இடைவெளி வலிக்குதே 18 – 1

அத்தியாயம் 18

அன்றிலிருந்து அவள் முகம் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க ஆரம்பித்தான் செந்தாளன். உன்னோடு வாழ வேண்டும் என்று கட்டாயமில்லை என்று அவள் சொன்னது அவனை மிகவுமே பாதித்திருந்தது. எவ்வளவு தைரியம் அவளுக்கு! அவனே அப்படியெல்லாம் யோசித்ததில்லை. அதைவிட அந்தளவுக்கு மோசமானவனா அவன்? அவனுக்குள் ஒருவித எரிமலைக் குளம்புகள் கொதித்துக்கொண்டே இருந்தன.

இவர்களைக் கவனித்த வீட்டினருக்கு மீண்டும் கவலையாயிற்று. இருவரிடமும் விசாரித்தும் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

“பிள்ளையே பிறக்கப்போகுது. கொஞ்சம் யோசிச்சுப் பொறுப்பா நடக்கப்பாருங்கோ.” என்று இருவருக்கும் பொதுவாகச் சொன்னார் புவனாம்பிகை. எத்தனை தரம்தான் எடுத்துச் சொல்வது என்கிற சலிப்பு அவரிடம்.

தான் அமைத்துக்கொடுத்த வாழ்க்கையில் ஏதும் நடந்துவிடுமோ என்று யோசிக்குமளவுக்கு மனோகரனுக்குப் பயம் பிடித்திருந்தது. ஏற்கனவே ஒரு குழந்தை இல்லாமல் தவிக்கிறார்கள். இதில் இந்தப் பாவமும் சேருவதா? செந்தாளனிடம் அவனால் எதையும் பேச முடியாது. கானவி தங்கையைப் போன்றவள். அவளிடமே நாசுக்காகப் பொறுமையாகப் போகும்படி சொன்னான்.

கண்ணீர் அரும்பத் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள் அவள். வேறு என்னதான் செய்வது? அவள் சொன்னதைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறவனுக்கு ‘காசுக்குப் புருசனா வாழுறதுக்கு வேற எவனையாவது பாக்கச் சொல்லு’ என்றதெல்லாம் ஒன்றுமில்லை போலும்.

இப்படி இருக்கையில்தான் கடம்பனுக்குப் பயணம் சரி வந்திருந்தது. அதைவிட உடனடியாக இருபத்தியைந்து இலட்சங்கள் தர வேண்டும் என்று ஏஜென்சி சொன்னது அவன் வீட்டினருக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. பணம் தயார் என்றால் உடனேயே ஏற்றுவார்களாம்.

கடம்பன் ஜெர்மன் வந்து இறங்கிய பிறகுதானே பணம் என்று சொல்லியிருந்தீர்கள் என்று அவர்களின் மாமா என்ன பேசிப் பார்த்தும் ஏஜென்சி அசையவில்லை. இங்கு இருபத்தியைந்து என்றும் அவனை அவர் கையில் ஒப்படைக்கையில் மிகுதிப் பணத்தைத் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். கடைசியில் எப்படியாவது அந்தப் பணத்தைக் கொடுத்து அனுப்பி வையுங்கள், நான் மிச்சத்தை இங்கே பார்க்கிறேன் என்றுதான் கணேசனும் சொன்னார்.

அருந்தவராஜாவிடம் மருந்துக்கும் பணமில்லை. இருந்ததை எல்லாம் போட்டுத்தான் தென்னந்தோப்பை வாங்கியிருந்தார். ஆனாலும், அறிந்தவர் தெரிந்தவரிடம் அவசரத்துக்கு மாறி, மனைவியின் நகைகளை ஈடு வைத்து என்று பதினைந்து புரட்டியவரால் மிகுதிப் பத்தைப் புரட்டவே முடியாமல் போயிற்று.

