Skip to content
*****
ஆரோன் மனைவி, பிள்ளைகளை, அவர்களின் சினத்தை நிமிர்வாக எதிர்கொண்டவள் அவள்தான். அப்படி என்ன செய்து விடுவீர்கள் என்றே அந்த நேரம் எதிர்நின்றாள். இதோ இப்போது அவர்கள் கதைத்தவிதத்தை நிதானமாக எண்ணிப் பார்த்தால் அவள் முட்டாள்தனம் புலனாகிறதே! அவர்கள் எங்கே அவள் எங்கே? ஒரு சிறு எறும்பை நசுக்கும் வகையில் இருந்த அடையாளமே தெரியாது செய்துவிட்டுப் போனால் யார் என்ன செய்யவியலும்?
ஏதன் முகம் துர்கா நினைவில் மெல்ல நடைபோட்டிட்டு. ‘உன்ர நண்பன் நான் இல்லையா? நீ எப்பிடி அப்பிடி நினைக்கலாம்?’ என்று, அவன் காத்திரமான கம்பீரக் குரல் கணீரென்று ஒலித்தது. அதானே என்று ஒத்துச் சொன்னது அவள் மனம்.
உச்சபட்சமாக அதிர்ந்தாள், துர்க்கா. குப்பென்று வியர்த்திட்டு. அவள் நினைவு உலா, வெளியில் அம்பலமாகிற்றோ என்றளவுக்குப் பயந்தவள் தன்னைச் சுற்றிப் பார்த்துக்கொண்டாள் .
அவன்தான் உன் நண்பன் என்கிறான், அதிகமாக உரிமை எடுக்கிறான் என்றால் அதை நீயும் ஏற்பாயா என்ன? அவனுக்கு நீ டைம் பாஸ் துர்க்கா. அது கூட உனக்கு விளங்காவிட்டால்?
அவள் மனத்தில் பலத்த முறைப்போடு எச்சரிக்கை மணி ஒலித்திட்டு. அந்தக் குடும்பத்தை விட்டு மட்டுமல்ல, ஏதனையும் விட்டுத் தூரமாகச் சென்றுவிடு! மனம் பலமாகவே எச்சரித்தது.
முதல், உன்னிடம் நண்பன் என்றவன் தன் வீட்டினர் முன் அப்படியெதுவும் காட்டிக்கொள்ளவில்லையே! அதிகாரமாக, அதட்டலாக இவ்விடம் விட்டுச் செல் என்பதாகத்தான் அவன் தொனி இருந்தது.
அவன் வீட்டினரும் எதை வைத்து அவளில் கோபம் கொள்கிறார்கள், வெறுப்பைக் காட்டுகிறார்கள்? ஒலிவியா நண்பி என்ற ஒன்றை வைத்தல்லவா? இனி ஏதனின் காதலி என்றால்?
‘காதலி’ என்று கட்டுக்கடங்காது சென்ற சிந்தனை, அவள் சிந்திக்கும் சக்தியையே நிறுத்திவிட்டிருந்தது.
சில பல நொடிகள் கடந்திருக்கும் இழுத்துப்பிடித்து அதட்டி உருட்டி மனத்தை நிதானத்திற்குக் கொண்டு வந்தாள், துர்கா. இனி ஏதன் புறம் என்ன, அவன் ரெஸ்டோரண்ட் புறமே எட்டியும் பார்ப்பதில்லை மீண்டும் முடிவெடுத்தாள்.
ஒலிவியா விடயத்தில் இனி அவள் செய்யவென்று எதுவும் இல்லை.நடப்பதைக் கண்டுகொள்ள வேண்டியதுதான். தன்னைத்தானே தேற்றிக்கொண்டு விரிவுரையில் கவனம் பதிக்க முயன்றாள். அதற்கெல்லாம் விட முடியாது என்று இரகசியமாக அருட்டியது, கைப்பேசி. யார் என்று பார்த்தவள், “ப்ச்” அலுத்துக்கொண்டாள். மியூட் செய்துவிட்டு விரிவுரையை கவனம் பதிக்க முயன்றாள்.
