அவரின் உதவியில் வாழும் அருந்தவராஜா விசாலாட்சிக்குச் செய்வதறியா நிலை. தாமே சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க முடியாமல் பலமிழந்த பெற்றோராய் நின்றனர். கானவி பிரியப்பட்டிருந்தால் கூட அவள் கேட்டாள், கொண்டுபோய் விட்டுவிட்டோம் என்றாவது சொல்லியிருப்பார்கள்.
இப்படி நகர்ந்துகொண்டிருந்த நாள்களில் எப்படி அவளை வரவழைப்பது என்று புவனாம்பிகை யோசித்துக்கொண்டு இருக்கையில்தான் நந்தினி வீட்டினர் சிவரூபன் நந்தினி திருமணத்தை எப்போது வைக்கலாம் என்று கேட்டிருந்தனர்.
தற்போது சிவரூபனும் சேர்ந்து நடத்தும் சுப்பர் மார்க்கெட் ஒரு காலத்தில் அவன் நண்பனின் தமையனுக்குச் சொந்தமானது. சிவரூபன் கொலிஜில் படிக்கையில் மாலை நேரங்களில் செய்வது போன்று வேலைக்குச் சேர்ந்திருந்தான்.
இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் அவன் நண்பனின் வெளிநாட்டுப் பயணத்துக்குப் பணம் தேவைப்பட்டபோது, தமையன் தகப்பனிடமிருந்து வாங்கியது, தன் சேமிப்பு என்று எல்லாவற்றையும் கொடுத்திருந்தான். அதற்குப் பதிலாக அவ்வளவு காலமும் அங்கே ஒரு வேலையாளாக இருந்தவன் பங்காளனாக மாறிப்போனான்.
சுப்பர் மார்க்கெட், அதை நடத்தும் பாங்கு, அதிலிருந்து கிடைக்கும் இலாபம் அத்தனையிலும் ருசி கண்டவன் கொலிஜ் முடிந்த பிறகும் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்குப் போகப் பிரியப்படவில்லை. எப்போதும் அடுத்து அடுத்து என்று தன் நிலையை உயர்த்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறவன், அடுத்த கட்டமாக அவனுக்கான சுப்பர் மார்க்கெட் அமைக்கும் வேலையில் இறங்கி இருந்தான்.
தற்போதைய சுப்பர் மார்க்கெட் அருகில்தான் நந்தினி வீடு. அடிக்கடி அங்கு வந்து போனதில் நந்தினிக்கும் அவனுக்கும் பழக்கம் உண்டாகி அது காதலாக மலர்ந்திருந்தது.
அவள் படிப்பை முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்ததுமே அவள் வீட்டினர் திருமணத்துக்குக் கேட்டிருந்தனர். முதலில் தமையனின் திருமணம் முடிய வேண்டும் என்கிற அவன் விருப்பமும், கொஞ்ச நாள்களுக்கு வேலைக்குப் போகப் பிரியப்படுகிறேன் என்ற அவள் விருப்பமும் நியாயமாக இருந்ததில் அவள் வீட்டினரும் பொறுத்துக் கொண்டனர்.
இப்போது செந்தாளனின் திருமணம் முடிந்துவிட்டதால் தம் மகளின் திருமணத்தையும் முடித்துவிட விரும்பினர் நந்தினி வீட்டினர்.
நிச்சயத்தை இப்போது வைத்துவிட்டு, கானவிக்குக் குழந்தை பிறந்த பின்னர் திருமணத்தை வைக்கலாம் என்று இரு தரப்பினாலும் முடிவு செய்யப்பட்டது. எங்கே எங்கே என்று காத்திருந்த புவனாம்பிகை இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
அருந்தவராஜாவுக்கு அழைத்து, “அண்ணா, நடந்த விசயம் எல்லாருக்கும் வருத்தம் தந்த ஒண்டுதான். இல்லை எண்டு சொல்லேல்ல. ஆனா, அது முடிஞ்சே மாசக் கணக்காப் போச்சுது. இனியும் இப்பிடியே இருக்கிறது ரெண்டு தரப்புக்கும் நல்லமில்ல. பிள்ளைப் பெத்துக்கு அவா எப்பிடியும் அங்கதான் வரோணும். அதுக்கு முதல் கொஞ்சக் காலமாவது இங்க இருக்கட்டும். எங்கட சின்ன மகனுக்குச் சம்பந்தக் கலப்புச் செய்யப் போறம். அதச் சாட்டா வச்சு மகளைக் கொண்டுவந்து விடுங்கோ. இவ்வளவுதான் அண்ணா என்னால சொல்லேலும். இனி நீங்கதான் முடிவெடுக்கோணும்.” என்று நேராகவே சொல்லியிருந்தார்.
