இடைவெளி வலிக்குதே 14 – 2

நெஞ்சம் கசந்து வழிய எழுந்து தந்தையைத் தேடிக்கொண்டு போனாள்.

அவர் இன்னும் வந்திருக்கவில்லை. விசாலாட்சி விறாந்தையில் அமர்ந்திருந்து பனையோலையில் நீத்துப்பெட்டி பின்னிக்கொண்டிருந்தார்.

“அம்மா, அப்பா இவரோட ஏதும் கதைச்சவரா?”

கைவேலையில் ஒரு கண்ணும் தொலைக்காட்சியில் இன்னொரு கண்ணுமாக இருந்த விசாலாட்சி, திடீரென்று மகளிடமிருந்து வந்த கேள்வியில் கலவரத்தோடு திரும்பிப் பார்த்தார். “தெரியேல்லையே பிள்ளை. ஆனா, அங்க பக்கத்தில வாங்கின தென்னந்தோப்பை உங்கட பெயருக்கு மாத்துவமோ எண்டு நேற்றுக் கதைச்சவர்.” என்றவருக்கு மகள் ஏன் இதை விசாரிக்கிறாள் என்கிற கேள்வி எழுந்தது.

“ஓ!” என்ன நடந்தது என்பதே அவளுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. அவனானால் அதற்கு அவளிடம் கோபித்து முடித்துவிட்டான். தொண்டையை அடைத்த வேதனையை விழுங்கிக்கொண்டு, “என்னிலதான் பிழை எண்டு சொன்னனான் எல்லாம்மா. பிறகும் ஏன் அப்பா அப்பிடிக் கேட்டவர்? அது அவரை அவமானப்படுத்திற மாதிரி இருக்காதா?” என்றாள் இயலாமையுடன்.

அவர் பயந்துபோனார். “ஐயோ ஆச்சி. அப்பிடி நாங்க நினைப்பமா? என்ன கதை இது? அந்தப் பக்கமா வாங்கினதால உங்களுக்கே தருவம் எண்டு நினைச்சம்.” என்றார் அவசரமாக.

அவருக்கு மகளிடம் கூட உள்ளதைச் சொல்ல மனமில்லை. அவளுக்குத் திருமணம் செய்து கொடுக்கிற வரையிலும் அவள் மேலே படிக்காததும் ஒரு வேலைக்குப் போகாததும் அவர்களுக்கு ஒரு விடயமாகப் பட்டதே இல்லை. அதுவே இப்போது அதனாலேயே மருமகன் மகளை வெறுக்கிறானோ, தனக்கு அவள் இணையில்லை என்று நினைக்கிறானோ என்று நினைத்ததும் துடித்துப் போயினர். அவர்களாவது வற்புறுத்தி அவளைப் படிக்க வைத்திருக்க வேண்டுமோ என்று கலங்கினர். இனி அதைப் பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை என்பதால் குறைந்த பட்சமாகச் சொத்துப் பத்தைக் கொடுத்தாவது மருமகனின் மனத்தில் பதிந்துவிட்ட மகள் மீதான குறையைப் போக்க நினைத்தனர்.

இதையெல்லாம் அவளிடம் சொல்லி, அவளைத் தாமும் வருத்த அவர்கள் தயாராயில்லை.

ஆனால், அவர் சொல்லித்தான் அவர்களின் உள்ளத்தை அறிய வேண்டும் எனும் நிலையில் அவள் இல்லையே! அவளுக்கு ஒன்று என்றால் அவர்கள் எதுவும் செய்வார்கள் என்று அவளுக்குத் தெரியுமே!

உள்ளத்தோடு சேர்ந்து விழிகளும் கசிய, “இனி அவரிட்டயோ அவரின்ர வீட்டு ஆக்களிட்டயோ எதுவும் கதைக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ அம்மா. இது பிரச்சினை வளந்துகொண்டு போகுமே ஒழிய முடியாது.” என்று சோர்வுடன் சொல்லிவிட்டு அவள் அறைக்குள் போக, செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு மகளிடம் வந்தார் விசாலாட்சி.

