அத்தியாயம் 11
கோபத்தில் போகட்டும் என்று சொல்லிவிட்டான்தான். ஆனால், அழுதுகொண்டு போனாளே, கோபமாக இருந்தாளே என்று மிகவுமே பயந்தான். இந்த மனநிலையோடு ஸ்கூட்டியில் வேறு போயிருக்கிறாள். ஏதும் என்றால்? அதற்குமேல் யோசிக்கக்கூட முடியாமல் அவனுக்குள் ஒருவித அழுத்தம் உருவெடுக்க ஆரம்பித்திருந்தது.
திறக்கப்போகும் சுப்பர் மார்க்கெட் வேலைகளுக்காகப் பணம் கேட்டிருந்தான் சிவரூபன். அன்றிலிருந்து வந்த பணத்தையெல்லாம் வங்கியில் போடாமல் அலமாரிக்குள் வைத்திருந்தான். திடீரென்று அதில் முப்பதைக் காணவில்லை என்றால் எப்படி?
அந்தப் பயம், முதலே சொல்லியிருக்க இந்தளவுக்குப் பதறியிருக்க மாட்டேனே என்கிற கோபம், அர்த்தமற்ற ஒன்றுக்காக அவ்வளவு பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறாள் என்கிற சினம், இவள் எப்போதுமே இப்படித்தானே என்று அவன் மனத்தில் ஏற்கனவே இருந்த அவள் மீதான எரிச்சல் என்று எல்லாமாகச் சேர்ந்து அவனை நிலையிழக்க வைத்திருந்தது.
இதில் அவள் அப்பாவிடம் வாங்கித் தருகிறேன் என்றதும் கொஞ்சம் நஞ்சமாய் இருந்த நிதானத்தையும் இழந்து கொதித்திருந்தான்.
இப்போது யோசிக்கையில் அவன் கொஞ்சம் நிதானமாக அணுகியிருக்கலாம் என்று புரிந்தது. ஆனால், எல்லாம் முடிந்த பிறகுதானே இந்தப் புத்தி வந்திருக்கிறது!
அவள் வரும்வரையில் அந்த இடத்தை விட்டு அவன் அசையவே இல்லை. அப்படியே அமர்ந்திருந்தான். அவளும் வந்தாள். தலை கலைந்து, முகம் சோர்ந்து, கண் மடல்கள் தடித்து என்று அவளைப் பார்க்க முடியவில்லை. முதன் முதலாக அவளை டவுனில் வைத்துப் பார்த்த காட்சி நினைவில் வந்து போனது. உதட்டைக் கடித்துத் தன் உணர்வுகளை அடக்கினான்.
அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவள். செந்தாளனின் முன்னால் வந்து நின்று, அவன் எதிரில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் பணக்கட்டு ஒன்றை ஹாண்ட் பாக்கிலிருந்து எடுத்து வைத்தாள். “இதில அறுவது இருக்கு. எடுத்த முப்பதுக்குத் தண்டனையா மிச்ச முப்பது இருக்கட்டும்!” என்று சொன்னவளை முகம் இறுகப் பார்த்தான் செந்தாளன்.
“நான் கேட்டா என்ர அப்பா இருக்கிற மொத்தச் சொத்தையும் எழுதித் தருவார். தம்பி கூட ஒரு கேள்வி கேக்கமாட்டான். மாமாக்கள் எத்தின லச்சம் வேணுமெண்டாலும் அனுப்பி வைப்பீனம். அப்பிடியான எனக்கு உங்கட முப்பதுனாயிரத்தக் களவெடுக்க வேண்டிய தேவையும் இல்ல, என்ர அம்மா அப்பா என்ன அப்பிடி வளக்கவும் இல்ல! ஆனாலும் உங்கட காச எடுத்ததுக்கு சொறி. இனிமேல் எந்தக் காலத்திலையும் தொடமாட்டன்!” உடைந்து கரகரத்த குரலில் அவன் விழிகளை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள் கானவி.
அவன் தாடை இறுகிப் போனது. விழிகள் கோபத்தில் சிவந்தன. முன்னே இருக்கும் அந்த பிளாஸ்டிக் நாற்காலியைத் தூக்கி அடிக்கும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. மொத்த வீட்டினரோடு மனோகரனும் அங்கே இருந்ததில் அடக்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான்.
“அவள் எடுத்த காசத் திருப்பித் தந்திட்டாள். இப்ப நீயும் உன்ர தம்பியும் கதைச்ச கதையை எல்லாம் திருப்பி வாங்குங்க பாப்பம்!” தன் பங்குக்குச் சொல்லிவிட்டு, விருட்டென்று எழுந்து கானவியைத் தேடிக்கொண்டு போனாள் சிந்துஜா.
