மயங்கினேன் மழைச்சிலையே – 12

அத்தியாயம் – 12

சக்தியின் மீதான தனது காதலை உணர்ந்த அன்புமதி, தன்னைப் பற்றி அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதெல்லாம் யோசிக்கவில்லை.

காலைச் சுற்றி வந்து கவனத்தை ஈர்க்கும் பூனைக்குட்டியாக எந்நேரமும் தன்னுடனே வம்பளந்து கொண்டிருந்தவள் திடுமென யாரோ போல விலக்கி வைத்து பேசியதில் கடுப்பாகி விட்டான்.

அவளைக் கண்ட மறுநொடி தன் மனதை வாய்விட்டே வெளிப்படுத்தியும் அந்த தத்திப் பிள்ளை கவனியாமல் இருந்துவிட்டு ‘பெரிய இவளாட்டம் இப்ப கேள்வியைப் பாரு!’ என்ற எண்ணம் தான் அவனுள்.

அதன் வெளிப்பாடாக தன் மனதில் நினைத்ததை வாய்விட்டு சொன்னவன் முறுக்கிக் கொண்டு சென்றுவிட, அவனது உரிமையான ‘டி’யில் முதலில் திகைத்தவள்,

மறுநொடியே, “ஹலோ! என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?! இந்த ‘டி’ போட்டு பேசற வேலை எல்லாம் வேணாம். உங்க இஷ்டத்துக்கு எப்படி வேணும்னாலும் பேசுவீங்களா? அப்றம் நானும் கண்டபடி கூப்பிடுவேன். ஜாக்ரதை!” விரல் நீட்டி மிரட்டிக் கொண்டிருந்தாள்.

அங்கு ஒருத்தி சிட்டுக்குருவி போல சிலிர்த்துக் கொண்டு நிற்பதைக் கூட கண்டு கொள்ளாமல் தனக்கான காஃபி போடுவதில் கவனமா இருந்த பையன்,” எனக்கு காஃபி போடுறேன். உனக்கும் வேணுமா?!” சலனமே இல்லாத குரலில் சம்பந்தமில்லாமல் கேட்டான்.

அவனது கேள்வியில் தான் பேசியதை கவனித்தானா இல்லையா!? எனத் தெரியாமல் ‘ஙே’வென விழித்தவள், புசுபுசுவென பெரிய பெரிய மூச்சுவிட்டுக் கொண்டு காலை உதைத்து அங்கிருந்து அகன்றாள்.

அவனது காஃபியை வேண்டாம் எனச் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அதேசமயம் தனது கோபத்தை விட்டுக்கொடுத்து சட்டென இறங்கிவரவும் முடியவில்லை.

நேராக ஹாலுக்குச் சென்ற சக்தி வேண்டுமென்றே ஸோஃபாவில் சம்மணமிட்டு அமர்ந்து, சமையலறை வாசலை உள்ளுக்குள் பொங்கிய ஆவலுடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே இம்மாதிரி சில சமயங்களில் ஸோஃபாவில் அவள் அமர்ந்திருக்க, அதைக் கண்டவுடன் பதறியடித்து வருபவன் அவளை இறங்கச் சொல்லி மிரட்டி, உடனே அந்த இடத்தை தட்டிச் சுத்தம் செய்வான்.

அத்தோடு நிறுத்தாமல், “கொஞ்சமாவது அறிவிருக்கா?! லைட் கலர் ஸோஃபா காலை தூக்கி மேல வைக்கறதால அழுக்காகாதா?” என ஆரம்பித்து அரைமணிநேரம் திட்டித் தீர்த்துவிட்டு செல்வான்.

தற்போது தன்னை கடுப்பேற்றிய அன்புவை பழிவாங்க அவள் அவ்வாறு அமர்ந்திருக்க, சக்தி எதிர்பார்த்தது போல தனக்கான காஃபி கோப்பையுடன் வெளியே வந்தவன் அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு பதறினான்.

“ஹே! கெட் அப்!” சத்தமிட்டபடி அவன் விரைந்து வர, அவள் சட்டமாக அமர்ந்து கொண்டு இதழ் வளைத்து அவனை மிதப்பாக பார்த்துக் கொண்டிருக்க, தீவிரமாக முறைத்து நின்றான் அவன்.

அவளருகில் வந்த அன்பு, “இப்ப நீ எழுந்திருக்கல.. அதே மாதிரி கட்டிப்பிடிச்சு மறுபடியும் கிஸ் பண்ணிடுவேன்.” இடுப்பில் கையூன்றி மிரட்ட, அதில் ஜெர்க்கான சக்தி சட்டென எழுந்து விட்டாள்.

‘இதென்னடா புதுவித மிரட்டலா இருக்கு!?’ விழித்தவளுக்கு திடீரென மாறிய அவனது நடவடிக்கைகள் உள்ளுக்குள் ஒருவித கிலியை உண்டாக்க, அதை அவள் விழிகளும் பிரதிபலித்தது.

