எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 13

அத்தியாயம் 13

“மாமா போகாத மாமா!…” என்ற காயத்ரியின் பரிதவித்த வேதனையான குரல் காதில் கேட்க, ட்ரெயின் சீட்டில் தலையை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதர் திடுக்கிட்டு கண் விழித்தான்.

“கொல்லாதடி ராட்சசி.. ஆறு வருஷமா இந்த குரல் மட்டுமே என் காதுல கேட்டு என்ன போட்டு வதைக்குதுடி…” என்று தன் நெஞ்சை நீவி கூறியவன்

ஜன்னலின் வழி வெளியே பார்த்தான். திண்டுக்கல் வந்து சேர சில நிமிடங்களில் இருந்தது. இரவு 10 மணிக்கு ஆரம்பித்த பயணம் காலை 6 மணிக்கு முடிவடைய இருந்தது. பார்த்திருக்க நேரம் ஓடிவிட்டது, அவன் காலமும் தான்.

அன்று வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்றவன் தான். அங்கு தெரிந்த குணா என்ற நண்பனின் மூலம் முதலில் (ஆசியா வீவ் காட்டன்) கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான்.

அதனோடு பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் எம்.பி.எ படித்தான்.

மூன்று வருடங்கள் அவன் படிப்பிற்கும், வேலையில் அனுபவத்திற்கும், புதிய தொழில் தொடங்க பணத்திற்கு என்று செல்ல,

அதற்கு இடையில் காயத்திரிக்காக வீட்டிற்கு பணம் அனுப்பி கொண்டு தான் இருந்தான்.

ஐங்கரனிடம் அவளைப் பற்றி கேட்டுக் கொள்வான். காதில் கேட்கும் வேதனையான அவள் குரலை மறக்க, அவனிடம் காயத்திரிக்கு தெரியாமல் அவளின் புன்னகை பேச்சைக் கேட்கச் செய்யுமாறு கேட்டான்.

எங்கே அவனுடன் அவள் புன்னகையை அபகரித்து வந்து விட்டானே அது முடியாமல் போனது.

அதிலும் ஐங்கரனை பார்த்தாலே ஓடி ஒழிந்தாள் காயத்ரி. அதனால் அவளின் தெளிவான புகைப்படம் கூட ஸ்ரீதருக்கு கிடைக்கவில்லை.

முயன்று அவளுக்கு தெரியாமல் ஐங்கரன் எடுத்த புகைப்படங்களில் தூரத்தில் தெரியும் அவள் வெறுமையான முகம் தெரியாமல் தவித்த நாட்கள் ஏராளம். ஆனாலும் ஊருக்கு சென்று நேரில் அவளை பார்க்க வைராக்கியம் தடுத்தது.

மூன்று வருட தன் சேமிப்போடு, அவன் வேலை செய்த கம்பெனியின் உரிமையாளன் வீரேந்திர ராவ் உதவியோடு புதிதாக டெக்ஸ்டைல் தொழிலில் கார்மெண்ட் பேக்டரி ஆரம்பித்தான்.

முதலில் நூறு ஊழியர்களில் ஆரம்பித்து அது ஐநூறாக வளர்ந்து, இந்தியாவின் பல மாநிலங்களுக்கு பொருட்களை அனுப்ப ஆரம்பித்தான்.

அதன் பின் ஏற்றுமதியை தொடங்கி, பல கார்மெண்ட் யூனிட்ஸ், ஸ்பின்னிங் மில், நிட்டிங் யூனிட், டையிங் யூனிட், கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி என்று அவன் வளர்ச்சி அசுர வேகம் தான்.

எஸ்.கே டெக்ஸ்டைல்ஸ் குரூப்ஸ் என்ற பெயர் எல்லார் மத்தியிலும் பிரபலமாக ஆரம்பித்தது.

இதோ மேலும் மூன்று வருடங்கள் ஓடிவிட, நேற்றைய தினம் சிறந்த இளம் தொழில் அதிபர் விருது ஸ்ரீதருக்கு கிடைத்திருக்க, அதை பெற்றுக் கொண்ட கையோடு தன் சொந்த ஊருக்கு ட்ரெயின் ஏறிவிட்டான்.

காயத்ரியும் இப்போது படிப்பை முடித்து, சென்னை டெலாய்ட் நிறுவனத்தில் ஆடிட் ஆர்ட்டிக்கிள் அசிஸ்டென்டாக பணிபுரிய தயாராக இருக்கின்றாள்.

