இடைவெளி வலிக்குதே 20 – 2

“அப்பிடி ஒண்டும் இல்லையடா தம்பி. அண்டைக்குச் சொன்னதுதான், அவர்தான் எனக்கு எல்லாமே. பிள்ளை பிறக்கட்டும். பிறகு நான் போயிடுவன்.” என்று சமாளித்தாள்.

அவளிடம் கேட்டுப் பிரயோசனம் இல்லை என்றதும் சுகம் விசாரிக்க அழைப்பது போன்று செந்தாளனுக்கு அழைத்துக் கதைத்தான் கடம்பன். அவனிடமிருந்தும் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

அக்காவைப் போய்ப் பார்க்கவில்லையா அத்தான் என்று நேரடியாகக் கேட்கப் பயந்தான். ஏற்கனவே வளைகாப்பிற்குக் கேட்டு, நடந்த பிரச்சனைகள் திரும்பவும் அப்படி ஏதாவது ஒன்றை உருவாக்கி விடுமோ என்று யோசித்தான். நடுவில் இருப்பது தமக்கையின் வாழ்க்கையாயிற்றே. இனிக் குழந்தையும் வரப்போகிறது. மிகுந்த கவனமாகக் கையாள வேண்டி இருந்தது.

ஆனால், ஒதுக்கம் எதுவும் இல்லாது, உண்மையான அக்கறையோடு அவன் என்ன செய்கிறான், எப்படி இருக்கிறான், நாடு பிடித்திருக்கிறதா என்று செந்தாளன் இயல்பாக உரையாடியது பெரும் ஆறுதலைத் தந்திருந்தது. அதில், தமக்கையைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் இயல்பாய்ச் சொல்வது போன்று சொல்லிவிட்டு வைத்தான்.

பெற்றோரிடமும் அதைப் பகிர்ந்துகொண்டுவிட்டு, “அத்தான் கோவமா ஒண்டும் கதைக்கேல்ல அம்மா. அக்காவைப் பற்றிச் சொன்னதுக்கும் ஒண்டும் சொல்லேல்ல. உண்மையாவே நேரம் இல்லையோ தெரியாது. பிள்ளை பிறக்கிற வரைக்கும் பொறுப்பம்.” என்றான் அவன்.

அவனுக்கே அவன் சொன்ன காரணத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனும்போது பெற்றவர்களுக்கு?

வயிற்றில் குழந்தையோடு இருக்கும் மனைவியை வந்து பார்க்க முடியாத அளவுக்கா நேரமில்லை என்று யோசித்துக் கவலைப்பட்டனர். அதை அவனிடம் போய்க் கேட்கவா முடியும்? அவர்கள் கேட்டுக்கொண்டு போக, அவன் ஏதாவது குண்டைத் தூக்கித் தலையில் இறக்கிவிட்டான் என்றால் என்ன செய்வது? ஏதோ ஒரு பயம் தாக்க நாள்களைக் கடத்தினர்.

வாரா வாரம் சிந்துஜாவும் புவனாம்பிகையுமாக வந்து பார்த்துக்கொண்டு போவது மட்டுமே பெரும் ஆறுதல். அவர்களிடம் மறைமுகமாகக் கேட்டுப் பார்த்தும் ஆன பதில் கிட்டவில்லை.

புவனாம்பிகைக்கு அவர்களின் கலக்கம் தெரியாமல் இல்லை. அதில் இருக்கும் நியாயமும் புரிந்தது. ஆனால், தம்பியைப் பயணம் அனுப்பிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்த மருமகள், இங்கேயே இருந்துகொண்டதற்கு அவர் என்ன செய்ய? மகனின் கோபமும் அதுவாகவே இருக்கலாம். மகனிடம் சொன்னது போலவே முதலில் பிள்ளை பிறக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்வோம் என்றுதான் அவரும் எண்ணிக்கொண்டார்.

*****

பெறுமாதம் நெருங்கியபோது ஒருவிதப் பயம் கானவியைப் போட்டு ஆட்டியது. உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. மனத்தில் என்னென்னவோ அலைப்புறுதல்கள். கனவுகள் கூடப் பயங்கரமாய் வந்து பயமுறுத்தின. கணவனின் ஆதரவை மனம் அதிகமாகத் தேடிற்று.

தாய் தந்தையர் கண்ணுக்குள் வைத்துப் பார்த்தனர். கடம்பன் ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்கிற பொழுதெல்லாம் அழைத்துப் பேசினான். ஆனாலும் கூட அவள் உள்ளம் அமைதியிழந்து தவித்தது.

மனத்தை வேறு திசைகளில் செலுத்திப் பார்த்தாள். பிடித்த சீரியல், பிடித்த படங்கள், பிடித்த மேக்கப் எதிலும் மனம் இலயிக்க மாட்டேன் என்றது. அதுவும் அன்றிரவு வயிற்றுக்குள் என்னவோ செய்யும் உணர்வு. நெஞ்சு அடைப்பது போலிருந்தது. வியர்த்து வழிந்தது.

