அத்தியாயம் 14
அன்றைய நாளுக்குப் பிறகு செந்தாளனின் மனநிலை என்ன, அவனுக்குள் என்ன ஓடுகிறது என்று அவன் வீட்டினரால் கணிக்கவே முடியாமல் போயிற்று. அவனோடு பேசிப்பார்க்க முயன்று தோற்றதுதான் மிச்சம். காலையில் எழுந்தான். தோட்டத்துக்குப் போய் வந்தான். பள்ளிக்கூடம் போனான். மாலை நேரத்து வகுப்புகள் ஒன்றைக்கூடத் தவற விடவேயில்லை. அவள் இல்லையே என்று அவன் வாடித் தெரியவும் இல்லை.
மகன் அப்படியெல்லாம் கதைத்திருக்கக் கூடாது என்று இருந்த நிலை மாறி, குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இல்லாமலா இருக்கும், அதற்கென்று இப்படித்தான் போவாளா எனும் நிலைக்குப் புவனாம்பிகையும் வந்திருந்தார். அந்தளவில் அவர் தடுத்தும் போன கானவியின் செய்கை அவரைப் பாதித்திருந்தது.
அவள் தாய்மை உற்றதை அறிந்த பிறகு ஒருநாள் கூட அவர் கையால் சமைத்துப்போடக் கிடைக்கவில்லையே! ஏன் ஆற அமர்ந்து அவர்களின் அடுத்த தலைமுறை தழைக்கப்போவதை அனுபவிக்கக் கூட இல்லை. அதற்குள் போய்விட்டாள்.
சற்குணத்தார் வேறு, “மருமகள் இல்லாதது வீடே ஓஞ்ச மாதிரி இருக்கு.” என்று அடிக்கடி சொன்னார். “போய்க் கூட்டிக்கொண்டு வருவமா?” என்று கேட்டார்.
“கொஞ்சம் பொறுங்கோப்பா. மனுசனும் மனுசியும் என்ன செய்யினம் எண்டு பாப்பம்.” என்று அவரையும் சமாளித்து வைத்தார் புவனாம்பிகை.
இரண்டு நாள்கள் அதுபாட்டுக்குக் கடந்தன. அன்று நேரம் சென்றுதான் வீடு வந்தான் மனோகரன். வந்தவனின் முகம் சரியில்லை.
“என்ன மனோ? ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்கள்?”
சிந்துஜாவின் விசாரிப்புக்குப் பதில் சொல்லாமல் அங்கிருந்த செந்தாளனைப் பார்த்தான் அவன். அதுவே தன் பற்றிய ஏதோதான் என்று சொல்லிவிட, “என்னத்தான்?” என்றான் அவன்.
சொல்வதா என்று ஒருகணம் தயங்கினாலும் இது மறைக்கும் விடயமன்று என்பதால், “அது… கானவின்ர அப்பா இண்டைக்கு என்ன வந்து பாத்தவர். இஞ்ச எங்கட ஊருக்குப் பக்கத்தில தென்னந்தோப்பு ஒண்டு வாங்கினவராம். அதக் கானவின்ர பெயர்ல மாத்தி விடுறாராம்.” என்றான்.
எல்லோருமே அதிர்ந்து போயினர். புவனாம்பிகை பதற்றத்தோடு மகனைப் பார்த்தார். அவன் முகத்திலிருந்து எதையும் அவரால் படிக்க முடியவில்லை.
“வேற என்னவாம்?” அமைதியாக ஒலித்த அந்தக் குரலுக்குப் பின்னிருந்த அபாயத்தில் மனோகரன் பதில் சொல்லத் தயங்கினான்.
“நீங்க என்ன சொன்னனீங்க? நடந்ததை முதல் முழுசா சொல்லுங்கோ மனோ.” முழுமையாக என்ன நடந்தது என்று அறியவேண்டி இருந்ததில் சிந்துஜாவும் அவனைப் பேச ஊக்கினாள்.