அவள் தாய், தாய் மாமன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டாள். ஆனால் அவள் அவளாக இப்போது இல்லை. தன்னை தன்னவனின் ஜீவனுடன் கோர்த்து அனுப்பி விட்டு, நடைப்பிணமாக ஒரு வாழ்க்கை வாழ்ந்தாள்.

பத்மினி தான் மகளின் மாற்றத்தில் செத்தே போனார். அவரிடம் பேசுவதே இல்லை. தன்னை அலங்கரித்துக் கொள்வதே இல்லை, புதுத்துணி கூட பத்மினியோ கமலமோ எடுத்துக் கொடுத்தால் தான். இல்லை என்றால் அவள் மாமன் வாங்கிக் கொடுத்த ஆடையை கொண்டு மேனியை மறைத்து கொள்வாள்.

ஆரம்பத்தில் பத்மினி “ஏன்டி பொட்டு கூடவா வச்சுக்க கூடாது…? என்று வேதனையாக கேட்டதற்கு கூட

“இதுதான் இப்போதைய ஃபேஷன்.. இப்ப எந்த பொண்ணுங்க பொட்டு வச்சுக்கிறாங்க…” என்று சொன்னாள்.

ஆனால் போகப் போக அப்பட்டமாக தெரிந்தது ஸ்ரீதரின் பிரிவு அவளை எவ்வளவு பாதித்தது என்று.

அவன் சிங்காரி என்று அழைக்க அருகில் இல்லாமல், அவளுக்கு எதற்கு அலங்காரம். தன் முழு சிந்தனையையும் படிப்பில் திருப்பினாள்.

கல்லூரியில் ஒரு சில ஆண் நண்பர்களும் கிடைத்தனர். அதில் இருவர் காதலைக் கூட கூறினர். ஒரு சிறு புன்னகையுடன் மறுத்துவிட்டாள்.

உண்மையில் மற்றவர்கள் சொல்லுக்காக இல்லை, அவளின் ஒவ்வொரு செல்லிலும் ஸ்ரீதர் தான் நிறைந்து இருக்கின்றான் என்பதை அவள் ஆழமாக உணர்ந்து கொண்டாள் இந்த ஆறு வருடங்களில்.

நேற்றைய தினம் ஸ்ரீதர் விருது வாங்கியதை கூட தொலைக்காட்சியில் அன்னை பாட்டியுடன் பார்த்தாள் தான்.

கமலம் கண்ணீருடன் பூரித்து மகிழ, பத்மினி சந்தோஷப்படவா இல்லை வெட்கி தலைகுனியவா என்று புரியாமல் தவித்து துடிக்க,

கண்களில் கர்வத்துடன் எழுந்து அறைக்கு சென்று விட்டாள். அப்போதும் சிரிக்கவில்லை, ஆனந்தக் கண்ணீர் இல்லை, துள்ளி குதித்து மகிழவில்லை.

எப்படி மகிழ்வாள் தினம் தினம் அவன் தரிசனம் இல்லாமல், அவன் ஸ்பரிசமும் இல்லாமல், தீயில் உருகும் ஊனைப் போல் உயிர் கரைந்தது அவளுக்கு தானே தெரியும்.

*********

திண்டுக்கல் ஸ்டேஷனில் வந்து ட்ரெயின் நிற்க, வாடகைக்கு காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தான் ஐங்கரன்.

தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கிய ஸ்ரீதரை கண்டு கொண்டு, “மச்சான்!…” என ஓடிச் சென்று அணைத்துக் கொண்டான்.

ஸ்ரீதரும் நண்பனை ஆற தழுவிக் கொண்டவன் “போகலாம் டா.. எனக்கு என் காயூ குட்டிய பாக்கணும்…” என்று சொல்ல

“வாடா!…” என்று அழைத்துக் கொண்டு காரில் ஏறியவன், இருபது நிமிடங்களில் ஸ்ரீதரின் வீட்டின் முன்பு காரை நிறுத்தினான்.

கார் தன் கிராமத்தை அடைந்த நொடி முதலே ஸ்ரீதரின் இதயம் குதிக்க ஆரம்பித்துவிட்டது. தன் சிங்காரியுடன் அவன் சுற்றி திரிந்த இடங்களை ஆசையாக பார்த்துக் கொண்டே வந்தான்.

‘முதல்ல காயூ குட்டிய என் சிங்காரியா மாத்தணும்…’ என்று நினைத்துக் கொண்டான்.