அதுவரை அவள் கண்கள் விரிய அதிர்ந்து எழுந்துவிட்டதில் உண்டான புன்னகையை மறைத்து அவளையே குறும்புடன் பார்த்திருந்தவன், இறுதியில் அவளது விழிகளில் பிரதிபலித்த பயத்தில் உள்ளுக்குள் நொந்து போனான்.

இத்தனை நாட்களும் அந்நிய ஆடவனுடன் ஒரே வீட்டில் இருந்தாலும் அவள் விழிகளில் அதுவரை அவன் அப்படி எந்தவொரு பயத்தையும் கண்டதில்லை. ஆனால் தற்போது தனது செயலும் சொல்லும் அவளை பயமுறுத்தியதில் உடைந்தே போனான்.

தன்னைக் குறித்தே வருந்திய அன்பு, “ஐம் ஸாரி சக்தி!.. எல்லாத்துக்கும்” என்றவன் ஸோஃபா அழுக்கானதைக் கூட மறந்து விறுவிறுவென தனது அறைக்குள் சென்று விட்டான்.

அவனையே பார்த்திருந்த சக்திக்கு, அதுவரை கோபமாக இருந்தாலும் ஒருவித மலர்ச்சியுடன் இருந்த அவன் முகம் சட்டென வாடியதில்
‘அவனை தப்பா நினைச்சுட்டேன்னு கோவிச்சுட்டானோ!’ தனக்குள் யோசித்தவள்,

‘ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னிக்கு தான் ஏதோ அவன் முகத்துல பிரகாசமா இருந்துச்சு, நீ அதையும் ப்யூஸ் புடுங்கி விட்டுட்ட சக்தி. பாவம்!’ வருந்தியவளுக்கு அவனது வாடிய முகம் இம்சை செய்தது.

வழக்கம் போல உதட்டைச் சுழித்து கொண்டு “இன்னிக்கு நீயே போடுற கசாயம் தான் உனக்கு காஃபி, அதை யாரு மாத்த முடியும்!? ம்ஹ்ம்!” பெருமூச்சுடன் கிட்சனுக்குள் சென்றாள்.

அவளுக்கான கோப்பையில் மணந்து கொண்டிருந்த காஃபியை கண்டு விழிவிரித்தவள், “பரவால்ல பய கொஞ்சூண்டு நல்லவன் தான்! தேங்க்ஸ் லவ்!” அங்கே இல்லாதவனை பாராட்டி காற்றில் அவனுக்கு ஒரு சல்யூட் வைத்து காஃபியை எடுத்து துளிதுளியாக ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.

அங்கே அறைக்குள் சென்ற அன்பு தனது செயலை எண்ணியே கூனிக்குறுகிப் போக, “நீயெல்லாம் ஒரு மனுசனாடா?! கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும், அவள் விருப்பம் இல்லாம தொடக்கூடாதுனு நினைக்கிறவன் தான் உண்மையான ஆம்பள.”

“ஆனா நீ!!? அவள் மனசுல உம்மேல ஆசை இருக்கான்னு கூட தெரியாது. அப்படி இருக்கும்போது எந்த உரிமையில அவளை கட்டிப்பிடிச்சு.. முத்தம் எல்லாம் கொடுத்து.. ஓ காட்!”

“அவளோட அனுமதி இல்லாம செய்ததும் இல்லாம, இப்ப மறுபடியும் அதையே செய்வேன்னு மிரட்டுற! எவ்வளவு மோசமா உன்னைப்பற்றி அவளை யோசிக்க வச்சுட்ட.” தன் கன்னத்தில் அறைந்து கொண்டு புலம்பிக் கொண்டிருந்தான்.

சிறிதுநேரம் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்றவன் நேரமாவதை உணர்ந்து தனது அலுவலகத்திற்கு தயாராகி வெளியே வந்து, ஹாலில் அமர்ந்திருந்தவளை திரும்பியும் பாராமல் சென்று விட்டான்.

உணவு சமைக்கக்கூட வெளியே வராமல், காலையில் எதுவும் சாப்பிடாமல் செல்லும் அவனை விசித்திரமாக பார்த்த சக்தி, “இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிஃஸர்க்கு என்னாச்சு?! எதுவும் சமைக்காம, சாப்பிடாம அப்படியே போறானே!” அவன் பசியோடு இருப்பதைப் பற்றி யோசித்தவள்,

‘அவனுக்கு பசிச்சா, கேண்டீன்ல அவனே சாப்பிட்டுக்குவான். உனக்கு எதுக்கு இத்தனை பீலிங்கு சக்தி?! ‘ என்ற மனதின் கேள்விக்கு “அதானே! நமக்கென்ன வந்தது?!” தோள்களை குலுக்கிவிட்டு தனது வேலையை பார்க்கச் சென்றாள்.

