மிகவும் களைத்த சோர்ந்த மனிலையில்தான் அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தார், ஆரோன் . உடனே வா என்று வக்கீலிடம் சொன்னதும் இதோ புறப்பட்டுவிட்டேன் என்று சொல்லி இருந்தார், அவர்.
நேரத்தைப் பார்த்தார். எப்படியும் அவர் வந்து சேர முக்கால் மணிநேரமாகும் என்று கணக்கிட்டவர் குளியலறைக்குள் புகுந்துக்கொண்டார். மனச்சோர்வை, வலியை விரட்டும் வழி என்னவோ அவர் முன்னால் தென்படவில்லை. உடற்சோர்வைச்சரி விரட்ட எண்ணினார்.
வெது வெதுப்பான நீர் உச்சந்தலையில் பூத்தூறலாக விழுந்து வழிந்தது. அவர் பலமும் பலவீனமும் குடும்பம்தான் என்று எத்தனையோ தடவைகள் உணர்ந்திருக்கிறார். இக்கணமும் அந்த எண்ணம்தான். கூடவே, யார் என்ன சொன்னாலும் அவர் கூட்டுக்குள் வரவே மாட்டேன் என்று அடம்பிடித்த ஒரு தேவதையை இழுத்து உள்ளே எடுத்துத் தன் கைக்குள் பொத்திக்கொண்டார் . கண்களால் ததும்பிய சுடுநீர் உச்சியில் விழுந்த நீரோடு போட்டி போட்டது.
வழமையை விடவும் நேரமெடுத்து நீருக்கடியில் நின்றவர் மனம், லோயரோடு என்ன என்ன கதைக்க வேண்டும் என்று பட்டியலிட்டுக்கொண்டது. விழிக்கசிவோடுதான் தயாரானார் . இப்போது அவரை யாராவது பார்த்தால் இது ஆரோன் டேலா என்று இருக்கும். என்னவோ தனக்கு என்று ஒருவரும் இல்லைபோன்று வெறுமையும் தனிமையும் அவரைத் தாக்கின.
அவரை விரும்பும் நெஞ்சங்கள் மில்லியன்களில், ஐந்து பிள்ளைகள் …விழிகளைத் திறந்தவர், “ஐந்து பிள்ளைகள்” மீண்டும் சொல்லிக்கொண்டார். அன்பான துணைவி என்று என்ன இல்லை அவருக்கு? இருந்தும் இக்கணம் எதுவுமே இல்லாத நிலை.
பரம்பரைச் செல்வந்தர் அவர், அதைத் துறந்து தன் கனவைத் தேடிச் சென்றவர் தன் சொந்த உழைப்பில் பல தலைமுறைகளுக்குச் சொத்தும் நன்மதிப்பும் பெருமையும் சேர்த்து வைத்திருக்கிறார். இக்கணம் அந்த மனிதன் பரம ஏழையாக அல்லவா உணர்ந்து நிற்கிறார்.
வக்கீல் அழைப்பு மணியை அழுத்தும் போது அந்தக் கூடத்தை முதற்தரமான கோப்பியின் நறுமணம் நிறைந்திருக்க, உணவு மேசையில் காகிதங்களும் பேனையும் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தன.
உள்ளே வந்த வக்கீல் ஆரோனைப் பார்த்துத் திடுக்கிட்டார். என்ன ஏதென்று பரபரப்பாக விசாரித்தார். அப்படி இருந்தது அவர் தோற்றம். ஆரோனோ, ஒன்றும் இல்லை என்று சாதித்துவிட்டார். ஆரோன் கதைத்த விதம் அதை பற்றிக் கதைக்க விரும்பவில்லை என்று சொல்லும் விதமாக இருந்தது.
அவசரமாக அழைத்த காரணத்தைச் சொன்னார், ஆரோன். “இப்ப…இந்தளவுக்கு அவசரமா இதுக்கு எல்லாம் என்ன தேவை ஆரோன்?” ஆராயும் பார்வையோடு கேட்டார், வக்கீல். அவர் இவர் வக்கீல் மட்டுமா? உற்ற நண்பனும் கூட.
ஒரு வருத்த முறுவலோடு, “தேவை வந்திருக்கே. இப்பவே எழுதி வச்சிருவம். இன்னும் ரெண்டு மணித்தியாலத்தில் ஸ்டீபன் வருவான். நீயும் அவனும் சாட்சிக் கையெழுத்து வச்சிட்டா சட்டப்படி இந்த உயில் செல்லுபடியாகும்தானே?” என்று வினவினார்.
