அத்தியாயம் – 13
அபார்ட்மெண்ட் லிஃப்ட்டில் தனது தளத்திற்கு வந்த அன்பு அதன் கதவு திறந்ததும் வெளியேற முயல, “ஹேய் அன்பு! வாட் அ சர்ப்ரைஸ்! நீங்க இங்கேயா இருக்கீங்க?!” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தான்.
தனது அலுவலகத்தில் உடன் பணிபுரிபவளை திடீரென இங்கே கண்டதில், “ஹாய் சரண்யா! ஆமா, அதோ அந்த ஃப்ளாட் தான். சரி, நீங்க என்ன இங்கே?” தனது வீட்டைச் சுட்டிக்காட்டியவன் வரவழைத்த லேசான புன்னகையுடன் கேட்க,
“அக்கா பையனோட ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டி. இந்த ஃப்ளோர்ல தான், அதோ அந்த வீடு. அவனை ட்ராப் பண்ணிட்டு கிளம்பலாம்னு வந்தேன், திடீர்னு பார்த்தா எதிர்பாராத விதமா லிஃப்ட்ல இருந்து நீங்க வர்றீங்க.” விரிந்த புன்னகையுடன் வியந்தாள்.
“ஓ! அப்படியா!? ஓகே! யூ கேரி ஆன்.” என்று அவளைத் தவிர்த்து தாண்டிச் செல்ல அவன் விழைய, “என்ன ஸார் உங்க வீட்டு வாசல் வரைக்கும் வந்துட்டேன், வீட்டுக்கு இன்வைட் எல்லாம் பண்ண மாட்டீங்களா?!” அவனை ஆர்வமாகப் பார்த்தபடி கேட்டாள் அந்த சரண்யா.
அன்புவிற்கு இதற்கு முந்தைய ஒரு ப்ராஜெக்ட்டிற்கு அவள்தான் டீம் ஹெட் ஆக இருந்தாள். அப்போது அடிக்கடி அவனை ஆர்வமாகப் பார்க்கும் அவளது பார்வையை உணர்ந்து சற்று விலகியே இருந்தான்.
எப்போதடா அந்த ப்ராஜெக்ட் முடியுமென அவன் காத்திருக்க, அதற்குள் வேறொரு ப்ராஜெக்ட் முடிக்க வேண்டிய அவசரம் வரவும் கம்பெனியின் தலைமை அன்புவை அந்த டீமிற்கு மாற்றி விட்டதால், நிம்மதி அடைந்தான்.
பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் அவனாக பேசவில்லை என்றாலும் அவனது வசீகரத்தில் மயங்கி அவனிடம் நெருங்கிப் பழக முயலும் சில பெண்கள் அவனது ஓசிடிக்கு பயந்து, அவனது வித்தியாசமான செய்கையில் பதறி அவனை ஏதோ வேற்றுகிரகவாசி போல பாவித்து தவிர்த்து விடுவார்கள்.
அதனால் அவனாகவே பெண்களிடமிருந்து விலகி நின்றே பழகி விட்டான். பொதுவாக பெண்களிடம் சிரித்துப் பேசி பழகுவது என்னமோ அன்புவிற்கு இயலாத காரியம்.
அப்படிப்பட்டவனின் மனதை மயக்கியவள் அவள் ஒருத்தி தான்! சக்தியைப் பற்றி நினைத்ததும் மனதில் ஒருவித ஆனந்தம் முகிழ, அவனது முகம் மலர்ந்தது. மறுகணமே அவளுக்கு தன்மேல் அப்படியொரு எண்ணம் இல்லையே என்ற ஏக்கம் வந்து வாடச் செய்தது.
“என்ன ஸார் வீட்டுக்கு இன்வைட் பண்ண இவ்ளோஓஓ யோசிக்கிறீங்க?! உங்க வீட்ல என்ன புதையலா வச்சிருக்கீங்க, நான் என்னமோ அதை கொள்ளையடிக்க கேட்கற மாதிரி இப்படி பயப்படுறீங்க. ” அவனது நீண்ட சிந்தனையைக் கண்டு கேலியாகக் கேட்டாள்.