அடுத்து வந்த தினங்களில் அன்பு அவளைப் பார்ப்பதையே தவிர்க்க, பேச்சுக்கு எங்கே இடம்!. இருவருக்கும் இடையே மீண்டும் அந்த மௌனப் பெருஞ்சுவர் எழுந்தது.

ஆனால் இம்முறை சக்திக்கு அதன் காரணம் புரிந்தாலும் ‘அவன்தானே முதல்ல தப்பு பண்ணுனான், என்னமோ நான் ஏதோ தப்பு செஞ்சா மாதிரி ஸீனைப் போடுறான். முகத்தைத் திருப்பினா திருப்பிட்டு போ!’ வீம்புடன் விலகி இருந்தாள்.

இதற்கு முன்பான அவனது காரணம் புரியாத ஒதுக்கத்தில், அவன் முகத்திலடித்தாற் போல பேசியதால் அவளும் முறுக்கிக் கொண்டு இருந்தாள். அத்தோடு அவளும் புது கேம் ஒன்றை உருவாக்குவதில் பிஸியாக இருந்ததால் அந்த விசயம் பெரிதாக தெரியவில்லை.

அவளது அந்த புது கேம் பற்றி தனது கம்பெனிக்கு சென்று விவரித்து சப்மிட் செய்வதற்கு அன்று அலுவலகம் சென்றிருந்தாள். ஆனால் அதில் திடீரென ஏற்பட்ட வைரஸை சரி செய்ய அவளுக்கு அதிகாலை மூன்று மணியானது.

அன்றையதினம் தான் அன்பு விடாமல் அழைப்பு விடுக்கவும், கணிணி திரையில் மூழ்கி இருந்தவள், பேசாமல் இருந்தவன் திடுமென இத்தனை அழைப்பு விடுத்ததால் எதாவது முக்கியமான விசயமோ என்றெண்ணி அழைப்பை ஏற்றாள்.

அதேநொடி அவள் அதுவரை தேடிக் கொண்டிருந்த கிளிட்ச்சை சரி செய்யும் வழி என்னவென்று தெரிந்து விட, அதில் முனைப்பானவள் பிறகு பேசுவதாக சொல்லி அழைப்பை வைத்து விட்டாள்.

அனைத்தும் சரி செய்து விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்தவளுக்கு அந்நேரத்தில் அவனை எழுப்பி விசாரிக்க மனமின்றி சிறிதுநேரம் காத்திருக்க, அடுத்து நடந்த கதை அனைத்தும் நாம் அறிந்ததே!

இப்போது மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளமாக அன்பு அமைதியின் பிள்ளையாக சுற்றிக் கொண்டிருக்க, வீட்டில் போரடித்து போனவளுக்கு, அவனுடன் வம்பிழுக்காமல் ஏதோ தியான மண்டபம் போல அமைதியாக இருக்கும் வீட்டில் நேரந்தள்ளுவது கடினமாக இருந்தது.

அன்பு அலுவலகம் முடித்து மாலை வந்ததும் அவனிடம் சலசலத்துப் பேசிக் கொண்டு.. சமையல் குறிப்புகள் கேட்டு கிட்சனை அதகளம் செய்து.. அவனை டென்சனாக்கி அவனிடம் திட்டு வாங்கி.. அவை எல்லாம் ஏதோ ‘அது ஒரு நிலாக்காலம்!’ என்பதைப் போல இருந்தது சக்திக்கு.

அவன் மீண்டும் மௌன சாமியாரானதில் ‘அவனது தவறு’ என்று நான்கு நாட்களாக வீம்புடன் இருந்தவளுக்கு, அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

‘அதான் அவன் அதுக்கு ஸாரி கேட்டுட்டான்ல’ ஒருமனம் அவனுக்காக வக்காலத்து வாங்க, அதுவரை அந்த பாயிண்ட்டை ஏற்காமல் இருந்தவள் இன்று அதை ஏற்றுக் கொண்டு, மாலை அவனிடம் என்னவென்று கேட்டு சமாதானமாகி விட காத்திருந்தாள்.

வழக்கமாக அன்பு வரும் நேரத்தில் ஹாலில் அமர்ந்து வாசலையே அவள் பார்த்திருக்க, உள்ளே வந்தவன் நேராக தனது அறைக்குள் சென்று விட்டான்.

அவன் தயாராகி வரும்வரை நகத்தைக் கடித்தபடி பேச்சை எப்படி தொடங்குவது என மனதிற்குள் யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

வெளியே வந்தவன் நேராக சமையலறைக்குச் செல்ல, அவளும் பின்னாலேயே சென்றவள் வாசலில் நின்று அவனைப் பார்த்திருந்தாள். அவள் நிற்பதை உணர்ந்தாலும் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து கருமமே கண்ணாக நின்றிருந்தான் அன்புமதி.

