அத்தியாயம் 9
இன்னும் இரண்டு நாள்களில் கானவிக்கு இருபத்தி ஏழாவது பிறந்தநாள் வர இருந்தது. அதற்கென்று அவள் பார்க்கும் வேலைகளைப் பார்க்கையில் செந்தாளனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எனக்குப் பிறந்தநாள் வருகிறது என்று நெற்றியில் எழுதி ஒட்டவில்லை. மற்றும்படி அத்தனை வழிகளிலும் அவனுக்குத் தெரிவித்துவிட்டாள்.
பூவுக்குப் பொறந்த நாளு
பொண்ணாக நீ மலர்ந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்
என்கிற பாடல் வரிகள் அவள் ஸ்டோரியில் நிரந்தரமாக இடம் பிடித்தன. போதாக்குறைக்கு அவனைக் கடக்கையில் எல்லாம் அந்தப் பாடலையே முணுமுணுத்தாள். அடிக்கடி யாரோ ஒருவரின் பிறந்தநாள் விழா பற்றியோ, அதை அவர்கள் கொண்டாடிய விதம் பற்றியோ பேசினாள். மைக் இல்லாத குறையாகப் பிறந்தநாள்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாள். அவனுக்கு எப்போது பிறந்தநாள் என்று அவனிடமே கேட்டாள். இவ்வளவு குறிப்புக் கொடுக்கிறோமே, ஏதாவது கேட்கமாட்டானா என்று அவன் முகத்தை முகத்தையே பார்த்தாள். கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவன்போல் நடமாடிக்கொண்டிருந்தான் செந்தாளன்.
அவள் சோர்ந்துவிடவில்லை. மீண்டும் மீண்டும் அவனுக்கு நினைவூட்டிவிட முயன்றுகொண்டே இருந்தாள். இருபத்தியேழு வயதாகப்போகும் ஒருத்தி, இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக நடக்கிறாளே என்று சிரிப்பாக இருந்தாலும் அவளை ஏமாற்றிவிடக் கூடாது என்று அவன் மனமே ஆசைப்பட்டது.
ஒரு வழியாக விடிந்தால் அவள் பிறந்தநாள் எனும் அளவில் நெருங்கி வந்திருந்தது பொழுது. விளையாட்டுத்தனம் முற்றிலும் விடைபெற்றுப் போயிருக்க, ஒருவித ஆவலும் எதிர்பார்ப்புமாக அவன் முகத்தையே பார்த்தாள். அப்போதும் அவன் அசையவில்லை. அவள் துவண்டுபோனாள். அன்றிரவு உணவு முடிந்து குசினியை ஒதுக்கியதும் தலை வலிக்கிறது என்றுவிட்டுச் சென்று படுத்துக்கொண்டாள்.
அவளைப் போல அவன் இதையெல்லாம் பெரிதாகக் கொண்டாடுகிறவன் அல்லன் என்று தெரிந்தாலுமே எதிர்பார்க்கும் மனத்தை அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
கொஞ்ச நேரத்தில் அவனும் வந்து படுத்தான். “இப்பவும் தலை இடிக்குதா?” என்றான் அவள் நெற்றியை வருடி. தலையணையில் முகம் புதைத்துப் படுத்திருந்தவள், “ம்!” என்பதோடு நிறுத்திக்கொண்டாள்.
உண்மையிலேயே இப்போது அவளுக்குத் தலை நன்றாக இடித்தது. எழுந்து சென்று தைலம் எடுத்துவந்து அவள் நெற்றியோரங்களில் இதமாகத் தேய்த்துவிட்டான். அவளுக்கு நாசி விடைத்து, அழுகை வரப் பார்த்தது. ஏன் இப்படி அளவுக்கதிகமாக எதிர்பார்க்கிறோம் என்று விளங்கவே இல்லை. எதிர்பாராதே, அவன் மறந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாலும் மனம் அமைதியடையவில்லை.
அவனும் தேய்த்துவிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான்.
உறங்குவோம் என்று நினைத்தாலும் கானவியால் முடியவில்லை. கடம்பன் விழித்திருந்து சரியாகப் பன்னிரண்டுக்கு அழைப்பான் என்று தெரியும். அவனுக்கு முதல் கணவன் வாழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டாள். திருமணத்தின் பின் வரும் முதல் பிறந்தநாள். அதை மறக்கமுடியாத நாளாக அவன் மாற்றித் தர வேண்டும் என்று மனம் பெரிதும் விரும்பிற்று.
நடக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. அவன் வாழ்த்தாமல் மற்றவர்களின் வாழ்த்தை ஏற்க விருப்பமில்லை. அது கடம்பனின் வாழ்த்தாய் இருந்தாலுமே! கைப்பேசியின் சத்தத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
நாழிகைகள் நழுவிக்கொண்டே இருந்தன. பிறக்கப்போகும் அடுத்தநாளின் முதல் நொடியை அவனின் வாழ்த்து இல்லாமல் எப்படிக் கடக்கப் போகிறோம் என்று தெரியாமல் அல்லலுற்றுக்கொண்டிருந்தாள்.
