அத்தியாயம் 15
அதன்பிறகு வந்த நாள்களில் அவளுக்கு அவன் அழைக்கவே இல்லை. புவனாம்பிகையும் சிந்துஜாவும் அவ்வப்போது அழைத்து அவள் நலத்தைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் கேட்டுக்கொண்டார்கள். வீட்டுக்கு வருகிறாயா என்றும் கேட்பார்கள்தான். அவளுக்குத்தான் போகும் எண்ணமே விடுபட்டுப் போயிற்று.
‘காசுக்குப் புருசனா வாழுறதுக்கு வேற எவனையாவது பாக்கச் சொல்லு’ என்று அவன் சொன்னதைக் கடந்துவர மிகவும் சிரமப்பட்டாள்.
நீயும் வேண்டாம் உன் சீதனமும் வேண்டாம் என்று சொல்ல எவ்வளவு நேரமாகும் என்று அனாயாசமாகக் கேட்டு, இத்தனை நாள்களும் உயிரும் உணர்வுமாக வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லை என்று அவன் சொல்லிவிட்ட பிறகு, போக எப்படி மனம் வரும்?
அந்தப் பிடிவாதம் கூட அடுத்த பத்து நாள்களுக்கே இருந்தது. மீண்டும் அவள் உள்ளம் அலைபாய ஆரம்பித்தது. சூழ்நிலைகள் மாறுகையில் மனநிலையும் மாறுமாம். அவனில்லாத நாள்கள் மீண்டும் அவனையே தேட வைத்தன. காயப்படுத்தியவனிடமே மருந்தைத் தரமாட்டாயா என்று ஏங்கினாள்.
அவனுக்கு இப்படியான தவிப்புகள் ஏதும் இல்லையோ? மண்ணுக்குள் அகழ்ந்து நுழைந்துவிடும் உயிரினம்போல அவளுக்குள் அவன் நுழைந்திருந்தான். அந்தளவு ஆழமாய் அவனுக்குள் அவள் நுழையவில்லை போலும். இல்லாமல் அவன் குழந்தையைச் சுமக்கிறவளை திரும்பியே பாராமல் இருப்பானா?
இதையெல்லாம் வீட்டினரிடம் சொல்லி, அவர்களையும் வருத்த விரும்பாமல் தனக்குள்ளேயே வைத்து மறுகிக் கரைந்தாள்.
அவளே எதிர்பாராத அளவில் அவனைத் தேடுவதற்கு வயிற்றில் இருக்கும் குழந்தை காரணமா, இல்லை, இயல்பாகவே பற்றிக்கொண்ட அவன் மீதான நேசம் காரணமா என்று தெரியவில்லை. சோர்வும் இயலாமையும் வாட்டுகிற பொழுதுகளில் எல்லாம் சுருண்டு படுக்கிறவளின் உள்ளமும் உடலும் கணவனின் கையணைப்புக்காக ஏங்கின.
வீட்டினரின் முன்னே விறைப்பாகக் காட்டிக் கொண்டாலும் அவளோடான தனிமையில் கொஞ்சுவதும் குலாவுவதும் குழைவதும் என்று அந்தச் செந்தாளன் அவள் மட்டுமே அறிந்த ஒருவனாயிற்றே! அவன் வீட்டில் இருக்கையில் அவள் அவனைச் சுற்றி வர வேண்டும். அவனைக் கவனிக்க வேண்டும். இல்லையானால் கோபம் வந்துவிடும். கைப்பேசியைத் தூக்கினாலே முறைப்பான். அந்த அவன் அவள் இல்லாமல் இருக்க மாட்டான் என்று நினைத்தாளே! என்ன கோபம் இருந்தாலும் என்னைத் தேடி வருவான் என்று நம்பினாளே! குறைந்த பட்சமாக ‘மரியாதையாகப் புறப்பட்டு வா’ என்றாவது உத்தரவிடுவான் என்று எதிர்பார்த்தாள்.
அவளின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் அசையாமல் இருந்து பொசுக்கினான் அவன்.
பொன் பொருள், நகை நட்டு, இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் வேண்டுமானால் அந்த நொடி நேரம் மகிழ்வைத் தரலாம். அவன் மனத்தில் நான் இருக்கிறேன் என்பதும், நான் இல்லாமல் அவனுக்குச் சிரமம் என்பதும், எல்லாவற்றுக்கும் என்னைத் தேடுவான் என்பதும் தானே அவன் உலகத்தில் அவள் இருத்தலின் அர்த்தம்.
அந்தளவில் அவன் வாழ்வில் அவள் முக்கியமான அங்கம் இல்லையோ? அவளின் இருப்பு, இல்லாமை இரண்டுமே தனக்கு ஒன்றுதான் என்கிறானா அவளின் கணவன்? அவள் மனது ஒடிந்து போனது.
