ஆழியே மெளனம் ஏனோ 15 – 2

பள்ளி இறுதி வருடத்தை முடித்த செழியன் அவளைமீண்டும் பார்க்கவே இல்லை.

வருடங்கள் ஓடின.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு விடுமுறையில் இருந்த ஆழினியை வீட்டிற்கு வருமாறு மயூரி எவ்வளவு வற்புறுத்தியும் அவள் வர மறுத்துக்கொண்டே இருந்தாள்.

“ஆழி! இனி காலேஜ் எங்க சேரப் போறோம்னு தெரியல. இந்த லீவ்ல மறக்க முடியாத மெமரிஸா மாத்துவோம் ப்ளீஸ். ஒரு வாரம் மட்டும் வா ஆழி. ” என்று மயூரி கெஞ்ச.

“ மதர் கிட்ட கேட்கணும். அவங்க அலோவ் பண்ணுவ்ங்களான்னு தெரியல.” என்று ஆழினி தயங்கினாள்.

“எங்க அக்கா கிட்ட சொல்றேன். அவங்க அந்த ஆஸிரமத்துக்கு அம்மா, அப்பாவோட போவாங்க. அவங்க கேட்டா மதர் ஒத்துப்பாங்க.” என்றவள், அவளது அக்கா உதவியுடன் மதரிடம் முறையாக அனுமதி வாங்கி அவளை அழைத்துக்கொண்டு வந்தாள்.

அங்கேதான்…

பல வருடங்களுக்குப் பிறகு ஆழினி மீண்டும் செழியனை சந்தித்தாள்.

அவனைப் பார்த்ததும், வழக்கம்போல முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்து நகர முயன்றாள்.

ஆனால்…

அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, செழியன் அவளையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனது பார்வையில் இருந்த குறுகுறுப்பும், ஏதோ சொல்ல நினைப்பது போன்ற அந்தப் பார்வையும் ஆழினியின் கவனத்தைத் தப்பவில்லை.

ஒரு கணம் அவளது கால்கள் அப்படியே நின்றுவிட்டன.

*இவன்… என்னையா இப்படிப் பார்க்கிறான்?*

அவளது உள்ளம் காரணமே இல்லாமல் படபடத்தது.

செழியனோ அவள் தன்னைப் பார்த்துவிட்டதை உணர்ந்ததும் பார்வையை விலக்காமல், இன்னும் ஆழமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் ஆழினி மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ஆனால் இந்த முறை…

அவளது மனதுக்குள் இருந்த பழைய கோபத்தோடு சேர்ந்து, புரியாத ஒரு புதிய உணர்வும் மெல்ல முளைக்கத் தொடங்கியிருந்தது.

ஆழினி அங்கிருந்த ஒரு வாரமும் மதுராவும் வந்து சேர்ந்துவிட, மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த ஊரில் கலகலப்பாக சுற்றித் திரிந்தனர். சந்தைக்குச் செல்வது, கோவிலுக்குச் செல்வது, கடைகளுக்குச் செல்வது என அந்த ஒரு வாரமும் அவர்களுக்குப் பிஸியாகவே கழிந்தது.

அவர்களுக்கு டிரைவர் வேலை பார்த்தான் செழியன்.

அவர்களது பாதுகாப்பிற்காக தானே ட்ரைவ் செய்வதாக வீட்டில் கூறியவன், அவர்களுடன் கிளம்பினான்.

ஆனால் உண்மையான காரணம் ஆழினிதான் என்பதை அவனைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.

கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, அவ்வப்போது கண்ணாடி வழியாக ஆழினியைப் பார்ப்பான்.

அவன் தன்னைப் பார்ப்பது ஆழினிக்கும் தெரியும்.

ஒவ்வொரு முறையும் அவனது பார்வை தன் மீது விழும்போது, அவளுக்குள் ஏதோ ஒரு விதமான பயம் தோன்றும். ஆனால் அந்தப் பயத்தோடு சேர்ந்து சொல்ல முடியாத ஓர் ஆர்வமும் பிறந்தது. அவனது பார்வையைத் தவிர்ப்பது போல நடித்தாலும், அவன் மீண்டும் பார்க்கிறானா என்று ஓரக்கண்ணால் கவனிக்காமல் இருக்க அவளால் முடியவில்லை.

