அத்தியாயம் 20
கடம்பன் போகிற வரையில் அவன் போய்விட வேண்டும் என்று அவனைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்த கானவி, இப்போதுதான் முழுத் தனிமையை உணர்ந்தாள். அவன் தம்பிதான். ஆனாலும் தோள் கொடுக்கும் தோழன். துணை நிற்கும் பெரும் பலம். அம்மா அப்பாவிடம் பகிர முடியாதவற்றைக் கூட அவனோடு பகிர்ந்துகொண்டிருக்கிறாள். அவளுக்கு மிகுந்த உதவியாக இருந்திருக்கிறான். இன்று அவனும் இல்லாததால் உள்ளும் புறமும் ஒரு வெறுமை சூழ்ந்தது. கடம்பன் சேர்த்துவிட்ட அழகுக்கலை சம்மந்தமான இணைய வகுப்புகள் மட்டுமே ஆறுதல்.
இந்த முறை புவனாம்பிகையும் வருகிறாயா என்று அழைக்கவில்லை. தம்பியைப் பயணம் அனுப்பிவிட்டு வருகிறேன் என்று போனவள் அங்கேயே இருந்துகொண்டது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்னவோ என்னதான் தாங்கினாலும் அவளுக்கு இங்கே பிடிப்பில்லை எனும் எண்ணம் நாளாக நாளாக வலுத்துக்கொண்டே போயிற்று.
சிந்துஜாவும் குழந்தைக்காக வைத்தியம் என்று ஒவ்வொரு வைத்தியசாலையாக அலைய அலைய, ஒரு பேரக்குழந்தைக்காக என்ன பாடெல்லாம் படுகிறோம் என்று அவருக்கு என்னவோ மனத்தில் ஒருவிதமான சோர்வு.
இப்போதும் எப்படி இருக்கிறாள், உடல் நிலை எப்படி என்று கானவியிடம் விசாரிப்பார்தான். அதில் ஒருவிதக் கடமை உணர்வு மட்டுமே இருந்தது. அதைத் தாண்டிய உள்ளன்போடு உரையாடும் இயல்பு அவரிடமிருந்து விடுபட்டிருந்தது. நாளாக நாளாக அவரின் மனவருத்தம் என்ன என்று கானவிக்கும் விளங்காமல் இல்லை.
பத்து நாள்கள் கடந்த நிலையில், “அம்மாச்சி, இனி நாங்க இருப்போம் பிள்ளை. நீங்க வெளிக்கிடுங்கோ. நாளைக்குப் பின்னேரம் போவமா?” என்றுகொண்டு வந்தார் அருந்தவராஜா.
அதுநாள் வரையில் கெட்டித்தனமாகச் சமாளித்தவளுக்கு இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. அதற்கென்று நகையோடு போனால் வராதே என்றவனிடம் போகவும் மனமில்லை. நகைகளை வேறு இன்னும் எடுக்கவில்லையே!
என்னவோ தான் பிறந்து வளர்ந்த வீடும் தனக்குச் சொந்தமில்லையோ என்று நொடியில் தோன்றிவிட அவள் விழிகள் கலங்கிப் போயின. “அப்பா… அது பிள்ளை பிறக்க இன்னும் ரெண்டு மாதம் தானே இருக்கு. எனக்கு… எனக்குப் பயமா இருக்கு. பிள்ளை பிறக்கிற வரை இங்க இருக்கட்டா…” என்று கன்னத்தில் கண்ணீர் வழிய அவள் கேட்டபோது பரிதவித்துப் போனார் தந்தை.
வேகமாக வந்து அவளருகில் அமர்ந்து, “அம்மாச்சி, அதெல்லாம் ஒரு பயமும் இல்லையன. தைரியமா இருக்கோணும். கண்டதையும் யோசிக்கக் கூடாது.” என்றவருமே உள்ளுக்குள் கலங்கித்தான் போனார்.
“அதுதானே? என்னத்துக்குப் பயம், அதுவும் இந்தக் காலத்தில? அதெல்லாம் சுகமாப் பிள்ளை பிறக்கும்.” என்ற விசாலாட்சிக்கும் மகள் அப்படிச் சொன்னபிறகு அனுப்ப மனமேயில்லை.
“ஆனாம்மா தம்பி கோவிக்க மாட்டாரா? முதலும் வந்து இங்க நிறைய நாள் இருந்திட்டீங்க. சரியில்லை எல்லோ?” இதனால் அவர்களுக்குள் ஏதும் பிரச்சனைகள் திரும்பவும் வந்து விடுமோ என்று பயந்தார்.
அந்தப் பயம் அவளுக்குள்ளும் உண்டுதான். ஆனாலும், சுயமரியாதை ‘உனக்கு ரோசம் மானமே இல்லையா’ என்றது.
மகளிடமிருந்து பதில் வராமல் போகவும்,” தம்பியோட கதைச்சுப் பாக்கட்டோ?” என்றார் மனைவியிடம்.