“அப்படியெல்லாம் இல்ல சரண்யா. வாங்க!” என்றழைத்தவன் முன்னே நடக்க, அவன் பின்னே வந்தாள் அவள். தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்து அன்பு உள்ளே நுழைந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த சரண்யா வீட்டைச் சுற்றி கண்களைச் சுழலவிட்டு, “பரவால்ல நாங்கூட பேச்சிலர் ரூமுக்கு வர்றோமேனு லைட்டா பயந்தேன். பட், வீட்டை ரொம்ப நீட்டா வச்சிருக்கீங்க அன்பு! உங்க வைஃப் ரொம்ப கொடுத்து வைச்சவங்க.” சிலாகித்துப் பேசினாள்.
அதேசமயம் தனது அறையிலிருந்து சக்தி வெளியே வர, அதைக்கண்டு அதிர்ந்து சரண்யா விழிக்க, “அன்பு, இவங்க?!..” யாரெனத் தெரியாமல் கேட்டாள்.
அவளது கேள்வியில் புருவங்கள் உயர்த்தி அன்புவைப் பார்த்த சக்தி, ‘இப்ப மட்டும் வேலைக்காரினு சொல்லு மவனே, அப்றம் இருக்கு உனக்கு!’ மனதிற்குள் கருவியவள், அடுத்து சரண்யா சொன்னதில் ஜெர்க்கானாள்.
சக்தியைப் பற்றி என்ன சொல்வது என அன்பு யோசிக்கும் முன்பே, “ஹே! இவங்க உங்க வைஃபா அன்பு? சொல்லவே இல்ல! எப்போ மேரேஜ் ஆச்சு?” அவளே கேள்வியும் கேட்டு அவளே பதிலையும் கூறி அதிர்ச்சியும் அடைந்தாள் சரண்யா.
சக்தி விழிகள் விரிய அதிர்ந்தவள், ‘இதுக்கு அவன் என்னச் சொல்லப் போறான்!?’ என புருவங்கள் இடுங்க அன்புவைப் பார்க்க, அவனோ சரண்யா சொன்னதை மறுக்காமல் அங்கிருந்து நழுவி, “உங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வர்றேன் சரண்யா.” கிட்சனுக்குள் சென்று மறைந்தான்.
‘இந்த ஷிஃபூ மாஸ்டர் ஏன் பம்முறான்?!’ என்று யோசனையாக புருவம் சுருக்கியவள், நல்லவேளை கண்டவள்ட்ட என்னை வேலைக்காரினு சொல்லாம இருந்தானே என்றெண்ணி அமைதியானாள்.
ஆரம்பகட்ட அதிர்ச்சி தெளிந்த சரண்யா, “ஹாய் மிஸஸ். அன்பு! ஸாரிங்க! நான் கொஞ்ச நாளா ப்ராஜெக்ட் விசயமா ஹைதராபாத்ல இருந்தேன். ஸோ, அன்புக்கு மேரேஜ் ஆனது தெரியாது.”
“நீங்க வீட்ல இருக்கறதால தான் வீட்டுக்கு கூப்பிட அவ்வளவு யோசிச்சார் போல, உங்க ப்ரைவஸியை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ஸாரி!” என்றவள் சங்கடமாக புன்னகைத்து சக்தியைப் பார்க்க,”அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டீங்களே, அப்றம் எதுக்குங்க ஸாரி எல்லாம்,” என்றாள் அவள்.
சக்தியின் அசால்டான நேரடி தாக்குதலில் சரண்யா தர்ம சங்கடத்தில் நெளிய, கையில் ஜூஸ் குவளையுடன் வந்த அன்பு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளுக்கு ஜூஸைக் குடிக்கக் கொடுத்தான்.
சக்தி அவளையே கூர்மையாக பார்த்திருக்க, அன்புவிடம் டம்ளரை வாங்கிய சரண்யா வேகமாக குடித்துவிட்டு “ஓகே அன்பு, நாம நாளைக்கு ஆபிஃஸ்ல மீட் பண்ணலாம். நைஸ் டூ ஸீ யூ அன்ட் பிலேடட் விஷ்ஸஸ் உங்க மேரேஜ்க்கு” என்றவள் ஓடியே போனாள்.
