அவள் பிழையாகக் கதைக்கவில்லை என்றே நம்பினாள். ஏதன் வலு உரிமையாக அதுவும் இத்தனை துரிதகதியில் அவளோடு பழகுவது ஏனோ அவளுக்குப் பயத்தைத்தான் கொடுக்கிறது. அதை நிறுத்த மனதார எண்ணினாள். ஆனாலும் …
துர்கா விழிகள் கலங்கிப்போயின. “ரெஸ்டோரண்டுக்கு திருப்பப் போறீங்களா ஏதன்?” கேட்டவள் கரம் ஸ்டியரிங் வீலில் பிடித்திருந்தது. அதைச் செய்ய நினைக்கவில்லை. அதுபாட்டில் கரம் நகர்ந்துவிட்டது. சட்டென்று எடுத்தும் விட்டாள்.
அவன் பதில் சொல்லவில்லை, ஏன் அவளைப் பார்க்கவும் இல்லை.
“ப்ளீஸ் ஏதன், கில்டியா ஃபீல் பண்ண வைக்காதீங்க. சாப்பிட்டிட்டே போகலாம். ஆனா இண்டைக்கு மட்டும். ப்ளீஸ்!” என்றவள் குரலில் இருந்த தீர்மானத்தைக் கடந்த தழுதழுப்பு அவனை யூ டேர்ன் எடுக்க வைக்கவில்லை.
திரும்பி ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். சில நொடிகளுக்குத்தான். கார் நேரே சென்றது. அதற்கிடையில் பல ஹோர்ன் சத்தங்கள். பின்னால் வந்த கார்காரன் முறைத்தபடி ஏதோ ஏசிக்கொண்டும் சென்றான்.
காருக்குள்ளோ வெகு அமைதி. அடுத்த ஐந்தாவது நிமிடம் காரை நிறுத்திவிட்டு, பாதையைக் கடந்து அங்கிருந்த ‘பிஷ் அண்ட் சிஃப்ஸ்’க்குள் நுழைந்தார்கள்.
சிறிய உணவகம்தான். அமர்ந்து உண்பது என்றால் பதினைந்து பேர்கள் வரை உள்ளே அமரலாம் . நல்ல காலநிலை என்றால் வெளியேயும் ஒரு இருபது பேர்கள் வரை அமரலாம். பிஷ் அண்ட் சிப்ஸ்க்கு பெயர் போனது.
ஏதன் தலையில் தொப்பி, கூலர் வேறு. சட்டென்று அடையாளம் காண இயலாத தோற்றத்தில் இருந்தான்.
‘சொறி’ என்ற வார்த்தை சொன்னவன் பிறகு ஒரு வார்த்தை கதைக்கவில்லை என்ற எரிச்சலில், “செலிபிரட்டியாம். ஓட்டோகிராஃப் கேட்டு மொச்சிருவீனமாம்.” தமிழில் முணுமுணுத்தபடி நடந்தாள் துர்க்கா.
கடைசியில் மட்டுமே இரு மேசைகளில் இடம் இருக்க, இருவர் அமரும் வகையில் இருந்த மேசையில் கதிரையை இழுத்து அமர்ந்தான், ஏதன். அவன் முன்னால் அமர்ந்தாள், அவள். அவள் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஆண்களும் இருந்தாலும் தனியாக ஒரு ஆணோடு இப்படி வருவது முதல் முறை. ஒரு சாதியாக இருந்தது. அது எப்படியென்று சொல்ல முடியாதவகையிலான பதற்றம்.
அமர்ந்த வேகத்தில் சுற்றிப் பார்த்தவள் பார்வை, முன்னால் இருந்தவன் முகத்தில் வந்து நின்றது. நிதானமாகப் பார்க்கையில் செஃப் ஆரோன் டேல் சாயல் அதிகமாகவே இருந்தது. அதுவே பெரும் மதிப்புக்குரிய அந்த மனிதரோடு உணவருந்த வந்த உணர்வைக் கொடுத்தது. பிடிவாதம் பிடித்து இலண்டன் வந்த போது இப்படியொரு கணத்தை எதிர்பார்தாளா என்ன? ஆனாலும் சாதாரணமாக மகிழ்ந்து ஒரு செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் போட முடியாது. அந்தளவு உயரத்தில் உள்ளவனோடு அவளுக்கு என்ன பழக்கம் வேண்டிக்கிடக்கு?
