அத்தியாயம் 17
அன்று, நந்தினி வீட்டினர் தம் சொந்தபந்தங்களோடு சம்பந்தக் கலப்புக்கு வந்திருந்தார்கள். விருந்துண்டு, எல்லோரும் கலந்து பேசித் திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது. சூப்பர் மார்க்கெட்டைத் திறந்த பிறகு, ஒரு முதலாளியாகவே அவளைக் கைப்பிடிக்க சிவரூபன் ஆசைப்பட்டதில் சரியாக ஒரு வருடம் கடந்து திருமண நாளைக் குறித்திருந்தார்கள்.
சிவரூபனின் உள்ளத்து மகிழ்வுக்கு அளவேயில்லை. அந்த நிமிடமே நந்தினியுடன் பேச ஆசைப்பட்டான். வீடு முழுக்க ஆள்களை வைத்துக்கொண்டு, அதுவும் அவர்கள் எல்லோரும் அவனுக்காக வந்திருக்கையில் தனிமையை நாடிச் செல்ல முடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தான்.
வீட்டில் ஒரு விசேசம், அதற்கான தயார் படுத்தல்கள், ஆள்களின் வருகை, கலகலப்பான பேச்சு, விரைவில் ஒரு நல்லது நடக்கப்போகிறது எனும் எண்ணம் தந்த உற்சாகம் என்று கானவிக்கும் நிறைய நாள்களுக்குப் பிறகு மனம் நல்ல நிலையில் இருந்தது. அந்த மலர்வுடனேயே வந்திருந்தவர்களை வீட்டுப் பெண்ணாகக் கவனித்துக்கொண்டாள்.
செந்தாளனும் அவளைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். வந்திருக்கிறவர்களின் கண் பட்டுவிடும், அமைதியாக இரு என்று புவனாம்பிகை வீட்டுக்குள் அழைத்துச் சென்று இரகசியமாகச் சொன்னதைக் கூடக் கேட்காமல், உடனுக்குடன் சமையற்கட்டை ஒதுக்குவது, சின்னவர்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டு கேட்டுக் கொடுப்பது என்று ஏதோ ஒன்றைச் செய்துகொண்டே இருந்தாள். அதிலேயே நிறைய மாறி இருக்கிறாள் என்று புரிந்து போயிற்று.
நந்தினியின் தமக்கைக்கு இரட்டையர்கள். அவர்கள் இருவரும் வீட்டின் அலங்காரப் பொருள்களை எடுத்து விளையாட முயல்கையில் அவர்களே அறியாமல் அவற்றை அவர்களிடமிருந்து பாதுகாத்து, அவர்களோடு விளையாடுவது என்று அவன் கவனத்தைக் கவர்ந்துகொண்டே இருந்தாள்.
அன்றைய நாளின் விசேசத்துக்காக அணிந்திருந்த சேலை, அவளை இன்னும் அழகியாகக் காட்டியதோடல்லாமல் அவள் வயிற்றையும் நன்றாகவே காட்டிற்று.
அன்றைய விசேசம் முடிந்து, வீட்டை ஒதுக்கி வைத்து எல்லா வேலையும் முடிந்த பிறகு, அன்றிரவு உறங்கச் செல்வதற்கு முதல் அவனையும் அவளையும் நிறுத்திவைத்துச் சுற்றிப்போட்டார் புவனாம்பிகை.
எப்போதும் அவனுக்கு முதுகு காட்டித்தான் படுப்பாள். செந்தாளனும் தொந்தரவு செய்யப் போகமாட்டான். ஆனால், இன்றைக்கு முடியவில்லை. மனம் மனைவியின் அண்மைக்கு ஏங்கிற்று. மனத்தின் தடைகளை உதறி அவளை நெருங்கிப் படுத்து, அவளையும் தன்புறம் திருப்பினான்.
இதை அவள் எதிர்பார்க்கவில்லை போலும். விழிகள் விரிய அவனை நோக்கினாள். அவன் பார்வையும் அவளில்தான். அப்படியே அந்த விழிகளின் மீதே இதழ்களை ஒற்றி எடுத்தான்.
