ஏதனின் இலஞ்சியவள் 8 – 1

சமூக வலைத்தளங்கள், மீம்ஸ், ட்ரெண்டிங் என்று தொடங்கி நேர்மறையான, எதிர்மறையான விமர்சனங்களை அறியாதவர்கள் யாருள்ளார்? 

அதிலும் நேர்மறையான பரவலாக்கம் கடந்து, முன்னணியில் நின்று அதிகமானோரை ஈர்ப்பது என்றால், அந்தப் பெருமை மொத்தமாக எதிர்மறையான செய்திகளுக்கே உரித்தாகும். ஆக்கத்துக்குச் செலவிட வேண்டிய எம் பொன்னான பொழுதுகளில் கணிசமான பகுதியைக் களவாடும் பெருமையும் எதிர்மறைக்கே உரியதாகிறது. 

எதிர்மறையான   விமர்சனங்கள், உண்மைக்கு எதிரான புனைவுக் கட்டுக் கதைகள், வக்கிரம் கக்கும் புறணி பேச்சுகள், முகம் சுளிக்க வைத்துவிடும் கீழ்த்தரமான,  சேரிறைக்கும் பாங்கிலான தூற்றல்கள் என்று, எதிர்மறையானது பல்வேறு வடிவங்களில் எம்மைத் தம்பால் இழுப்பதையே வேலையாகச் செய்கிறது. அது கீழ்த்தரமான செயல் என்று தெரிகிறது, கடுமையாகச் சாடுகிறது, இருந்தும் அதையே  சுற்றி வரும் விட்டில் பூச்சிகளாகிக்கொண்டிருக்கிறது மனித இனம்.

உளநலம் குன்றிய, மனிதம் தொலைத்தவர்களாக மாறுகிறோமோ? எதிர்மறையான விடயங்களைப் பார்ப்பதும் கதைப்பதும் வாசிப்பதும் எம்முள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று சற்றேனும் நிதானித்து யோசித்தால் அந்தப் பக்கம் எவரும் தலை வைத்தும் படுக்கமாட்டார்கள்.

ஒன்று இரண்டு நாட்களா, கிட்டத்தட்ட மூன்று மாதங்களின்  பின் நடந்துகொண்டிருக்கும் விடயம் பார்த்த ஏதன் வெகுவாகவே   முகம் சுளித்தான்.

 

இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்ற எரிச்சல் எழுந்தது. காசுக்காக,  எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் திரித்துப் புனைந்து கதை பரப்புவார்களா? 

ஒருத்தன் தொடக்கி வைக்க, வால்  பிடித்துக் கதை பரப்புவார்கள். தம் மொத்தத் திறமையையும் காட்டி, இந்த உலகின் மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் துணை நின்று உழைக்கும் பாங்கில் அல்லவா செயல்படுவார்கள்?

இப்படி வரும் வருவாயில் உணவில் ஆரம்பித்துத் தம் தேவைகளைச் செய்கிறார்கள். தம்மில் தங்கியுள்ளோர் நலனையும் பார்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அடுத்தவன் பற்றி அவதூறு கதைத்து எள்ளி  நகையாடி, இல்லாதது பொல்லாததுகளைப் பரப்பி, அவர்களை மனவுளைச்சளில் தள்ளி, வரும் வருவாயில் உண்டு உடுத்து உறங்கி என்று வாழும் வாழ்க்கை அவர்களுக்கு நிரந்தரமாகுமா?  இப்படி விதைப்பவர்கள் எங்கு, எப்படி அறுவடை செய்வார்கள்? 

இப்படி, மனம் மிகுந்த எரிச்சலோடு முணுமுணுக்க அமர்ந்திருந்த ஏதன் பார்வை கைப்பேசியில், வலக்கை ஆட்காட்டி விரல் அடுத்து அடுத்து என்று யூ டியூப் வீடியோக்களை தட்டிக்கொண்டு சென்றது.  

அன்று, தேம்ஸ் பாலத்தில், அந்தக் கள்வனிடம் வெட்டுப்பட்டு நின்றானே. இவன் அதிர்ந்து பார்த்து நிற்கையில் அந்தக் கள்வன் இவனைப் பார்த்தபடியே எம்பிப் பாய்கிறான். ஏதனும் அந்தக் கள்வனும் மிகவும் துல்லியமாகவே இனம் காணக்கூடியதாக இருந்தார்கள். 

  • பிரபலத்தின் மகன் தாக்கப்பட்டார் , அதிர்ச்சி தரும் பின்னணி!