ஆம் என்று தலையாட்டிக்கொண்டே, ஆரோன் டேல் சொல்ல சொல்ல எல்லாம் எழுதிய வக்கீலுக்கு , சமூக வலைதளத்தில் பரவியது உண்மைதான் என்று அப்போதுதான் தெரிந்தது.
“ஒலிவியா உன்ர மகளா?” கையெழுத்திட வந்த ஸ்டீபன் கேட்க, விழிகளை மூடித் திறந்து மட்டுமே பதில் சொன்னவர், “இந்த உயில் பற்றி எங்களுக்குள்ள இருக்கட்டும். இப்போதைக்கு வெளியில் தெரியத் தேவையில்ல.” இருவரிடமும் கேட்டுக்கொண்டார். இருவரும் தலையாட்டிவிட்டு விடை பெற்றார்கள்.
வங்கியில் அதை வைக்க வேண்டும் , நாளை முதல் வேலை அதுதான் என்று எண்ணிக்கொண்டு சோர்வோடு படுக்கையில் விழுந்தார், ஆரோன்.
*****
ஏதன் பொறுமையாக மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னதில் அவன் சகோதரனும் சகோதரிகளும் நிதானத்துக்கு வந்திருந்தார்கள்.
பின்னால் ஆரோன் தந்தை, சகோதரன் தூண்டுதல் இருந்தாலும் இந்தச் சமையல் வேலைகளை விட்டுவிடு, இல்லையோ நானும் பிள்ளைகளும் ஒதுங்கிக்கொள்கிறோம், எங்கள் வாழ்க்கையில் நீ வேண்டாம் என்று, அன்று, சட்டப்படிப் பிரிவைக் கேட்டது சோஃபியாதான். அப்படியிருக்கவும் லிசி திருமணம் என்ற பேச்செடுக்கவும் மனைவி, பிள்ளைகள் என்று தேடியோடி வந்தவர் ஆரோன்தான்.
“இதில் எந்த இடத்தில் உங்கள ஏமாற்றியதாவோ, துரோகம் செய்ததாகவோ நினைக்கிறீங்க மோம்?” என்று பிள்ளைகள் நால்வருமே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அறைக்குள் புகுந்துவிட்டார் சோஃபி. என்ன முயன்றும் கணவர்பால் விழுந்த கீறல் சுலபத்தில் ஆறுவேனா என்று இருந்தது.
அன்றைய நாளைத் தனித்த தீவுகளாக ஏனோ தானோ என்று கழித்தார்கள். இருட்டியும் தகப்பன் வீடு வரவில்லை என்றதும் ஏதன் அவருக்கு அழைத்துப் பார்த்தான்.
அழைப்பு அடித்து ஓய்ந்தது. சகோதரி தகோதரனிடம் சொல்ல, வருவார்தானே என்றுவிட்டு விலகிவிட்டார்கள்.
ஏனோ அவனுக்கு மனமே சரியில்லை. அவனறிந்து முதன் முதலாக அவரை உதாசீனப்படுத்திவிட்டுக் காலையில் வெளியேறியதே மீண்டும் மீண்டும் நினைவில் ஆடியது.
பிள்ளைகள் நால்வரினதும் எந்தக் கடின நேரத்திலும் அன்பை அள்ளிக்கொடுத்து, பக்க பலமாக நிற்கும் மனிதர் அவர் . அவரின் இக்கட்டான நிலையில் தனித்துவிட்டது பெரிதும் அவனைக் குத்தியது. சகோதரனிடம் அதைச் சொல்ல, அவனும் முகம் கன்ற நின்றான்.
“டாட் வரட்டும், கதைப்பம். இந்த விசயத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளி இடுவம்.” என்றார்கள் சகோதரிகள்.
“நான் பார்த்திட்டு வாறன்.” என்று ஏதன் புறப்பட, தானும் ஒரு புறமாகப் புறப்பட்டான், மூத்தவன் .
ஏதனின் மகிழுந்து இந்நேரம் வழமையாக ஆரோன் செல்லும் உணவகம் நோக்கிச் சென்றது. அழைத்துக் கேட்கலாமே என்று மனம் சொன்னாலும் இன்றைய சமூக வலைத்தளச் செய்தி எங்குமே பரவியிருக்கும். அப்படியிருக்கையில் தான் செய்யும் சிறு செயலும் தகப்பனுக்கு எதிராக இருந்துவிடக்கூடாது என்பதால் நேரில் சென்று பார்க்க எண்ணினான்.
அங்கோ, இன்று முழு நாளும் அவர் வரவில்லை என்றார்கள்.