அது சரி, அப்படி என்னத்தை வாழ்ந்து கிழித்தாய் என்று கேட்டவனாயிற்றே! அவனிடம் போய் இதையெல்லாம் எதிர்பார்க்கும் அவள்தான் முட்டாள். இல்லாமல், அம்மாவே அவ்வளவு உழைக்க நீ நோகாமல் இருந்து வாழ்வாயா என்று கேட்பானா?
இதையெல்லாம் யோசிக்கக் கூடாது என்று நினைத்தாலும் முடியாமல், ஏன் அவன் பணத்தைத் தொட்டோம் என்று சதா எண்ணியெண்ணி மறுகினாள். அதைத் தொட்டுத்தானே இத்தனையும்.
இன்னும் கொஞ்சம் கவனமாகப் படித்திருக்கலாமோ, ஒரு வேலைக்குப் போயிருக்கலாமோ? குறைந்த பட்சமாக ஒரு வேலைக்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்கிற தகுதியையாவது வளர்த்துக் கொண்டிருக்கலாம்.
வாழ்க்கை, எந்த நொடியிலும் எப்படியும் தலைகீழாக மாறலாம். அதையெல்லாம் சமாளிக்கக் கையில் ஒரு தொழில் வேண்டும். குறைந்த பட்சமாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ளும் அளவுக்கான தகுதியாவது வேண்டும் என்று இப்போதுதானே விளங்குகிறது.
இனியும் அவள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் அவளுக்கென்று ஒரு வருமானம் வேண்டும். அதை ஈட்டுவதற்கு ஒரு வழி வேண்டும். அப்படி அவளுக்கு என்ன தெரியும்?
யோசித்துப் பார்த்தால் மேக்கப்பை தவிர்த்து எதுவும் தெரியாது. எவ்வளவு கேவலம்? அவளே அவளை எண்ணி வெட்கினாள். இந்த இருபத்தியேழு வருடங்களும் இப்படிப் பிரயோசனமற்றுக் கழித்திருக்கிறோமே என்றெண்ணி அதற்கும் கண்ணீர் உகுத்தாள்.
அவளுக்குப் பிடித்த மேக்கப்பில் கூட அவள் ஒன்றும் பிரத்தியேகமானவள் இல்லையே!
இன்றைய நாளில் அத்தனை தொழில்களுக்கும் ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள். அது கதை எழுதுவதாக இருந்தாலும் சரி, கத்தரிக்காயைப் பயிரிடுவதாக இருந்தாலும் சரி. அதில் பத்தோடு பதினொன்றாக இருந்தால் பிழைக்க முடியாது; தனியாகத் தெரிகிற அளவில் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் திறமையானவராக இருக்க வேண்டும் என்கையில் பிரத்தியேகப் பயிற்சிகள் எதுவுமற்ற மேக்கப்பை வைத்தும் என்ன செய்ய?
அவளுக்குள் மெல்ல மெல்லத் தன்னுணர்வுப் புரிதல் நடக்க ஆரம்பித்திருந்தது.
இவ்வளவு காலமும் அப்பா அம்மா தந்த சுகமான வாழ்க்கை, சீதனமாக வரப்போகிற போதுமான அளவு சொத்துப்பத்து, நகை நட்டுகள், அவளிடம் கொட்டிக்கிடக்கும் அழகு என்று இத்தனையையும் தன் தகுதிகளாக எண்ணியிருந்தாள். வருகிறவன் தன்னைக் கொண்டாடித் தீர்ப்பான் என்று நம்பியிருந்தாள். அது எத்தனை சின்னத்தனமான சிந்தனை என்று விளங்கிற்று.
நாளாக நாளாகத் தூசு படிந்த ஓவியம் போலானாள் கானவி. தூசு என்பது நிசப்தத்தின் வடிவம், அது புறக்கணிப்பினை உணர்த்துவது, தீண்டப்படாமல் கிடக்கும் பொருட்களின் மீது படிவது. அப்படித்தான் அவள் நிலையும்! கவனிக்க வேண்டியவன் இல்லாமல் உருக்குலைந்து நின்றாள். கணவனைக் காணாமல், அவன் அருகண்மையை அனுபவிக்காமல், அவன் கவனிப்பில் சுகம் காணாமல் தாய்மை கூட இனிக்க மாட்டேன் என்றது.
கடம்பனுக்குத் தமக்கையை அப்படிப் பார்க்க முடியவில்லை. கூடவே, அத்தானின் வார்த்தைகள் அவனையும் கோபம் கொள்ள வைத்திருந்தன. ஆனால், நிதானமாக யோசித்தான். அவளுக்குப் படிப்பில் என்றுமே ஆர்வம் இருந்ததில்லை என்று தெரியும். அழகு படுத்துவதில் அதற்கும் சேர்த்து ஈடுபாடு காட்டுவாள். ஆண்பிள்ளை அவனே வியக்குமளவில் இருக்கும் அவளின் கைவண்ணம்.