மகளும் அசைகிறாள் இல்லை, மருமகனும் திரும்பியும் பார்க்கவில்லையே என்று உள்ளுக்குள் வருந்திக்கொண்டிருந்த அவள் பெற்றோருக்கு இது மிகப்பெரும் ஆறுதலைத் தந்தது. மகளிடம் பகிர்ந்தனர்.
இத்தனை நாள்கள் வராத கணவன் இனியும் தன்னைப் பார்க்கவோ, அழைத்துச் செல்லவோ வருவான் என்கிற நம்பிக்கையை அவளும் முற்றிலுமாக இழந்திருந்தாள். நான் இல்லாமல் அவன் இருக்கமாட்டான் என்கிற அவளின் நம்பிக்கையை அடித்து நொறுக்கியிருந்தான்.
ஆயினும் கூட இப்போது அவனுக்குச் சமனாக வீம்பு பிடிக்கப் பயந்தாள். நிரந்தரமாக அங்கேயே இருந்துவிடு என்று சொல்லிவிடுவானோ என்கிற அச்சம் பிறந்திருந்தது. ‘நீயும் வேண்டாம் உன்ர சீதனமும் வேண்டாம் எண்டு சொல்ல எவ்வளவு நேரமாகும்’ என்று கேட்டவனாயிற்றே!
அப்படிச் சொல்லிவிட்டான் என்றால் அவள் நிலை என்ன? குழந்தையின் நிலை என்ன? குடும்ப மானம் என்னாகும் என்று நினைக்கவே நெஞ்சு உலர்ந்து போயிற்று.
நாளைக்கு அவள் வாழும் சமூகம் அவளை அவதூறாகப் பேசிவிடாதா? ஆடம்பரமாக வாழ்ந்தாள், ஹெலியில் போய்த் திருமணத்திற்கு இறங்கினாள், இன்று அழுதுகொண்டு இருக்கிறாள் என்று சொல்லிச் சிரிக்காதா?
படித்து, அறிவு பெற்று, சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்திருந்தாலும் கற்ற அறிவும் அது தந்த தெளிவும் இதையெல்லாம் தாண்டி வரும் தைரியத்தை எத்தனை பெண்களுக்கு வழங்கியிருக்கிறது?
அப்படியிருக்கையில் அவள் நிலை?
இந்த அறிவியல் நிறைந்த உலகில் கூட இந்த மனத் தளைகளுக்கு உட்பட்டு நசுங்கித்தானே போகிறாள் பெண்! இது பிழை என்று தெரிகிறது. கடக்க வேண்டும் என்று புரிகிறது. இந்தக் கட்டுக்களை உடைக்க வேண்டும் என்கிற ஆவேசமும் இருக்கிறது. ஆனாலும், தனக்கு தனக்கு என்று வருகிறபோது சத்தமே இல்லாமல் அடங்கித்தானே போகிறார்கள், அவளைப் போல!
அதற்குக் குழந்தையின் எதிர்காலம், மானம் மரியாதை, சமுதாயத்தின் மீதான பயம், பெற்றவர்களுக்கான நிம்மதி என்று ஆயிரம் காரணங்கள்.
சில நேரங்களில் தேவையில்லாமல் அளவுக்கதிகமாக யோசிக்கிறோம் என்று அவளே அவளைத் தட்டி அடக்கினாலும் சும்மா இருக்கும் மனம் பிசாசின் இருப்பிடம் என்று சொல்வதை மெய்ப்பிப்பது போன்று அவளையும் மீறி அவளுக்குள் இப்படியெல்லாம் ஓடிற்று.
பெற்றோர் முகத்தில் தெரியும் கவலைக் கோடுகளும், இப்படி இருப்பது நிரந்தரமில்லை என்கிற நிதர்சனமும் விளங்கியதால் அவளும் புறப்பட்டுவிட்டாள்.
இன்னுமே அவன் பணத்தில் உண்டு வாழ்ந்து, அவளை அவளே இழிவுபடுத்திக்கொள்ள அவள் தயாராய் இல்லை. ஆனால், ரோசம் பிறக்கிற நொடியிலேயே தீர்வுகளும் கிடைத்து விடுவதில்லையே!
நிச்சயமாக அவளும் உழைப்பாள்! அந்த நாள்களில் இதற்கெல்லாம் சேர்த்துச் செய்வாள்! அதுவரை அவன் பணத்தில் உண்ணத்தான் வேண்டும். வேறு வழியில்லை. இறந்தகாலத்தில் மெத்தனமாக வாழ்ந்ததற்குத் தண்டனையாக இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அனைத்துக்கும் தன்னைத் தயார் செய்துகொண்டு வெளிக்கிட்டாள்.
