இடைவெளி வலிக்குதே 19 – 1

அத்தியாயம் 19

அவன் நேராக வந்து நின்றது அவர்களின் தோட்டத்தில்.

“என்னய்யா, என்ன இந்த நேரம் வந்து நிக்கிறீங்க?” அந்த நேரத்தில் அவனை எதிர்பாராத சற்குணத்தார் வினவினார்.

“ஒண்டும் இல்லை அப்பா. நெடுக நீங்கதானே இங்க கிடந்து காயுறீங்க. வீட்டை போங்க, மிச்ச வேலைய நான் முடிச்சுக்கொண்டு வாறன்.” என்றான் அவர் முகம் பாராமல்.

அதுவே என்னவோ சரியில்லை என்று சொல்ல, “அதெல்லாம் பெருசா ஒண்டும் இல்ல. இந்தச் சின்ன துண்டுக்கு மட்டும் தண்ணி விட்டாக் காணும். நானே பாக்கிறன். நீங்க போய் வீட்டில இருங்கோ. நாளைக்குப் பள்ளிக்கூடம் இருக்கெல்லா.” என்றார் அவர்.

“பரவாயில்ல. நீங்க போங்கோ!” என்று அவன் சற்றே வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துவிடவும் அதற்குமேல் மறுக்காமல் சரி என்றுவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.

அது அவர்களின் மிளகாய்த் தோட்டம். மோட்டாரிலிருந்து பாய்ந்து வந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக வந்துகொண்டிருந்தது. திறந்துவிட வேண்டிய பாத்திகளைத் திறந்துவிட்டு, அடைக்க வேண்டிய பாத்திகளை மண்ணால் அணைபோட்டு அடைத்து என்று கைகள் வேலை பார்த்தாலும் சிந்தனை நடந்த பிரச்சனையிலேயே சிக்குண்டு நின்றது.

அவன் ஒன்றும் அப்படிச் சொல்ல வேண்டும் என்றோ, உணர்ந்தோ சொல்லவில்லை. வார்த்தைகள் வளர்ந்ததால் வந்துவிட்டிருந்தது. சொல்லியிருக்கக் கூடாது என்று மிக நன்றாகவே தெரிந்தது. ஆனால், அவளும் அவ்வளவு பிடிவாதம் பிடித்திருக்கக் கூடாது!

அவன் வெளியில் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறவன். நிறையப்பேரோடு உரையாடுகிறவன். அப்படி உரையாடிய பொழுதுகளில் எல்லாம் அவன் அறிந்துகொண்டது, ஏஜென்சி மூலம் போவதெல்லாம் இப்போது குதிரைக்கொம்பு என்பதைத்தான். அதைக் காட்டிக்கொள்ளாமல் எளிய மக்களை நம்ப வைத்து, அவர்களிடம் மிச்சம் சொச்சமாக இருக்கும் காசுகளை எல்லாம் பிடுங்கிக்கொண்டு ஏஜென்சிக் காரர்கள் தலைமறைவாகிவிட, இங்கே அந்தக் குடும்பம் தெருவில் நிற்பார்கள். அவனுக்குத் தெரிந்தே எத்தனையோ குடும்பங்கள்.

அப்படியே தப்பித்தவறி வெளிநாடு சென்று இறங்கினாலும் ‘உங்கள் நாட்டில் யுத்தம் முடிந்துவிட்டது’ என்கிற காரணத்தைச் சொல்லி, பெரும்பான்மை நாடுகள் அகதித் தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை. நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிடுவார்கள். வெளிநாடு சென்று பிடிபட்டுத் திரும்பி வந்தவர்கள் ஒரு சாரார் என்றால், அப்படி வரவும் முடியாமல், தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தாரிடம் தன் நிலையைச் சொல்லவும் முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டவர்களைக் கூட அவனுக்குத் தெரியும்.

இதையெல்லாம் அறிந்த பிறகும் எப்படிச் சம்மதிப்பான்?