“என்னம்மா? தம்பி இதக் கேட்டுச் சண்டை ஏதும் பிடிச்சவரா?” பயத்துடன் வினவினார்.

“ஏன் அம்மா உடனே சண்டை எண்டு நினைக்கிறீங்க? ஏன் அப்பா அப்பிடிக் கேட்டவர் எண்டு எடுத்துக் கேட்டவர். இதைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? அதுதான் உங்கள விசாரிச்சனான். ஆனா அவருக்கு அப்பிடிக் கேட்டது பிடிக்கேல்ல போல. அதால இனி இதைப் பற்றி ஒண்டும் கதைக்க வேண்டாம் எண்டு அப்பாட்டச் சொல்லுங்கோ.”

மகள் திரும்ப திரும்ப அப்படிச் சொன்னதிலேயே மருமகன் கோபப்பட்டிருக்க வேண்டும் என்று கணித்தவர் வேறு கேட்கவில்லை.

இங்கே இருளுக்குள் வெறித்தபடி நின்றவனின் மனத்தின் சினம் அடங்கவே இல்லை. சொத்துத் தருகிறேன் மகளோடு சந்தோசமாய் வாழு என்றது அவன் தன்மானத்தை மொத்தமாய்ச் சீண்டியிருந்தது. எவ்வளவு நேரம் நின்றானோ! விழிகளை இறுக்கி மூடி, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு வீட்டுக்குள் வந்தான்.

அங்கிருந்த மூவரின் பார்வையும் அவனில் குவிந்தது.

“இனி அவவின்ர வீட்டில இருந்து ஆர் கதைக்க வந்தாலும் என்னோட கதைக்கச் சொல்லுங்க அத்தான். நீங்க ஒண்டும் சொல்லாதீங்க.” நின்று சொல்லிவிட்டு அறைக்கு நடந்தான்.

*****

மனோகரனைச் சந்தித்துப் பேசிவிட்டு, தோட்டத்தையும் பார்த்துக்கொண்டு சோர்ந்துபோய் வீடு வந்த அருந்தவராஜாவுக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவே இல்லை.

கடம்பனிடமிருந்து விடயத்தை அறிந்த நிமிடம் அவருக்கு நெஞ்சுத் துடிப்பே நின்றது போலாயிற்று. சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகளைப் பார்த்து, மருமகன் இப்படிச் சொல்லிவிட்டானே என்று இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். அவருக்கே இப்படி இருக்கிறதே அவர் மகளுக்கு?

இதற்கு என்ன வழி என்று யோசித்தபோதுதான் அவர்கள் பக்கமாக விற்க வந்த தென்னந்தோப்பு நினைவில் வந்தது. உடனேயே பணத்தை உருட்டிப் பிரட்டி வாங்கிவிட்டார். அப்படியே அதை அவர்களுக்கே கொடுக்க நினைத்தார். மனோகரனானால் மருமகன் சம்மதிக்கவே மாட்டான் என்கிறான். எப்படியாவது சம்மதிக்க வைக்கச் சொல்லிவிட்டு வந்திருந்தார்.

நேராக வீட்டின் பின்பக்கம் சென்று உடம்பு கழுவி, அங்கே கொடியில் தொங்கிக்கொண்டிருந்த சாரத்தை அணிந்துகொண்டு வந்தவருக்கு ஒன்றும் சொல்லாமல் இரவுணவைக் கொடுத்தார் விசாலாட்சி.

“பிள்ளை சாப்பிட்டாவோ?”

“சாப்பிட்டுப் படுக்கவும் போய்ட்டா.”

“தம்பி?”

“அவரும் சாப்பிட்டு அங்க என்னவோ படம் பாக்கிறார்.”

அதன் பிறகு அவர்களிடையே எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை. இருவர் சிந்தனையிலும் மகளின் எதிர்காலம் குறித்த பயமே நிறைந்து கிடந்தது.

