Skip to content
அமைதியான இடத்தில் இருந்த சிறு கஃபே அது.
தன் முன்னால் இருந்தவளில் ஏதன் பார்வை நிலைத்திருந்தது. துர்காவுக்குத்தான் பெரும் தடுமாற்றமாக இருந்தது. சிறு முறுவலோடு எழுந்துவிட்டாள், “போவம் சேர்.” என்று நகர்ந்தவளை, “துர்கா” என்று அழைத்து நிறுத்தியவன் எழுந்து வந்து அவள் கரமிரண்டையும் பற்றிக்கொண்டான். அந்தப் பற்றுதல் அழுத்தமும் பிடிவாதமும் உணர்த்தியது.
அவள் பார்வை, திடுக்கிடலில் குளித்தபடி அவன் விழிகளில் படிந்தது. துர்கா மிகவுமே தடுமாறிப்போனாள். தன்னால் கரத்தை விடுவிக்கப் பார்த்தாள். அந்தளவுக்கு அவள் விழிகளில் நுழைந்துவிடுவது போல் ஆழ்ந்து பார்த்தான், அவன். அதில் அவளுக்கு இரசிப்பும் சுவாரசியமும் தெரிந்தன . அது ஒன்றும் அவளுள் நேர்மறையான உணர்வுகளை உருவாக்கவில்லை, தித்தித்து மதி மயங்கவிடவில்லை. நிறைந்த பதற்றம் கொடுத்தது.
அவள் கரத்தை விடுவிக்க முனைந்தது அவன் கருத்தில் பதிந்தால்தானே?
“தாங்க் யூ துர்கா. கொஞ்சம் முதல் வரைக்கும் என்ர மனநிலை எப்பிடி இருந்தது எண்டு வார்த்தைகளால சொல்லேலாது. டாட்ல சரியான கோபமா, அதையும் கடந்து வெறுப்பாக் கூட இருந்தது தெரியமா? இப்ப… அதுவும் ஒலிவியாவோட கதைச்ச பிறகு உண்மையாகவே மனசுக்க அடைஞ்சிருந்த எல்லாமே போனது போல நல்லா இருக்கு. வீட்டில டாட் சொல்ல வந்த விளக்கத்த நிண்டு நிதானிச்சுக் கேக்கேல்ல நான். முகத்தில அடிச்சது போல கதைச்சிட்டு வந்தனான்.” கன்றிவிட்ட குரலில் சொன்னான். கசிய முயன்ற விழிகளை மேல் கைகளால் துடைத்தான்.
“உன்னாலதான் ஒலிவியாவோட கதைக்கக் கிடைச்சது. இல்லையோ, நாள்கள் உருள உருள கோபமும் வெறுப்பும்தான் வளர்ந்திருக்கும் . தாங்க் யூ!” என்றவன், அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான். இப்படியான அணைப்புகள் புதியதில்லை, பால் வேறுபாடின்றி நட்பு முறுவலோடு கடக்க வைப்பவை. ஆனால் இன்று, அது அவளால் முடியவில்லையே!
படபடக்கும் அவள் இதயம் தொண்டைக்குழிக்குள் வந்துவிட்ட உணர்வில் தவித்துப் போனாள், துர்கா.
அவள் விழிகளையே ஆழ்ந்து பார்த்தவன், அவற்றின் தவிப்பைப் பதற்றத்தைப் பெரிதும் இரசித்தான். அவன் உதடுகளில் சிறிதாக நெளிந்த முறுவல் விரிந்தது. அத்தனை அருகில் அவன் முகம், அதுவும் அவளுள் புதுவகையான உணர்வுகளை உணர்த்துபவனோடு அவள் நிற்கும் நிலை என்ன? விசுக்கென்று விலகி நின்றுகொண்டவள், “நான்…” என்று ஆரம்பிக்க, “ வா போகலாம்.” என்றான் விரிந்த முறுவலோடு.
அவளுக்கும் விழிகள் கலங்கிப் போயின. தாமதியாது வெளியேறிவிட்டாள். அந்தக் கணம் அவள் மனத்துள் எழுந்த பிசைவுக்கு என்ன காரணம்? அவளுக்குப் பிரித்தறிய முடியவில்லை. ஏதன் அவளைத் தவறான நோக்கில் அணுகுவான் என்று நினைக்கிறாளா? அந்த நினைப்பே கசந்தது. அப்போ, அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்? இந்தக் கேள்வியை அனுமதிப்பதுவும் விடைகாண விளைவதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. தலையை உதறிக்கொண்டு வேகமாகச் சென்று காரில் ஏறி அமர்ந்தாள். மனத்துள் மட்டும் இந்த ஏதனை விட்டு நிறையவே தள்ளி நிற்க வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டாள்.
பேச்சுகளின்றி உணவகம் வந்து சேர, விசுக்கென்று இறங்கி விறுவிறுவென்று நடந்து சென்றாள் துர்கா. ஏதனும் அவள் பின்னாலேதான் வந்திருந்தான். அவள் நடந்த வேகத்தில் முறுவல் அவன் உதடுகளில் தரித்து நின்றது.
இந்தப் பெண், அவன் மனத்தில் சலனம் உண்டுபண்ணி, தன் வசமாக இழுக்க ஆரம்பித்திருப்பவள் கூடத் தன்னால் பாதிப்படைகிறாளோ! ஆமென்ற விடையை அவன் மனம் மிகவுமே எதிர்பார்த்தது. வரையறை செய்யவும் முடியவில்லை.
இப்போ, அவன் முன்னால் உள்ள தகப்பன் பற்றிய விடயத்தை மிகவும் நாசுக்காக, குடும்பத்தினரின் மனங்கள் புண்படா வண்ணம் கடக்க வேண்டும் . அதற்கு, தான் இப்படி விலகி நிற்பதோ தகப்பனோடு முகம் திருப்புவதோ சரிவராது, தவறு என்று எண்ணியவன் வீட்டுக்குப் புறப்பட்டான்.
error: Alert: Content selection is disabled!!