தம் கவலையில் மூழ்கி இருந்த பெற்றோர் இவர்களைக் கவனிக்கும் நிலையில் இல்லை.
இங்கே அறைக்குள் வந்ததும், “நான் இந்த நகையை வாங்கோணும் எண்டால் அங்க என்ன நடந்தது எண்டு நீ உண்மையச் சொல்லோணும்.” என்றான் பார்வையில் கூர்மையுடன்.
“அங்க என்ன…” என்றவளைப் பேச விடாது, “அக்கா! அம்மா அப்பாட்டச் சொன்ன மாதிரி ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் எண்டு நினைக்காத. இங்க இன்னும் நாங்க என்ர பயணத்துக்கு ரெடியே இல்ல. ஆனா நீ, ‘எனக்குப் பயணம் சரி வந்திட்டுது, அதால அக்காவைக் கூட்டிக்கொண்டு போறன்.’ எண்டு சொல்லு எண்டு சொன்னனீ. அத்தானோட கதைக்கவும் விடேல்ல. அதால ஒண்டையும் மறைக்காமச் சொல்லு.” என்றான் கண்டிப்புடன்.
அவளுக்கும் அவனிடம் சொல்லி ஆறத்தான் மனம் உந்திற்று. ஆனால், அதையும் சொன்னால் இப்போதே வாங்க மறுப்பவன் கடைசி வந்தாலும் அவள் நகையைத் தொடவே மாட்டான்.
அதில் எல்லாவற்றையும் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு, “புதுசா ஒரு பிரச்சினையும் இல்லையடா. இன்னும் நாங்க சமாதானம் ஆகேல்ல. எனக்கு அவர் அண்டைக்கு அப்பிடிக் கதைச்சது கோவம். அவருக்கு அவர் அவ்வளவு சொல்லியும் நான் வந்து இங்க நிண்டுட்டன் எண்டுற கோவம். இதுக்க திரும்பவும் எனக்கு இங்க வர விருப்பமா இருந்ததடா. சும்மா கேட்டா வயித்தில பிள்ளையோட அலையாத எண்டு சொல்லுவினம். அதோட, நான் என்ர நகையைத் தந்தா காசு வந்திடும் எல்லாடா. அதான், உனக்குப் பயணம் சரி வந்திட்டுது எண்டு சொல்லிக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னனான்.” என்று அவன் நம்புவது போன்று சொன்னாள்.
“எனக்கு நம்பிக்கை இல்ல. வேற என்னவோ இருக்கு?
“அப்பிடி என்னடா வர இருக்கு? என்னதான் அவர் கதைச்சதால மனவருத்தங்கள் இருந்தாலும் அவர்தான் எனக்கு எல்லாமே. அதால யோசிக்காத கடம்பா.” தமக்கையின் அந்தப் பேச்சு அவனைக் கொஞ்சம் நம்ப வைத்தது.
ஆனாலும், “நீ நகையைக் கொண்டுவந்த கதையை
நான் அத்தானிட்டச் சொல்லுவன். அவரும் ஓம் எண்டு சொன்னாத்தான் வாங்குவன்.” என்றான் அவளையே பார்த்தபடி.
உள்ளே படபடத்தாலும், “தாராளமாச் சொல்லு. அவருக்குச் சொல்லிப்போட்டுத்தான் கொண்டு வந்தனான்.” என்று அடித்துச் சொன்னாள் கானவி.
அது ஒரு நம்பிக்கையைத் தந்தாலும் அவன் மனத்தின் நெருடல் தீரேன் என்றது. அவள் மனத்தையே அலசுகிறவன் ஒன்று அவளையே பார்த்தான்.
