மாதொரு பாகம் கொண்டான் 18 – 2

வைஷ்ணவியைப் பெண் பார்த்து தாய் கட்டி வைத்தாலும் அவள் மேல் இருந்த ஈர்ப்பும் நேசமும் தான் அவளின் சின்ன சின்ன குறைகளையும் ஏற்று அவள் ஆயுள் வரை பிரிவு என்ற ஒன்றைப் பற்றிய எண்ணத்தை வரவிடாமல் வாழ வைத்தது.

அந்தப் பிடித்தம் இவள் மேல் வராவிட்டால்? ஏற்கனவே கணவன் என்று ஒருவன் அவள் வாழ்வில் வந்து செய்து விட்டுப் போன காயங்கள் ஆறாமல், ‘என் வாழ்வில் நான் எந்த நல்ல ஆண்மகனையும் சந்தித்ததில்லை’ என்று விரக்தியோடு வாழ்பவளின் மனதில் நானும் மோசமான ஆணாகப் பதிந்து போனால்?

வேண்டாம்… அவசரத்திலும் நிலன் மேல் இருக்கும் பரிவிலும் சிந்திக்காமல் ஒரு முடிவை எடுத்து, ஏற்கனவே நொந்திருக்கும் ஒரு பெண்ணை இன்னும் நோகடிக்க வேண்டாம். அதுதான் திருமணம் செய்வது என்ற முடிவுக்கு வந்தாகி விட்டாயிற்றே! என் எண்ணத்துக்கு ஏற்ற, என்னை ஈர்க்கும் பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்வோம் என்று முடிவெடுத்து அவன் ஒதுங்கியிருந்த வேளைதான் அவன் கருத்தை ஈர்த்தாள் சாதனா.

இதுவரை தான் நித்திலனிடம் எப்படி இருக்கிறோம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தவன் கண்ணில், அன்றுதான் சாதனா தன் மகள்களிடம் எப்படிப் பழகுகிறாள் என்பது விழுந்தது.

அன்று மகிக்கு மெலிதான உடல் சூடு இருக்க, அவளை முன்பள்ளிக்கு அனுப்பியிருக்கவில்லை. மயூ உடன் இருந்தால் அவளுக்கும் காய்ச்சல் வந்துவிடக் கூடும் என்று அவளை மட்டும் முன்பள்ளியில் கொண்டு போய் விட்ட ஆதித்யன், சாதனாவை அன்று வேளையாகக் கூப்பிட்டுக் கொள்ளும்படி தாயிடம் சொல்லி விட்டு தவிர்க்கமுடியாத சத்திர சிகிச்சை ஒன்றுக்கு சென்றிருந்தான்.

அது முடிய இன்னொரு அவசர சத்திர சிகிச்சையும் செய்ய வேண்டி இருந்தது. வழக்கமாக இப்படியானால் ஆதித்யன் ஃபோன் எடுத்து சொன்னதும் பரமேஸ்வரிதான் பக்கத்தில் இருக்கும் நம்பகமான ஒருவரின் ஆட்டோவில் சென்று பேத்திகளை அழைத்து வருவார். ஆனால் அன்றென்று அவருக்குக் கால் கொதிப்பு அதிகமாக இருக்க, சாதனா தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.

அதன்படி பரமேஸ்வரி இரட்டையர்களின் முன்பள்ளி ஆசிரியருக்கு அழைப்பு எடுத்து, தன்னால் வர முடியாததால் தான் இன்னொருவரை அனுப்பி வைக்கிறேன் என்று சாதனாவின் பைக் மற்றும் ஃபோன் நம்பர்களை அவரிடம் கொடுத்தார்.

சாதனாவும் அதுவரை தன் தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த மகியைக் கெஞ்சிக் கொஞ்சி இறக்கி விட்டு, பத்திரமாக மயூவை அழைத்து வந்து விட்டாள்.

அதன் பின் மறுபடியும் மகி அவளிடம் தோற்றிக் கொண்டாள். பின் நித்திலனைப் பள்ளியில் இருந்து அழைக்க செல்லும் நேரம் வர மீண்டும் மகியிடம் கெஞ்சல், கொஞ்சல் படலம் முடித்து அவசரகதியில் அவனையும் அழைத்து வந்தாள்.

வழமையாக நித்திலனை நேரே வீட்டிற்கு அழைத்து சென்று உடைமாற்ற செய்து சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டு இங்கே கூட்டி வருபவள், இன்று நேரே இங்கே கொண்டு வந்திருந்தாள். இவ்வளவு நாட்களில் பரமேஸ்வரி எப்படிக் கேட்டுக் கொண்டாலும் மகனை அங்கே சாப்பிட அனுமதிக்காதவள் அன்று மகிக்காக அனுமதித்தாள்.

தொடர்ந்த சத்திரசிகிச்சைகள் காரணமாக ஆதித்யன் கிளினிக்குக்கு அன்று லீவு. மருந்து கட்ட வந்தவர்களுக்கு மாத்திரம் அதற்கென்று இருக்கும் தாதி மருந்தைக் கட்டி அனுப்பிக் கொண்டிருந்தார்.

இரவு எட்டு மணியளவில் ஆதித்யன் சோர்ந்து போய் வீடு வந்தவனை எப்போதும் போல் ஓடிச் சென்று வரவேற்றது நித்திலன்தான். அந்த நேரத்தில் அவனை அதுவும் வெள்ளை ஷேர்ட்டும் நீலக் காற்சட்டையுமாகக் கண்ட ஆதித்யன் குழப்பமாகப் பார்த்தான்.

