அத்தியாயம் 12
கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டாலும் செந்தாளனின் மனக்கொதிப்பு அடங்குவதாய் இல்லை. மிரட்டுகிறாளா என்ன? கடம்பனைக் கூப்பிடுவாளாமே! இது எல்லாவற்றுக்கும் காரணம் அவள். ஆனாலும் அவன் சமாளிக்க நினைக்க இந்தளவில் ராங்கி காட்டுவாளா?
அதன்பிறகு வந்த நாள்களில் அவன் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அந்தளவில் கடம்பனை வரச்சொல்லிப் போய்விடுவேன் என்று அவள் சொன்னது அவனுக்குச் சினமூட்டியிருந்தது.
கானவியும் ஒதுங்கிக்கொண்டாள். அன்றைக்குப் பிறகு அந்த வீட்டுக்கும் அவளுக்கும் இடையில் பெரும் விரிசல் விழுந்து போனது. புவனாம்பிகையும் சிந்துஜாவுமாகச் சேர்ந்து அவளைச் சமாதானப்படுத்தவும் நடந்தவற்றைக் கடந்துவர வைக்கவும் முயன்றனர். மனோகரனும் பாசமாகவே நடந்துகொண்டான். அவளால்தான் எதையும் மறக்க முடியவேயில்லை. ஒருவித அவமானம் அவளைப் போட்டுத் தின்றது. ஏன் எடுத்தேன், போயும் போயும் அவன் பணத்தை ஏன் தொட்டேன் என்று நொடிகூடத் தவறாமல் தன்னையே நொந்துகொண்டாள்.
சிவரூபன் சொன்ன ‘களவெடுத்தாள்’ என்ற வார்த்தை கூட இன்றைய நிலையில் அவளை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. அவள் என்ன செய்தாள் என்று அவளுக்குத் தெரியும்! ஆனால், அவள் கணவன் சொன்ன வார்த்தைகள்? இத்தனை நாள்களும் இவ்வளவு மோசமான கணிப்போடா அவளோடு வாழ்ந்தான்? அதுதான் அவளைக் கூறு போட்டது.
சோம்பி இருக்கிறாய், எதையாவது படி, ஊதாரித்தனம் செய்யாதே என்று அடிக்கடி சொல்வான்தான். அந்த நேரத்தில் சின்னதாக மனத்தில் சிணுக்கம் உண்டானாலும் கூட அதைப் பெரிதாக எடுத்ததில்லை. என் கணவன் என் நல்லதற்காகச் சொல்கிறான் என்று நல்ல முறையிலேயே எடுத்துக் கொண்டிருக்கிறாள். இந்தளவு தூரத்துக்குத் தன்னைப் பற்றிக் கீழாக எண்ணித்தான் அதையெல்லாம் சொல்லியிருக்கிறான் என்று உணராமல் போனாளே! அது நெஞ்சை அறுத்தது.
இங்கே இவ்வளவு நடந்திருந்த போதிலும் தன் வீட்டினரிடம் மூச்சும் விடவில்லை. குரல் பேதத்தை உணர்ந்து அவர்கள் விசாரித்தபோது, சளி பிடித்துக்கொண்டதாகச் சொல்லிச் சமாளித்தாள்.
இரண்டு நாள்கள் அதுபாட்டுக்குக் கடந்திருந்தன. அன்று மாலை புவனாம்பிகையின் கோழிக்குஞ்சுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவற்றுக்குத் தீனி வைத்துவிட்டு, கைகால்களைக் கழுவிக்கொண்டிருந்தார் புவனாம்பிகை.
இனி அவர் இரவுச் சமையலைப் பார்க்க உள்ளே போய்விடுவார் என்று அவளுக்குத் தெரியும். அவரின் தினசரி நடவடிக்கை அதுதான். அவ்வளவு நேரமாக இருந்த தயக்கத்தை உதறிவிட்டு, “மாமி!” என்று கமறிய குரலில் அழைத்தாள்.
அவர் திரும்பிப் பார்த்தார்.
“எனக்கு… எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு.” மடியில் கிடந்த தன் விரல்களை ஆராய்ந்தபடி மெல்ல முணுமுணுத்தாள்.
“என்னாச்சி? என்னம்மா சொன்னனீங்க?” அவள் அதைத்தான் சொன்னாளா என்று நம்ப முடியாமல் அவளிடம் ஓடிவந்தார்.
“உண்மையாவா பிள்ளை?”
“ம்.” வெடித்துக்கொண்டு வந்த அழுகையை உதட்டைப் பற்றி அடக்கியபடி தலையாட்டினாள்.
“கடவுளே! என்ர தெய்வமே!” அவள் தலையைத் தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டவர், இந்த நேரம் போயா இதெல்லாம் நடந்தது என்றெண்ணிக் கவலையுற்றார்.
அவரின் அரவணைப்பில் கானவியும் உடைந்தாள். அவர்களின் இருநூறாவது திருமண நாளுக்கு உண்மையாக அவள் வழங்கக் காத்திருந்த பரிசு இதுதான். கைப்பேசி எல்லாம் அவனுடையது உடைந்துவிட்டது என்று வாங்கியது. எத்தனை ஆசையாக அவனிடம் இதைப் பகிரக் காத்திருந்தாள். கடைசியில் எப்படிச் சொல்லியிருக்கிறாள்? சத்தம் இல்லாமல் கண்ணீர் உகுத்தாள்.
அவருக்கும் சந்தோசத்தில் அழுகை வந்தது. அவர் சந்ததி தழைக்கிறதே! சிந்துஜாவுக்குத் திருமணமானதிலிருந்து காத்திருந்த காத்திருப்புக்கு இப்போதுதான் பலன் கிடைத்திருக்கிறது. “அழக்கூடாதம்மா. இந்த நேரம் நீங்க சந்தோசமா இருக்கோணும் பிள்ளை. ரெண்டு குடும்பத்தின்ரயும் முதல் வாரிசம்மா. அழாதீங்கோ.”