அவளது வேகமான ஓட்டத்தில் சக்திக்கு சிரிப்பு பீறிட்டதில் கைக்கொட்டி அவள் சிரிக்க, சரண்யாவை எப்படி துரத்துவது எனத் தெரியாமல் விழித்த அன்புவிற்கும் அவளது ஓட்டத்தில் சிரிப்பு வர இருவரும் ஒருசேர நகைத்தனர்.
சிரிப்பினூடே,”பரவால்ல, எங்கே இவ முன்னாடியும் என்னை வேலைக்காரினு சொல்லிடுவீங்களோனு நினைச்சேன்.” தான் மனதில் நினைத்ததை வாய்விட்டே கூறிச் சிரித்தாள் சக்தி.
“ஏன் என் அப்பாம்மா வந்தப்ப அப்படித்தானே சொன்னேன். இவங்ககிட்ட மட்டும் அப்படிச் சொன்னா என்னவாம்?!” புருவங்கள் சுருங்க சிரிப்புடன் குறுகுறுப்பாக அவளைப் பார்த்தபடி அன்பு கேட்க, “ம்ம்! அன்னிக்கு ஏதோ உங்க அம்மாப்பா அப்படிங்கறதால அமைதியா இருந்தேன்.”மிதப்பாகக் கூறியவள்,
“அதையே இவள்ட்டயும் சொல்லி இருந்தீங்கள்னா உங்க வாயிலேயே குத்தி இருப்பேன், அதோட அவர் வீட்டு வேலைக்காரி இல்லடி வீட்டுக்காரினு அவளையும் தெறிக்க விட்டிருப்பேன்.” குத்துவது போல பாவனை காட்டிச் சிரித்தாள் சக்தி.
“பாவம்! ரொம்ப ஏமாந்துட்டா. அவளுக்கு உங்க மேல ஒரு கண்ணு போல, நான் உங்க வைஃப்னு தெரிஞ்சதும் அப்படியே முகம் சுண்டிப் போனதைப் பார்க்கனுமே!” வாசலைப் பார்த்தபடி புன்னகையுடன் கூறினாள்.
அவளது பதிலில் அன்புவின் விழிகள் ஒளிர அவளைக் காதலுடன் கண்டிருக்க, சரண்யாவின் ஓட்டத்தை எண்ணி சிரிப்புடன் பேசியவள் தான் சொன்னதன் பொருளையே உணரவில்லை.
சிரித்துக் கொண்டே திரும்பிய சக்தி, அன்புவின் பார்வையில் பேச்சற்று திகைத்து தடுமாறி, அந்த விழிகளின் வீச்சில் விழுந்தவள் அவனையே ஆழமாகப் பார்த்திருந்தாள்.
எங்கோ ஒலித்த வண்டியின் ஹார்ன் சத்தத்தில் இருவருக்குமிடையே பட்டென அறுந்த மாயவலையிலிருந்து, முதலில் மீண்ட சக்தி தொண்டையைச் செருமி, “நான் போய் டின்னர் செய்றேன்.” அங்கிருந்து அகன்றாள்.
அன்புவைத் தாண்டிச் செல்பவள் பின்னே தொடரும் அவன் பார்வையை உணர்ந்த சக்திக்கு, உள்ளிருந்து மேலெழுந்த புதுவித உணர்வு ஒன்று அவளை இன்பமாக இம்சித்தது.
‘அடிக்கடி இப்படி பார்த்தே என்னை என்னமோ பண்றான்!’ அவனை செல்லமாக மனதிற்குள் திட்டியபடி கிட்சனுக்குள் சென்று ஒளிந்து கொண்டாள்.
அன்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு பழையபடி எதுவும் மாறவில்லை என்றாலும் அன்பு அவளிடம் இயல்பாக பேச முயற்சித்தான்.
அவன் வீட்டிலிருந்தாலே அவனுடன் ஆவலோடு ஏதேதோ கதைகள் பேசி அவனது நேரத்தைக் கொள்ளை கொள்ளும் அந்த ராட்சசியிடம் அவனாலும் விலகி இருக்க முடியவில்லை.
அதனால் அவனாகவே அவளிடம் பேசத் தொடங்க, சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக தனது பழைய ஃபார்மிற்கு வந்து விட்டாள். அதாவது அவனிடம் வம்பு பேசியே அவனது காதை பங்சராக்கி பதம் பார்த்தாள்.