அங்கே, கட்டிலில் இறைந்து கிடந்த உடைகளுக்கு மத்தியில் சிலை போன்று அமர்ந்திருந்தாள் அவள். ஒருகணம் தயங்கினாலும், “கானவி.” என்று மெல்ல அழைத்தாள்.
கானவிக்குத் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. இனி அழக் கூடாது என்று நினைத்தாலும் முடியாமல் விழிகள் கலங்கின. திரும்பிப் பார்க்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவளருகில் வந்து தானும் அமர்ந்தாள் சிந்துஜா. “என்ர ஆச மச்சாள் எல்லா. அழாதையும். அம்மாவும் நானும் அவனுக்கு நல்ல பேச்சுக் குடுத்துப்போட்டுத்தான் இருக்கிறம். நீர் இதையெல்லாம் மனதில எடுக்காதையும். இனி இப்பிடியெல்லாம் நடக்காது, சரியா.” அவள் முதுகை வருடிக்கொடுத்தபடி இதமான குரலில் சொன்னாள்.
அந்தச் சின்ன கரிசனத்தில் உடைந்தாள் கானவி. மார்பை நனைக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள். சிந்துஜாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “காசு எடுத்ததச் சொன்னா ஏன் எடுத்தீர் எண்டு சொல்லவேண்டி வரும். பிறகு உம்மட சப்ரைஸ் தெரிய வந்திடும் எண்டுதான் அவன் கேட்டும் நீர் சொல்லேல்ல எண்டு எங்கள் எல்லாருக்கும் விளங்குது கானவி. அதால சிவரூபன் சொன்னதைப் பெருசா எடுக்காதையும். அவனும் வரட்டும் எண்டுதான் பாத்துக்கொண்டு இருக்கிறன். நல்ல பேச்சுக் குடுக்கிறனா இல்லையா எண்டு பாரும்.” என்று அவள் சொன்ன எந்தச் சமாதான வார்த்தைகளும் அவளை ஆற்றுப்படுத்தவே இல்லை.
ஒற்றை நாளில் எல்லாம் சரியாகிடாது என்று சிந்துஜாவுக்கும் விளங்கிற்று. அறையைச் சுற்றிப் பார்த்தாள். அலங்கோலமாகக் கிடந்தது. “வாரும், ரெண்டு பேருமாச் சேந்து அறையை ஒதுக்குவம்.” அவளைச் சற்றே இந்தப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப எண்ணி வினவியவள் எழுந்து நின்று, கட்டிலில் கிடந்த உடைகளை எடுத்து மடிக்க ஆரம்பித்தாள்.
அவள் எண்ணியது சற்றே வேலை செய்தது. கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டு, “நீங்க விடுங்கோ மச்சாள். நானே செய்றன். ” என்று எழுந்தாள் கானவி.
“ரெண்டு பேரும் சேர்ந்து செய்தா டக்கெண்டு வேல முடிஞ்சிடும் எல்லா.”
“பரவாயில்ல விடுங்கோ.”
அவள் தனிமையை விரும்புவது விளங்கிற்று. இப்போதைக்கு அவளுக்கு வேண்டியதும் அதுதான் என்பதில், “நாங்க எல்லாரும் உமக்காக இருக்கிறம் எண்டுறதை மட்டும் மறக்காதையும் கானவி. ரெண்டு நாள் போக எல்லாம் சரியாகும்.” என்றுவிட்டுத் தன் வீட்டுக்கு நடையைக் கட்டினாள்.
எவ்வளவு நேரம்தான் நடந்ததையே நினைத்துக்கொண்டு இருப்பது? புவனாம்பிகையும் எழுந்துபோய் வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார். அனைவர் மனத்திலும் பாரம். நடந்துமுடிந்தவற்றை எப்படிக் கடந்து வருவது என்று தெரியாத கனத்த அமைதி. பொழுது யாருக்காகவும் நிற்கவில்லை. அவர்கள் மனங்களைப்போலவே இருள் கவிழ்ந்து, முற்றிலுமாகக் கருமை சூழ்ந்தது.