சுவர் மணிக்கூட்டின் பெரிய முள்ளு சரியாகப் பன்னிரண்டைத் தொடுகிற அந்த நேரம், அவளைத் திருப்பி, அவள் நெற்றியில் இதமாக உதடுகளைப் பதித்தான் செந்தாளன். இனிய அதிர்ச்சி. அவளால் அதற்குமேல் உறங்குவதுபோல் நடிக்க முடியவில்லை. படக்கென்று விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள். சந்தோசச் சிரிப்புடன் கண்ணீர் பொங்கி வழிந்தது.
“என்ர இருபத்தியேழு வயசுக் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவாறு சொன்னான் அவன். சிரிப்பும் அழுகையுமாக அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மினாள் கானவி.
“மறந்திட்டீங்க எண்டு நினைச்சன்.”
அவன் நகைத்தான். “மறக்க விடுற மாதிரியா இந்தக் கிழமை முழுக்க நடந்தனி?”
“எல்லாத்தையும் கவனிச்சீங்களா?” விழிகளை விரித்து வினவினாள்.
அவன் சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டினான்.
“கள்ளன்! அப்ப தெரிஞ்சுகொண்டுதான் ஒண்டுமே தெரியாதவன் மாதிரி நடிச்சு இருக்கிறீங்க! எனக்கு எவ்வளவு கவலையா இருந்தது தெரியுமா?” சந்தோச மிகுதியில் அவன் முகம் முழுவதிலும் முத்தமிட்டு, உதட்டிலும் ஆழ்ந்து முத்தமிட்டாள். நம்ப முடியா வியப்பில் அவன் விழிகளை விரித்தபோதும் விடவில்லை. இத்தனை நாள்களாக இருந்த கூச்சமெல்லாம் உள்ளத்தின் நெகிழ்ச்சியின் முன்னே பறந்து போயிற்று.
“இதுக்காகவே நிறையச் செய்யலாம் போலவே!” என்று கரகரத்த குரலில் கிசுகிசுத்தான் அவன்.
அதற்குள் அவர்களின் அறைக் கதவு தட்டப்பட்டது. ஆச்சரியத்துடன் அவனையும் கதவையும் மாறிமாறிப் பார்த்தாள் கானவி. அவன் முறுவல் விரிந்தது. அடுத்த கணமே கட்டிலிலிருந்து வேகமாக இறங்கி, ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள்.
மெழுகுதிரி ஏற்றப்பட்ட கேக் ஒன்றுடன் மொத்தக் குடும்பமும் வெளியே நின்றிருந்தது. அவள் சந்தோசத்தில் திக்குமுக்காடினாள்.
“உங்களுக்கு எல்லாம் எப்பிடித் தெரியும்?”
“இங்கதான் ஒரு ஆள் போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா சொல்லிக்கொண்டு திரிஞ்சாவே!” என்றான் மனோகரன்.
“அச்சோ அண்ணா!” என்றாள் சிரிப்புடன்.
“இதில பாட்டு வேற. அது என்ன பாட்டடா சிவா? ஆ! நினைவு வந்திட்டுது. பூவுக்குப் பொறந்த நாளு. பொண்ணாக நீ மலர்ந்த நாளு எண்டெல்லாம் திரும்ப திரும்பப் போட்டாத் தெரியாம இருக்குமா?” என்று சிந்துஜாவும் ஓட்டியதில் வெட்கம் தாங்காமல் முகத்தை மூடிக்கொண்டாள் கானவி.
இத்தனை நாள்களும் எப்படியாவது தன் பிறந்தநாளைக் கணவனுக்குத் தெரியப்படுத்திவிட வேண்டும் என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்தவள், இவர்களின் கேலியில் அந்தளவுக்குச் சிறுபிள்ளைத்தனமாகவா நடந்தோம் என்று வெட்கிப்போனாள்.
சிறுபிள்ளையின் குதூகலத்துடன் கேக் வெட்டி, எல்லோருக்கும் கொடுத்து, அவர்களிடமிருந்து வாழ்த்துகளையும் பரிசுகளையும் பெற்று என்று, அவள் வாழ்வில் மறக்கவே முடியாத நெகிழ்ச்சி மிகுந்த பிறந்தநாளாக அன்றைய நாள் மாறிப்போயிற்று.
அப்போதுதான் கடம்பனின் நினைவு வந்தது. ஓடிவந்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். இதற்குள் பல தடவைகள் விடாமல் அழைத்திருந்தான். நிச்சயம் பயந்து போயிருப்பார்கள் என்று தெரிய, கவனம் இல்லாமல் இருந்துவிட்டோமே என்கிற தவிப்புடன் திருப்பி அழைத்தாள்.