கானவிக்கும் எந்த வழியும் தெரியவில்லை. அவளிடமே சீதனப்பணம் உண்டுதான். அது நிலையான வைப்பில் இருந்தது. அதை உடைத்து எடுப்பது என்றாலும் பத்து நாள்களாவது எடுக்கும். ஏஜென்சி இரண்டு நாள்களில் பதில் சொல்லச் சொல்லியிருந்தார்கள்.

என்ன யோசித்தும் எந்த வழியும் புலப்படவில்லை. ஆனால், கணவனிடம் இருப்பது அவளுக்குத் தெரியும். அதுவும் அவர்களுக்கென்று தனியாக வீடு கட்டச் சேமித்ததை சிவரூபனின் சுப்பர் மார்க்கெட் வேலைகளுக்காகக் கைமாற்றாகக் கொடுக்க இருக்கிறான் என்று அவர்கள் பேசிக்கொண்டது அவள் காதிலும் விழுந்திருந்தது.

எந்தக் காலத்திலும் அவன் பணத்தைத் தொடவே கூடாது என்கிற வைராக்கியத்தோடு இருந்தவளுக்கு அவனிடம் கேட்பதை நினைக்கக்கூட முடியவில்லை. அவர்களுக்குள் சுமூகமான உறவுமில்லை. கேட்டால் தருவானா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி!

என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று திரும்ப திரும்ப யோசித்தவளுக்குக் கேட்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

அவள் ரோசம் பார்க்கும் நேரம் இது இல்லையே! கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இந்தப் பயணத்துக்காகக் காத்திருக்கிறான் கடம்பன். அவனுக்காகத் தன் தயக்கம், ரோசம் எல்லாவற்றையும் தள்ளி வைத்தவள், அன்று மாலை வீடு வந்த கணவனிடம் கடம்பனுக்குப் பயணம் சரிவரப்போவதைச் சொன்னாள்.

இவ்வளவு நாள்களும் முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிந்துவிட்டுத் தன் தம்பி பயணம் புறப்படுகிறான் என்றதும் பேசுகிறாள் என்கிற கோபத்தில், “அதை ஏன் என்னட்டச் சொல்லுறாய்?” என்றான் அக்கறையற்றவன் போன்று.

அவளுக்கு முகம் கன்றிப் போயிற்று. இதற்கே இப்படிச் சொல்கிறவன் பணம் கேட்டால் மட்டும் தரவா போகிறான்? இன்னும் நன்றாகச் சுடுவதற்குச் சொல்லுவான். தெரிந்தும் கேட்பதா? கேட்காவிட்டால் வேறு வழி? இத்தனை நாள்களும் யோசனையே இல்லாமல் செலவு செய்ததெல்லாம் நினைவில் வந்து குன்ற வைத்தது. அவற்றையாவது சேமித்திருக்கலாம். மாமாக்கள் அனுப்புகிறார்கள் என்றதும் வந்த வழியையும் யோசிக்காமல், போகும் வழியையும் யோசிக்காமல் இருந்துவிட்டுத் தேவை என்று வருகையில் வெறுங்கையுடன் நிற்கிறாள். தொண்டை அடைக்கக் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அந்தப் பார்வை அவன் நெஞ்சையும் குடைய, “சரி, சொல்ல வந்ததச் சொல்லு.” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாமல்.

“இல்ல. ஒண்டும் இல்ல!” என்று முணுமுணுத்தாள்.

“இந்த ரோசத்துக்கு ஒண்டும் குறைச்சல் இல்ல.” என்றான் அவன் உடனேயே. அதற்கும் அவள் முகம் கசங்குவதைக் காணமுடியாமல், “இவ்வளவு நாளும் முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிஞ்சவள் தன்ர தம்பிக்கு ஒண்டு எண்டதும் வந்து கதைச்சா கோபம் வராதா? அதுதான்… சரி சொல்லு, நான் ஏதும் செய்யோணுமா?” என்றான் தன்மையாக.

