ஏதன் சற்று அதிகமாக நீதி நியாயம் பாவ புண்ணியம் பார்ப்பவன் என்று குடும்பத்தினருக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.
இதோ, இந்த இடத்தில், தாயின் கரத்தை மறித்துப் பிடித்து அதிருப்தியையும் கோபத்தையும் வெளிக்காட்டி நிற்பவன் அடுத்துச் சீறுவான் என்றும் தெரியும். சோஃபியா முந்திக்கொண்டார்.
மகன் பிடியிலிருந்து கையைக் கோபமாக விடுவிக்க முனைந்தவர், “விடு ஏதன், ஆப்டரோல் பார்ட் டைமா எங்களிட்ட வேலை செய்யிறவள் இவள், என்ன திமிராக் கதைக்கிறாள் தெரியுமா?” துர்க்காவைப் பார்வையால் எரித்தார்.
“இவள் இனி பைன் டைனிங்குக்கு வேலைக்கு வரக்கூடாது ஏதன். தப்பித் தவறியும் எங்கட கண்களில பட்டிரக் கூடாது. அனுப்பி வை!” சீறலாகச் சொன்னார்.
“துர்காக்கு வேலை குடுத்தது டாட்.” கடித்த பற்களிடையே வார்த்தைகளைத் துப்பினான், ஏதன். பார்வை மூத்த சகோதரியில். அவள் துர்காவைத் தூற்றியபோது கண்டானே.
“சோ வாட்? நான் சொல்லுறன் அனுப்பி விடு!” என்ற சோஃபியாவுக்கு, மகன் துர்கா என்று வலு உரிமையாக அவள் பெயரைச் சொன்னானோ என்ற சந்தேகம். அதுவும் அவன் பார்வை அக்கறையோடு அவளைப் பார்ப்பதும் தெரிகிறதே!
அதுவே, “இவளோட உனக்குப் பழக்கமா என்ன?” என்று கேட்டும் விட்டார். அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை.
“துர்கா இஞ்ச இருக்கிற வரைக்கும் பைன் டைனிங்லதான் வேலை மோம். எங்கட குடும்பப் பிரச்சினைக்குள்ள அவளை இழுக்க வேணாம். அது நியாயமும் இல்ல.” என்றவன். “துர்கா நீ வெளிக்கிடு!” என்றான் அவளிடம்.
கன்றிச் சிறுத்த முகமும் கோபத்தைக் கக்கும் கண்களுமாக அவள் நின்ற நிலை அவன் மனத்தைப் பிசையச் செய்வித்தது. நிச்சயம் அவளை இப்படியொரு நிலையில் அவன் குடும்பத்திடம் அறிமுகம் செய்ய நினைத்திருக்கவே இல்லையே!
“அப்ப நான் சொல்லுறத உன்னால செய்யேலாது?” தாய் ஆரம்பிக்க, “மோம் கொஞ்சம் பொறுங்க , இஞ்ச பார் ஏதன்.” என்று தொடங்கிய ஐவன், ஆரோன் எழுதி வைத்திருக்கும் உயில் பற்றிச் சொன்னான்.
ஏதன் முகம் மாறினான். யார் அதற்குள் சொன்னது? எவர் கண்ணிலும் படாது லொக்கரில் வைத்துவிட்டானே.
“டீட்ஸ் பற்றி ஆர் உங்களிட்டச் சொன்னது?” என்று கேட்க, சாட்சிக் கையெழுத்திட வந்தவர் சொன்னதைச் சொன்னார்கள். அந்த மனிதன் ஆரோனின் நெருங்கிய நண்பன்தான். அதேவேளை, ஆரோன் தம்பி மகளை மணந்திருப்பது அவர் மகனாச்சே. ஆரோன் சுகயீனத்தை அறிந்தவரால் உயில் விடயத்தை குடும்பத்தினரிடையே மறைக்க இயலவில்லை. காரணம் திடீரென்று முளைத்த மகளுக்கு அவ்வளவு சொத்துகளை ஆரோன் உரித்தாக்கியதை அவராலுமே ஏற்க இயலவில்லை.
ஏற்கனவே ஆரோன் சகோதரனுக்கு அவரோடு நல்ல உறவு இல்லை. ஒரு காலத்தில் ஆரோன் தெரிவு செய்த சமையல் துறை அவர்கள் பரம்பரைக்கே இழுக்கு என்று குதித்தவர்களில் அவரும் அடக்கம். என்னதான் தான் தெரிவு செய்த துறையில் காலூன்றியவராக, சாதிப்பேன் என்ற நம்பிக்கை கொடுப்பவராக மீண்டும் வந்து, பிரிந்த மனைவியைச் சமாதானம் செய்வித்து குடும்பமாக கட்டுக்கோப்பாகச் சிறப்பாக வாழ்ந்தாலும் அவர் தகப்பனும் , சகோதரனும் முழுமனதாக ஒரு வெற்றியாளராக ஆரோனை ஏற்கவில்லை . போயும் போயும் சமையல்தானே என்ற எண்ணம் அவர்களுக்குள் வலுவாகவே உண்டு.