“எங்க அக்கா போனனீ? ஏன் அடிக்க அடிக்க ஃபோன் எடுக்கேல்ல?” எடுத்த கணமே சினத்துடன் சீறினான் அவன்.
“மறந்துபோய் சவுண்ட் கட் பண்ணிட்டனடா!” உள்ளே போன குரலில் சொன்னாள்.
கடம்பனுக்குத் தமக்கை மீது அப்படியொரு கோபம் வந்தது. “நான் கோல் பண்ணுவன் எண்டு தெரியும் எல்லா உனக்கு? ஆனாலும் கட் பண்ணி இருக்கிறாய் எண்டா எங்களை எல்லாம் மறந்திட்டாய் எண்டு அர்த்தம் என்ன?” என்றதும் அவளுக்குக் கண்ணீர் மல்கிப் போயிற்று.
“என்னடா நீ? அப்பிடி மறப்பனாடா?” எனும்போதே அவள் நெஞ்சே அவளைச் சுட்டது. கணவன் வாழ்த்த முதல் அவன் வாழ்த்தைப் பெற விரும்பாமல்தானே சத்தத்தை நிறுத்தி வைத்தாள்.
கூடிப்பிறந்த உறவு. நேற்று வரையில் அவன் வாழ்த்துத்தான் அவளுக்கு முதல் வாழ்த்தாக இருந்திருக்கிறது. பிரத்தியேகமாகத் திட்டமிட்டு, சின்ன சின்ன விசயங்களில் கூட அவளுக்குப் பிடித்ததாகப் பார்த்து பார்த்துச் செய்வான். இந்த நாள் முடியும் இரவு பதினொரு மணி ஐம்பத்தியொன்பதாவது நிமிடத்தில் கூட எதையாவது செய்து அவளைச் சந்தோசப்படுத்துவான். அவனைத் தள்ளி வைத்துவிட்டாளே!
“சொறியடா தம்பி. கோவிக்காத. இனி இப்பிடிச் செய்ய மாட்டனடா! அக்கான்ர பிறந்தநாள் அதுவுமாக் கோவப்படாதையடா!” கம்மிய குரலில் அவள் சொல்ல, அவன் மனதும் கரைந்து போயிற்று. மனமார வாழ்த்தினான். அவள் ஆசைப்பட்டதெல்லாம் நடக்க வேண்டும் என்று சொன்னான்.
பெற்றவர்களும் வாழ்த்தினர். இனி இப்படிச் செய்ய வேண்டாம் என்றும், என்னவோ ஏதோ என்று அவர்கள் பயந்ததையும் சொல்லிவிட்டு வைத்தார்கள்.
மற்றவர்கள் உறங்கச் சென்றுவிட அறைக்குள் வந்தான் செந்தாளன். அவள் முகத்தைப் பார்த்துவிட்டுக்
காரணத்தைக் கேட்டு அறிந்தவனும் அவள் அப்படி நடந்திருக்கக் கூடாது என்றுதான் சொன்னான். கூடவே, ஒரு பிறந்தநாள் வாழ்த்துக்கு இவள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்றும் அவனுக்கு விளங்க மறுத்தது.
அதைக் காட்டிக்கொள்ளாமல், தலையணைக்குக் கீழிருந்து ஒரு பரிசுப் பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“எனக்கா?” நம்ப முடியாமல் விழிகளை விரித்தாள் அவள். இந்தளவில் அவன் விழித்திருந்து வாழ்த்தியதே பெரிய விடயம். இதில் பரிசும் என்றால்?
“பின்ன எனக்கா? எனக்கும் வேணும். அது பிறகு. இப்ப இதத் திறந்து பார்!” அவன் பேச்சின் பொருள் கன்னங்களைக் கதகதக்க வைக்க, அதைப் பிரித்தாள்.
அவன் பெயருக்குக் கீழே இவள் பெயர் இருப்பதுபோல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த மெல்லிய கைச் செயின். அவளுக்கு மிக மிகப் பிடித்ததிருந்தது. அதை வாங்கி அவள் கையில் அவனே மாட்டிவிட்டான்.
தன் கையைத் தானே அப்படியும் இப்படியுமாகத் திருப்பி அழகு பார்த்தவள், சந்தோச மிகுதியில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகத்தோடு முகம் வைத்து உரசினாள். தீப்பற்றிக்கொண்டது. அவளோடு சேர்ந்து கட்டிலில் சரிந்தவன் தன் பரிசையும் அவளிடமிருந்து குறைவு இல்லாமல் எடுத்துக்கொண்டான். இருவருக்குமே மனம் நிறைந்திருந்தது. விலக மனமற்று ஒருவரின் அணைப்பில் மற்றவர் சுகமாக அடங்கிக் கிடந்தனர்.
