அப்போதுதான் சுற்றத்தை உணர்ந்தவர், கைப்பேசியை துர்காவிடம் கொடுத்தார். அப்போதும் விழிகளைத் துடைக்க முனையவில்லை. அப்படியே கட்டிலில் சரிய முயன்றவரை, “டாட்! என்ன செய்யிது?” என்று எட்டிப் பிடித்துத் தன்னோடு சாய்த்துக்கொண்டான், ஏதன்.
அவன் முகம் கல்லுபோன்று இறுக்கிக் கிடந்தது. அதிலும் தன்னோடு ஒலிவியா கதைக்கையில் சொன்னபோல ஆரோன் என்ற மனிதர் அவளில் தாக்கம் உருவாக்கவில்லை என்றே அவனும் உணர்ந்தான். உண்மையில் அவன் மகிழ்வு கொள்ள வேண்டும் . ஆனாலும் அவளும் என் மகள், என் இரத்தம், என் சமையல் தொழில் வாரிசு என்று, பெற்ற பிள்ளைகள் ஐவருள்ளும் பாரபட்சம் பாராது எண்ணும் தகப்பனின் மனம் தெரிந்தவனால் அவர் வேதனையையும் உணர முடிந்தது.
ஒலிவியாவிற்கு அழைத்தபடி கதவோரமாக நகர்ந்து நின்றாள், துர்கா.
இரு தடவைகள் அடித்து ஓய்ந்தது. ஒலிவியா அழைப்பை ஏற்கவில்லை.
‘எடுக்க மாட்டியோ இப்ப’ என்று வந்து விழுந்த துர்காவின் குறுஞ்செய்தியை, ஒலிவியா மட்டுமல்ல வேர்த்துமே வாசித்தான்.
“எடு ஒலிவியா.” என்ற அவன் வற்புறத்துதலில் எடுத்தவள் துர்காவோடு எரிந்துவிழ வாய் திறந்தாள்.
“அந்தளவுக்கு இரும்பு மனமா உனக்கு? செஃப்ட்ட என்ன சொன்னனீ? அவர் என்ன நிலையில் இருக்கிறார் எண்டு சொன்னனான் எல்லா? அப்ப நீ அதை எல்லாம் நம்பேல்லையா? இஞ்ச பார் ஒலிவியா, நீ வந்தா மட்டும்தான் சேர்ஜரி எண்டு சொல்லிக்கொண்டு பிடிவாதமா இருக்கிறார் செஃப். தயவு செய்து வெளிக்கிட்டு வா. இது விளையாடுற நேரம் இல்ல. நீ வேர்த்ட்ட குடு நான் கதைக்கிறன்.” அதட்டலாகத் தொடங்கிவிட்டுக் கெஞ்சலாக முடித்தாள் துர்கா.
“உனக்கு அவர் யார் எண்டத எல்லாம் தூர வை ஒலிவியா. உன்ர டாட் அவர் இல்ல, டெனிஸ் ரைட். அது இப்ப பிரச்சினையே இல்ல. தயவுசெய்து வெளிக்கிடு!” என்று துர்கா தோழியோடு மல்லுக்கட்டிய போதுதான் , ஒலிவியாவை நேரில் பார்த்துவிட்டே சேர்ஜ்ரி என்று, ஆரோன் பிடிவாதமாக சொன்னதையும் வேர்த்து தெரிந்துகொண்டான் .
“துர்கா நீ வை, நான் ஒலிவியாவோட கதைச்சிட்டுப் பிறகு உனக்கு எடுக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டித்த வேர்த் இப்போது மனைவியைக் கண்டிப்போடு ஏறிட்டான்.
இங்கோ, அழைப்பைத் துண்டித்த துர்கா, அப்போதுதான், கதவைத் திறந்துகொண்டு ஆரோன் மூத்த மகன் மற்றும் மகள்கள் நிற்பதைக் கண்டாள்.
மூவர் பார்வைகளும் போட்டி போட்டுகொண்டு துர்காவில் குத்தூசியாகப் படிந்தன. மூத்தவள் ஐலா உள்ளே பார்வையைச் செலுத்தினாள். தகப்பனோடு ஆழ்ந்த குரலில் கதைத்தபடி படுக்க வைத்துக்கொண்டிருந்தான், ஏதன். துர்கா நண்பியோடு மல்லுக்கட்டுவது அவன் செவிகளில் பட்டும் படாமலும் தழுவினாலும் அவளைப் பாராது, கலங்கி நின்ற தகப்பனை ஆறுதல்படுத்துவதில் அவன் கவனம் முழுதாய் இருந்தது. உடன்பிறப்புகள் வந்தததைக் கவனிக்கவும் இல்லை.
அதை அவதானித்தபடி, துர்காவின் மணிக்கட்டில் இறுகப்பற்றி ஒரே இழுவையில் வெளியில் கொண்டுவந்து நிறுத்தினாள், ஐலா.
அந்நேரம், வைத்தியரோடு கதைக்கச் சென்ற சோஃபியா அவர்கள் நோக்கி வந்துகொண்டிருந்தார். பிள்ளைகள் மூவரும் துர்காவை முறைத்து நின்ற விதம் பார்த்து நெற்றி சுருகியவர், “ஹு இஸ் ஷி ஐலா?” மூத்த மகளிடம் வினவினாலும் பார்வை என்னவோ துர்காவை அளவிட்டது. ஒலிவியா கல்யாணத்தில் அவர்கள் எல்லாரையுமே துர்கா கண்டிருந்தாலும் அவளை அவர்களுக்கு அப்படியொன்றும் நினைவில்லை.