கணவனின் வீட்டு வாசலில் வந்து இறங்கியபோது உணர்வுகளின் தளம்பலில் அவள் தேகம் நடுங்கிற்று. முதல் முதலில் ஆர்வமும் மெல்லிய படபடப்புமாகக் கடம்பனோடு வந்தவள், இரண்டாவது தடவை அவன் மனைவியாகப் பூரிப்புடன் வந்தவள், இந்த முறை கணவனின் புறக்கணிப்பைத் தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டு வயிற்றிலும் நெஞ்சிலும் சுமையோடு வந்து நிற்கிறாள்.
நடந்த சண்டை, அவன் விட்ட வார்த்தைகள், அதன் பிறகானவை என்று அனைத்தும் பாறையை மோதும் அலையாக அவள் நெஞ்சில் வந்து மோதின.
அவள் சென்ற நேரம் சிவரூபனையும் அவள் கணவனையும் தவிர்த்து மிகுதி நால்வரும் நின்றிருந்தனர். வாசலுக்கே வந்து வரவேற்றனர்.
நெகிழ்ச்சியான தருணம் ஒன்று மிக மெதுவாகக் கடந்து போயிற்று. சங்கடம் தரக்கூடிய எதையும் பேசாமல் மிக இலாவகமாக இரு தரப்புமே பேச்சை நகர்த்தினர்.
சற்று நேரத்தில் சிவரூபன் வந்தான். எதையும் காட்டிக்கொள்ளாது நலன் விசாரித்தான். மெலிதாக மேடிட்டிருந்த அவள் வயிறு அவனுக்குள்ளும் மெல்லிய குறுகுறுப்பூட்டிற்று. சித்தப்பாவாகப் போகிறானே! இன்றைய நிலையில் கானவிக்கும் அவன் மீது எந்தக் கோபங்களும் குறைகளும் இல்லை. முகம் பார்த்தே பதில் சொன்னாள். அதில் அவனும் இலகுவானான்.
அவள் கணவனை மட்டும் காணவே இல்லை. திரும்ப திரும்ப என்ன சொல்ல வருகிறான்? நீ எனக்குப் பொருட்டே இல்லை என்றா? சுருக்கென்று ஒரு வலி நெஞ்சைத் தைத்தாலும் காட்டிக்கொள்ளாமல் பெற்றவர்களைப் புறப்படச் சொன்னாள்.
அவர்களுக்கு அப்படி மருமகனைக் காணாமல் போக மனமில்லை.
அவனைப் பார்த்து, அவனோடு சுமூகமாக இரண்டு வார்த்தைகள் பேசி, அவன் மனத்தில் அவர்கள் மேலிருக்கும் கோபத்தை அகற்றிவிட்டு, மகளை அவன் கையில் ஒப்படைத்துவிட்டுப் போகவே பிரியப்பட்டனர்.
அதற்கு அவன் வரவேண்டுமே! தவிப்புடன் புவனாம்பிகையின் முகம் பார்த்தனர். உண்மையில் மகன் மீது மிகுந்த கோபம் வந்தது அவருக்கு. அவ்வளவு சொல்லி அனுப்பியும் வரவில்லையே அவன். பெண்ணைப் பெற்றவர்கள் மனம் என்ன பாடுபடும்?
“தம்பி இப்ப வாற நேரம்தான். எக்ஸாம்ஸ் வரப்போறதால அடுத்தடுத்து வகுப்பாம் எண்டு சொன்னவர்.” என்று சமாளித்தார்.
அதை நம்பக் கானவி தயாராய் இல்லை. அவன் எப்படித் தன் நிலையில் நிலைத்து நிற்பவன் என்று அனுபவத்தில் அறிந்தவளாயிற்றே! அதில், “நீங்க வெளிக்கிடுங்கோ அப்பா. இருட்டுது.” என்றாள்.
“வந்ததுதான் வந்தம் தம்பியையும் பாத்துக்கொண்டே போறமே பிள்ளை.” மகளுக்குப் பணிந்து பதில் சொன்னார் அருந்தவராஜா.
“அங்க மாடுகளை இன்னும் கட்டேல்ல நீங்க. வாசல்ல வந்து நிக்கப் போகுதுகள். ஆட்டுக்கும் இலை குலை அறுக்கேல்ல. கடம்பன், அம்மா அப்பாவைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிடு!” என்றாள் விடாமல்.
என்றும் மகள் பேச்சை மீறிப் பழகியிராதவர்கள் மனத்தில் பாரத்துடனேயே புறப்பட்டனர். பார்த்தவளுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை.
அவளை உணர்ந்தவளாய் அவளோடு கொஞ்ச நேரத்துக்குப் பேசிக்கொண்டிருந்தாள் சிந்துஜா. அவளின் மேடிட்ட வயிற்றைப் பார்க்க பார்க்க தன் இழப்பு அதிகமாய்த் தாக்கிற்று. ஆனாலும் தன்னை அடக்கி, கானவியோடு நல்ல மாதிரிக் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு வீட்டுக்கு நடையைக் கட்டினாள்.