அவனோ இவனை முறைத்தவன், “மகிக்குக் காய்ச்சல் எண்டு தெரியும்தானே உங்களுக்கு? வேளைக்கெண்டு வரத் தெரியாதோ உங்களுக்கு?” என்று கோபமாய் கேட்கவும் திகைத்தவன்,

“மெல்லிசாதானே சூடு இருந்தது விடிய. மத்தியானம் ஃபோன் எடுத்துக் கேட்கேக்கயும் ஓகே எண்டுதானே சொன்னவா அம்மா? இன்னும் காயுதோ பிள்ளைக்கு?” பரபரத்துக் கொண்டே அவன் சைட் கேட்டைத் திறந்து வேகமாக நடக்க,

“பின்னேரம் பெருசா சுடேல்ல. இப்பதான் சரியா சுடுது. அப்பா அப்பா எண்டு சரியா அனுங்குறா மகி. உங்களுக்கு எடுத்தா நீங்க ஃபோன் எடுக்கேல்ல.” அவனைக் குற்றம் சாட்டிக் கொண்டே இவனும் குட்டி வாலாக அவனைத் தொடர்ந்தான்.

“அம்மா! நான் அப்பவே சொன்னான்தானே பிள்ளையைக் ஹொஸ்பிட்டல் கூட்டிக் கொண்டு போறன் எண்டு! பாருங்கோ, எப்பிடி சோர்ந்து போய் கிடக்கிறாவெண்டு!” மிகுந்த வருத்தத்துடன் ஒலித்த சாதனாவின் குரலைக் கேட்டுக்கொண்டே வந்தான் ஆதித்யன்.

“என்னம்மா பிரச்சனை? பிள்ளைக்கு சரியா ஏலாம கிடக்கோ?” அவன் தாயிடம் விசாரிக்க, மகி அவன் குரல் கேட்டதும் அப்பா என்று அவனிடம் தாவப் பார்த்தாள்.

“செல்லக்குட்டி அப்பா இன்னும் குளிக்கேலயடா. கொஞ்ச நேரம் அன்ட்ரிட்ட இருங்கோ. அப்பா அஞ்சு நிமிஷத்துல ஓடியாறேன்.” என்றவன் நாலுகால் பாய்ச்சலில் ஓடினான். சொன்னது போலவே ஐந்து நிமிடத்தில் குளித்து கைக்குக் கிடைத்த உடையைப் போட்டுக் கொண்டு மகளிடம் ஓடி வந்திருந்தான்.

சாதனாவிடம் இருந்து மகளை வாங்கிக் கொண்டவன் அவள் உடல் சூட்டை பரிசோதித்தான், அது சற்று அதிகமாக இருக்கவே சாதனாவிடம் ஃபெர்ஸ்ட் எயிட் பொக்ஸ் இருக்குமிடம் சொல்லி, தேர்மோ மீட்டரை எடுத்து வர சொல்லிப் பணித்தான்.

அவள் எடுத்து வந்து கொடுக்கவும் அனத்திக் கொண்டிருந்த மகளைக் கொஞ்சிக் கொண்டே டெம்பரேச்சர் செக் செய்ய, அது நூறைக் கடந்து காட்டியது.

“என்ன தம்பி பிள்ளைக்கு?”

“காய்ச்சல் கொஞ்சம் கூடவாத்தானம்மா இருக்கு.”

“விடியவே பிள்ளைக்கு சிரப் குடுத்திருக்கலாம். நீங்கதான் அவ்வளவா காயேல மருந்து வேண்டாம் எண்டிங்கள். இப்ப பாருங்கோ…” என்று அவர் புலம்ப…

“நான் எதிர்பார்க்கேல அம்மா. விடிய பெருசா சூடு இல்லாம இருக்கவும் சும்மா மருந்தைக் குடுக்க வேண்டாமெண்டு விட்டுட்டேன். இப்ப குடுத்துப் பார்ப்பம். விடியவும் குறையாட்டி பிளட் எடுத்து பார்ப்பம்.”

மருத்துவனுக்கே உரிய நிதானத்துடன் அவன் சொல்ல, சுற்றியிருந்தவர்களால் தான் அவனோடு ஒன்றிப் போக முட்டியவில்லை.

பரமேஸ்வரியில் இருந்து மயூ, நிலன் வரை இப்போதே மருத்துவமனை செல்ல வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றனர். அந்தளவில் ஒரே நாளில் மகி சுருண்டு போயிருந்தாள்.

“தம்பி! சொன்னா கேளப்பு. பிள்ளை விடிய இருந்து ஒழுங்கா சாப்பிடவே இல்லை. இந்தப் பிள்ளை சாதனாதான் ரெண்டு நேரமும் வில்லங்கமா ஒரு ஒரு இடியப்பம் தீத்தி விட்டது. இரவுக்கு அதுவும் சாப்பிடேல. இப்பிடியே போனா சரிவராது ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவமப்பு…”

சாதனா, “ஓம் டொக்டர் பிள்ளையைப் பார்க்கவே பயமா கிடக்கு. வார்ட்டுல மறிச்சா, நான் வச்சுக்கொண்டு நிக்கிறன். இப்பவே ஆஸ்பத்திரிக்குப் போவம்.” பரிதவிப்புடன் சொன்னவளை சடாரென்று நிமிர்ந்து பார்த்தான் ஆதித்யன்.

error: Alert: Content selection is disabled!!