அவர்களுடையது, ஒஸ்க்வோட் கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்களில் படிக்கும் பரம்பரை. ஆரோன் கூட ஒஸ்க்வோட் பல்கலையில் படித்த கட்டிடப் பொறியியலாளர்தான். அப்படியிருக்கக் கரண்டியைத் தூக்கினால்?
அந்தக் கதை கூட இப்போது வந்து போயிற்று. குடும்பத்திலுள்ளவர்களை மதிக்காத வகையில், அவர்கள் விரும்புவதத்திற்கு மாறாகச் செயற்படுவது தகப்பனுக்குக் கை வந்த கலையாயிற்றே என்றான் மூத்தவன்.
தகப்பனின் முக்கியமான அடையாளமாக விளங்கும் தொழில்கள் எல்லாம் ஒலிவியாவுக்கு என்றாகிற்று. அப்போ நாங்கள் அவருக்கு முக்கியம் இல்லையா என்று ஐலா மூக்கை உறிஞ்சியபடி கேட்டாள்.
“இஞ்ச பாருங்க, அப்பா சுயமா உழைச்ச சொத்துப்பத்துகள ஆருக்கும் குடுக்கலாம். அது அவர்ட சொந்த விருப்பம். இதே, தாத்தா பாட்டிட சொத்துக்கள அவர் திரும்பியும் பாக்கேல்ல. அதுவே நாலு தலைமுறைகளுக்கு சும்மா இருந்து வாழலாம்.” அலுப்போடு சொன்னான், ஏதன்.
“நீங்களும் நானும் ஏன் இந்த ஊரும் என்னவும் கதைக்கலாம், சொல்லலாம். ஆனா, ஒலிவியா டாட்டுக்கு மகள். இனி டாட் நினைச்சாலும் ஒலிவியா மறுத்தாலும் அந்த உறவ மாத்தேலாது.” என்றவன், “அப்படியிருக்க அவர் தன்ர உழைப்பில பங்கு குடுக்கிறதைக் கேள்வி கேட்க நாங்கள் ஆர் சொல்லுங்க பாப்பம்?” என்றவன் கழுத்தைப் பிடித்துவிட்டார் சோஃபியா.
“உனக்கு இது முதலே தெரியுமா? சொல்லேல்லையே, நீயும் சேர்ந்து செய்தியா?”
“பச் மோம், டாட் கட்டிலிலதான் ஃபைலை வச்சிருந்தவர். மெடிக்கல் ரிப்போட் எண்டுதான் தூக்கிக்கொண்டு வந்தனான். பிறகு பாத்தா டீட். விடுங்க ப்ளீஸ். டாட் சேர்ஜரி செய்யிறதுதான் எங்கட முதல் வேலை. அதை விட்டுப்போட்டு…” சிடுசிடுத்தான்.
“அதெப்படி விடுறது? அந்த உயில் செல்லாது. அதையும் மீறி அந்த ஒலிவியா இங்க வரோணும் உயிரோட திரும்பிப் போக மாட்டா.” என்ற ஐவன், “ ஏய் !” விரலைச் சொடுக்கிட்டுக் துர்கா பார்வையைத் தன் புறம் திருப்பினான்.
“இதையும் அவளுக்குச் சொல்லு. இனிமேல் எங்கட கண்ணில பட்டிராத…கெட் அவுட் திஸ் பிளேஸ்.” அடிக்குரலில் உறுமினான்.
துர்கா வேறு துடுக்காக எதையோ சொல்ல வெளிக்கிட, “ஆர் யூ மேட் ஐவன் ? கொஞ்சம் கூட தேவையில்லாத உன்ர கோபத்த, ஆத்திரத்தக் காட்ட இவள் ஆளில்ல.” தமையன் முன்னால் சென்று நின்று சொன்ன வேகத்தில், “ நீ கிளம்பு துர்கா!” இவளையும் அதட்டினான், ஏதன்.
“ஆங், அது எங்களுக்கு தெரியும். பின்ன இஞ்சயே ஒட்டிக்கொண்டு நிக்கிற அளவுக்கு என்ன எனக்கு விசரா சொல்லுங்க? ஆஃப்டரோல் ஒரு பார்ட் டைம் வேலை. இந்த வடிவில போ வராதேயாமே! நானும் என்னவோ நினைச்சிட்டன், கிட்ட வந்து பாத்தாத்தானே எல்லாம் விளங்குது. மொத்தக் குடும்பமுமே வாயைத் திறந்தா …ப்பா!” உதட்டைச் சுழித்து முகத்தைக் கோணி அவர்களை வெறுப்பேத்திவிட்டு, ஏதனை எரி பார்வை பார்த்துவிட்டு அசையாது நின்றாள், அவள்.