அவன் அவளைத்தான் பார்த்திருந்தான். அவள் பதற்றம் துல்லியமாகத் தெரிந்தது. அது அவன் மனத்தில் அல்லவா அடி போடுகிறது?
“சொறி துர்க்கா, இந்தளவுக்கு உனக்கு அசௌகரியமாக இருக்கும் எண்டு உண்மையாவே நினைக்கேல்ல. சொறி!” இறுக்கமான முகபாவனையும் குரலுமாகச் சொன்னவனுக்கு இப்போது, விரைவாக அங்கிருந்து போய்விடலாம் என்ற எண்ணம்.
அவனோடு சிறு பொழுதைச் செலவளிக்க ஒருத்தி இந்தளவுக்கு யோசிப்பாள் என்று, இதற்கு முதல் யாரும் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டான்.
மெனு கார்ட்டை எடுத்தான்.
அவன் மீண்டும் சொன்ன சொறி, துர்கா வாயை இறுக மூடி விட்டது. இல்ல அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஏதன், ஏன் சொறி என்று சொல்ல உன்னினாள். முடியவில்லை.
தான் என்ன கதைத்தோம் என்று மனதுள் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தாள். அவள் துணிந்தவள் என்றதில் அவளுக்குச் சந்தேகமே இல்லை. ஆனாலும் முகத்துக்கு நேர எங்கோ உயரத்தில் இருப்பவனை, கூடப் படிப்பவனைக் கண்டிக்கும் சாயலில் கண்டித்திருக்கிறாள். துர்கா இயல்பாக இருக்க முடியாது மிகவுமே தடுமாறினாள்.
அவள் முன்னால் ஒரு மெனு கார்ட்டை நகர்த்திய ஏதன், “என்ன சாப்பிடப் போற? இஞ்ச எல்லாமே நல்ல ருசி. பிஷ் அண்ட் சிப்ஸ் ஸ்பெசல்.” என்றபோதும் அவள் முகம் பார்க்கவில்லை.
“ஏதன்?” சிறு குரலில் அழைத்தாள். கேள்வியாகப் பார்த்தான். அவள் அமைதியாக இருக்கவும், “நான் சாலட்டும் ஒரு போஷன் பிஷ் அண்ட் சிப்ஸும்.” என்றவன், “கெதியாச் சொல்லு, போகலாம்.” என்றும் சொன்னான்.
அவள் எதுவும் சொல்லவில்லை. அந்தக் கெதியாச் சொல்லு, போகலாம் என்றது சுருக்கென்று குத்தியதா? இப்போது முகத்தில் முறைப்பு வந்திருந்தது.
அவள் பார்வை மாற்றம் பார்த்தவன், “ என்ன துர்கா?” என்றான்.
“என்ன, என்ன துர்கா?” வெடுக்கென்று கேட்டுவிட்டாள். அதுவரை இறுக்கமாக இருந்தவன் விழிகளில் இரசனை துள்ளி வந்து அமர்ந்துவிட்டது. மேசையில் முழங்கைகளை ஊன்றியவன் கரமிரண்டும் குவிந்து வாயோடு அணைந்துகொண்டது. உதட்டில் நெளிந்த முறுவலை அவள் பார்வைக்குப்படாது செய்துவிட்டான்.
“நான் கார்ல கதைச்சத்தில எந்த இடத்தில பிழை எண்டு சொல்லுங்க பாக்கலாம்? இப்ப நீங்க இப்பிடி முகத்த நீட்டிக்கொண்டு இருக்கிறதப் பாத்தா, எனக்கே நான் ஏதோ பிழை செய்தது போல இருக்கு ஏதன். எல்லாத்தையும் விடுங்க, நீங்களே யோசிச்சுப் பாருங்க, உங்கட ரெஸ்டோரண்டில நான் ஒரு சாதாரண வேலையாள். இல்லை எண்டுவீங்களா? ஒலிவியா இல்லையோ செஃப் ஆரோனச் சந்திக்கிறது, இந்த வேலையெல்லாம் எனக்குக் கனவு மட்டும்தான் ஏதன். இன்னும் ஐஞ்சு மாசங்கள் அங்க வேலை செய்யோணும் நான். நீங்க என்ன எண்டா வந்த வேகத்தில ஃப்ரெண்ட் எண்டுறீங்க, சாப்பிடலாம் வா எண்டு இழுத்துக்கொண்டு வாறீங்க. பிறகு நான் என்னெண்டு அங்க வேலை செய்யேலும். இப்பவே அங்க இருக்கிறவே பாக்கிறது, குசுகுசுக்கிறது எனக்கு அன்ஈஸியா இருக்கு ஏதன். நீங்க கதை விடுறது எல்லாம் அவேக்குத் தெரியுமா சொல்லுங்க?” என்றவள் கண்கள் நிறைந்து போயின.
