Skip to content
ஆரோன் குரல் மிகுந்த சக்தி வாய்ந்தது. கேட்போரைக் கட்டுண்டு போக வைத்தும் விடும். சிறுவர் முதல் பெரியவர் வரை வசீகரித்து, இரசித்துக் கேட்க வைக்கும். அந்தக் கணீர்க் குரல் இன்றோ, ஏக்கமும் பாசமுமாக நலிந்தொலித்தது. கேட்ட ஒலிவியாவோ, செயலற்று நின்றாள்.
அந்தக் குரல் அவள் இதய ஆழம் வரை ஊடுருவி அசைத்துப் பார்த்தது. என்னதான் உனக்கும் எனக்குமான அறிமுகமும் தொடர்பும் பார்க்கும், நேசிக்கும் தொழில் தொடர்பானது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாலும் இக்கணம் அவளால் அந்த உறுதியின் பிடியில் நிற்க முடியவில்லை. அந்த உறுதி ஆட்டம் கண்டது. வெடித்துச் சிதறி விடுமோ என்றளவு இதயம் நடுங்கியது. அமர்ந்திருந்தவள் விழிகள் நிறைந்து போக எழுந்தும் விட்டாள்.
சற்றே தள்ளிச் சமையலறையில் அலுவலாக நின்றான், அவள் கணவன் வேர்த். பார்வை மட்டும் மனைவியில். அதுவும் ஆரோன் கதைக்கிறார் என்று உணர்ந்ததில் கூர்மை அதிகரித்திருந்தது.
அநேகம் ஆரோன் கதைப்பது வேர்த்தோடு முடிந்துவிடும். எப்போதாவது, நல்ல நாள்களுக்கு மட்டுமே ஒலிவியாவோடு கதைப்பார். இவளோ, தேவைக்கு அதிகமாக ஒற்றை வார்த்தை கதைக்காது இவனிடம் தந்தும் விடுவாள்.
அதுவே, அவள் தவிப்பும் கலக்கமும் கண்டதும் கை வேலையை அப்படியே விட்டுவிட்டு இரண்டே எட்டில் அவளை அணுகியிருந்தான்.
“வாட் ஹப்பெண்ட் ஹனி, ஆர் யூ ஓகே?” என்று வந்து மனைவியை அணைத்துக்கொண்டவனுக்கு, “ஒலிவியா ” என்று மீண்டும் அழைத்த ஆரோன் குரல் கேட்டிட்டு.
“ஆர் யூ தேர்?” என்று அவர் கேட்டபோது, அக்குரலில் இருந்த நடுக்கம் வேர்த் நெற்றியைச் சுருங்க வைத்திட்டு.
மார்க்கெட் போய் வந்த கையோடு சமையல் தொடக்கிவிட்டவன், மனைவியின் ஒருபோதும் இல்லாத அமைதியைக் கவனிக்கத் தவறியிருந்தான். அவளும் ஆரோனுக்குச் சுகயீனம் என்று கிடைத்த செய்தியைச் சொல்லவில்லை. அவளால் இன்னமும் அதை நம்பவே முடியவில்லை, பிறகெப்படிச் சொல்வாள்? அதுவே, துர்கா நேரில் சென்று பார்த்ததும் கணவனிடம் சொல்லலாம் என்ற முடிவில் இருந்தாள்.
“நான் …நா…ன்” அவள் புற எதிரொலியை எதிர்பாராதே தொடர்ந்தார், ஆரோன். உன் அப்பா என்று சொல்லிவிடத்தான் பேராசையாக இருந்தது. பேராசையேதான் என்று மனத்துள் எண்ணிக்கொண்டவர், “செஃப் ஆரோன் கதைக்கிறன்.” திணறலாகச் சொல்லியிருந்தார்.
ஒலிவியாவின் நிறைந்த விழிகள் மளுக்கென்று உடைப்பெடுத்து வழிந்தன. என்ன நடந்தது ஹனி என்று பதற்றப்படும் கணவனுக்குப் பதில் சொல்லவும் இயலவில்லை. இப்படியே, உடல் நலமற்ற ஆரோனைக் கதைக்கவிடவும் விரும்பவில்லை.
அடைத்த தொண்டயைச் செருமினாள். கணவன் முகம் பார்த்தாள். கைப்பேசியைப் பொத்திக்கொண்டு அவர் உடல் நிலைபற்றிச் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டாள். வேர்த்துக்குமே அதிர்ச்சிதான்.
நான் கதைக்கவா என்று கேட்டான், வேர்த். வேகமாகத் தலையாட்டி மறுத்தாள். இயன்றமட்டும் தன் தவிப்பான உணர்வுகளை மறைத்தபடி நிமிர்வோடு கதைக்க ஆரம்பித்தாள்.
“செஃப் …உங்களுக்கு இப்ப எப்பிடி இருக்கு? ஒண்டும் யோசிக்கிறேல்ல சரியோ. எல்லாம் சுகம் வந்திரும் செஃப்.” தழுதழுத்த குரலைக் கட்டுப்படுத்திக்கொண்டே சொன்னவளுக்கு, அதற்கு மேல் என்ன கதைப்பதென்றும் தெரியவில்லை.
ஆரோன் மெல்லச் சிரித்தார். “உன்ர செஃப் நல்லா இருக்கிறன் மகளே! எனக்கு என்ன யோசனை சொல்லு?” என்றவர் குரலில் கரகரப்பு.