“என்ன சமாதானம் சொன்னாலும் அவர் கேக்கிற மாதிரி இல்ல. அதெல்லாம் கோபத்தில கதைச்சதுகள், அதையெல்லாம் பெருசா எடுக்காதீங்க, கொஞ்ச நாள் போக எல்லாம் சரியாகும், நாங்களும் எதையாவது செய்து பிரச்சினைகளைப் பெருசாக்க வேண்டாம் எண்டு என்ன சொல்லியும் அவர் தன்ர முடிவில இருந்து மாறுறாரே இல்ல. இஞ்ச(இங்க) காசு பிரச்சினை ஆகேல்ல, எடுத்ததக் கேட்டும் சொல்லேல்ல எண்டுற கோவம்தான், அதால இதெல்லாம் வேண்டாம் எண்டு சொல்லியும் பாத்தன். மகளைச் சந்தோசமா வச்சு வாழ்ந்தாப் போதுமாம். அதுக்காக என்ன செய்யவும் ரெடியாம். அந்தத் தோப்பைச் செந்தாளன்ர பெயர்ல எழுதவும் தயாராம் எண்டு அதிலையே நிக்கிறார்.” என்றதும் பட்டென்று எழுந்துவிட்டான் செந்தாளன்.
மனம் கொந்தளித்தது. ஆத்திரமும் அவமானமும் சேர்ந்து அவனை ஆட்டிப் படைத்தன. கைப்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.
“தம்பி! அண்டைக்கு மாதிரி அவசரப்படாத! என்ன கதைக்கிறதா இருந்தாலும் நிதானமாக் கதை!” என்ற சிந்துஜாவின் வார்த்தைகளுக்கு அவனிடத்தில் எந்த மதிப்புமில்லை.
புவனாம்பிகை அதைக்கூடச் சொல்ல முடியாதவராக அமர்ந்திருந்தார். நடந்த நிகழ்வுகளில் அவருக்கும் வருத்தம் உண்டுதான். மகன்மீது கோபமும் உண்டுதான். அதற்கென்று இப்படிச் சொல்லும் அளவுக்குப் போவார்களா? அவரையே ஒருவித அவமானம் தாக்கிற்று. கண்ணீர் கூட வரப் பார்த்தது. அவர் மகன் சீதனம் கேட்டானா, இல்லை சொத்துப்பத்துக் கொண்டு வா என்று கொடுமைதான் செய்தானா?
திருமணத்தின்போது கூட இவர்களாக இவ்வளவு தாருங்கள் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. ஆனாலும், நிறைவான சீதனம் தந்துதான் பெண் தந்தார்கள். அதில் ஒரு நயா பைசாவைக் கூட இதுவரையில் இவர்கள் தொட்டதில்லை. பணமாகக் கொடுத்தது அவள் பெயரில் நிரந்தர வைப்பிலும், நகை நட்டுகள் அவள் பாதுகாப்பிலும், அவள் பெயரில் இருந்த காணிகள் அவள் பெயரிலேயே அப்படியேதான் இருக்கின்றன.
அப்படியிருக்க என்ன பேச்சு இது?
அன்னை மனம் படும்பாட்டை அறிந்தவளாக, “அம்மா, எங்கட இடத்தில இருந்து மட்டுமே பாக்காம அவேன்ர இடத்தில இருந்தும் யோசிச்சுப் பாருங்க. ஒரேயொரு மகள். தாயாகி இருக்கிற இந்த நேரம் நீ படிக்கேல்ல, உழைக்கேல்ல, களவெடுத்திருக்கிறாய் எண்டு சொன்னா எப்பிடி இருக்கும்? கோபப்பட்டுச் சண்டைக்கு வராம, இதுக்கு என்ன தீர்வு எண்டு யோசிச்சு, அவருக்குத் தெரிஞ்ச வகையில நிதானமா அணுகி இருக்கிறார். பொம்பிளைப் பிள்ளையைப் பெத்தவர் அம்மா. அப்பிடித்தான் யோசிப்பார்.” என்று சமாதானப்படுத்தினாள் சிந்துஜா.
“உண்மைதான் மாமி. அந்தக் காணிய எழுதித் தாறதில அவ்வளவு உறுதியா இருந்த மனுசன், ஒரு வார்த்த கூடக் கோவமாக் கதைக்கேல்ல. நீங்களும் செந்தாளனிட்ட ஒண்டும் கதைக்காதீங்கோ. இப்பிடி ஆளாளுக்கு ஒவ்வொரு குறையப் பிடிச்சுக்கொண்டு தொங்கினா தற்காலிகமா விலகி நிக்கிற ரெண்டு பேரும் நிரந்தரமா விலகிற நிலை வந்தாலும் வந்திடும்.” என்று மனோகரனும் எடுத்துச் சொன்னான்.
அவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அவருக்கும் விளங்காமல் இல்லை. ஆனாலும், மனத்தில் உண்டாகிவிட்ட அந்த வருத்தம் மட்டும் அகலேன் என்றது.
*****
மனத்தின் காயத்துக்கு ஆறுதல் தேடித்தான் பிறந்த வீட்டுக்கு வந்தாள் கானவி. ஆனால், கணவனின் வீட்டுத் தெருவைத் தாண்டியதுமே நெஞ்சில் என்னவோ பிசைய ஆரம்பித்திருந்தது.
போகாதே என்று கெஞ்சியவனின் முகமே கண்ணுக்குள் நின்றது. அப்படியெல்லாம் கெஞ்சுவது அவன் குணமன்று! விடாமல் அவள் தரும் தொந்தரவுகளைத் தாங்க முடியாமல் இறங்கி வருவானே தவிர, எதற்கும் கெஞ்சவெல்லாம் மாட்டான். தன் இயல்பையும் மீறி அவன் கெஞ்சியதே கண்ணீர் உகுக்க வைத்தது. வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர அங்கிருந்து வந்தும் அவள் நிம்மதியாய் இல்லை.
அம்மா அப்பாவின் மன நிம்மதிக்காக இன்னும் இரண்டு நாள்களுக்கு இருந்துவிட்டுப் புறப்படலாமா எனும் அளவுக்கு வந்திருந்தாள்.
இப்படித்தான் இந்த இரண்டு நாள்களும் அவளுக்குக் கடந்திருந்தன. அப்போதுதான் அவன் அழைத்தான்.
அவள் பரபரப்புற்றுப்போனாள். அங்கே இருந்தது போதும், மரியாதையாகப் புறப்பட்டு வா என்று சொல்லப் போகிறானோ? அவன் மீதான வருத்தங்களையும் தாண்டி மனம் படபடக்க, அழைப்பை ஏற்று, “ஹலோ!” என்றாள் மெல்லிய குரலில்.
அடுத்த கணமே, “அப்பாவும் மகளும் என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க என்னைப் பற்றி? மகளைச் சந்தோசமா வச்சு வாழ்ந்தாப் போதும், அதுக்காக என்ன செய்யவும் ரெடி எண்டா என்ன அர்த்தம்? விளங்க இல்ல எனக்கு!” என்று காதுக்குள் சீறியது அவன் குரல்.
“என்ன… என்ன சொல்லுறீங்க? எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.” அறைக்குள் முடங்கிக் கிடந்து அவன் நினைவிலேயே அமிழ்ந்து கிடந்தவளுக்கு வெளி உலகில் நடந்த எதுவும் தெரியாதே! பதறி வினவினாள்.
அதை நம்ப அவன் தயாராயில்லை. “ஒண்டும் தெரியாத பேபி மாதிரி நடிக்காத என்னட்ட! நீ சொல்லாமத்தான் தென்னந்தோப்பைத் தாறன் எண்டவரா? காசுக்குப் புருசனா வாழுறதுக்கு வேற எவனையாவது பாக்கச் சொல்லு. என்னை இல்ல. நீயும் வேணாம் உன்ர சீதனமும் வேணாம் எண்டு சொல்ல எனக்கு எவ்வளவு நேரமாகும் எண்டு நினைக்கிறாய்?” என்று அவன் முடிப்பதற்குள் அழைப்பைத் துண்டித்திருந்தாள் கானவி.
அவளால் அதற்குமேல் எதையும் கேட்க முடியவில்லை. நெஞ்செல்லாம் நடுங்கிப் போயிற்று. அசையக்கூட முடியாதவளாய் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
திரும்ப திரும்பக் காயப்படுத்துகிறானே. ஏன் இப்படி? அவள் பக்கம் என்னவென்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே! அவன் விடும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை எப்படியெல்லாம் வதைக்கும் என்று யோசிக்கவே மாட்டானா? இதில், திரும்பவும் அவனிடம் போவதற்கு யோசித்துக்கொண்டு இருக்கிறாள் அவள்.