பக்கத்தில் படுத்திருந்த அன்னையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் நல்ல உறக்கத்தில் இருந்தார். மெல்ல எழுந்து பாத்ரூம் சென்று வந்தாள். விறாந்தையில் பாய் விரித்துப் படுத்திருந்த தந்தைக்குத் தொந்தரவு இல்லாத வகையில் கடம்பனின் அறையில் சென்று அமர்ந்துகொண்டாள்.

நொடிகள் ஒவ்வொன்றும் கழிய கழியக் கணவனின் குரலைக் கேட்டால் மட்டுமே மனம் சமன்படும் என்றாகிப் போயிற்று. ரோசம் பாராது, கைகள் நடுங்க அவனுக்கு அழைத்தாள்

செந்தாளன் நிம்மதியாக உறங்கி எத்தனையோ நாள்களாயிற்று. அவன் நிம்மதியைப் பறித்துக்கொண்டவள் அவள்தான். கண் முன்னால் வந்து நின்றாளோ கடித்துக் குதறிவிடுவான். அந்தளவில் அவள் மீது கோபம் இருந்தது.

ஆனாலும் அவளை எண்ணிப் பயந்தான். எப்படி இருக்கிறாள், என்ன செய்கிறாள், அவளும் குழந்தையும் சுகமாக இருக்கிறார்களா என்று ஒன்றும் தெரியாது. அவன் அறிந்து வைத்திருப்பது எல்லாம் அங்குப் போய் வரும் அன்னை சொல்பவைதான்.

அன்று கடம்பன் ஏன் எடுத்தான் என்பதோ, மனைவி குழந்தையைப் பற்றி இவன் கேட்காமலே ஏன் சொன்னான் என்பதோ தெரியாமல் இல்லை. அங்கே போய்க் குந்திக்கொண்டு இருப்பது அவன் தமக்கை. அவளிடம் பேசாமல் என்னிடம் என்ன நூல் விட்டுப் பார்ப்பது என்றுதான் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

இப்படி என்னென்னவோ எண்ணங்களில் உழன்றபடி மெல்ல விழிகளை மூடியவன், திடீர் என்று கேட்ட கைப்பேசியின் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தான். அதில் கானவி என்று விழவும் வேகமாக எழுந்து அமர்ந்துகொண்டு அழைப்பை ஏற்று, “கானவி?” என்றான் பெரும் பதற்றத்தோடு.

கணவனின் குரல் காதுக்குள் வந்து மோதிய அந்தக் கணத்தில் நாசி சிவந்து, முணுக்கென்று விழிகளில் நீர் திரையிட்டது. அந்த நிமிடமே அவன் கைகளுக்குள் அடங்கிவிடத் துடித்தாள். அவன் குரல் தரும் இந்த ஆறுதலைக்கூட யாராலும் அவளுக்கு வழங்க முடியவில்லை. அவனானால் அவளை எட்டியும் பாராமல் இருக்கிறான். விழிகளை மூடி அவள் தன்னைச் சமன்படுத்திக்கொள்ள முனைய, “கானவி? என்ன செய்யுது? ஏதாவது கதை!” என்றான் அவன் பெரும் பதற்றத்தோடு.

“என்ன செய்றீங்க?” அவன் நிலைக்கு மாறாய் நலிந்து மெலிந்து ஒலித்தது அவள் குரல்.

“விசரா உனக்கு? இந்த நேரம் எடுத்து என்ன செய்றீங்க எண்டு என்னக் கேக்கிறாய்? நித்திரை கொள்ளாம நீ என்ன செய்றாய்? உனக்கு என்ன செய்யுது?” என்று அப்போதும் படபடத்தன அவன்.

அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. தன் உடல் நிலையை, தன் பயத்தை, மனத்தின் அலைப்புறுதல்களை எல்லாம் அவனிடம் சொல்லி ஆறுதல் தேட நினைத்தாள். துணைக்கு என்னோடு வந்து இருங்களேன் என்று கேட்க நினைத்தாள். முடியவில்லை. என்னவோ ஒன்று வந்து தடுத்தது.

அவனும் அமைதியாகிப் போனான். அவனுக்கும் நெஞ்சுக்குள் என்னவோ குடைந்தது. கழுத்தை ஒருமுறை தேய்த்துவிட்டான். சற்றுத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “கானவி, என்ன செய்யுது எண்டு சொல்லு.” என்றான் மீண்டும்.

“நானா எடுத்தபடியாத்தானே இதெல்லாம் கேக்கிறீங்க? இல்லாம என்னட்ட கேக்க, கதைக்க உங்களுக்கு ஒண்டுமே இருக்கேல்லைதானே?” உடைந்து தழுதழுத்த குரலில் வினவினாள்.

அந்த நிலையில் வைத்தது யாராம்? முணுக்கென்று ஒரு கோபம் முளைத்தாலும் அவள் நிலையை எண்ணி அடக்கினான்.