நொடியில் அவளுக்குள் என்னென்னவோ உணர்வுகள் பொங்கின. கோபமா அழுகையா சொல்லத் தெரியவில்லை. இத்தனை நாள்களாக இல்லாமல் இப்போது மட்டும் என்னவாம் என்று மனம் குமுறிற்று!
அதைக் கேட்டுச் சண்டை பிடிக்கும் அளவுக்கு உடலிலும் மனத்திலும் தெம்பில்லாதது போன்றதொரு நிலை. அவன் தந்த முத்தம் அவளைப் பலகீனப்படுத்தியது. தலை கோதி, கன்னம் வருடிய கணவனின் கைகளில் மனம் கரைந்தது. கூடவே கண்ணீர் பெருகிற்று. அதை அவனுக்குக் காட்ட விரும்பாமல் விழிகளை மூடிக்கொண்டாள். அழுகையை அடக்கியதில் முகம் சிவந்து இதழ்கள் துடித்தன.
சில கணங்களுக்கு மேல் அவளை அப்படிப் பார்க்க முடியாமல் அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டான் செந்தாளன். மொத்தமாய் உடைந்தாள் கானவி. ஏன் அழுகிறாள், எதற்கு அழுகிறாள், அவள் நெஞ்சில் பொங்கும் துக்கம் என்ன என்று அவளுக்கே இனம் பிரிக்க முடியவில்லை. இத்தனை நாள்களும் காயப்பட்டுக் கிடந்த மனது, அழுது தன் பாரத்தைத் தீர்க்க முயன்றது.
இப்படி உடைவாள் என்று செந்தாளனும் எதிர்பார்க்கவில்லை. சில கணங்களுக்குச் செயல் இழந்து நின்றான். துக்கமா துயரமா என்று சொல்லத்தெரியா உணர்வொன்று அவன் நெஞ்சையும் தாக்கிற்று. அவள் முதுகை, தலையை என்று வருடிக்கொடுத்தான்.
அவள் அழுகை குறைவதாக இல்லை என்றதும், “போதும் கானவி! உடம்புக்கு ஏதும் வரப்போகுது.” என்றபடி அவள் முகம் நிமிர்த்திக் கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
அப்போதுதான் அவளுக்கு என்ன செய்திருக்கிறோம் என்கிற சுய உணர்வு வந்தது போலும். அவனைப் பாராமல் விலக முயன்றாள். விடாமல் தடுத்து அவள் முகம் பார்த்தான். அழுத முகமும் சிவந்த விழிகளுமாய் இருந்தவளை விலகவிட மனமில்லை. இவ்வளவு நாள்களும் அவர்களுக்குள் இருந்த இடைவெளி போதாதா? மீண்டும் அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு மெல்ல அவள் வயிற்றை வருடிக்கொடுத்தான்.
இதையும் அவள் எதிர்பார்க்கவில்லை. தேகம் கூசிச் சிலிர்க்க முன்பை விட வேகமாக விலகினாள். ஏன் என்கிற கேள்வியோடு அவள் முகத்தைப் பார்த்தவனால் பார்வையை அகற்ற முடியாமல் போயிற்று. அந்தளவில் அழுததையும் தாண்டிக்கொண்டு அவள் முகம் செக்கச் சிவந்திருந்தது. அவன் பார்வையை வேறு தவிர்த்தாள். அவ்வளவில் வெட்கமா? உதட்டோரம் துடித்த சிரிப்புடன் அவள் இதழ்களில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான்.
அதன் பிறகான நாள்களில் கூட அவசியம் தாண்டி இருவரும் பேசிக்கொண்டது மிக மிகக் குறைவு. வாயைத் திறந்து கதைக்க இருவருக்குமே பயம். மீண்டும் ஒரு சண்டை வந்து, மீண்டும் காயப்பட்டு, மீண்டும் கோபப்பட்டு இருக்கும் இந்த இணக்கத்தைக் கெடுத்துக்கொள்ள இருவரும் தயாராய் இல்லை. ஆனால், உறக்கம் அவன் கையணைப்பில் என்றாயிற்று. மனத்தினுள் இன்னும் அவன் தந்த காயங்கள் ஆறாமலேயே கிடந்தாலும் அவளால் வேண்டாம் என்று விலக முடியவில்லை.