ஐங்கரன் தான் அவளின் மாற்றத்தை நேற்று வரை கூறினானே, மனம் வலித்தாலும் வைராக்கியத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை. தான் நேரில் சென்று அவளை சரி செய்து விடலாம் என்ற எண்ணம்.

இதோ அவன் உயிரானவள் உயிர்ப்பை மீட்டுக் கொடுக்க வந்துவிட்டான். கமலம் புன்னகை முகமாக ஆரத்தியுடன் நின்றிருக்க,

அக்கம் பக்கத்தினர், கிராமத்தில் உள்ள சில சொந்தங்கள் என்று ஸ்ரீதரின் வீட்டில் தான் நின்று இருந்தனர்.

பத்மினியும் கதவின் ஓரமாக குற்ற உணர்ச்சியுடன், அதே நேரம் இதோ தன் மகளுக்கான விடிவு காலம் என்ற சந்தோஷத்திலும் நின்றிருந்தார்.

காரில் இருந்து இறங்கியவன் “என்னடா இது.. உன் வேலையா?…” என்று ஐங்கரனை பார்த்து கேட்க

“ம்ம் ஆமா.. நீ ஃபோன் பண்ணுனதுமே அம்மா, அக்கா கிட்ட சொல்லிட்டேன்…” என்று சொல்ல

“அது சரி.. ஆனா இவ்வளவு பேர் எதுக்குடா கூடி நிற்காங்க?…” என்று வீட்டில் இருந்தவர்களை பார்த்து கேட்க

“டேய் இன்னைக்கு சாயந்திரம் உனக்கும் காயத்ரிக்கும் நிச்சயதார்த்தம்…” என்று சொல்ல

“என்னடா எதுக்கு இந்த அவசரம்…?” என்று கேட்க

“அக்கா தான் ஸ்ரீ.. என் தம்பி எதுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு போனானோ அது அவனுக்கு கிடைக்கணும்.. என் தம்பிய நான் மொத்தமா இழந்துட்டேன்.. இனி என் பொண்ணோட புருஷன் என்ற வகையிலயாவது அவன் எனக்கு வேணும்னு சொன்னாங்க.. அதுதான் நீ வந்து இறங்குற நாள உன்னோட கல்யாணத்துக்கான ஆரம்ப நாளா மாத்திட்டாங்க…” என்று ஜங்கரன் சொல்ல

“என்னடா இது.. அக்கா மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. எதுக்கு இவ்வளவு யோசிக்கிறாங்க…” என்று ஸ்ரீதர் கேட்க

“அவங்க ரொம்பவே தவிச்சு போயிட்டாங்க ஸ்ரீ.. நான் தான் சொன்னேனே காயத்ரி கூட அழுத்தமா நீ எங்கன்னு என்கிட்ட கேக்கல.. ஆனா அக்கா நீ போன கொஞ்ச நாளிலேயே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. நீ சொல்ல வேணாம்னு சொன்னதால நானும் சொல்லல…” என்று ஐங்கரன் சொல்ல

அங்கிருந்தவர்களில் ஒரு வயதான பெண்மணி “என்னடா ஐயங்கரா! வந்தவன உள்ள விடாம என்னவோ வாய் அடிச்சிட்டு இருக்க?…” என்று கேட்க

“அது ஒன்னும் இல்ல அப்பத்தா, உன் பேத்திய எனக்கு பொண்ணு கேட்கலாம்னு இருக்கேன், அதச் சொன்னேன்…” என்று சொல்ல

“அடி செருப்பால.. ஸ்கூல் போற புள்ளய உனக்கு ஜோடி சேக்கியோ…” என்று அவர் திட்ட

அங்கு உள்ளவர்கள் கொல் என சிரிக்க, ஸ்ரீதரும் ஜொலிக்கும் புன்னகையுடன் தாயின் முன்பு வந்து நின்றான்.

மகனை ஆறத் தழுவ துடித்த கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு, கண்களில் கண்ணிர் குளம் கட்டி நிற்க, ஆரத்தி சுற்றினார் கமலம்.

வந்ததிலிருந்து தம்பியைத்தான் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார் பத்மினி. மாலை மங்கிய நேரம் அவர்களின் வாழ்வின் நிம்மதி, சந்தோஷம் என்னும் வெளிச்சத்தை எடுத்துக்கொண்டு சென்ற அந்த வீட்டின் சூரியன், இதோ புலர்ந்த காலை பொழுதில் மீண்டும் பிரகாசமாக வந்துவிட்டான்.