மதுராவும் நித்திய மயூரியும் அவர்களுக்குள் நடக்கும் அந்தச் சிறு விளையாட்டை கவனித்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் அந்த ஒரு வாரம் முடிவதற்குள், ஆழினியின் மனதில் செழியன் ஆழமாக நங்கூரமிட்டிருந்தான்.

***********
‘மேற்படிப்பாக என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த ஆழினிக்கு, அவர்களது குடும்பத்தின் ஏற்றுமதி நிறுவனம், அவர்களது தறி, பொட்டிக் எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக அங்கு ஏற்றுமதி செய்யப்படும் விதவிதமான துணிகளையும், அவற்றின் வடிவமைப்புகளையும் பார்த்தபோது அவளுக்குள் புதிதாக ஓர் ஆர்வம் உருவானது.

துணி வடிவமைப்பு… ஃபேஷன் டெக்னாலஜி…

அதுதான் தன்னுடைய பாதை என்று அவளுக்குத் தோன்றியது.

இறுதியில், ஃபேஷன் டெக்னாலஜிதான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாள்.

அவளுக்காகவே நித்திய மயூரியும் அதே துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவு செய்தாள்.

அதற்குள் தேர்வு முடிவுகளும் வந்துவிட்டன.

ஆழினியின் மதிப்பெண்களைப் பார்த்த மதருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

“ஆழினி! நீ எடுத்த மார்க்குக்கு நல்ல இன்ஜினியரிங் காலேஜ்ல சீட் கிடைக்கும். இல்லனாலும் நல்ல காலேஜ்ல சேர்க்கறதுக்கு உன் ஸ்பான்சர் கிட்ட ஏற்கனவே சொல்லி வச்சிருக்கேன். அவங்களும் படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டாங்க.” என்று மதர் சந்தோஷமாகக் கூற.

ஆழினியோ அதை மறுத்துவிட்டாள்.

“மதர்! எனக்கு ஃபேஷன் டிசைனிங்கில் தான் விருப்பம்.”என்றுக் கூறி விட்டாள்.

அன்றைய தினம் ஆசிரமத்திற்கு இனியனும், கவிதாவும் வர. அவர்களோடு சிந்துஜாவும் வந்திருந்தாள்.

அவர்களை வரவேற்ற
மதரின் முகத்தில் மட்டும் சிறு வருத்தம் தெரிந்தது.

“என்னாச்சு மதர்? அந்தப் பொண்ணு மார்க் குறைவா எடுத்துடுச்சா பரவால்ல. பணம் கட்டி கூட படிக்க வைக்கலாம்” என்றார் கவிதா.

“ஆமாம் மதர். அவளுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இன்ஜினியரிங் மாதிரி எந்தப் படிப்பாக இருந்தாலும் சரி… நாங்க பார்த்துக்கிறோம்,” என்று இனியனும் ஆதரவாகக் கூறினார்.

மதர் மெதுவாகப் புன்னகைத்தார்.

“அந்தப் பொண்ணு நல்ல மார்க் தான் எடுத்திருக்கா. ஸ்டேட் லெவல்ல வர வேண்டியது… ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டா. இன்ஜினியரிங்ல சேர்க்கலாம்னு பார்த்தேன் அவளுக்கு விருப்பம் இல்லையாம்.

“அப்புறம் என்ன படிக்கணுமாம்?” என்று கவிதா கேட்டாள்.

“ஃபேஷன் டெக்னாலஜி தான் படிக்கணும்னு ஆசைப்படுறா.”

“அவளுக்கு எது பிடிக்குதோ அதையே படிக்கட்டும். நல்ல காலேஜ்ல சேர்த்து படிக்க வைக்கலாம். அதை நான் பார்த்துக்கிறேன்.” என்றார் இனியன்.

“மதர்! அந்தப் பொண்ணை நாங்க பார்க்கலாமா?” என்று கவிதா ஆர்வமாக வினவ.

“உங்களுக்குத் தெரியாதா? தெரியாம தான் வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போனீங்களா?” என்று புரியாமல் வினவிய மதர்,

“ஆழினி…” என்று அழைத்தார்.

அவள் உள்ளே வந்ததும் கவிதா அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து, “அட, ஆழினி!” என்று கூறியபடி அவளை அணைத்துக் கொண்டார்.