“ஓம் கேட்டுப் பாருங்கோ. பயமா இருக்கு எண்டு சொல்லுற பிள்ளையை அனுப்புறதா?” என்று விசாலாட்சியும் சொல்ல, கைப்பேசியை எடுத்தவர், “இல்ல… நான் நேர்லையே போய்க் கதைச்சிப்போட்டு வாறன். அதுதான் மரியாதையா இருக்கும்.” என்று பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
அங்கே வீட்டில் புவனாம்பிகைதான் இருந்தார். “மாதமும் கிட்டமுட்ட வந்திட்டுது. பிறகு ஏன் இங்கயும் அங்கயுமா அலைவான் எண்டு நினைச்சம். ஒரேடியா பிள்ளையைப் பெத்துக்கொண்டு வரட்டுமே.” என்று தன்மையாகவே சொல்ல, புவனாம்பிகையால் எதுவும் சொல்ல முடியாமல் போயிற்று.
“சரி அண்ணா. அப்பிடியே செய்வம்.” என்றுதான் சொன்னார்.
கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாலும் மருமகனையும் நேரில் பார்த்துப் பேசிவிடவே பிரியப்பட்டார் அருந்தவராஜா.
“தம்பி இன்னும் வரேல்லையோ?”
“வந்து தோட்டத்துக்குப் போயிற்றார்.”
“ஐயாவும் அங்கதான நிப்பார். அப்ப நான் அங்கேயே போய்ப் பாத்துக் கதைச்சுப்போட்டு அப்பிடியே போறன்.” என்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்களின் தோட்டத்துக்கு நடந்தார்.
சற்குணத்தார்தான் அவரை முதலில் கண்டார். வேலை செய்வதற்கு இலகுவாக மடித்துக் கட்டியிருந்த சாரத்தை வேகமாக இறக்கி விட்டபடி, “வாங்கோ, வீட்டுக்குப் போகாம இங்க என்ன இவ்வளவு தூரம்?” என்றுகொண்டு வந்தார்.
“வீட்டுக்கும் போயிற்றுத்தான் ஐயா வாறன். சுகமா இருக்கிறீங்களோ?”
“கடவுள் புண்ணியத்தில அதுக்கெல்லாம் ஒரு குறையும் இல்ல.” என்றவர் உடனேயே ஒரு இளநீரைச் சீவிக் கொடுத்தார்.
அதைக் குடித்து முடிக்கும்வரை கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு, அவரை மகன் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே, அவர்களின் வாழைத் தோட்டத்தில் நின்றிருந்தான் அவன். இவரைக் கண்டதும் ஒரு கணம் ஏன் வந்திருக்கிறார் என்று புருவங்களைச் சுருக்கினாலும், “வாங்க மாமா!” என்று வரவேற்றபடி அவரை நோக்கி வந்தான்.
“நாள் முழுக்கப் பாடம் எடுத்துப்போட்டு வந்து தோட்டத்தில நிக்கிறீங்கள் தம்பி. நாளைக்கும் பள்ளிக்கூடம் போக வேணுமெல்லோ.” படித்து ஆசிரியனாக இருந்தாலுமே விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் மருமகன் மீதான பிரியத்தில் அக்கறையோடு சொன்னார்.
“அது பழகிப்போச்சு மாமா. ரெண்டு நாளைக்கு இங்க வராட்டித்தான் எனக்கு என்னவோ போல இருக்கும்.” சின்ன சிரிப்புடன் உரையாடினாலும் ஏன் வந்திருக்கிறார் என்கிற கேள்விதான் அவனுக்குள் ஓடிற்று.
அதை உணர்ந்தாற்போல், “தம்பி அது… நான் சொல்லுறதைக் கேட்டுக் குறையா நினைச்சுப் போடாதீங்கோ. அவா… மகளுக்குப் பயமா இருக்காம். முதல் பிள்ளையும் எல்லா. நோகாம வளந்தவா வேற. பிள்ளை பிறக்கிற வரைக்கும் அங்கேயே இருக்க நினைக்கிறா. அது… அதால உங்களுக்கு ஒண்டும் குறை இல்லையே.” என்று பெரும் தயக்கத்துடன் வினவினார்.
இதன் பின்னணி என்ன என்று நொடியில் ஊகித்துக் கொண்ட செந்தாளனுக்குச் சட்டென்று முகம் மாறப் பார்த்தது. அவன் தன்னைச் சமாளித்துக்கொண்டு பதில் சொல்வதற்கிடையில், “அதுக்கு என்ன? அவா பயப்பிடுறதிலையும் அர்த்தம் இருக்குத்தானே. சின்ன பிள்ளை. என்ன இருந்தாலும் அம்மா பக்கத்தில இருக்கிற மாதிரி வராதெல்லோ.” என்றார் சற்குணத்தார்.
“ஓம்தான். அவா அப்பிடிச் சொல்லவும் எங்களுக்கும் பயமாப் போச்சு. அதான் வலுக்கட்டாயமாக் கொண்டு வந்து விட மனம் வரேல்ல. எதுக்கும் தம்பின்ர விருப்பத்தையும் கேட்டு முடிவு செய்வம் எண்டுதான் நேரா வந்தனான். கோவிச்சுப் போடாதீங்கோ தம்பி.” என்று அப்போதும் மருமகனின் முகம் பார்த்தார் அவர்.