“செஃப் …” வேர்த் குரல் இடையிட்டது.
“ஓ டியர் சன், நீயும் நிற்கிறாயா என்ன?” என்றவர், அவன் பதிலுக்கு இடமளிக்காது தொடர்ந்தார்.
“ஒலிவியா, ஒரு தடவை… ஒரே ஒரு தடவை இங்க வந்திட்டுப் போவியா…ப்ளீஸ்! வேர்த் …ரெண்டு பேரும் வந்திட்டுப் போங்களேன். ப்ளீஸ்! உங்களைப் பாக்கோணும் போல இருக்கு!” என்று கேட்டபோது அவர் குரல் நலிந்து ஒலித்தது.
“செஃப் என்ன இப்பிடிக் கேக்கிறீங்க? வா எண்டா…” என்று அவசரமாகச் சொன்ன கணவனை இடைவெட்டிக் கதைத்தாள், ஒலிவியா. அவள் ஒரு கை வேர்த் வாயில், ‘ ஒண்டும் கதையாதே’ என்றவையில் சென்றமர்ந்துமிருந்தது.
“நான்… நானா செஃப், ஏன்? இல்ல…என்ன எண்டா எனக்கு இப்ப அங்க வர வசதிப்படாது செஃப்.” தடுமாறினாலும் மறுத்துவிட்டாள். அவரைக் கதைக்கவிடாது தொடர்ந்தாள்.
“உடம்பப் பாத்துக்கொள்ளுங்க செஃப். எனக்கும் வேர்த்துக்கும் மட்டுமா, இந்த உலகத்தில இருக்கிற ஒவ்வொரு சமையல் கலை வல்லுனருக்கும் நீங்க வேணும். உங்கட வழிநடத்தல் வேணும், இன்னும் நிறைய நாள்களுக்கு.” என்றபோது, அவள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறிக் குரல் தழுதழுத்திட்டு.
“பிறகு கதைக்கிறன் என்ன” என்றவள்தான், அவர் ஒலிவியா என்று ஆரம்பித்ததைக் கேட்காத மாதிரியே அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
மனைவியைக் கண்டனப் பார்வை பார்த்தான்,வேர்த். ஆரோன், அவன் மதிப்புக்குரிய குரு, தந்தைக்கு ஒப்பானவர். நான்கு பிள்ளைகள் அவரோடு இருந்தாலும் ஒலிவியா என்ற மகள் மீதான அவர் பாசமும் வெளிக்காட்டாத ஏக்கமும் அவளுக்குத் தவறிழைத்தவன் என்ற குன்றலும் பரிதவிப்பும் அவனை விட்டால் யாருக்குத் தெரியும் . அதையும் கடந்து நிமிர்வையும் கம்பீரத்தையும் மட்டுமே காட்டும் மனிதனின் இன்றைய கலக்கம் அவன் மனத்தைப் பிசையச் செய்தது.
ஆரோன் என்ற கதை வந்தாலே நான் மதிக்கும் சமையல் கலை வல்லுநர் என்ற மதிப்போடு நின்றுவிடுவாள் ஒலிவியா. அதையும் கடந்து இறுக்கத்தை ஒதுக்கத்தை ஒருவிதமான அசட்டையைப் பிரதிபலிப்பாள். இவன் அதைக் கண்டும் காணாது கடந்துவிடுவான். இப்போதோ அப்படி வெடுக்கெண்டு கதைத்துவிட்டு வைத்தவள், விழிகளோடு மனமும் கலங்கியிருந்ததில் வலு சோர்வோடு அமர்ந்துகொண்டாள். அவளை அணைத்தபடி அமர்ந்தான் வேர்த். அவன் மனமோ, மனைவியோடு கதைக்க வார்த்தைத் தெரிவில் இறங்கியிருந்தது.
இலண்டனிலோ , ஒலிவியாவின் மறுப்பை ஆரோன் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்றே சொல்லவேண்டும். நோயாளி என்றதில் இரங்குவாள், வேர்த் துடித்துக்கொண்டு கிளம்புவான், இவளும் புறப்பட்டு வருவாள் என்றல்லவா நினைத்தார்.
அவர் மகள் வலு நாசுக்காக அவரைத் தவிர்த்துவிட்டாள். சில நொடிகள், கசிந்த கண்களையும் துடைக்க மறந்து அமர்ந்திருந்தவர் மனமெல்லாம் கசப்புணர்வு மட்டுமே. என்ன உரிமையில் வா என்று அழைத்தாய்? ஓடி வந்துவிடுவாள் என்று எதிர்பார்க்கிறாய்? அவர் மனம் வெறுப்பாக முனகியது. அருகில் மகனும் துர்காவும் நிற்பதை மறந்தவர் போல விழிகள் கசிய அமர்ந்திருந்தார், ஆரோன் டேல்.
ஒரு செயல் எத்தனை ஆத்மார்த்தமாக இருந்தாலும் தவறென்று, பிழையென்று தெரியாத நிலையில் செய்யப்பட்டிருந்தாலும் கூட ஆயுளுக்கும் தண்டித்துவிடும். பதறிக்கொண்டிருந்த அவர் மனம் இடித்துரைத்துக்கொண்டிருந்தது.
“செஃப்!” அவர் கண்ணீர் உருவாக்கிவிட்ட விழிக்கசிவோடு அழைத்தாள், துக்கா.
error: Alert: Content selection is disabled!!