“அதோட என்ர சித்தி வீட்டுக்கோ, அம்மம்மா தாத்தாவுக்கோ, ஏன் அம்மா அப்பாவுக்கோ இதெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் இரசிக்க மாட்டினம்.” விழிகளைச் சிமிட்டிக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்று முடியாது, வேகமாகத் துடைத்துக்கொண்டே சொன்னாள்.
வீட்டினர் பற்றிக் கதைக்க முதல், இதுதான் உன் பிரச்சினையா என்று கேட்டு இலகுவாகக் கிண்டலாகக் கதைக்க எண்ணியவன், “சொறி… ரியலி சொறி துர்க்கா. நான் இந்தளவுக்கு யோசிக்கேல்ல. இனி நிச்சயம் இப்படி நடக்காது.” அவசரமாகச் சொன்னான்.
“இவ்வளவு சொன்ன பிறகும் கோவமாத்தான் கதைக்கிறீங்க. உங்களுக்கு நான் என்ன சொல்லுறன் எண்டது விளங்குதில்ல என்ன? நான் போகப்போறன் போங்க.” எழ முயன்றாள்.
“என்னை, என் நிலையை விளங்கிக் கொள்.” என்றதை அவள் சொல்லும் விதமும் அவள் பாவனையும் அந்த சேர் மறைந்து வந்து விழும் ‘ஏதன்’ என்ற அழைப்பும் அவனை, அவள், அந்நியமாக நினைப்பதாவே அவனுக்குக் காட்டவில்லையே. உணர்ந்துதான் கதைக்கிறாளா?
“ஓ துர்கா சிட் ! உண்மையாவே கோவம் எல்லாம் இல்ல. நீ ஏற்றுக்கொண்டாலும் இல்லை எண்டாலும் எனக்கு உன்னோட நிறையக் காலம் பழகினது போல இருக்கு.” என்றுவிட்டு அவளை ஆழ்ந்து பார்த்து அவள் மனத்துள் கிலியைக் கிளம்பிவிட்டான். உள்ளங்கைகளைப் பொத்திக்கொண்டவளுக்கு மிரட்சியில் வியர்த்தது.
“சரி விடு, உண்மையா நான் கோவிக்கேல்ல. நீ சொல்லுறதும் சரிதான். இனி நான் கவனமா இருக்கிறன். இப்ப சாப்பிடுவமா? நேரத்துக்கு வேலை தொடங்காட்டி ஸ்மித் வள் வள் எண்டு உன்னை ஒரு வழி பண்ணிருவான். உனக்கும் சேர்த்தே இதை ஓடர் செய்யிறன் என்ன?” என்றவன், அவள் தலையாட்டவும் என்ன என்ன வேண்டும் என்று சொன்னான்.
அடுத்த அரைமணித்தியாலத்தில் பெரிதாகக் கதைத்துக்கொள்ளாதே அமைதியாக உண்டுவிட்டு எழுந்து வெளியேறினார்கள்.
துர்கா மனம் கலவையான உணர்வுகளின் குவியலாக இருந்தாலும் இவனை எட்ட நிறுத்த வேண்டும், அதுதான் உன் முதல் வேலை என்றது விளங்கியது. ‘உன்ர அம்மம்மா சொல்லுறது போலக் கொள்ளிக்கட்டையால தலை சொறியிற வேலை செய்திராத!’ என்று எச்சரிக்கை விட்டது, மனம்.
ஏதனை எதோடு ஒப்பிட்டு இருக்கிறாள்? கொள்ளிக்கட்டையையும் அவனையும் அருகருகே வைத்துப் பார்த்தவளுக்குப் பக்கென்று வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
ஏதனோ, முன் வைத்த காலைப் பின் வைத்து அறியாதவன், என்னதான் ஆரம்பத்தில் மனம் புண்பட்டாலும் மவுனமாகச் சாப்பிட்ட நேரத்தை இரசித்தவன், இதமான மனத்தோடு சென்று அவளுக்குக் கதவைத் திறந்து விட்டான். அவள் ஏறியதும் உதடுகளில் உறைந்த முறுவலோடு வந்தமர்ந்து காரை எடுத்தான்.