அதனால் இணையத்தில் தேடி, வெளிநாடுகளிலிருந்து வழங்கும் இணைய வகுப்புகள், இந்தியாவிலிருந்து இணையவழி கற்பிப்பவர்கள் என்று பார்த்து, காலையும் மாலையும் பங்குபற்றுவது போன்று இரண்டு வகுப்புகளில் சேர்த்துவிட்டான்.
கானவிக்குமே ஏதாவது செய்து மனத்தைத் திசை மாற்ற வேண்டும் என்று இருந்ததில் பெரிதாக மறுக்கவில்லை. விசாலாட்சிதான் சும்மாவே தலையை நிமிர்த்தி அமர்கிறாள் இல்லை, எதற்கு இப்போது என்று கேட்டதற்கு, “இது படுத்திருந்து கூட வகுப்பைக் கவனிக்கலாம் அம்மா. அக்கா பழகட்டும்.” என்றான் கடம்பன்.
“சரியப்பு. அதுக்கு இப்ப ஏன்? பிள்ளை பிறக்கட்டுமே. ஏலாம இருக்கிறா எல்லோ?”
“அதுக்கு அக்கா என்ன மூட்ட தூக்கவா போகப்போறாள்? வீட்டில இருந்துதானே. வசதி இருக்கு எண்டுறதுக்காகச் சோம்பி இருந்ததெல்லாம் காணும் அம்மா. விடுங்க!” என்றுவிட்டான் பிடிவாதமாக.
*****
அடுத்த நான்கு மாதங்கள் எப்படி என்றில்லாமல் கழிந்திருந்தன. முதல் இரண்டு மாதங்கள் பலகீனமாக இருக்கிறாள் என்று வைத்தியர் சொல்லிவிட்டதால் புவனாம்பிகையும் வீட்டுக்கு வரச்சொல்லிக் கூப்பிடவில்லை. அவர் சென்று பார்த்தபோதெல்லாம் சோர்ந்து, மெலிந்து, தலை சுற்றலால் தலையை நிமிர்த்தக்கூட முடியாமல் கிடந்தவளை அழைத்து வர அவருமே விரும்பவில்லை. அவள் வீட்டினரும் அனுப்பப் பிரியப்படவில்லை. ஐந்தாம் மாதம் நடக்க ஆரம்பித்ததில் இருந்தே அவளைத் தம்முடன் கூப்பிட்டுக்கொள்ளப் பிரியப்பட்டார்.
அருந்தவராஜா விசாலாட்சிக்கும் அதுவே விருப்பமாய் இருந்தது. இந்த நான்கு மாத இடைவெளி மருமகன் மீதான அவர்களின் மனக்குறைகளை எல்லாம் மக்கிப்போக வைத்து, ‘என்ன செய்வது, குடும்பம் என்றால் இப்படித்தான் சிலபல பிரச்சனைகள் வந்து போகும், சமாளித்துத்தான் போக வேண்டும்’ என்கிற மனநிலைக்கு வந்திருந்தனர். கூடவே, மகள் அவர்களோடே இருப்பதில் அவள் எதிர்காலம் குறித்து மெல்லிய பயமும் வந்திருந்தது. மெதுவாக அங்கே போவதுதான் நல்லது என்பதுபோல் அவளிடம் சொல்லினர்.
இப்படி இருவீட்டுப் பெரியவர்கள் மட்டும் விருப்பப்பட்டு என்ன பிரயோசனம்? சம்மந்தப்பட்ட இருவரில் யாராவது ஒருவர் இறங்கி வர வேண்டாமா? அவளும் தானாக வருவதாக இல்லை. அவனும் அழைப்பதாக இல்லை.
செந்தாளனிடம் அதைப் பற்றிக் கதைத்தபோது, “நானாப் போகச் சொல்லேல்ல அம்மா. அவளாத்தான் போனவள். அவளாத்தான் வரவும் வேணும்.” என்றுவிட்டான் அவன்.
ஒருமுறை சென்று அவளைப் பார்த்துக்கொண்டாவது வா என்றதற்கும் அசையவில்லை. உண்மையில் அவன் பிடிவாதத்தில் அவரே சற்றுப் பயந்துகொண்டுதான் இருந்தார்.
கானவி ஆறாம் மாதத்தையும் தொட்டிருந்தாள். இப்போது கணேசன் கோபம் கொண்டிருந்தார். செய்வதையும் செய்துவிட்டு மனைவி குழந்தையைச் சுமக்கும் இந்த நேரத்தில் திரும்பியும் பாராமல் இருப்பானா? அவளை அங்கே அனுப்ப வேண்டாம் என்று நின்றார் அவர்.