சமூக வலைத்தளம் பார்க்காதவர் யார் ? குறுகுறு பார்வைகளுக்குக் குறைவில்லை. அதுவும் ஒலிவியா, வேர்த் எல்லோருமே பிரபல்யமானவர்கள். குறுகுறு பார்வைகளை, இரகசியப் பேச்சுகளை நேருக்கு நேராக எதிர்கொண்டான் ஏதன். அவன் விழிகளில் தெறித்த கடினத்தில் ‘செய்ய வந்த வேலை மட்டுமாகக் கவனி!’ என்ற கட்டளை இருந்தது.
அந்த உணவகத்தின் தலைமை செஃப் நிக், ஏதனின் நெருங்கிய நண்பன்.
“அவனவன் குடும்பத்தில இருக்கிற ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஆற அமர இருந்து அலசிப்பாக்கோணும் நிக். அடுத்தவனப் பற்றி விடுப்பும் விண்ணாணமும் கதைக்கிற தகுதி இவன்களுக்கு இருக்கா எண்டு அப்ப விளங்கும். வேலை வெட்டி இல்லாத, கையாலாகாத சோம்பேறிகள் கொறிக்கிற ஓசில கிடைக்கிற கச்சானா,(Peanut ) நானோ என்ர குடும்பமோ ஆகேலாது. நாளைக்கு அவனுக்கு அந்தக் கச்சான் கூட நிச்சயம் இல்ல, நானும் என்ர குடும்பமும் அப்படியா சொல்லு? வசதி வாய்ப்பு, காசு, சொத்துப்பத்து இருக்கு எண்டு சும்மா இருக்கிறனாங்களா? ஓய்வுக்கு ஏங்கிற அளவுக்கு உழைச்சுச் சாப்பிடுற மனுசர் நாங்க. இந்த வீண் கதை பேச்சுகள் எங்களின்ட இதுக்குச் சமம்.” தன் தலை மயிரைப் பிடித்துக் காட்டிச் சத்தமாகச் சொன்னவன் பார்வை சுற்றிச் சுழன்றது. அவன் பார்வையில் இருந்த இளக்காரம் அங்கிருந்தவர்களை அவரவர் வேலைகளைக் கவனிக்க வைத்தது.
நண்பனோடு கதைத்தபடி மீண்டும் மீண்டும் தகப்பனுக்கு அழைத்துப் பார்த்தான், ஏதன்.
“நீ ஒரு ஒரு இடமாப் போய்ப் பாக்கிறது சரிவராது.” என்ற நிக், “அங்க நிற்கிறாரா எண்டு மட்டும் கேப்பம்.” என்றுவிட்டு, ஒவ்வொரு இடத்திற்கும் தானே அழைத்தான். ஆரோன் இணைப்புக் கிடைக்கவில்லை முக்கிய வியாபார அலுவல் என்று விசாரித்தும் பலனிருக்கவில்லை.
காரை எடுத்து எங்கு போவது, யாரிடம் கேட்பது என்று தெரியாது செலுத்தினான், ஏதன். திடீரென்றுதான் தோன்றியது, மறுநொடி கார் வந்த வழியில் திரும்பியிருந்தது.
அப்படியே வந்து வலப்புறமாக இருந்த சாலைக்குள் காரைத் திருப்பினான். அது அவர்கள் அப்பார்ட்மெண்ட் செல்லும் வழி.
அங்கோ, கார் நிறுத்துமிடத்தில் தகப்பன் மகிழூந்து நின்றுகொண்டிருந்தது. பெரிதும் சோர்வோடு தொய்ந்தான், அவன்.
‘என்ன எண்டாலும் இப்பிடியா ஃபோனையும் எடுக்காமல் இருக்கிறது ?’ என்ற கோபத்தோடு இறங்கி இரண்டாம் மாடியிலுள்ள அவர்கள் குடியிருப்புப் படிகளில் விரைந்து ஏறினான்.
இலக்கங்களைத் தட்டி முன் கதவைத் திறந்து உள்ளிட்டவனை ஆழ்ந்த அமைதி வரவேற்றது.
சுற்றிப் பார்த்தான். ஆள் நடமாட்டம் இருப்பது போலவே தெரியவில்லை. யோசனையோடு “டாட்” என்று அழைத்தான். பதில் இல்லை. “கார் நிக்கிதே!” முணுமுணுப்போடு நகர்ந்தவன், இங்கு வந்தால் தாய் தகப்பன் தங்கும் அறை முன்னால் வந்து நிதானித்தான் .
மெலிதாகத் தட்டியதற்கும் உள்ளிருந்து எதிரொலி இருக்கவில்லை. மெல்லக் கதவைத் திறந்து உள்ளிட்டான். அங்கோ, கண்ட காட்சியில் சிந்தை மரத்து நின்றான், ஏதன்.