அவர் எவ்வளவோ சொல்லியும் அவளால் முடியவில்லை. எதை நினைத்து அழுகிறாள் என்று தெரியாமல் அழுதாள். கனவுகள் கலைந்து போயின. கற்பனைகள் சிதறிப் போயின. நிஜம் மிரட்டியது. வாழ்க்கை பயமுறுத்தியது. திருமண வாழ்க்கை அவள் எண்ணியது போன்று இனிப்பாய் இல்லை.
வீட்டுக்குள் அழைத்துவந்து அமர்த்திவிட்டு, “தம்பிக்குத் தெரியுமா?” என்று தயக்கத்துடன் வினவினார்.
இல்லை என்று தலையசைத்தவளுக்குக் கண்ணீர் மணிகள் திரண்டு கன்னத்தில் உருண்டு விழுந்தன. எவ்வளவு ஆனந்தமாகக் கொண்டாடியிருக்க வேண்டிய ஒன்று. இன்று நெஞ்சு முழுக்கத் துயருடனும் கண்ணீருடனும் அதைக் கடக்கிறாள். இனி என்றைக்கும் இந்தத் தருணம் திரும்பி வரப்போவதில்லையே!
இதமான சூட்டில் அவளுக்குத் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு, முதல் வேலையாக மகனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னார் புவனாம்பிகை.
அப்படியே நின்றுவிட்டான் செந்தாளன். சந்தோசப்படுவதற்குப் பதிலாய் நெஞ்சை எதுவோ போட்டு அழுத்தியது. இதுதானா அவள் எழுதியிருந்த ‘நீங்க ஆசைப்பட்ட ஒண்டு என்னட்ட இருக்கு’? அவர்களின் இருநூறாவது நாளில் அதை வெளிப்படுத்தக் காத்திருந்திருக்கிறாள். இருந்த ஆயிரம் பிரச்சனைகளில் அவள் எழுதியிருந்ததைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தவறிவிட்டானே! சாதாரண நாள்களையே அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுகிறவள், இதை எப்படியெல்லாம் சொல்ல ஆசைப்பட்டாளோ?
தன்னையே நொந்துகொண்டான் செந்தாளன்.
அவளுக்கு விருப்பம் இல்லாதபோதும் அவன் கேட்டதற்காக, அவன் குடும்பத்திற்காக முழு மனத்தோடு குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாரானவளுக்கு என்ன செய்திருக்கிறான்? இனி என்ன செய்யப் போகிறான்? என்ன செய்து அவள் சந்தோசத்தை, மன நிம்மதியை மீட்டுக் கொடுக்கப் போகிறான்?
இத்தனை நாள்களும் அவளால்தான் எல்லாம் என்று பிடிவாதமாக நின்ற மனது, இப்போது குத்தியது. இந்த நிமிடமே அவளருகில் இருக்க ஆசைப்பட்டான். தன் மார்புக்குள் அவளைப் பொத்திக்கொண்டு, உள்ளத்தின் உணர்வுகளை எல்லாம் அவளிடம் கொட்டிவிடப் பிரியப்பட்டான்.
ஆனால் வகுப்புகள் இருந்தன. பிள்ளைகள் வந்து காத்திருக்கிறார்கள். அவர்களிடம் இன்று வகுப்பு இல்லை என்று சொல்ல முடியாது. வேறு வழியில்லை! ஒருவிதப் பிடிவாதத்துடன் எல்லா வகுப்புகளையும் முடித்துக்கொண்டு அவன் வீடு சென்றபோது, வைத்தியசாலை சென்று உறுதிப்படுத்திவிட்டு வந்திருந்தார்கள்.
“என்னப்பு? இண்டைக்கு எண்டாலும் கொஞ்சம் நேரத்துக்கா வாறேல்லையா?” அவன் வரவுக்காக வாசலையே பார்த்துக்கொண்டிருந்த புவனாம்பிகை, ஓடிவந்து அவன் வாயில் இனிப்புப் போட்டார்.
அங்கே, அவனுடைய தந்தை உட்பட மனோகரன், சிந்துஜா, சிவரூபன் என்று எல்லோரும் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் மெல்லிய வெட்கம் வந்து அவனையும் சூழ்ந்துகொண்டது.
சிந்துஜா வேறு, “டேய் அப்பா! வாடா வாடா!” என்று, அவன் மீதிருந்த கோபம் போன இடம் தெரியாமல் வரவேற்க, தன் முகத்தின் சிவப்பைக் காட்டாமல் இருக்கப் பெரும் பாடுபட்டுப் போனான்.
“சந்தோசம் செந்தாளன்!” என்று அவனை அணைத்துக்கொண்டான் மனோகரன்.
“நன்றி அத்தான்!”
சிவரூபனும் தமையனுக்கு வாழ்த்துச் சொன்னான். சற்குணத்தாருக்கு அதெல்லாம் பழக்கமில்லை என்பதில் தன் குடும்பத்தின் சந்தோசத்தைச் சத்தம் இல்லாமல் பார்த்து ரசித்தார்.
‘அவள் எங்க? அறைக்க இருக்கிறாளோ?’ இவர்களை எல்லாம் தாண்டி அவன் மனம் அவளைத்தான் தேடியது. அறைக்குள் ஓட ஆசைப்பட்டான். எல்லோரும் அங்கிருக்கையில் உள்ளே போக முடியவில்லை. அவனும் அங்கேயே அமர்ந்துகொண்டான்.

