Food Quality and Presentation மற்றும் Creating Unique Dining Experience இரண்டுக்கும் ஸ்மித்தான் பொறுப்பு . ஏதன் அங்குச் சென்று நின்றான். இவனைக் கண்டதும் முறுவலோடு வந்து கைலாகு கொடுத்தான் ஸ்மித். அவனோடு கதைத்த குரலில்தான் துர்கா திரும்பிப் பார்த்திருந்தாள்.
புருவங்கள் உயர்ந்தன. விழிகளோடு சேர்ந்து உதடுகள் விரிய முறுவலித்தாள். அப்படியே வெண்பனியாகத் திரண்டுவந்த உற்சாகப்பந்து அவனில் மோதியது போலிருந்தது.
இவனும் ஒற்றைப் புருவ உயர்த்தலோடு நலம் விசாரித்தான். சேர்விஸ் தட்டுகளை ஏந்திக்கொண்டு வந்தவள், பதில் சொல்லிக்கொண்டே , இவனைக் கடந்து நடந்தாள்.
சில நிமிடங்களில் திரும்பி வந்தவளிடம், “உனக்கு இப்ப லன்ச் டைம் இல்லையா?” என்று கேட்டு நிறுத்தினான்.
கடிகாரத்துக்குப் பார்வை செல்ல, “இன்னும் நேரம் இருக்கு, ஒரு மணிக்கு.” என்று விட்டு நகர முயன்றாள், அவள்.
“ஓ! இன்னும் அரைமணித்தியாலம் இருக்கே.” என்று இழுத்தவன், “சரி, அரைமணித்தியாலத்தில வாறன், வெளில சாப்பிடப் போகலாம்.” என்றவன், பதிலுக்கும் காத்திராது சென்றுவிட்டான்.
நிச்சயம் மறுப்பாள் என்றது அவன் உள்ளுணர்வு. அதை நின்று கேட்க விரும்பாது நடந்துவிட்டான் . அப்போதும் வராமல் இருந்துவிடுவாளோ என்று மனத்துள் ஒருவிதமான தவிப்பான உணர்வு அலைந்தோடியது. அவன் கேட்டு ஒருத்தி மறுப்பாளா? இப்படி ஒரு எண்ணம் அவனுள் இல்லையோ என்று கேட்டால் மறுக்க மாட்டான். அது அவன் நிதர்சனத்தில் கண்ட உண்மை. அந்த நிதர்சனத்தோடு இந்த ஆசியப் பைங்கிளியைப் பொருத்த இயலாது இருந்தது.
துர்க்காவோ, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முதல், இங்கு வேலைக்கு என்று வரும் போது ஏதன் இங்கு ஜிஎம் என்றதே அவளுக்குத் தெரியாது. தெரிந்தாலும் பெரிதாக அலட்டியிறாள்தான். கத்திக்குத்தின் பின் நினைவில் அடிக்கடி வந்து போனான் என்பது உண்மைதான். முதல் நாள் நண்பி என்றது தொடங்கி உரிமையான பாவனையில், ‘சந்திப்பமே’ என்ற ஒற்றைச்சொல்லைக் கண்சிமிட்டிச் சொன்னதில் அவள் நினைவில் நிரந்திர இடம் பிடிக்க முயன்றும் இருந்தான்.
அதேநேரம், இந்தப் பணக்காரர்களுக்கு, அதுவும் ‘வெள்ள வேற, இதே வேலையா இருக்கும். கவனமா எட்டவே நிண்டு கொள்ளோணும்.’ முறைப்போடு அவள் மனம் எச்சரிக்கைவிட்டிருந்தது. இந்த எச்சரிக்கை உணர்வை அவளுள் கொண்டுவந்ததும் அவன் செய்கைகள்தான்.
ஆனால், இந்தக் கணம் அவளைத் திண்டாட வைக்கிறான்! அவளொன்றும் அப்படியே பரவசம் அடையவில்லை. எரிச்சல் உருவானது. மிகவும் உரிமை எடுக்கும் வகையிலான அவன் செய்கையில் அவள் அந்தரித்துப் போவது அவனுக்கு விளங்கவில்லையா என்ன?
முயன்று வேலையில் கவனம் குவித்தாள். ஸ்மித் உட்பட அங்கே நின்றவர்கள் ஏதன் கதைத்துச் சென்ற விதத்தில் சுவாரசியமாகப் பார்த்தார்கள். அது தெரிந்தும் காட்டிக்கொள்ளாது நின்றாள்.
“உனக்கு முதலே ஏதன் பழக்கமா?” ஸ்மித் கேட்க, ஆமென்பதாகத் தலையாட்டினாள். நேற்று, பீட்டரிடம் அவன் சொன்னதையே சொன்னாள்.
“ஓ! அதாலதான் உனக்கு இஞ்ச இலகுவா வேலை எடுக்க முடிஞ்சிதா? உண்மையில இஞ்ச வேலையில அனுபவமே இல்லாமல் இங்க எப்பிடி வந்தனி எண்டு குழம்பினனாங்க நாங்க.” ஒருத்தி சொல்ல, மற்றவர்கள் ஆமோதித்தார்கள்.
அவர்களின் கதையை உண்மையில் துர்கா இரசிக்கவில்லை. அனுபவம் இல்லாவிட்டாலும் வந்த கணத்திலிருந்து தனக்குப் பணித்த வேலையை அவ்வளவு மினக்கட்டுச் செய்கிறாள். அதன் பிறகும் இப்படிக் கதை கேட்க வேண்டியிருக்கே!