இதில் அவன் சொல்வதைக் கொஞ்சமும் கேளாமல், என்னவோ கடம்பன் நன்றாகவே வந்துவிடக் கூடாது என்று அவன் நினைப்பது போன்று அவள் முரண்டு பிடிக்கவும் வார்த்தைகளை விட்டுவிட்டான்.

இல்லாத வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுச் செய்துவிட்டு, நன்றாக இருட்டிய பிறகு வீட்டுக்கு வந்தபோது அவள் இல்லை.

கடம்பனுக்குப் பயணம் சரி வந்திருப்பதால் வந்து அவர்கள் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு போகிறானாம் என்று சொன்னார் புவனாம்பிகை.

அப்படி, அவன் சொன்ன வார்த்தையைப் பிடித்துக்கொண்டு போவாள் என்று நிச்சயம் அவன் எதிர்பார்க்கவில்லை. கண்மண் தெரியாத கோபம் ஒன்று சுழற்றி அடிக்க அப்படியே அமர்ந்துவிட்டான்.

வீட்டுக்கு வந்த கானவி, கொண்டுவந்த நகைகளைக் கொண்டுபோய் அருந்தவராஜாவிடம் நீட்டினாள். மொத்த நம்பிக்கையையும் இழந்து, இன்னும் என்ன செய்வது என்று தெரியாது உடைந்து அமர்ந்திருந்தவர், கேள்வியோடு பார்த்தார்.

“இதையும் அடகு வச்சுப்போட்டுக் கடம்பனுக்குப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ங்கோ அப்பா.”

“இருக்கிற பிரச்சனைகள் போதாது எண்டு நீங்களும் புதுசா ஒண்டை ஆரம்பிக்காதீங்கோ பிள்ளை. அதெல்லாம் கூடாது. கொண்டுபோய் உள்ளுக்க வைங்கோ.” என்றார் அவர் சோர்ந்த குரலில்.

இப்போதே ஊர் முழுக்கக் கடன் பட்டாயிற்று. இதில் அவளுக்குக் கொடுத்ததையும் எடுப்பதா என்று என்னவோ மனம் விட்ட நிலை அவருக்கு. வெளிநாட்டுக்குப் போய்விட்டால் மகன் பற்றிய கவலை தீர்ந்துவிடும் என்று பார்த்தால் எங்கே?

அந்தத் தென்னந்தோப்பை வாங்காமல் இருந்திருக்க இந்தப் பிரச்சனை வந்தே இருக்காதே என்று மனம் அங்கலாய்த்தது. விற்றவரிடம் சென்று திருப்பித் தரலாமா, கொஞ்சம் பணம் குறைத்துத் தந்தால் கூடப் போதும் என்று கேட்டுப் பார்த்திருந்தார்.

‘நானே அவசரத் தேவைக்குத்தான் வித்தனான். வேற ஆராவது கேட்டாச் சொல்லுறன்.’ என்றுவிட்டார் அவர்.

“ஏனப்பா கூடாது? அமையிற நேரம் ஏற்பாடு செய்யாம விட்டுப்போட்டுப் பிறகு காலத்துக்கும் இருந்து கவலைப்படுவீங்களா?” தந்தையின் மனமறிந்தவளாக இதமான குரலிலேயே வினவினாள்.

“அதுக்காகச் சீதனமாத் தந்ததை எடுக்கிறதாம்மா? அவருக்குப் பலன் இருந்தா இன்னொரு முறை சரியா வரும்.” என்றார் நம்பிக்கையே இல்லாத குரலில்.

“அப்பவும் இதே மாதிரி வேற ஏதாவது பிரச்சினைகள் வந்து நிக்காது எண்டு எப்பிடி அப்பா சொல்லுவீங்க? பிறகு இன்னொரு சந்தர்ப்பம் அமையட்டும் எண்டு பாத்துக்கொண்டு இருப்பீங்களா?”

