Skip to content
ஆரோன் வெளியே சென்று சில மணித்தியாலங்கள் கடந்திருந்தன. எப்போதும் எவருமே ஓய்ந்திராத அந்த வீட்டில் இருந்த நால்வரும் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருந்தார்கள். அன்றாட வேலைகளும் கடமைகளும் வரிசைகட்டி நின்றாலும் மனத்தைச் செலுத்த இயலவில்லை.
பிள்ளைகள் மூவருக்குமே தாயைப் பார்க்க பார்க்க வேதனை மிகுந்தது. அப்படியே அது தகப்பன் மீதான கோபமாக உருமாறியது. இணையின் ஏமாற்று என்பதற்கு இன மொழி மத வேறுபாடு உண்டா என்ன?
கலங்கிக் கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி இருந்த சோஃபியாவுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இனிமேலும் அவரால் ஆரோன் மனைவியாக வாழ இயலாது. இத்தனை நாள்களும் பரவசமும் பெருமையும் நிமிர்வும் கொடுத்த அந்த அடைமொழி, அடையாளம் இப்போது கட்டக் கசப்பாக உணர வைத்தது.
ஏமாற்றுக் கொடுத்த அடி, வலி, துக்கம் பேரலையாக அவரைச் சுருட்ட, அதிலிருந்து விடுபட முயலாது அதனுள் அமிழ்ந்தார், அவர். மூச்சு முட்டி நின்ற போதும் ஆரோன் என்ற மனிதரை விட்டு விலகும் முடிவில் தீர்மானமாக இருந்தார்.
ஊரும் உலகும் உறவுகளும் மெச்சிய, பார்த்து ஆசைப்பட்ட குடும்பமாக இருந்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள அவரால் இனி இயலவே இயலாது. கணவன் என்ற மனிதன் அவரை ஏமாற்றுவதை இனியும் சகிக்க இயலாது. மகளாமே மகள்.
சினேகிதி என்றார், தான் கலங்கி நின்ற வேளையில் தோள் கொடுத்துத் தூக்கிவிட்டாள் என்றார், சரி விடு, உன் மனம் இன்னொருத்தியின்பால் செல்ல நானே முதற்காரணம் என்று அனைத்தையும் தன் தலையில் போட்டுக்கொண்டார்! எவ்வளவு முட்டாளாக்கப்பட்டிருக்கிறார்.
அவளோடு இருந்து ஒரு பிள்ளையும் பெற்றுவிட்டு இப்போதும் நல்ல நண்பியாமே. யார் இதையெல்லாம் நம்புவது? சரி உன் வாழ்வு, உன் மனம் சொல்லும்படி வாழ்ந்துவிட்டுப் போ! நான் என் வழியில் போகிறேன்.
விழிகளை அழுந்தத் துடைத்தபடி எழ உண்ணியவர் வீட்டினுள் உள்ளிட்ட மகன் ஏதனைப் பார்த்து மீண்டும் அமர்ந்துகொண்டார். அவனும் நேரே தாயிடம்தான் வந்தான்.
“இன்னுமா எல்லாரும் இப்பிடியே இருக்கிறீங்க?” கண்டிப்போடு கேட்டவன், கலங்கி அமர்ந்திருந்த தாயை அணைத்துவிட்டு அருகில் அமர்ந்துகொண்டான். சோஃபியாவின் கரங்களை மென்மையாக எடுத்துத் தன் கரங்களுள் பொத்திக்கொண்டான்.
பிள்ளைகள் முன்னால் கண்ணீர் விட்டுத் தன்னை பலவீனமானவளாகக் காட்ட அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவர் கட்டுப்பாடுகள் துகள் துகள்களாகச் சிதறியிருக்க விம்மியடி மகன் தோளில் முகம் புதைத்தார்.
“மோம்” என்ற அதட்டலோடு வந்த மூத்தவன் மறுபுறம் அமர்ந்து அவரை அணைத்துக்கொண்டான்.
மகள்மாருமே வந்து அருகில் நின்றார்கள். அவர்கள் விழிகளும் கசிந்தபடிதான் இருந்தன.
“மோம்! அந்த லிசி பற்றி டாட் உங்களிட்ட மறைக்க இல்ல தானே?” உண்மையிலும் ஏதனுக்கு இப்படிக் கதைக்க விருப்பம் இல்லை. ஆனாலும் கதைத்தால்தானே தாய் தேறுவார். இல்லையோ வேறு முடிவெடுத்துவிட்டால்?
விசுக்கென்று தலை நிமிர்த்தி மகனைக் கோபமாகப் பார்த்தார் சோஃபியா.