அவர் சாப்பிட்டு முடித்ததும், சமையற்கட்டை ஒதுக்கி, பிள்ளைகளை எல்லாம் ஒரு முறை பார்த்துக்கொண்டு விசாலாட்சி வந்தபோது, விறாந்தையில் பாயை விரித்துவிட்டுச் சரிந்திருந்தார் அருந்தவராஜா. கைகள் இரண்டையும் தலைக்குக் கொடுத்து, பார்வை முகட்டில் இருக்க, சிந்தை இந்தச் சிக்கலை அவிழ்க்கும் முயற்சியில் இருந்தது.

விசாலாட்சியும் வந்து அவரருகில் சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டார்.

சில நொடிகள் பேச்சற்ற மௌனத்தில் கழிய, “இனி நீங்க மனோகரன் தம்பிட்டப் போய் ஒண்டும் கதைக்க வேண்டாம் அப்பா.” என்று மெல்லச் சொன்னார் விசாலாட்சி.

முகத்தை மட்டும் திருப்பி, மனைவியைக் கேள்வியாகப் பார்த்தார் அருந்தவராஜா.

“தம்பி பிள்ளையிட்ட கோவப்பட்டிருக்கிறார் போல. கேட்டா ஒண்டும் சொல்லுறா இல்ல. ஆனா, பிள்ளைக்கு முகமே வெளுத்துப் போச்சு. தன்னிலதான் பிழையாம், அவரோட ஒண்டும் கதைக்க வேண்டாமாம், கதைக்கிறதால பிரச்சினை வளருமே தவிர முடியாதாம் எண்டு சொல்லுறா.” என்றதும் விழுக்கென்று எழுந்து அமர்ந்துவிட்டார் அருந்தவராஜா.

‘அவசரப்பட்டுத் தேவை இல்லாத வேலை பாத்திட்டனோ’ என்று உள்ளே ஓடியது. ஒரு தந்தையாய் வேறு என்னதான் செய்வது? நீ எப்படி என் மகளைப் பார்த்து அப்படியெல்லாம் கதைக்கலாம் என்று கேட்டுக்கொண்டு சண்டைக்குப் போகும் ரகம் அவரில்லை. பிறகு?

“முதலும் அவே சீதனம் எண்டு எதையும் கேக்கேல்லை எல்லாப்பா? நாங்க ஏற்கனவே குடுத்தது கூட நாங்களாக் குடுத்ததுதானே. இதில இன்னும் தாறம் எண்டு சொன்னா?”

இந்த வழியும் அடைபட்டுப் போயிற்று என்றால் இனி என்ன செய்வது என்று தெரியாது நெற்றியைத் தேய்த்துவிட்டார் அருந்தவராஜா.

“பிள்ளை சொன்ன மாதிரி இனி இதைப் பற்றி அவேயோட ஒண்டும் கதைக்காதீங்கோப்பா. ஏற்கனவே அவே ரெண்டு பேருக்கையும் ஒண்டும் சரி இல்ல. நாங்களும் நல்லது செய்றோம் எண்டு தேவை இல்லாத வேலைகளைப் பாத்து, இருக்கற பிரச்சினைகளைப் பெருசாக்க வேண்டாம்.”

மீண்டும் தரையில் சரிந்துகொண்டவருக்கும் அந்த எண்ணம்தான். ஆனால், வேறு என்ன செய்து மகளையும் மருமகனையும் ஒற்றுமையாக்குவது?

“இத இப்பிடியே விடுங்கோ. சில பிரச்சனைகளை அப்பிடியே விடுறதுதான் அதுக்குத் தீர்வே. கொஞ்ச நாள் போகட்டும். தம்பிக்குக் கோபம் ஆறினதும் எல்லாம் சரியா வரும். யோசிக்காதீங்கோ.”

ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டார் அருந்தவராஜா. மனைவி சொல்வதுதான் சரி என்று தோன்றிற்று. அதன்பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏதேதோ சிந்தனைகள். ஒரு கட்டத்துக்குமேல் அமர்ந்தே இருக்க உடல் விடவில்லை என்றதும் அப்படியே தானும் ஒரு பக்கமாகச் சரிந்து, விழிகளை மூடினார் விசாலாட்சி.

error: Alert: Content selection is disabled!!