உண்மையிலேயே பயத்தில் சொன்னாளா என்று தெரியாதபோதும் அவனுக்கும் சம்மதிப்பதைத் தவிர்த்து வேறு வழியிருக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் அவள் தன்னோடு கதைத்து முடிவெடுக்கமாட்டாளா என்கிற கோபம் உண்டாயிற்று. அதில், “இதில கோவிக்க என்ன இருக்கு மாமா?” என்று நேரடியாகப் பதில் சொல்வதைச் சாதுர்யமாகத் தவிர்த்தான்.
அதன் பிறகுதான் இயல்பானார் அருந்தவராஜா. அப்படியே அவர்களின் தோட்டங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு, கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டும் இருந்துவிட்டுப் புறப்பட்டார்.
கணவர் வந்து சொன்னதைக் கேட்ட பிறகுதான் விசாலாட்சியின் கலக்கம் அகன்றது. ஆனால், கானவியால் அப்படி இருக்க முடியவில்லை. நிச்சயம் தன் மீது பெரும் கோபத்தில் இருப்பான் என்று கணித்தாள்.
உண்மையில் செந்தாளன் மிகுந்த கோபத்தில்தான் இருந்தான். நகையோடு போனால் வராதே என்று அவன் சொன்னதைப் பிடித்துக்கொண்டு, அவளின் தாய்மை நிலையைக் காரணம் காட்டி, அவன் மீதான கோபத்தை மற்றவர்கள் அறியாமல் அவனிடம் காட்டுகிறாள் என்று நன்றாகவே விளங்கிற்று.
தனக்கு ஒன்று தேவையெனில் எப்படியும் சாதித்துக்கொள்கிற அவள், இப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம். ஆனால், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அவள் அம்மா என்றால் அவன் அப்பா. அந்தக் குழந்தை பற்றிய எதுவும் அவனுக்குத் தெரியவே தேவையில்லை என்று நினைத்துவிட்டாளா, அல்லது, தாய்மையின் அந்த ஒன்பது மாதங்களும் அவளுக்கு மட்டுமே சொந்தமானவை என்று நினைத்துக்கொண்டாளா? யோசிக்க யோசிக்க இன்னுமின்னும் தனக்குள் இறுகிக்கொண்டு போனான் செந்தாளன்.
மகனின் முகம் பார்த்தே அவன் மனத்தைப் படித்த புவனாம்பிகை, “முதல் பிள்ளை சுகமாப் பிறக்கட்டும் தம்பி. எல்லாத்தையும் விட எங்களுக்கு இப்ப அதுதான் முக்கியம். ஒரு குழந்தைக்காக அக்கா என்ன பாடு படுறா எண்டு தெரியுதுதானே? அவே சொன்ன மாதிரி இந்த நேரம் அங்கயும் இங்கயும் அலையிறதும் நல்லதில்ல. எங்க இருந்தா நிம்மதியா, பயமில்லாம இருப்பாவோ அங்க இருக்கட்டும். எல்லாம் பிள்ளை பிறக்கிற வரைக்கும்தானே.” என்றார் ஆறுதலாக.
ஆனால், அது அவனை இன்னுமே தாக்கிற்று.
அங்கேதான் நிம்மதியாகவும் பயமில்லாமலும் இருப்பாள் என்றால் அது இங்கே இல்லை என்று பொருளாகவில்லையா? அவன் துணை அவளுக்கு எந்த நிம்மதியையும் கொடுக்காதா என்ன? அதுசரி, அவனோடு சேர்ந்து குழந்தை உண்டானதைக் கொண்டாட மாட்டேன் என்றவள்தானே! அதற்குமேல் யோசிக்கக் கூடப் பிடிக்காமல் எழுந்துவிட்டான்.
அதன் பிறகு வந்த நாள்களில் மகன் மனத்தில் என்ன ஓடுகிறது என்று புவனாம்பிகையால் கணிக்க முடியவில்லை. இருக்கிற அத்தனை கோயில்களுக்கும் பேரக்குழந்தை சுகமாகப் பிறந்துவிட வேண்டும் என்று நேர்த்தி வைத்தார்.
இங்கே கானவியின் பெற்றோருக்கு நாளாக நாளாக மகளைப் பார்க்க மருமகன் ஏன் வரவில்லை என்கிற கேள்வி பெரிதாயிற்று.
மறைமுகமாக மகளை விசாரித்துப் பார்த்தனர். அவள் அப்படி எதுவுமே இல்லை என்று சாதித்தாள். பரீட்சைகள் நெருங்கிக்கொண்டு இருப்பதால் அவனுக்கு நேரம் இருக்காது என்றாள். கடம்பனும் அங்கிருந்து கேட்டுப் பார்த்தான். அவள் மூச்சும் விடவில்லை.
“விளையாடாத அக்கா. அப்பவே எனக்குச் சந்தேகம் இருந்தது. நீ சொன்னதை நம்பி நகையை வாங்கினது பிழையாப் போச்சு!” என்று கோபப்பட்டான்.