அக்கணம், பெருமதிப்புக்குரிய செஃப் ஆரோன் டேல் மகன் தானாக வந்து நீட்டும் நட்புக்கரம் அவளுக்குப் பெரும் சுமையாகத் தெரிந்தது. அவளால் கையாள முடியாதது போலொரு உணர்வைக்கொடுத்தது.
“அந்த நட்பு எண்டதுக்கும் இஞ்ச நான் செய்யிற வேலைக்குக்கும் உண்மையில் ஒரு தொடர்பும் இல்ல ஸ்மித். என்ர வேலையில திருப்தி இல்லையோ, திருத்தங்கள் இருக்கோ யோசியாமல் சொல்லீருங்க.” மென் முறுவலோடு என்றாலும் வலு தீர்மானமாகவே சொல்லிவிட்டுத்தான் வேலைகளைப் பார்த்தாள்.
பார்வைக்கு வெகு திருத்தமான அழகியாக இருந்தாள், துர்க்கா. ஆனாலும் அவள் கதைக்கையில் இருக்கும் தெளிவும் நிமிர்வும் நேர்பார்வையும் மேலும் மேலும் அவளை வடிவானவளாகக் காட்டின.
ஸ்மித் சில கணங்கள் அதிகமாக அவளைப் பார்த்துவிட்டு நகர்ந்தான். அவனுக்கும் இவள் வயதில் ஒரு தங்கை இருக்கிறாள். மருத்துவம் படிக்க ஆரம்பித்த வேகத்தில் காதலில் பிரச்சினைபட்டு இப்போ படிப்பை நிறுத்திவிட்டு தீவிர மன அழுத்தம் என்று மருந்தில் இருக்கிறாள். நீல விழிகள், பொன் கூந்தல், பார்த்து ரசித்து வடித்த மெல்லிய உடல்வாகு கொண்ட அழகுச் சிலை அவன் தங்கை. குணத்தில் குழைவும் நெளிவும் கொண்ட பெண்ணாக இல்லாது, இப்படி, துர்க்காவைப் போல் நிமிர்வும் தெளிவுமாக அவள் இருந்திருக்கலாமே!
பெருமூச்சோடு நகர்ந்தான், அவன்.
துர்க்காவோ, கிடைத்த சிறு இடைவெளியில், ‘நான் வெளில எல்லாம் சாப்பிட வரேல்ல சேர். லன்ச் ஹவரில என்ர சொந்த வேலைகள் சிலதுகள் செய்யோணும்.’ மெசேஜ் போடவும் மறக்கவில்லை.
அவன் உடனே பார்த்துவிட்டான். அவள் மறுப்பில் மனம் சற்றும் துவழவில்லை. ‘சேர்’ என்ற ஒற்றைச் சொல் மனத்தைச் சுருங்கச் செய்தாலும் உதட்டில் முறுவல்தான் நெளிந்தது. “வரேல்லையோ, அதையும்தான் பாப்பமே!” முணுமுணுத்துக்கொண்டான்.
சரியாக அரைமணித்தியாலம் கடந்து மறு நிமிட ஆரம்பத்தில் வந்து நின்றான், ஏதன். ஸ்மித் உட்பட ஏழெட்டுப் பேர்கள் அங்கு நின்றார்கள். ஸ்மித்துக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்தவன், “போகலாமா துர்க்கா?” வெகு இயல்பாகக் கேட்டவனைத் திரும்பிப் பார்த்தவளுக்குச் சுர்ரென்று கோபம்தான் வந்தது.
‘வர ஏலாது எண்டு மெசேஜ் போட்டனே, பாக்கேல்லையா நீ?’ என்று கேட்க வாயுண்ணிவிட்டு அடக்கிக்கொண்டாள். சும்மாவே அங்கு நின்றவர்கள் பார்வை அவர்களில்தான். அதிலும் அங்கு வேலை செய்யும் இளம் யுவதிகளுக்கு ஏதனோடு சில வார்த்தைகள் சரி கதைக்கமாட்டோமோ என்ற ஏக்கமே உண்டு. அப்படிக் கதைக்கும் தேவை அவர்களுக்கு இருப்பதில்லை. வலியச் சென்று எப்படிக் கதைக்கப்பதென்று இருப்பவர்களுக்கு, துர்கா அவன் நண்பியாம் என்றதே மனத்துள் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. சிலர், ஆரோன் பரிந்துரை செய்து வேலைக்கு வந்தவள் என்றால் எப்பேர்ப்பட்ட பாக்கியம் செய்தவள் நீ என்று முகத்துக்கு நேரே சொல்கையில் மனத்துள் உள்ள பொறாமையும் ஒட்டிக்கொண்டு வெளிவந்தது.
அப்படியிருக்க, அவர்களிடையே நின்று இவனோடு மல்லுக்கட்டுவதா? “வன் மினிட்” முறைப்போடு முணுமுணுத்தபடி விரைந்து சென்றவள், காலையில் அணிந்து வந்த தொள தொள சம்மர் கோட்டை அணிந்து, கைப்பையையும் எடுத்துக்கொண்டு வர, வலு உல்லாசமாகச் சேர்ந்து நடந்தான், ஏதன்.