  • உயிர் ஆபத்தில் செஃப் ஆரோன் டேல் இளைய மகன். துயரில் துவண்ட ஆரோன் குடும்பம். தாக்குதலின் பின்னணி பற்றி அதிர்ச்சியான தகவல்கள்.

  • தேம்ஸ் பாலத்தில் நடந்த கோரம்! இரத்த வெள்ளத்தில் பிரபலத்தின் மகன், இன்னமும் உயிர் ஆபத்தில். அதிர்ச்சி கொடுக்கும்   தாக்குதல் பின்னணி கசிந்தது.

  • ஆரோன் டேல் இளைய மகனுக்கு நிகழ்ந்த அநீதி! சொத்துச்  சம்பந்தமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சனையில் தாக்கப்பட்டாரா? பதில் சொல்வாரா ஆரோன் டேல்?

 

 

இப்படி, விட்டில் பூச்சிகளாகப் படபடத்துத் திரிவோரைக் கவர்ந்திழுக்கும் தம்நெயில் தாங்கி வரிசை கட்டி நின்றன வீடியோக்கள். உள்ளே போனால்,  ஆங்கிலத்திலும் தமிழிலும் “இவர் யார் என்று அடையாளம் தெரிகிறதா மக்களே?” என்று ஆரம்பித்து, ஒரு கதையே புனைந்திருந்தார்கள். 

ஆழமாக வெட்டுக்காயம் பட்ட ஏதன்  ஆபத்தான கட்டம் தாண்டாது வைத்தியசாலையில் இருக்கிறான் என்று, அவன் கழுத்தும் கையும் கட்டுப்பட்டு முகத்தில் வயர்கள் சுற்றியிருக்க ஒரு புகைப்படம் தம் நெயிலில் போட்டிருக்க, வியூஸ் மில்லியன்கள் கடந்து போய்க்கொண்டு இருந்தது. கமெண்ட் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  

மொத்தத்தில் ஆரோன் குடும்பமே பேசு பொருளாகிவிட்டிருந்தது. பெரும்பாலும் எதிர்மறையான பேச்சுக்கள். அதில் வயிறு குளிர்ந்தார்கள், பலர். 

என்ன செய்யவியலும்? இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லவோ, நடவடிக்கை எடுக்கவோ எங்கள் நேரத்தை வீணாக்குவான் ஏன்? அதன் பெறுமதி தெரியாதவர்களா  நாங்கள்?  வேலையில்லாதவன்கள்,  சூடு சுரணை, மான ரோசம் இல்லாத, உழைக்க வழி தெரியாத முட்டாள்களோடு மல்லுக்கு நிற்பதா என்று, இதை ஒரு பொருட்டாகவே ஆரோன் டேல் பார்க்கவில்லை. 

ஏதன்தான் கோபத்தில் ரிப்போட் அடித்தான். ஒவ்வொரு வீடியோவிலும் துர்கா முகம் தெரிகிறதா என்று அவதியோடு தேடினான். அதே வேலையைத்தான் துர்க்காவும் செய்துகொண்டிருந்தாள். ஆங்கிலத்திலும் தமிழிலுமே இந்த விடயம் வந்திருக்க, பதற்றத்தோடு ஒவ்வொரு வீடியோவையும் ஆராய்ந்து தன் அடையாளம் இல்லை என்றதுமே நிம்மதியானாள்.

மறுநாள் விடியலில், இதையெல்லாம் தட்டிவிட்டு உன் வேலையைப் பார் என்ற ஆரோன் டேலே சுரண்டப்பட்டிருந்தார். சமூக வலைத்தளங்களால்தான்.

திருமணம் நடந்து ஒன்பது மாதங்கள் நிறைவடைந்து இருந்த நிலையில் ஒலிவியா, வேர்த்து திருமண வீடியோ மீண்டும் சுட சுட உலா வர ஆரம்பித்திருந்ததுI. அதுவும் முன்னாள் செஃப் ஜோன் என்பவர் இட்ட கருத்தொன்றால்.

பல வருடங்களுக்கு முன், செஃப் ஆரோன் டேல் ஆவுஸ்திரேலியாவில் இருந்தபோது சேர்ந்து வேலை செய்தவரே இந்த ஜோன். அவருக்கு ஒலிவியாவின் அன்னை லிசியை நன்றாகவே தெரியும்.  அதுமட்டுமன்றி அந்நேரம் லிசியை வெகுவாக விரும்பினார். அந்த விருப்பு  ஒரு தலையாகவே மடிந்துபோயிருந்தது. வேறு யாரால்? ஆரோனால் மட்டுமே என்று நம்பினார் அவர். லிசி ஆரோன் உறவும் இவருக்கும் தெரிந்திருந்தது. 

error: Alert: Content selection is disabled!!