“ம்ம்ம்…” கீழும் மேலுமாகத் துர்காவைப் பார்த்த ஐலா பார்வையில் சினம்.
“மோம்…ஷி இஸ் ஃப்ரெண்ட் ஒப் தட்…” என்றவளுக்கு, ஒலிவியா பெயரை உச்சரிக்கவும் பிடிக்கவில்லை. அழகிய மலர்த் தடாகமாக இருந்த அவர்கள் குடும்பத்தில் அவளால் எத்தனை குழப்பம்? ‘இப்ப…’ நினைத்தவள் நெஞ்சு கொதிக்க, “ அவுஸ்திலியாவில இருந்து அந்தப் பெண்ணை வர வச்சிட்டுத்தான் மற்ற வேலையாம் எண்டு நிக்கிறா இவா. இல்லையோ டாட் சரியாமே. வாட் எ ஜோக்!” பற்களை நறும்பிக்கொண்டு சொன்னாள்.
சோஃபியா பார்வை துர்காவைச் சுட்டது. “அவள்ட ஃப்ரெண்டா நீ? சரி, இருந்திட்டுப் போ! ஆனா உனக்கு இஞ்ச என்ன வேலை? இஞ்ச வரைக்கும் எப்பிடி வந்தனீ ?” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார்.
எதிர்பாராது மணிக்கட்டில் அழுந்தப் பற்றி வெளியில் இழுத்த விதம், சோஃபியாவின் உறுமல், ஏதனின் உடன் பிறப்புகள் மூவரும் ஏதோ அவளை மோசமானவள் போல் துச்சமாகப் பார்ப்பது மட்டுமா? அவள் உயிர்த்தோழியை என்ன அருவருப்பாக எண்ணுகிறார்களோ! அவர்கள் கடுமையில் ஒரு கணம் தடுமாறினாலும் சட்டென்று சுதாரித்துவிட்டாள், துர்கா.
அவளுள் எப்போதும் இருக்கும் நிமிர்வும் துடுக்கும் போட்டிபோட்டுக்கொண்டு வெளிப்பட, அழகாக ஒரு முறுவலைச் சிந்திக்கொண்டே நால்வரையும் பார்த்தவள் ஒற்றை நெற்றி ஏறியிறங்கியது. அது அவளுக்கு அசாத்தியமான கம்பீரம் கொடுத்தது.
“நான் துர்க்கா, ஒலிவியாட பெஸ்டி!” மூக்கைச் சுருக்கிப் புன்னகைத்தவள் அவர்களைச் சீண்டுகிறாள் என்று நால்வருக்குமே விளங்கியது. எங்கிருந்தோ வந்தவளுக்கு இப்படியொரு தைரியம் எப்படிச் சாத்தியம்? சோஃபியா பார்வை அவளைக் கூர்மையாக அளவிட்டது.
“உனக்கு இஞ்ச என்ன வேலை எண்டு கேட்டம்?” ஐவன் உறுமினான்.
“நான் செஃப் ஆரோன் டேல்ல பாக்க வந்தனான். அதோட நான் ஒரு லோ ஸ்டுடன்ட். எக்ஸ்சேஞ்ல இஞ்ச படிக்க எண்டு ஆறுமாதங்களுக்கு வந்திருக்கிறன் . இஞ்ச இருக்கும் வரைக்கும் பார்ட் டைமாக செஃப்ட ஃபைன் டைனிங் ரெஸ்டோரண்டில தான் வேலை செய்யிறன்.” தோள்களைக் குலுக்கி மீண்டும் முறுவலித்தாள் .
“ வாட்?” நால்வருக்கும் அதிர்வு. சுதாரித்த சோஃபியா, “ ஓ இதெல்லாம்மா நடக்குது?” என்று பற்களை நறநறக்க, “அதான் மோம், அங்க இருந்துகொண்டே இஞ்ச எப்பிடிச் சுருட்டுறது எண்டு திட்டம் போட பொருத்தமாப் பார்த்து ஆள் அனுப்பி இருக்கிறாள் அவள். இன்னும் எத்தினை பேர் இப்படி வந்திருக்கிறீங்க?” என்ற ஐலா, “ பிளடி இந்தியன்.” என்றாள் அடிக்குரலில்.
“ஹேய்… மைண்ட் யுவர் டங்!” விரல் நீட்டி எச்சரித்த துர்கா கொதித்துவிட்டாள்.
அதை பார்த்த சோஃபியாவுக்கு கண்மண் தெரியாத ஆத்திரம். அவர் முன்னால் வைத்தே அவர் மகள் விழிகளை குத்துவது போல் விரல் நீட்டும் இந்தச் சுண்டெலியை…
“ஹொவ் டேர் யூ இடியட்.” பளார் என்று இழுக்க முனைந்தவர் கரத்தை, “மோம்!” என்ற கண்டிப்புக் குரலோடு இறுகப்பற்றி நின்றான், ஏதன்.