ஆரம்ப காலத்தில் தொல்லையாக தெரிந்த அவளது செய்கைகளை எல்லாம் இப்போது விரும்பியே மனதில் சேமித்து, உறக்கம் பிடிக்காத இரவில் அடிக்கடி ரீவைண்ட் செய்து மகிழ்கிறான் அன்பு.
‘உனக்கு எம்மேல எந்த ஃபீலிங்குமே இல்லையாடி!?’ தினமும் இரவின் தனிமையில் மனதிற்குள் அவளிடம் தவிப்புடன் கேட்டு, கைக்கு அருகிலிருந்தும் மனதளவில் தொலைவில் இருக்கும் காதலியால் பசலை நோயில் வாடிக் கொண்டிருக்கிறான்.
அவளுக்கும் அவனைப் பிடித்திருப்பது அன்புவிற்கு நன்றாகவே புரிகிறது. ஆனால் அது காதலா இல்லை சாதாரணமாக சக மனிதனிடம் காட்டும் அன்பா என்பது மட்டுமே அவனுக்கு விளங்கவில்லை.
இதோ இப்போது கூட அவளது பேச்சில் ‘வீட்டுக்காரி, அவனது மனைவி’ என்றெல்லாம் அவள் கூறியதுகூட ஏதோ உரிமையில் சொல்வதாக தோன்றுகிறது, அதேசமயம் அவளே உணராமல் சொல்கிறளோ என்ற சம்சயமும் எழுகிறது.
இப்படியாக அவளிடமிருந்து இயல்பு போல வெளிப்படும் பேச்சுகளால் குழம்பிய அன்பு அவளை எண்ணி தனிமையில் உருகுவதும், அதேப்போல அவனது திடீர் பார்வை மாற்றத்தை உணர முடியாமல் அவள் தடுமாறுவதுமாக அவர்களது நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
அன்று மாலையில் வழக்கம் போல அலுவலகம் முடிந்து அன்பு தனது சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே வர, எப்போதும் வெளியே எட்டிப் பார்க்கும் சக்தி அன்று தனது அறைக்குள்ளேயே இருந்தாள்.
குழப்பமடைந்த அன்பு அவளது அறையை கடக்கும் போது ஒருநொடி நின்றவன், அவள் மகிழ்வுடன் சத்தமாக சிரித்துப் பேசும் சத்தத்தில் புருவங்கள் சுருங்க யோசனையாகி, திறந்திருந்த அறையைத் திரும்பிப் பார்க்க, அவளது லேப்டாப்பில் வீடியோ கால் மூலமாக ஒரு இளைஞனிடம் தான் பேசிக் கொண்டிருந்தாள்.
ஆண்,பெண் நட்பு சகஜமாகிவிட்ட இந்த காலத்தில் அதைக்கண்ட அன்புவும் இயல்பாக கடந்து விட, அவள் முகம் கொள்ளாத புன்னகையுடன் “அச்சோ கடவுளே! உன்னோட பெரிய இம்சைடா. லவ் யூடா அனி!” என அடுத்து அவள் சொன்ன சொற்கள் அன்புவின் நெஞ்சில் தீயை வாரி இரைத்தது.
சிரிப்புடன் திரும்பிய சக்தி அறை வாயிலில் அதிர்ந்து நின்ற அன்புவைக் கவனித்து, “ஓகே அனி! நீ வேலையை பாரு. நான் அப்றம் பேசறேன்.” என அழைப்பை வைக்க முயற்சிக்க,
“ஹே என்னடி அதுக்குள்ள காலை கட் பண்ற?! நானே எப்பவாவது தான் கால் பண்றேன். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன?! ஏன் அவசரம்? என்ன அவசரம்? நில்லு பொண்ணே! ” உரிமையாகப் பேசி அவளை தேக்க முயன்றவன் கடைசியில் பாடல்வரிகளைப் பாட, வெட்கச் சிரிப்புடன் “போடா!” என அழைப்பை வைத்தாள் அவள்.
அவன் பாடியதில் புன்சிரிப்புடன் அழைப்பை கட் செய்து விட்டு சக்தி திரும்பிப் பார்க்க அன்பு அங்கே இல்லை. ‘அதுக்குள்ள இந்த ஷிஃபூ மாஸ்டர் எங்க போனான்?!’ குழம்பியவள் தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