பொழுது, அடுத்த நாளின் விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. ஆயினும்கூட இருவர் முகத்திலும் உறக்கத்தின் சாயல் மருந்துக்கும் இல்லை. அவள் தலையை வருடிக் கொடுத்துக்கொண்டிருந்தான் அவன்.
“சந்தோசமா?”
“ம்!” மனம் நிறைந்த முறுவலோடு விழி உயர்த்திப் பார்த்தாள் கானவி. அவன் விழிகளில் எதைப் படித்தாளோ! “என்ன?” என்றாள்.
“என்ன என்ன?” உள்ளூர வியந்தாலும் காட்டிக்கொள்ளாமல் வினவினான்.
“உங்களுக்கு என்னட்ட என்னவோ சொல்லோணும், இல்ல கேக்கோணும். அது என்ன எண்டு கேக்கிறன்.”
“எப்பிடித் தெரிஞ்சது?” இப்படித்தானே அன்று என் கோபத்தையும் படித்தாள் என்கிற வியப்புடன் வினவினான்.
“தெரியேல்ல. ஆனா உணர்ந்தனான்.”
ஒன்றும் சொல்லாமல் அவள் நெற்றியோடு நெற்றியை முட்டினான். அவள் நெகிழ்ந்திருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வதாக எண்ணிவிடுவாளோ என்று கொஞ்சம் தயங்கினான்.
“நான் ஒண்டும் நினைக்க மாட்டன், நீங்க கேளுங்க!” என்றாள் இப்போதும்.
அவள் இடையை வளைத்து, இன்னுமே அவளைத் தன்னுடன் நெருக்கமாகக் கொண்டுவந்து, “இந்தளவுக்கு என்னை விளங்கி வச்சிருக்கிறியா நீ?” என்றான் அவள் முகத்துடன் முகம் நெருங்க.
இதென்ன கேள்வி என்பதுபோல் அவனைப் பார்த்துவிட்டு, “இன்னும் நீங்க விசயத்தச் சொல்லேல்ல!” என்றாள் சின்னச் சிரிப்புடன்.
“எனக்கு ஒரு பேபி வேணும்.”
“ரெண்டு வருசம் போகட்டும் எண்டு சொன்னேனே.” முன்னர் போன்று உறுதியாக மறுக்க முடியாமல் இழுத்தாள்.
“அதுதான் கேக்க யோசிச்சனான். ஆனா, அம்மா அப்பாவை யோசி. அக்காக்கும் இப்ப வரைக்கும் பிள்ளை இல்ல. அப்பாக்கு இப்பவே 70 ஆச்சு. அவர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு…” என்றவனின் உதட்டை அவசரமாக மூடினாள். “அப்பிடிச் சொல்லாதீங்க. மாமா இன்னும் நிறையக் காலம் இருப்பார். எண்டாலும் நாங்க பெறுவம்.” என்றாள் அவள்.
“உண்மையாவா? சும்மா சொல்லேல்லையே!” அவனால் நம்பவே முடியவில்லை.
“உண்மையாத்தான் சொல்லுறன்!” தன் முடிவையே மாற்றிக்கொள்ளும் அளவுக்கு நெகிழ்ந்திருந்தாள் கானவி. அந்தக் குடும்பத்துக்காக அதைச் செய்வதில் அவள் கவலைப்படவே இல்லை.
அன்றைய நாள் அப்படி ஒரு பிணைப்பை அவளுக்கு அந்த வீட்டினரோடு உருவாக்கியிருந்தது.
செந்தாளன் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை. நிறைய அவளுக்கு விளக்கவேண்டி வரும் என்று எண்ணியிருந்தான். அப்போதும் சம்மதிப்பாளா என்கிற கேள்வி இருந்தது. ஆனந்த மிகுதியில் அவளைத் தன் முத்தங்களினால் குளிப்பாட்டினான்.
அதன் பிறகான நாள்கள் இன்னுமே அழகாயிற்று. அவளின் பிறந்தநாளுக்குப் பிறகு அந்த வீட்டுடனான அவளின் உறவு இன்னுமே நெருக்கமானதுபோல் உணர்ந்தாள் கானவி. சொந்த வீட்டைப் போன்ற ஒரு சொந்தமும் உரிமையும் உண்டாகியிருந்தது.
இதற்குள் அவர்களின் திருமணம் நடந்து ஆறு மாதங்களாகி இருந்தன. விரைவில் இருநூறாவது திருமண நாள் வர இருந்தது. தன் பிறந்தநாளை இத்தனை அழகாய்க் கொண்டாடிய கணவனுக்குத் தானும் பதிலுக்கு ஏதும் செய்ய நினைத்தாள்.