பார்வைக்குச் சொற்பேச்சுக் கேட்டுப் பழக்கம் இல்லையாமே! கைப்பேசியையே தொட்டு தொட்டு வந்தது. தொடர்ந்து நான்கு, ஐந்து என்று விட்டு விட்டு அழைத்துக்கொண்டே இருந்தான், ஏதன். ஏழாவது தடவையாக குறுஞ்செய்தி வந்து விழுந்திட்டு.
‘துர்கா பிக்கப் தி கோல்’ என்ற சொற்களில் அவன் எரிச்சல் நன்கு தெரிந்தது.
‘ஐ ஆம் இன் தி லெக்ஷ்ர் சேர்.’ மிகவும் சுருங்கத் தட்டி அனுப்பினாள். அந்த ‘சேர்’ என்ற ஒற்றைச் சொல் அவனைச் சுரீர் என்று தாக்கும். தெரியும்.
“நான் உன்ர நண்பன் எண்டு சொல்லுறன், நீ என்ன இடையிடைக்க சேர் சேர் எண்டு சொல்லுறாய்? கோல் மீ ஏதன்.’ என்று அவன் சொன்னது நினைவிலாட, உதடுகள் நெளிந்தன.
‘ப்ச்! டைம்பாஸுக்குப் பழகினாலும் இதில ஒண்ணும் குறைச்சல் இல்ல’ மனம் முறுக்கிக்கொண்டு முணுமுணுத்து.
‘எப்ப முடியும்?’ அவன் விடுவதாக இல்லை என்று விளங்கிற்று. அதுவே இவளை மௌனமாக இருக்க வைத்திட்டு.
‘துர்கா எத்தினை மணிக்கு லெக்ஷ்ர் முடியும்?’ என்று அனுப்பிய வேகத்தில் மீண்டும் அழைத்தான். மீண்டும் மீண்டும் பிடிவாதமாக அழைத்தபடியே இருந்தான்.
‘சரி, நீ கோல் அட்டென்ட் செய்யாத, கேட்ட கேள்விக்குப் பதிலும் போடாத. நான் அங்க நேர வாறன்.’ என்று அவன் அனுப்பிய வேகத்தில், பதிலைத் தட்டி அனுப்பினாள்.
‘சேர் இல்ல இல்ல, நான் லெக்ஷ்ர்ல இருக்கிறன் அதான்’ என்று தட்டியவள், ‘பின்னேரம் ரெஸ்டோரண்ட் வருவன், அப்ப கதைக்கலாம் சேர்.’ என்று தட்டி அனுப்பினாள். மனமோ, ‘அங்க வேலை செய்றது இண்டுதான் கடைசி.’ முணுமுணுத்தது.
ஏதன் பதில் போடவில்லை. அடுத்த இரு மணித்தியாலங்களை இவளைப் பதற்றத்தில் வைத்திருந்தான். வகுப்பில் முழுக்கவனமும் பதிக்க இயலவில்லை. வந்துவிடுவானோ வந்துவிடுவானோ என்று மனத்தை அலைமோத வைத்தான்.
ஒருவாறு வகுப்பு முடிந்து வெளியில் வந்தால் எதிர்ப்புறம் சாலையோரம் அவன் கார் நின்றது. இவள் பார்வையில் கார் பட்ட நொடி அவன் இறங்கியதில், இவள் வரவைப் பார்த்திருந்தான் என்றது தெள்ளெனெத் தெரிந்திட்டு.
நிதானமாகக் காரைச் சுற்றிக்கொண்டு வந்தவன், காரில் சாய்ந்து நின்று, கால்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் போட்டுகொண்டு கைகளை நெஞ்சோடு கட்டியபடி அவளையே ஆழ்ந்து பார்த்து நின்றான்.
error: Alert: Content selection is disabled!!