“அதானே பார்த்தன், உனக்கு உன்ர டாட்தான் எப்பவும் முக்கியம்.” அழுதார். “சொன்னவர்தான், இல்ல எண்டனானா இப்ப? ஆனா, அந்தா அந்த ஃபோட்டோ ஃபிரேமுக்க அந்தப் பொம்பளையும் இருக்கிறாள் எண்டு என்னட்ட உன்ர டாட் சொல்லேல்ல ஏதன். அதோட ஒரு பிள்ள…” கோபத்தில் பேச்சுத் தடைப்பட, தலையை இறுகப் பற்றிக்கொண்டார்.
“எவ்வளவு பொய் சொல்லி என்னட்ட நடிச்சிருக்கிறார் எண்டு நினைக்க நினைக்க என்னால தாங்கேலாமல் இருக்குதே!” அரற்றினார்.
“மோம், உண்மையாகவே அந்த ஒலிவியா பற்றி டாட்டுக்கு ஒண்டும் தெரியாது. அவர் சொல்லுறது போல ஹோம் குக்கிங் ஃபைனல் அண்டுதான் தெரிய வந்திருக்கு.” தாயின் தலையைப் பரிவோடு தடவியவாறு சொன்னான், ஏதன்.
“இத நான் நம்போணுமா? முதல் நீங்க நம்புறீங்களா?” மகனிடம் சீறினார், சோஃபியா.
“நம்பினதாலதான் மோம் அதைப்பத்திக் கதைக்கிறன். அதுதான் உண்மையும்.” என்ற ஏதன், தாய் இடையிட அனுமதிக்காது தொடர்ந்தான்.
“ஒலிவியா இன்னார் எண்டு தெரிஞ்சோன்ன, நான் உன்ர டாட் எண்டு கதைக்கப் போனவர, ஒலிவியாவோ அவளிட மோம் லிசியோ மனிசனாவே மதிக்ககேல்லயாம். பிறகு எங்க தகப்பன் அது இது எண்டுறது? இந்த விசயம் தெரிஞ்ச உடனே உங்களிட்டச் சொல்லாமல் விட்டது டாட் செய்த பெரிய பிழைதான். அதைத்தவிர அவர் பொய் சொல்லேல்ல.” என்றவனிடம், “உனக்கு இதெல்லாம் உண்மை எண்டு ஆர் சொன்னது?” என்று கேட்டான், அவன் தமையன், ஐவன்.
“நான் வேர்த், ஒலிவியா ரெண்டு பேரோடும் கதைச்சனான்.” என்றானா. அவன் தமையன் ஒரு புறம் தாய் சகோதரிகள் ஒருபுறம் என்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
“அங்க கதைச்சிட்டு இங்க வந்து சமாதானம் செய்விக்கிறியா? என்ன உன்ர டாட் இப்பிடிக் கதைக்கச் சொன்னாரா?” சோஃபியா கத்தினார்.
“மோம் ப்ளீஸ்! எனக்குத் தகப்பன் எண்டா டெனிஸ் மட்டும்தான் எண்டு உறுதியாச் சொல்லுறாள் ஒலிவியா. வாழ்க்கையில தான் முதலும் கடைசியாவும் விட்ட மிகப்பெரிய பிழை எண்டு தன்ர தாய் இந்த விசயத்தக் கடந்து விட்டாராம். அதும் எப்போதோ! ஒரு கணம் கூட மதிப்புக்குரிய செஃப் எண்டது கடந்து, உன்ர தகப்பன் பற்றி நான் நினைச்சதில்ல ஏதன் எண்டவள் மோம். இந்த சோசியல் மீடியா செய்திகள் தங்களில ஒரு சதவீதம் கூட பாதிப்ப உருவாக்கேல்லையாம்.அவ்வளவு தெளிவாக் கதைக்கிறாள். நீங்க என்ன எண்டா, இப்பிடிப் பெரிசா உருவகப்படுத்தி உங்கட வாழ்க்கையச் சிக்கலாக்கிக் கொள்ளுறீங்க. அது ஏன் உங்களுக்கு விளங்கேல்ல? உங்கட உரிமைகள, உற்ற சொந்தத்த, எண்டோ நடந்த ஒரு தவறும் இந்த சோசியல் மீடியா வம்புச் செய்திகளும் தீர்மானிக்க ஏன் அனுமதிக்கிறீங்க மோம்? டாட் உங்கள எங்க விட்டுக்கொடுத்தவர், சொல்லுங்க பாப்பம்?” தாயை ஆழமான பார்வை பார்த்தபடி குரலை உயர்த்தி இருந்தான், ஏதன்.
*****
error: Alert: Content selection is disabled!!