ஆர்த்தி சுற்றி முடிய, அருகில் இருந்த பெண்ணிடம் அதை கொடுத்த கமலம் மகனை தாவி அணைத்துக்கொண்டார்.

“அம்மா!…” என்று அவனுமே குரல் தழுதழுக்க அணைத்துக் கொண்டான்.

“இப்பதான் ஸ்ரீ வீட்டுக்கு வெளிச்சமே வந்திருக்கு.. அப்படி என்னடா வீம்பு? ஒரு ஃபோன் பண்ணியாவது நான் நல்லா இருக்கேன்னு சொல்லி இருக்கலாமே.. ஒவ்வொரு நாளும் என் புள்ள எங்க இருக்கானோ? எப்படி இருக்கானோனு எப்படி தவிச்சு போனேன் தெரியுமா?.. நேத்துதான் டிவில உன்ன பாத்தேன்…” என்று தன் மனக்கவலையை, ஆதங்கத்தை தாயாக மகனிடம் கூற

“அம்மா நான் சொல்லிட்டு தானே போனேன்.. மாசா மாசம் காயூக்குட்டிக்கு காசு போட்டேனே, அப்போ எங்கேயோ நல்லபடியா சம்பாதிச்சுட்டு இருக்கேன்னு நினைச்சுட்டு நிம்மதியா இருந்திருக்கலாமே…” என்று கேட்க

“போடா! பெத்த தாயோட மனசு உனக்கு புரியாது…” என்று விம்மிக்கொண்டே கமலம் சொல்ல

அவர் முகம் தாங்கி “அம்மா போதும்…” என்று கட்டை விரலால் அவரின் கண்ணீரை துடைத்து விட

“சரி உள்ள வா!…” என்று ஸ்ரீதரை அழைத்து வர

தவிப்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பத்மினியை “அக்கா!…” என அணைத்துக் கொண்டவன் “நான் எப்பவும் உன் தம்பி தான்க்கா…” என்று சொல்ல வெடித்து அழவே ஆரம்பித்து விட்டார் பத்மினி.

அவரால் நிற்கவே முடியவில்லை. “ஐயோ ஸ்ரீ! நீ என் தம்பி இல்ல டா, என் சாமி! அது புரியாம சுயநலமா என்னென்னமோ பேசி உன்னையும் காயப்படுத்தி, என் பொண்ணையும் கஷ்டப்படுத்திட்டேன்.. என்ன மன்னிச்சுடு டா…” என்று தோய்ந்து கீழே விழ இருந்தவரை

“அக்கா!” என்று தாங்கிப் பிடித்தவன், அழைத்து வந்து ஹாலில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன், “அக்கா நான் தான் அப்பவே சொன்னேனே.. உன்னோட எதிர்பார்ப்பு தப்பு இல்ல க்கா.. நான் மட்டும் காயூக்குட்டிய விரும்பாம இருந்திருந்தா, நீ சொன்ன மாதிரியான மாப்பிள்ளைய தான் அவளுக்கு பாத்திருப்பேன்…” என்று சமாதானம் கூற

பத்மினி ஆறுதல் அடையவில்லை. “இல்ல ஸ்ரீ, ஏதோ புத்தி கெட்டு போச்சு.. பைத்தியக்காரி மாதிரி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி உன்ன சுக்குநூற உடைச்சுட்டேன்.. நீ எப்படி துடிச்சிருப்பல.. நான் பாவி டா.. என் காவல் தெய்வம் உன்னையே உதாசீனப்படுத்திட்டேன்.. நீ இல்லாதப்போ தான் நீ கூட இருந்து என்ன எல்லாம் பண்ணுன என்றதே புரிஞ்சது ஸ்ரீ.. முடிஞ்சா நீ என்ன மன்னிச்சிடுடா…” என்று அழுது கரைய

“அக்கா ப்ளீஸ்! எத்தன வாட்டி சொல்றது.. நீ சட்டனு முடியாதுன்னு சொல்ல கஷ்டமா இருந்துச்சு.. ஆனா உன்னோட மனநிலையும் புரிஞ்சுது.. விடுக்கா.. நீ எனக்கு நல்லது தான் பண்ணியிருக்க.. இப்போ பாரு இங்க விவசாயம் பாத்துட்டு இருந்த நான் இப்போ ஒரு பிசினஸ் மேனா வந்து நிற்க நீ தான் காரணம்…” என்று அவன் போராட்டத்தின் பலனைக் கூட தமக்கைக்கு சமர்ப்பிக்க,

‘இவனை தான் அத்தனை பேசினாய்’ என்று பத்மினியின் மனசாட்சியே அவரை கொன்றது.