ஆழினியோ சிரித்தபடி, “ஆன்ட்டி எங்க இங்கே?” என்று வினவ.

மதரோ, ” ஆழினி! இவங்கதான் உனக்கு இவ்வளவு நாளா ஸ்பான்சர் பண்ணிட்டு இருந்தவங்க. ” என்று கூறினார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆழினியின் முகத்தில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்தது.

தனக்கும் இவர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு விட்ட குறை, தொட்ட குறை இருப்பது போல அவளுக்குள் தோன்றியது.

தனக்கு உதவி செய்தவர்களை பற்றி தெரிந்ததும் அவளுக்கு சந்தோஷம்தான். ஆனால்
அந்த ஒரு விஷயமே அவளது வாழ்க்கையில் எதிர்பாராத அளவுக்கு பெரிய சிக்கலை உருவாக்கப் போகிறது என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.

******

நித்தியமயூரியும் ஆழினியும் ஊட்டியில் இருந்த பிரபலமான கல்லூரியில் சேர்ந்தனர். மதுரா சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்தாள்.

கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்த பிறகு, நித்ய மயூரியும் ஆழினியும் முன்பைவிட இன்னும் நெருக்கமான தோழிகளாகிவிட்டனர்.

ஆழினி அடிக்கடி செழியனைப் பற்றியே நித்ய மயூரியிடம் பேச ஆரம்பித்திருந்தாள்.

ஒருநாள் அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நித்ய மயூரி புருவத்தை உயர்த்தி,

“என்னடி… ரூட் மாறுதா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

ஆழினி உடனே முகம் சிவக்க,

“என்னடி உளறுற?” என்றாள்.

“நான் உளறுறேனா. நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன். லீவுல நீயும் நோக்குன. அண்ணனும் நோக்குனான். சரிதான் கண்டும் காணாமலும் இருந்தேன். ஆனா ரொம்ப முத்திடுச்சு போல. இதுக்கு மேல சும்மா இருக்க முடியாது. இன்னைக்கே எங்க அண்ணன் கிட்ட ஆழினியை பிடிக்குமா இல்லையானு கேட்கிறேன்.”

“ப்ச்! சும்மா இரு மய்யூ.”

“ நீ மட்டும் என் அண்ணியா வந்தா ரொம்ப நல்லா இருக்கும் ஆழி!” என்று நித்ய மயூரி சிரித்தாள்.

அப்போது கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்தது.

” ப்ளீஸ் இப்ப கேட்காதேடி,” என்று ஆழினி தடுக்க.

“அதெல்லாம் முடியாது. இன்னைக்கே கேட்கப் போறேன்.” என்று நித்யமயூரி விடாப்பிடியாகக் கூறினாள்.

ஆனால் அடுத்த இரண்டு மூன்று நாட்களாக அவள் கல்லூரிக்கே வரவில்லை.

ஒரு வாரம் கழித்துதான் வந்தாள்.

வந்தவளின் முகமே வாடிப்போயிருந்தது.

“என்ன ஆச்சு மயூரி? ஏதாவது பிரச்சனையா?” என்று ஆழினி கலக்கத்துடன் கேட்டாள்.

“அதெல்லாம் இல்லையே…” என்று நித்ய மயூரி மறைக்க முயன்றாள்.

“பொய் சொல்லாத மய்யூ.”
ஆழினியின் குரலில் இருந்த அக்கறையைத் தாங்க முடியாமல், நித்ய மயூரி அவளை அணைத்துக் கொண்டாள்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவள்,

“எங்க அண்ணனுக்கு இதுல விருப்பம் இல்லையாம்…” என்று மெதுவாகக் கூறினாள்.

ஆழினியின் முகம் மாறியது.

“என்ன?”

“சின்ன வயசுல இருந்து உன் படிப்புக்கு ஸ்பான்சர் பண்றது நாங்க தானாம்.அதனால் அந்த அக்கறை மட்டும் தான்… வேற எதுவும் இல்லைன்னு சொன்னாங்க.”

அந்த வார்த்தைகள் ஆழினியின் மனதை ஆழமாகத் தைத்தன.

“அக்கறை மட்டும் தானாமே.வேற எதுவும் இல்லையா?” என்று முணுமுணுத்தாள் ஆழினி.

error: Alert: Content selection is disabled!!