அதற்கு அவரிடம் பதில் இல்லை. அதற்காக அவள் நகைகளில் கை வைக்கவும் விருப்பம் இல்லை. மனைவியின் சகோதரர்களிடம் பணமில்லை என்று கேட்கவும் முடியவில்லை. அவர்கள் இவ்வளவு காலமும் இவர்களுக்கு உதவி செய்து, மகனை எடுத்துவிட நினைப்பதே பெரிய விடயம். இதில், இங்கே குடுக்கப் பணம் இல்லை என்று எப்படிச் சொல்லுவார்? “காசு இருக்கா அத்தான்? இல்ல, அனுப்புறதா?” என்று கணேசன் கேட்டிருந்தார்தான்.

இல்லை என்று சொல்லத் தலையிறக்கமாக இருந்ததில் ‘அதெல்லாம் சமாளிக்கலாம்’ என்று சொல்லியிருந்தார்.

பதில் சொல்லாது அமர்ந்திருந்த தந்தையோடு பேசுவதில் பிரயோசனம் இல்லை என்று உணர்ந்த கானவி, “நீயாவது பிடியடா.” என்று கடம்பனிடம் கொடுத்தாள்.

“இல்ல வேண்டாம். சும்மாவே அங்க உனக்குப் பிரச்சினை. இதில இதையும் தருவியா?” என்றான் அவன்.

“என்னடா, ஆளாளுக்குப் பிரச்சினை பிரச்சினை எண்டு சொல்லுறீங்க? அப்பிடி அங்க என்ன பிரச்சினை எனக்கு? ஒண்டும் இல்ல. நானும் ஒண்டும் இத விக்கச் சொல்லிச் சொல்லேல்லையே. அடவு வை. நீ ஜேர்மனுக்குப் போனதும் மாமா எப்பிடியும் உனக்கு வேல தேடித் தந்திடுவார். உழைச்சுக் காசை அனுப்பு. அப்ப நான் திருப்பிடுவன்தானே.” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.

உண்மையில் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவற விடுவதை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இத்தனை வருடமும் எப்போது எப்போது என்று காத்திருந்த தருணம். கண் முன்னால் வந்து நிற்கிறது. பற்றிக்கொண்டு ஏறிவிட முடியாமல் நிற்கிறான். அப்படி இருந்துமே தமக்கையின் நகையில் கை வைக்கப் பிடிக்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் இருந்து தன் மறுப்பைக் காட்டினான்.

“அம்மா சொல்லுங்கோம்மா. ஒரு அவசரத்துக்குத்தானே குடுக்கிறன். திருப்பி எனக்கேதானே வரப்போகுது. பிறகும் இதில என்ன இருக்கு இவ்வளவு யோசிக்க?”

அவருக்கு உண்மையில் என்ன சொல்வது என்று தெரியாத நிலை. கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடக் கூடாது என்று மட்டும் பரிதவித்தார். கணவரைப் பார்த்தார். அவர் முற்றிலுமாக நம்பிக்கை இழந்தவராக எங்கோ பார்வையைப் பதித்து அமர்ந்திருந்தார்.

“உனக்கு இருபத்திநாலு வயசு கடம்பன். இவ்வளவு காலமும் சும்மா இருந்ததே போதுமடா. கிடைக்கிற சான்சை மிஸ் பண்ணாத. அங்க சிவா மச்சானுக்குக் கலியாணமே நடக்கப் போகுது. நீ இப்பவும் இந்த சான்சை மிஸ் பண்ணிப்போட்டு அடுத்த சந்தர்ப்பம் எப்ப எண்டு பாத்துக்கொண்டு நிப்பியா?” என்றாள் கானவி கவலையோடு.

சிவரூபனின் பெயர் அவனிடம் வேலை செய்தது. அவனுடைய ஏளனப் பார்வைகள், அலட்சிய நடத்தைகள், குத்திப் பேசுவது எல்லாம் கண்முன்னே வந்து போயின. நிமிர்ந்து தமக்கையைப் பார்த்தான். பின், “என்னோட வா, உன்னோட கதைக்கோணும்.” என்று அவளைத் தனியாக அழைத்துச் சென்றான்.

error: Alert: Content selection is disabled!!