அவள் ஏழாம் மாதத்தைத் தொட்ட வேளையில் ஒரு நாள் செந்தாளனைச் சந்திக்க, அவன் கற்பிக்கும் தனியார் கல்வி நிலையத்துக்கு வந்திருந்தான் கடம்பன். உள்ளே சென்று அவனைச் சங்கடப்படுத்த விரும்பாமல், எதிரில் இருக்கும் தேநீர்க் கடையடியிலேயே காத்திருந்தான்.
வெளியே வந்த செந்தாளன், கடம்பனைக் கண்டுவிட்டுப் புருவங்களைக் சுருக்கினான்.
அவனை நோக்கி வந்தவாறே, “சொறி அத்தான், உங்களை எங்க தனியாப் பாக்கிறது எண்டு தெரியாமத்தான் இங்க வந்தனான்.” என்றான் கடம்பன்.
“அது பரவாயில்லை. ஆனா ஏன்? வீட்டுக்கு வரவேண்டியதுதானே.”
“இல்ல. அது அக்காக்குத் தெரியாமக் கதைக்கோணும்.”
“அப்பிடி என்ன? சொல்லும்.”
“அத்தான் அது… உங்களுக்குப் பிடிக்காது எண்டு தெரியும். ஆனா, அக்கா கலியாணம் நடக்கிறதுக்கு முதலே சொல்லியிருக்கிறாள். அவளுக்கு வளைகாப்புச் செய்ய விருப்பம் எண்டு. அதான், நீங்க ஓம் எண்டு சொன்னா அதுக்கான வேலைய நான் பாப்பன்.” என்றான் தயக்கத்தோடு.
செந்தாளனின் முகம் மாறிற்று. அதிலேயே அவன் மறுக்கப்போகிறான் என்று தெரிந்து, “அது பெருசா இல்ல அத்தான். வீட்டில சும்மா வெளிக்கிட்டு, ஃபோட்டோஸ் எடுக்க மட்டும்தான். பிறகு பிற்காலத்தில பாக்கச் சந்தோசமா இருக்கும் எல்லா. அதுதான்…” என்றான் அவசரமாக.
எதற்கும் இணங்குவதாக இல்லை செந்தாளன். “நீரும் சின்ன பிள்ளை இல்ல கடம்பன். அதால நான் சொல்லுறது உம்மட வாழ்க்கைக்கும் உதவும் எண்டு நினைக்கிறன். எங்கட சடங்கு சம்பிரதாயத்தில எந்தக் காலத்திலையும் இந்த மெஹந்தி பங்க்ஷன், வளைகாப்பு எல்லாம் இருந்ததே இல்ல. அதைச் செய்ற மனுசர் கடவுள் நம்பிக்கையோட, ஒரு முக்கியமான சடங்கா நினைச்சு, முறையாச் செய்ற ஆக்கள். அதை நாங்க பாத்து, அவேன்ர நம்பிக்கைகளை மதிக்கோணுமே தவிர, நாங்களும் கொண்டாடுறோம் எண்டு அதக் கேலிக் கூத்தாக்கக் கூடாது! அது, அதை நம்பிக்கையோட செய்ற மனுசரையும் அவமதிச்சு, அந்த நிகழ்வையும் அவமதிக்கிற வேலை. அது அழகில்லை!” என்றான் அழுத்தம் திருத்தமாக.
அவன் குரலில் இருந்த கடுமை கடம்பனின் வாயைக் கட்டிப்போட்டது. தேவையில்லாத வேலை பார்த்துவிட்டோமோ என்கிற பயமும் உண்டாயிற்று. அதில், “சரி அத்தான்.” என்றான் வேறு பேசாமல்.
வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த செந்தாளனுக்கு இந்தக் கொஞ்ச நாள்களாக இருந்த இதமான மனநிலை தொலைந்த உணர்வு. வீடு வந்ததும் அறைக்குள் புகுந்தவன் கானவியை அழைத்தான்.