அது சிரிப்பை வரவழைத்துவிட, “என்னடா பார்வை இது? உண்மையா பிரச்சினை ஒண்டும் இல்லை. இத வாங்கு!” என்று பிடிவாதமாக அவன் கையில் திணித்து, “ஆனா ஒண்டு. நீ வெளிநாட்டுக்குப் போயும் இங்க இருக்கிற மாதிரி ஊர் சுத்துறேல்ல கடம்பா. எனக்குக் கலியாணம் நடக்கிற வரைக்கும் நாங்க எவ்வளவு பொறுப்பில்லாம வாழ்ந்தோம் எண்டு எனக்கும் தெரியேல்லையடா. அங்க போன பிறகுதான் நிறைய விளங்குது. நீ நல்லா உழைக்கோணும். முன்னுக்கு வரோணும். நகைய வேகமாத் திருப்போணும். அப்பா பட்ட கடனை எல்லாம் நீதான் தீர்க்கோணும். இதை எல்லாம் மனதில வச்சுக்கொண்டு வாங்கு.” என்று அறிவுறுத்தினாள்.
அதன் பிறகு அவன் மறுக்கவில்லை. விழிகள் மெலிதாகப் பனிக்கத் தமக்கையைப் பார்த்தான். திடீர் என்று அவர்கள் இருவரும் பெரியவர்களாகி, பக்குவப்பட்டுவிட்டது போன்றதொரு தோற்றம். என்னவோ நெஞ்செல்லாம் பெரும் பாரம். இது எல்லாவற்றுக்கும் தீர்வு அவன் வெளிநாடு செல்ல வேண்டும், உழைக்க வேண்டும், பொறுப்பானவனாக மாற வேண்டும். அப்போதுதான் அவளுக்கும் மதிப்பு, அவனுக்கும் மதிப்பு.
“நீயும் மேக்கப்பை விட்டுடாத அக்கா. அதில முன்னுக்கு வரப்பார். எங்களைக் கீழா பாத்த எல்லாரும் வாயில விரலை வைக்கிற அளவுக்கு நாங்க முன்னேற வேணும்.” என்று அவன் சொன்னபோது, கண்ணீர் துளிர்த்துவிடாமலிக்கப் பெரும் பாடுபட்டுவிட்டாள் கானவி.
அவளிடம் சொன்னது போலவே செந்தாளனுக்கு அழைத்து, “நகைகளை அக்கா தாறதுக்கு ஓம் எண்டு சொன்னதுக்கு நன்றி அத்தான். ஆனா, கெதியில திருப்பித் தந்திடுவன்.” என்று தயக்கத்தோடு சொன்னான் கடம்பன்.
அப்போதுதான் சொன்னது போலவே நகைகளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறாள் என்று விளங்கிற்று செந்தாளனுக்கு. அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல், “அதெல்லாம் பரவாயில்ல. கவனமாப் போய்ச் சேரும்.” என்று நல்லமாதிரியே சொல்லிவிட்டு வைத்தான்.
உண்மையில் அதன் பிறகுதான் மனத்தின் கலக்கம் அகன்றது கடம்பனுக்கு. அவ்வளவு நேரமாகக் கணவன் ஏதும் சொல்லிவிடுவானோ என்று நெஞ்சு தடதடக்க கடம்பனையே பார்த்திருந்த கானவியும், “இப்ப நம்புறியா? இனியாவது போ, போய்ப் பாக்க வேண்டிய அலுவல்களைப் பார்!” என்று அனுப்பி வைத்தாள்.
ஒரு வழியாகத் தாய் சகோதரியின் கண்ணீரோடு கடம்பன் பயணம் புறப்பட்டான். பெண்கள் இருவருக்கும் துணைக்குப் பெரியப்பாவின் மகன் திருக்குமரனை விட்டுவிட்டு, அயலட்டையிலும் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அருந்தவராஜாவும் அவரின் தமையனாரும் கடம்பனோடு கொழும்புக்குப் புறப்பட்டனர்.
அடுத்தநாளே ஏஜென்சி அவனை விமானம் ஏற்றியிருந்தது.
