ஏதனின் இலஞ்சியவள் 9 – 3

குரல் உயரக் கத்திச் சோஃபியா அழ அழ, ஐவனுக்குத்  தகப்பனில்  அவ்வளவு ஆத்திரம். முதல் தம் தகப்பனா என்று நம்பவும் முடியவில்லை. அதுவே ஆத்திரத்தை அதிகரித்தது.

“உங்களையும் பக்கத்தில வச்சுக்கொண்டு நாங்க எவ்வளவு வேணாம் எண்டு சொல்லியும் கேக்காமல்  ஹேய் டார்லிங் கம் கம் எண்டு அந்த ஒலிவியாவக் கூப்பிட்டு இவர் என்ன செய்தவர்?” உறுமினான் பெரியவன் .

“பிரிச்சுப்பார், உனக்கு மிகவுமே பிடிக்கும் எண்டு சொல்லிப்  பரிசு குடுத்தாரே, அந்த நேரம் அவரை நீங்க பாக்கேல்ல மோம். நான் பாத்தனான். ” என்றான், பளபளத்த விழிகளோடு.

“அது என்ன ஒலிவியாவுக்கு மட்டும் ஸ்பெசல் என்று வேர்த் கூட கேக்கேல்லையா? எங்களுக்கு உரிமையான ரெசிபி புத்தகம் அது. நாங்க அவ்வளவு சொல்லியும் அவள் கைக்கு ஏன் போனது? “இது என்ர மிகப்பெரிய சொத்து! என் கைப்பட, என்  நண்பர்கள் கைப்பட எண்டு எழுதின ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெசிப்பீஸ், சமையல் குறிப்புகள், நுணுக்கங்கள் இதில இருக்கு. இதை வச்சிருக்க மிகப் பொருத்தமானவள் நீதான் எண்டு சொல்லி எல்லா குடுத்தவர். அப்பவே அவள் உங்கட  மகள் எண்டு உங்களுக்குத் தெரியும் ரைட்.” உறுமினான் ஐவன்.

“இந்த ரெசிபி புத்தகம் எந்தளவுக்கு எனக்கு முக்கியமானது எண்டு உனக்குத் தெரியும் சோஃபி. ஏன் எங்கட  பிள்ளைகளுக்கும் தெரியும். இதை என்ர பிள்ளைகளில ஒருவருக்குக் குடுக்கோணும் எண்டு சரியா ஆசைப்பட்டனான். அதனால என்ன? ஒவ்வொருவருக்கும் தத்தமக்குப் பிடிச்சதச் செய்ய உரிமை இருக்கு, என்னைப் போலவே! இந்தப் புத்தகம் எனக்குப் பிறகும் எங்கட வீட்டில இருந்தா அது நினைவுச் சின்னம் மட்டும்தான்! அதுதான் பொருத்தமானவளிட்டச் சேர்த்திருக்கிறன். அவள் மூலம், இது, வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ட நம்பிக்கை எனக்கு இருக்கு எண்டு அண்டைக்குச் சொன்னத மறந்திட்டிங்களா மோம்? நீங்க சொல்லுறது போல இங்கயும் அங்கயுமா இருந்தாரோ என்னவோ சீ!” அருவருப்பும் கோபமுமாகச் சீறினான், ஐவன்.

உச்சபட்ச கோபத்தோடு எழுந்துவிட்டார், ஆரோன். உதாசீனமும் வெறுப்புமாக மகன் கதைக்க, மனைவி அருவருப்பாகப் பார்க்க, ஐலா வெறுப்பை உமிழ, ஏவா விக்கியழ என்று, அவருக்குக் கோபத்தையும் மீறிய சோர்வாக இருந்தது. 

“இஞ்ச பார் ஐவன், உன்ர கற்பனைக்கு எல்லாம் நான் பதில் சொல்லேலாது. முதல் தேவையும் இல்ல. என் மட்டில நான் தெளிவா இருக்கிற ஒரு விசயத்துக்கு உங்களோட நான் மல்லுக்கட்டத் தேவையும் இல்ல.”  விருட்டென்று வெளியேறிவிட்டார்.

அவர் பிரியமான கார் அவரை ஏந்திக்கொண்டது. மனத்தின் அழுத்தத்தையும் பாரத்தையும் அதில் காண்பித்தார் ஆரோன். சீறிக்கொண்டு வெளியேறியது, அது.

காருக்குள் எப்போதும் போலவே சில்லென்று இருந்தது. ஆரோனுக்கோ சுற்றிவர சமையல் அடுப்புகள் உச்சபட்ச சூட்டில் எரிந்துகொண்டிருக்கும் உணர்வு.  அவ்வளவாகக் காற்றோட்டமில்லாத மூடிய அறைக்குள் நின்று களைக்க களைக்க வேலை செய்யும் உணர்வு. மனமும் உடலும் திகுதிகுவென்று எரிந்தது. வெம்மையைத் தாங்க இயலவில்லை.

மனத்தின் பாரமும் அது கொடுக்கும் அழுத்தமும் மனைவி, பிள்ளைகள் தன்னை நம்பாது நிறுத்திவைத்துக் கேள்வி கேட்டதும் சேர அவரை அவராக இருக்க விடவில்லை.

அதே கணம் இந்தக் கதைகளை எல்லாம் என் மகள் ஒலிவியா எப்படி எதிர்கொள்வாள்? அவள் தாய் லிசி? லிஸியின் கணவர்  டெனிஸ் எப்படி எடுத்துக் கொள்வார்? இந்த நினைவுகள் வேறு தம் பங்கிற்கு அவரை ஒரு வழி செய்தன.

ஒலிவியாவின் கணவன் வேர்த்துக்கு அழைப்போமா என்று எண்ணியவரால் அதைச் செயலாற்ற முடியவில்லையே! தன் மகன்கள் போலவேதான் வேர்த் அவருக்கு. அதுவும் அவர் வாழ்வில் நடந்தவை ஒன்றுவிடாது தெரிந்தவனும். இருந்தும் இப்போது அவனோடு கதைக்க மனம் துணியேன் என்றது.

மனம் போன போக்கில் கார் சுற்றித் திரிந்தது. அவருக்கு நினைவு தெரிந்ததில் இருந்து எந்தச்  சிரமத்தையும் முன்னேறும் பாதையில் இருக்கும் தடைகளையும் நெஞ்சை நிமிர்த்தியபடி நேர் பார்வையோடு கடந்தே பழக்கப்பட்டவரால், இன்று, இந்தச் சமூக வலைத்தளங்கள் எள்ளி நகையாடி தன் குடும்பத்தைப் பற்றி இல்லாதது பொல்லாததுகளை எல்லாம் பரப்பிக் குதூகலிப்பதைக் காண சக்தி வடிந்த உணர்வு.

சில மணித்தியாலங்கள் அப்படியே அலைந்து திரிந்தவர் ஒரு முடிவுக்கு வந்தபோது அதுவரை இருந்த கலக்கமும் குழப்பமும் வடிந்துவிட்டிருந்தது. பெரிதும் ஆசுவாசமாக இருந்தது. இருந்தும் உடலில் பெரிதும் சோர்வு. வீடு செல்லும் எண்ணம் மட்டும் வரவில்லை. 

நண்பனும்  அவர் குடும்ப வக்கீலுமான தோமஸை அழைத்து உடனே வரும்படிச் சொன்னவர் தங்களின் அப்பார்ட்மெண்ட்டுக்கு காரை விட்டார்.

error: Alert: Content selection is disabled!!