தோட்டத்திலிருந்து வந்த சற்குணம் விடயம் அறிந்து மிகவும் கவலையுற்றார். அவர் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். படிப்பின் வாசனை அறியாத மனிதர். சிறு பிராயத்திலிருந்தே கூலிக்கு வேலைக்குப்போய், சிறுக சிறுகச் சேர்த்த பணத்தில் விவசாயக் காணி வாங்கி, மெல்ல மெல்ல சொந்தக் காணியில் தானே பயிரிட்டு, விளைந்தவற்றைத் தானே சைக்கிளில் கட்டிக்கொண்டு போய்ச் சந்தையில் விற்று என்று, ஒவ்வொரு படிநிலைகளாக வாழ்க்கையில் முன்னேறியவர்.
முப்பதுகளைத் தாண்டிய காலத்தில் திருமணம், நல்ல மனைவி, அருமையான பிள்ளைகள் என்பதைத் தாண்டி அவர் உலகம் அவரின் தோட்டக் காணிகளும் விவசாயமும்தான். அதைத் தாண்டிய ஒரு சந்தோசத்தை அவர் அனுபவித்ததும் இல்லை, அறிந்ததும் இல்லை.
அப்படித்தான் அவரின் பிள்ளைகளும். வாழ்க்கையை மிகுந்த தீவிர நோக்குடன் எதிர்கொள்கிறவர்கள். முன்னேற்றத்துக்கான அடுத்த படியை நோக்கியதாகவே அவர்களின் பயணம் இருக்கும்.
ஆனால், மருமகளிடம் எப்போதும் ஒரு விதமான சிறு குழந்தையின் குதூகலிப்பும் சந்தோசமும் இருப்பதைக் கவனித்திருக்கிறார். சின்ன சின்ன விசயங்களைக் கூடத் தேடிப்பிடித்து மகிழ்கிறவள். சுற்றியிருக்கிற அவர்களையும் மகிழ வைக்கிறவள். அவருக்கே பிறந்தநாள் கொண்டாடியவளாயிற்றே! அவளின் அந்த இயல்புதான் இப்படி நடக்க வைத்திருக்கிறது.
பொறுப்பு மிக்க தன் மகன் இதைக் கொஞ்சம் நிதானமாக அணுகியிருக்கலாம் என்று அவர் அனுபவம் சொல்லிற்று. இத்தனையும் உள்ளே ஓடினாலும் மகனிடம் ஒன்றும் கதைக்கவில்லை. அது இதுவரையில் வழக்கமும் இல்லை. அவருக்கும் சேர்த்தே எல்லாம் செய்யும் மகனுக்குத் தெரியாததையா அவர் சொல்லிவிடப் போகிறார்?
ஆனால், தன்னை மெய்யான பாசத்துடன் கவனிக்கும் மருமகளை எண்ணி மிகவுமே வருந்தினார். அவர் வந்தால் போதும். ஓடிவந்து அவருக்குத் தேவையானவற்றைக் கவனித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பாள். மருமகள் என்பதைவிட அவருக்கு அவள் அவரின் கடைக்குட்டி. அதையெல்லாம் வார்த்தைகளில் பகிரத் தெரியாத மனிதர் அவர்.
அதனாலேயே தோட்டத்திலிருந்து வரும்போது அவளுக்குப் பிடித்த இளநீர், செவ்வாழைப் பழம், பப்பாசிப் பழம் என்று ஏதோ ஒன்று நிச்சயம் அவரோடு வரும். கழுவி, அவளுக்கு வெட்டிக் கொடுத்து, அதை அவள் சிலாகித்து நாலு வார்த்தை சொல்லியபடி சாப்பிடுவதை வாஞ்சையோடு பார்த்துவிட்டுத்தான் சாப்பிடவே அமர்வார். இது அவருக்கும் அவளுக்குமிடையிலான ஒரு பாசப் பரிமாறல்.
அப்படியானவளின் முன்னே போய்ச் சமாதானம் சொல்கிறேன் என்று சங்கடப்படுத்த அவர் விரும்பவில்லை. அவளைக் கவனித்துக்கொள்ளும்படி மனைவியிடம் சொல்லிவிட்டுப் படுக்கைக்குச் சென்றார். அதற்குமேல் விழித்திருக்க அவர் வயதும், அவர் பார்க்கும் விவசாயமும் விடுவதில்லை.
அதுவரையில் முற்றத்திலேயே பிடித்துவைத்த சிலைபோல் அமர்ந்திருந்த செந்தாளன், ஒரு ஆழ்ந்த மூச்சுடன் எழுந்து வீட்டுக்குள் வந்தான். அங்கே அவன் மனைவி, அவர்களின் அறையை ஒதுக்கி முடித்திருந்தாள். மனத்தை அழுத்தும் ஏதோ ஒரு உணர்வுடன் அவளையே பார்த்தான்.