கானவிக்குத் தான் வாய் விட்டுக் கேட்டும் பதில் சொல்லாத கணவனின் பிடிவாதம் வருத்தியது. என்னவோ அவன் எட்டி உதைக்க உதைக்க திரும்பவும் தான் அவன் காலடிக்கே ஓடுவது போல் தோன்றிவிடவும், “சொறி, இந்த நேரம் டிஸ்டப் பண்ணினதுக்கு.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

நேரம் பார்த்தான். இரவு பதினொன்றரை. இந்த நேரத்தில் அழைத்துவிட்டு அழைத்ததற்கு மன்னிக்கட்டுமாம். இவளை…

உடனேயே திருப்பி அழைத்தான்.

“ஏன் எடுத்தனி?”

“அது சும்மா…”

“உடம்புக்கு ஏதுமா?”

“இல்ல.”

“உண்மையச் சொல்லு கானவி.”

“உண்மையா இல்ல.” கரகரத்தாலும் அவளுக்கு ஒன்றுமில்லை என்று அவள் குரல் சொல்லிற்று. மனம் கொஞ்சம் அமைதியடைய, “பிறகேன் நித்திரை கொள்ளாம இருக்கிறாய்?” என்று விசாரித்தான்.

“தெரியா. நித்திரை வரேல்ல.”

அவனிடம் சிறு மௌனம். அவளுக்கு உயிர் துடித்தது. எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்கமாட்டானா என்று துடித்தாள்.

அவனுக்கும் கேட்க வேண்டும் போல்தான் இருந்தது. ஆனால், கேட்கமாட்டாயா என்று அவள் கேட்டபிறகு கேட்க முடியவில்லை. “அதுக்காக முழிச்சுக்கொண்டு இருப்பியா? போய்ப் படு. நித்திரை வரும்.” என்றுவிட்டு வைத்தான்.

அவர்கள் ஒன்றும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் எதுவும் சரியாகவும் இல்லை. அவனும் அவளோடு இணக்கமாக எதையும் கதைக்கவில்லை. ஆனாலும் அவள் மனம் அமைதியுற்றிருந்தது. அவன் குரலுக்கு அந்த வலிமை இருந்ததில் அப்படியே அங்கேயே சரிந்து கண்களை மூடிக்கொண்டாள். நல்ல உறக்கம் வந்து அவளைத் தழுவிற்று.

இங்கே அவன் உறக்கம் தொலைந்துபோயிற்று. ஏன் எடுத்தாள், ஏன் ஒன்றும் சொல்லாமல் வைத்தாள் என்று அதே யோசனை. கைப்பேசியைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டான். அடுத்தநாள் அன்னையிடம் அதையும் இதையும் சொல்லி அவளைப் போய்ப் பார்க்கச் சொன்னான்.

போன வாரம்தானே சென்று வந்தார். திரும்பவும் என்ன? கேள்வியோடு மகனைப் பார்த்தார்.

“சும்மா பாத்துக்கொண்டு வாங்கம்மா. பெறுநாள் கிட்ட வந்திட்டுதே.”

அதுவும் உண்மை என்பதோடு, என்னதான் கோபமாக முறுக்கிக்கொண்டு நின்றாலும் மனைவியைப் பற்றி யோசித்து மகன் கவலைப்படுகிறான் என்பது அவர் மனத்தைத் தொட, அவளுக்குப் பிடித்ததாகச் சமைத்து எடுத்துக்கொண்டு சென்று பார்த்துவிட்டு வந்தார்.

மாலை வேலை முடிந்து வீடு வந்தவன், “எப்பிடி இருக்கிறாள் அம்மா?” என்றான் முதல் கேள்வியாக.

“இவ்வளவு துடிக்கிற நீங்க ஒரு எட்டுக்குப் போய்ப் பாத்துக்கொண்டு வரலாம் தம்பி.” என்றார் அவர்.

அதற்குப் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தான்.
அதற்குமேல் அவராலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“பிள்ளை பிறக்கிற நேரம் நல்லா இருக்கிறா எண்டு என்னத்தச் சொல்லுறது? வயிறு மட்டும்தான் தெரியுது. ஆள் எலும்புக் குச்சி மாதிரி இருக்கிறா. முதல் முதல் பாத்த பிள்ளையா எண்டு சந்தேகமாக் கிடக்கு. எனக்கு என்னவோ ஆம்பிளைப் பிள்ளை மாதிரிக் கிடக்கு. ஆம்பிளைப் பிள்ளைதான் தாயை உருக்கிப் பிறப்பான் எண்டு சொல்லுவினம். பாப்பம். எந்தப் பிள்ளையா இருந்தாலும் சுகமாப் பிறந்திடோணும்.” என்றுவிட்டுப் போனார் அவர்.

அது இன்னுமே அவன் பயத்தைக் கிளறிவிட்டதுதான் மிச்சம்.

error: Alert: Content selection is disabled!!