு. பக்கத்துக் காணியில் சிந்துஜாவுக்குக் கட்டிக் கொடுத்தாயிற்று. அடுத்த பக்கம் இருக்கும் காணியில் அவனுக்கென்று ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கும் சேர்த்துக்கொண்டிருந்தான். அந்தச் சேமிப்புக் கூட இவள் வந்ததன் பிறகு ஒழுங்கற்றுப் போனது.
என்ன செய்து அவளை மாற்றுவது என்று தெரியவில்லை. எதிர்காலம் குறித்தான பயமும் வந்திருந்தது. ஒரு நெடிய மூச்சு ஒன்றை இழுத்து வெளியேற்றிவிட்டு விழிகளை மூடிக்கொண்டான்.
அன்று மாலை அவள் விருப்பத்தின் பெயரில் கோயிலுக்குச் சென்றுவிட்டு, ஒரு ஹோட்டலுக்கும் போய்விட்டு வந்தார்கள்.
இரவு ஆவலுடன் கூடிக் கழித்தபின், “இன்னும் எத்தின நாளைக்கு நீ மட்டுமே கொண்டாடிக்கொண்டு இருக்கப் போறாய்? எங்களுக்கு எண்டு ஒரு பிள்ளை வேண்டாமா?” என்று கேட்டான் செந்தாளன்.
“என்னது பிள்ளையா? இப்பயேவா? குறைஞ்சது ரெண்டு வருசத்துக்கு அந்தக் கதையே கதைக்கக் கூடாது நீங்க!” என்றாள் அவள் உடனேயே.
அவளைக் கவலையோடு பார்த்தான் அவன். அவள் மனம் அவனுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், சிந்துஜாவுக்குக் குழந்தை இல்லாததாலேயே இவர்களிடம் இன்னும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வீட்டினருக்கு என்ன சொல்வது?
அவனிடம் வாய்விட்டுக் கேட்டதில்லையே தவிர, அவளுக்கு மாதவிடாய் வந்துவிடுகிற ஒவ்வொரு முறையும் வாடிவிடுகிற அன்னையின் முகத்தை அவனும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறான்.
அதே நேரம் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறவள் அவள். சின்ன சின்ன விசயங்களைக் கூடத் தேடிப் பிடித்து மகிழ்கிறவள். அவளை வற்புறுத்தவும் மனம் வரமாட்டேன் என்றது. என்ன செய்வது என்று தெரியாது நின்றான் செந்தாளன்.