என்ன நடக்குமோ, எப்படி இருக்கிறானோ, எப்போது போய்ச் சேருவானோ என்று ஒரு வாரத்துக்கு இவர்களைத் தவிக்க வைத்துவிட்டு ஜேர்மன் சென்று இறங்கினான் கடம்பன்.
ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடினர் வீட்டினர். அவர்கள் ஊர் அம்மனுக்குப் பொங்கல் வைத்தார் விசாலாட்சி. என்னதான் வந்துவிடுவான், பயப்படாதீர்கள் என்று கணேசன் ஆயிரம் நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லியிருந்தாலும் தப்பித்தவறி ஏமாந்துவிட்டாலோ, திரும்பி வந்துவிட்டாலோ என்னாவது என்கிற கலக்கம் அப்போதுதான் தீர்ந்து போயிற்று. எவ்வளவு கடன் அவர்களைச் சுற்றியிருந்தாலும் இனி மீண்டு விடுவோம் என்கிற நம்பிக்கை பிறந்தது.
அருந்தவராஜா செந்தாளனுக்கு அழைத்து விடயத்தைப் பகிர்ந்துகொண்டார். அவனும் எதுவும் காட்டிக் கொள்ளாது சந்தோசம் என்றான்.
“நன்றி தம்பி, அவசரத்துக்கு நகையை வைக்க ஓம் எண்டு சொன்னதுக்கு. ஊர் முழுக்கக் கடன் பட்டாச்சு. தப்பித்தவறி இந்தப் பயணம் சரி வராமப் போயிருந்தா இருக்கிற காணி நிலங்களை விக்கிற நிலமதான். இதில மகளின்ர நகையையும் எடுக்கிறதா எண்டு இருந்தது. ஆனா, இண்டைக்கு நீங்க தந்ததாலதான் மகன் போய் இறங்கி இருக்கிறார். முதல் வேலையா பிள்ளையின்ர நகையை மகன் எடுத்துத் தந்திடுவார். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் பொறுக்கோணும்.” என்று அவர் நெகிழ்ந்து சொல்ல, அவனுக்கு மெலிதாகக் குற்றவுணர்ச்சியாகிப் போனது.
“என்னால ஒண்டும் நடக்கேல்ல மாமா. உங்கட மகளின்ர நகை அது. அத அவா அவவின்ர தம்பிக்கு அவசரத்துக்குத் தந்திருக்கிறா. அவ்வளவுதான்.” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாது.
“நீங்க ஓம் எண்டு சொல்லாம அவ தரமாட்டா எல்லா. பிள்ளையும் நல்ல சந்தோசத்திலதான் இருக்கிறா.” என்று அவர் சொல்லவும் அங்கு நடந்தவை எதுவும் அவருக்குத் தெரியாது என்று கண்டுகொண்டான் செந்தாளன்.
“தம்பி… அது… இன்னொரு விசயம்…” என்று இழுக்க, “என்ன மாமா, சொல்லுங்க?” என்று ஊக்கினான்.
“இல்ல, மகன் இல்லாம வீடே ஓஞ்சுபோய்க் கிடக்கு. அவரின்ர பைக்கை பாத்தே தாய்க்காரி அழுதுகொண்டு இருக்கிறா. அதால பிள்ளை கொஞ்ச நாளைக்கு இங்க இருந்திட்டு வரட்டுமா? ஒரு பத்து நாளைக்கு? தாய்க்கும் ஆறுதலா இருக்கும்.” நயமாக வினவினார்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல மாமா. கானவிக்கு எப்ப வரோணும் மாதிரி இருக்கோ அப்ப வரட்டும். நீங்க ஒண்டுக்கும் யோசிக்காதீங்க.”
உள்ளர்த்தம் விளங்காதவர், “சந்தோசம் தம்பி.” என்று உண்மையான சந்தோசத்தோடு சொல்லிவிட்டு
அழைப்பைத் துண்டித்தார்.