அதற்கே அவளுக்குக் கண்ணைக் கரித்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு, “அவனுக்குக் கொஞ்சம் காசு தேவைப்படுது.” என்றாள்.

“என்னத்துக்கு? அவன் அங்க போய் இறங்கின பிறகுதான் காசு எண்டுறதுதானே பேச்சு.” என்றான் புருவங்கள் சுருங்க.

“ஓம், முதல் அப்பிடித்தான் சொன்னவே. இப்ப இஞ்ச(இங்க) இருபத்தஞ்சு வேணுமாம். அப்பா பதினஞ்சு பிரட்டிட்டார். இன்னும் பத்து வேணும். அதான்…” என்று அவள் சொன்னது அவனுக்கு மிகுந்த அதிர்ச்சி.

இருபத்தியைந்து என்பது சின்ன தொகையில்லை. கொஞ்ச நாள்களுக்கு முதல் தென்னந்தோப்பை வாங்கிப் போட்டவரால் இது முடியவே முடியாது. அப்படியும் புரட்டியிருக்கிறார் என்றால் நிச்சயம் வட்டி குட்டி என்று ஆபத்தான வேலைகள்தான் பார்த்திருப்பார். இதில் மிகுதிப் பத்துக்கு ஓடுப்பட்டுத் திரிகிறார்கள். ஒன்று நம்மால் முடியுமா என்றுகூடவா யோசிப்பதில்லை?

“உங்க எல்லாருக்கும் என்ன விசரா பிடிச்சிருக்கு? அவன் அங்க போனபிறகு காசு எண்டதாலதான் என்னவாவது செய்ங்கோ எண்டு நானும் விட்டுட்டு இருந்தனான். இது ஏமாத்தப் போறாங்கள் எண்டு உங்களுக்கே விளங்கேல்லையா? இப்ப எல்லா ரூட்டையும் பிடிச்சிட்டாங்கள் கானவி. முந்தி மாதிரி இல்ல. எனக்குத் தெரிஞ்ச சேரின்ர தம்பி, இப்பிடித்தான் வெளிநாடு எண்டு வெளிக்கிட்டு, எங்கயோ இடையில மாட்டுப்பட்டு, ஜெயில்ல நிண்டு, ஒரு வருசமாப் படாத பாடெல்லாம் பட்டு, என்னவோ ஒரு தொத்து வியாதியோட வந்து நிக்கிறான். காசும் போய், உடம்பும் கெட்டு, என்ன நோய், அதுக்கு என்ன வைத்தியம் பாக்கிறது எண்டு கூடத் தெரியாம அழுதுகொண்டு இருக்கினம். இப்பிடி நீங்களும் ஏமாறப் போறீங்களா?” என்றான் கோபத்தோடு.

“இல்ல, இந்த ஏஜென்சி அங்க நிறையப் பேரைக் கொண்டு வந்து இறக்கி இருக்கினமாம். கட்டாயம் இந்த முறை வந்திடுவானாம் எண்டு மாமா சொன்னவர்.” என்றாள் அவள் நம்பிக்கையோடு.

“லூசாடி நீ? உங்களை எல்லாம் நம்ப வைக்கிறதுக்காகவே ஆக்களை வச்சுச் சொல்லுவிப்பாங்கள். அதை எல்லாம் நம்புவீங்களா?”

“இல்ல, மாமா அங்க வந்து இறங்கின பெடியலைச் சந்திச்சுக் கதைச்சவராம். இங்க வெளிக்கிட்டா ஒரு கிழமையில் அங்க போயிடுவினமாம்.”

“அப்ப பிறகு என்ன? கொண்டுவந்து இறக்கின பிறகே காசு தாறமாம் எண்டு சொல்லச் சொல்லு!”

“அது இங்க இருக்கிற செலவுகளுக்கு…”

error: Alert: Content selection is disabled!!