அவரது மனசாட்சியும், ஸ்ரீதரின் அன்புமே இனி அவரை வாழ்நாள் முழுக்க குத்தி குத்தி கொல்லத்தான் போகின்றது.

இது எனக்கு தேவைதான், புது வகையான பாச வாளைக் கொண்டு தண்டனை தர போகின்றான் என் தம்பி என சுகமாக வாங்கிக் கொள்ள முடிவெடுத்தவர், தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டார்.

ஸ்ரீதர் என்னதான் தமக்கையை சமாதானம் செய்து கொண்டிருந்தாலும், அவன் கண்கள் வீட்டைச் சுற்றி தன் பிரியமானவளைத் தான் தேடியது. அவன் மலர் கொத்தின் வாசனை கூட அவனை சேரவில்லை.

அவளின் அறையைப் பார்த்தான். கதவு சாற்றி இருந்தது. போக வேண்டாம் என்று சொல்லியும் போனதால் செல்ல கோபத்தில் இருக்கின்றாளா, இல்லை எல்லார் முன்பும் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்த வேண்டாம் என்று உள்ளே இருக்கின்றாளா.

யார் இருந்தால் என்ன, மாமா என்று முதலில் ஓடி வந்திருக்க வேண்டியது அவள் தானே. தன் நெஞ்சில் அவளை தாங்கிக் கொள்ளத்தானே ஓடோடி வந்தேன் என்று ஏக்கமாக பார்க்க

அதை புரிந்து கொண்ட பத்மினி “காயத்ரி அறையிலதான் இருக்கா ஸ்ரீ.. என்கிட்ட சரியா பேசுறது கூட இல்ல.. நீ வாரனு சொன்னேன் எந்த பதிலும் இல்ல…” என்று சொல்ல

“நான் தான் வந்துட்டேனே.. அவ சரியாயிடுவா.. நான் பாத்துட்டு வரேன் க்கா…” என்று எழுந்து சென்றவனுக்கு

ஒவ்வொரு அடி வைக்கும் போதும் இதயம் நின்று நின்று துடித்தது. 18 வயதில் இளம் பாவையாக பார்த்தது, இப்போது 24 வயதில் பருவமங்கையாக பார்க்க போகின்றான். கை கால்கள் மட்டும் இன்றி அவன் ஒவ்வொரு அணுவும் ஆர்ப்பரித்து குறுகுறுத்தது.

கடலோடு கலக்கும் நதியின் வேகத்தை விவரிக்க முடியுமா… முட்டையில் இருந்து வெளியே வரும் பறவையின் முயற்சியை விளக்க முடியுமா… அதேபோல் ஸ்ரீதரின் உணர்வுகளை விளக்கி விவரிக்க முடியவில்லை.

அவன் மூச்சில் கலந்து…

அவன் உயிரில் இணைந்து… அவன் ஆழ்மனதில் நிலைத்தவளை அள்ளி அணைப்பானோ…

இல்லை கொஞ்சி தீர்ப்பானோ… இல்லை அவளிடம் கரைந்து உருகுவானோ… அவன் உணர்வுகளுக்கே வெளிச்சம்.

நிச்சயம் தன் மார்பில் விழுந்து கண்ணீர் வடிப்பாள். அது ஆனந்த கண்ணீராக இருந்தாலும் தாங்கிக் கொள்ள முடியாது அவனால். தன் இடது நெஞ்சை வலது கையால் நீவிக் கொண்டான். இப்பவே அவன் கண்கள் கலங்கும் போல் இருந்தது.

இத்தனை நாட்கள் அவளை காணாமல் அவையும் தானே உணர்வற்று போனது.

சாதாரண மரக்கதவு தான் அது. ஆனால் மலையை புரட்டுவதைப் போல் கடினப்பட்டு திறந்தான்.

கால்கள் மெதுவாக உள்ளே செல்ல, அவன் காதல் மனதும் கண்களும் ஒளி வேகத்தில் உள்ளே சென்று,

அவன் உயிரானவளை…

அவன் பிரியமானவளை…

அவன் சொந்தமானவளை… தேடியது.