“இப்ப நான் என்ன தப்பு செய்தேன்னு நீங்க இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுட்டு சுத்துறீங்க ஆபிஃஸர்? இருக்கறதே ரெண்டு பேரு இதுல நவகிரகம் மாதிரி ஆளுக்கொரு பக்கம் திருப்பிட்டு போனா, நல்லாவா இருக்கு?” பொறுமையிழந்து பொரிந்தாள் சக்தி.

அதுவரை அவளைப் பார்ப்பதைத் தவிர்த்த அன்பு திரும்பி அவளைப் பார்த்து,”தப்பு என்னோடது தான். அதுக்கு நான் ஸாரியும் கேட்டுட்டேன். இனிமே என்னால உங்களுக்கு எந்த தொல்லையும் வராது மிஸ். யுவசக்தி!”

“நீங்க எந்த பயமும் இல்லாம ஸேஃபா இங்க இருக்கலாம். ஒன்ஸ் அகைன் ஸாரி ஃபார் வாட் ஐ டிட்.” என்றவன் அவ்வளவு தான் பேச்சு என்பதைப் போல அங்கிருந்து வெளியேற, அவனது பன்மை அழைப்பு அவளை என்னவோ செய்தது.

“இப்போ ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க ஆபிஃஸர்? திடீர்னு புதுசா பிகேவ் பண்ணுனா, அந்த மாதிரி டவுட் வர்றது நார்மல் தானே. அதான் இப்ப நானே வந்து பேசுறேன்ல, அப்றம் என்ன வேணும் உங்களுக்கு, இன்னமும் சிடுமூஞ்சி சிம்பன்ஸி மாதிரியே இருக்கீங்க?” அவனைத் தொடர்ந்து வந்தவள் இடுப்பில் கையூன்றி கோபமாக கேட்டாள்.

தனது அறைவாசல் வரை சென்ற அன்பு,” மைன்ட் யுவர் வேர்ட்ஸ் சக்தி! நாந்தான் என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராதுனு சொல்றேன்ல, நீங்க முடிவு செய்த மாதிரி உங்க அக்ரிமெண்ட் டைம் முடியறவரை இங்க ஸேஃபா இருக்கலாம்.”

“அதுக்கு அப்புறம் நல்லா விசாரிச்சு பொண்ணுங்க இருக்கற வீட்டுக்கு போவீங்களோ, இல்ல வேற எங்கேயாவது போவீங்களோ எனக்கு தெரியாது, பட் ஐ ஸவேர் யு வில் பி ஸேஃப் ஹியர்.”

“இங்க இருக்கிறவரை நான் போட்ட கண்டிஷன்ஸ் படி தான் இருக்கனும் அன்ட் மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும். ஸோ! மைன்ட் யுவர் டங்க்!” தீவிரமாகக் கூறியவன் உள்ளே சென்று கதவடைக்க முயன்றான்.

வேகமாக வந்த சக்தி கதவை பிடித்துக் கொண்டு,”ஷப்பாஆ! இரிடேட் பண்ணாதே லவ். ஓகே! லெட்ஸ் ஃபர்கெட் எவர்திங். எங்கூட பழைய மாதிரி நார்மலா பழகறதுல உனக்கென்ன பிரச்சனை மேன்? ஏன் என்னை அவாய்ட் பண்ற?” அலுப்புடன் சற்று எரிச்சலாகவே கேட்க,

அவளையே சில நொடிகள் பார்த்த அன்பு பட்டென கதவைச் சாத்திக் கொண்டான். அவனது உதாசீனத்தில் மனதில் ஒருவித வலி பரவ, கண்கள் கூட லேசாக கலங்கிவிட மூடிய கதவின் ஒருபுறம் முகம் வாடி நின்றிருந்தாள் யுவசக்தி.

கதவின் மறுபுறம், “நீ தான் பிரச்சினை! உம்மேல வந்த காதல்தான் பிரச்சனை. என்னால உங்கிட்ட இயல்பா பழக முடியுமான்னு தெரியலையேடி! உனக்கு எம்மேல அப்படி ஒரு எண்ணமே இல்லங்கற போது, என்னால எப்படி உங்கூட நார்மலா இருக்க முடியும்?!”

“தோ! நீ இப்படி சிணுங்கி உரிமையா பேசி நிக்கும் போது உன் கன்னத்தை பிடிச்சு கிள்ளி முத்தம் வைக்கத் தோணுது. எந்த உரிமையில நான் அதை செய்வேன், நான் யாரு உனக்கு!?” வாய்விட்டு வலியுடன் புலம்பிக் கொண்டிருந்தான் அன்புமதி.

error: Alert: Content selection is disabled!!