படுக்கையில் அவன் பைங்கிளி இல்லை. பரபரத்த அவன் ஐம்புலங்களும் எங்கே என்னவள்? கதவின் பின் ஒழிந்து நிற்கின்றாளா என்று எட்டிப் பார்க்க, இல்லை.

குளியல் அறையில் சென்று பார்க்க அங்கும் இல்லை. நெற்றி சுருங்க அறையை நன்கு துலாவியவன், அன்பினால் அடைத்து நின்ற தொண்டையை செருமி “காயூ குட்டி!.. காயூ மாமா வந்துட்டேன்..

ஓய் சிங்காரி! உன் மாமன் வந்துட்டேன்டி.. இனி சாவுலயும் உன்ன பிரிய மாட்டேன்.. எங்கடி இருக்க?

விளையாடாத.. மாமா முன்னாடி வாடி.. தவிக்க விடாதடி சின்ன குட்டி.. உன் கோபம் புரியுது, என் மேல விழுந்து என்ன தண்டனை வேணும்னாலும் கொடுடி.. மாமா கிட்ட வாடி குட்டி!…” என்று கையை விரித்து தாய்ப்பறவை போன்று சிறகு விரித்து அவன் தவித்து நிற்க, அவன் சிறகுக்குள் அவன் பாசப்பறவை வந்து சேரவில்லை.

துணுகுற்றவனாக வெளியே வந்து “அக்கா காயூ குட்டிய உள்ள காணோம்…” என்று சொல்ல

“காலையில நேரமே உள்ளதான் இருந்தா…” என்ற பத்மினியும் காயத்ரியின் அறைக்குள் சென்று பார்க்க

தன் அறையில் இருப்பாளா, காதல் கொண்ட பெண்களைப் போல் என் வாசம் வேண்டும் என்று, என் ஆடையை அணிந்து கொண்டு, என் கட்டில் படுத்திருப்பாளா என்று ஆவலாக படி ஏறிச் சென்று அவனின் அறையில் ஸ்ரீதர் பார்க்க அங்கும் அவள் இல்லை.

இதயம் தாளம் தப்பி துடித்தது. ஏதோ சரியில்லை என நெஞ்சம் அடித்து கொண்டது.

அதற்கு ஏற்றது போல் பத்மினியும் கமலமும் வீடு முழுவதும் சல்லடை போட்டு காயத்ரியை தேடி விட்டு

“ஐயோ ஸ்ரீ! காயத்ரிய காணோம்.. வீடு முழுக்க தேடியாச்சு.. எங்க போன தெரியலையே…” என்று பத்மினி சொல்ல

“ஒரு வேள அவ பேச்சக் கேட்காம நீ போனதால கோபத்துல உன்ன பாக்க கூடாதுன்னு எங்கயாச்சும் போயிட்டாளா?.. ஐயோ எல்லாம் சரியாயிடுச்சுன்னு இப்பதானே சந்தோஷமா இருந்தேன்.. காயத்ரி எங்கடி போன?…” என்று கமலம் அழுக

ஸ்ரீதரின் ஆவி ஒரு நொடி உறைந்து மீண்டும் இயங்கியது. என்னவள் என்னை விட்டு செல்வாளா, அதற்கு வாய்ப்பே இல்லை என நினைத்தவன்

வேகமாக ஹாலுக்கு வந்து “காயூ!..காயூ குட்டி எங்கடி இருக்க?.. மாமா வந்துட்டேன் வாடி…” என்று வீடு அதிரும்படி கத்த,

எந்த திசையிலுமே அவன் சுவாசக் காற்றின் வாசம் வரவில்லை.

“அக்கா நான் கூப்பிட்டா என்ன நிலைமையில இருந்தாலும் மாமானு என் முன்னாடி வந்து நிற்பாளே.. இப்ப ஏன் வரல?.. அவ என்ன விட்டு எங்கேயுமே போயிருக்க மாட்டா..ஆனா ஏன் வரல?…” என்று பத்மினியை போட்டு உலுக்கியவனுக்கு உண்மையாகவே மூளை செயலிழந்த நிலைதான்.

என் குரல் கேட்டிருந்தால் வந்திருப்பேளே, என் குரல் கேட்காத தூரத்திற்கு சென்று விட்டாளோ…

ஆவி துடித்தது…

ஜீவன் கருகியது…

உயிர் மருகியது… பொருள் ஒன்றுதான், ஆனால் அவன் கண்ட வலி பலவிதமாக இருந்தது.

error: Alert: Content selection is disabled!!