வர்ணம் 11
அருளின் கரங்கள் அவளது கைகளை இறுக்கியிருந்த அந்த வலியை விட, அவனது மூச்சுக்காற்றின் சூடும், காதோரம் தெறித்த அந்த அதிகாரமான வார்த்தைகளும் ராஷியின் உடலெங்கும் ஒரு புதிய சிலிர்ப்பைப் பாய்ச்சின.
எப்போதும் நிதானமாகவும், “வாங்க, போங்க” என்று கண்ணியமான இடைவெளியோடும் பேசிய அந்த எளிய நெசவாளனா இது? காதலும் தவிப்பும் அவனது சுயக்கட்டுப்பாட்டை மொத்தமாக உடைத்தெறிந்திருந்ததை ராஷி உணர்ந்தாள்.
திகைப்பிலிருந்து மீண்ட ராஷியின் உதடுகளில், மெல்லிய வெற்றிப் புன்னகை ஒன்று அரும்பியது. தன் கண்களை நேராய் அவனது கோபக் கனல் தெறிக்கும் விழிகளோடு கோர்த்தாள்.
“ஏன் அருள்… நான் எங்கே போனா உங்களுக்கென்ன? ‘பெரிய இடத்துப் பொண்ணு, வீணான ஆசைப்படக் கூடாது’னு எனக்கு அறிவுரை சொன்னவர் தானே நீங்க? அப்புறம் எதுக்கு இந்த அக்ரஷன்? எதுக்கு இந்தத் தவிப்பு?” என்று அவனது நெஞ்சில் தன் ஒற்றைக் விரலால் லேசாக அழுத்தி, மிக அருகில் நின்று வினவினாள்.
ராஷியின் அந்த அமைதியான, அதே சமயம் ஆழமான கேள்வி அருளை உலுக்கியது.
அவளது அருகாமையும், அந்த அழகான புன்னகையும் அவனது கோபத்தைக் கணப்பொழுதில் கரைத்து, வெறும் காதலாக மாற்றின. கைகளைப் பற்றியிருந்த பிடி மெல்லத் தளர்ந்தது. ஆனால், அவளை விட்டு விலக மனமில்லாமல், சுவரில் சாய்ந்திருந்த அவளது இரு பக்கமும் கைகளை வைத்து அவளைத் தன் எல்லைக்குள் சிறைபிடித்தான்.
“உன்னைப் பார்க்காம இருந்த இந்த பதினைஞ்சு நாளும் நான் செத்துப் பிழைச்சிருக்கேண்டி… தறி ஓடுற சத்தம் கூட உன் குரலாத்தான் கேட்டுச்சு. ‘நாம் வேற, அவ வேற’னு என் மனசுக்கு எத்தனையோ பூட்டு போட்டேன்… ஆனா உன்னைப் பார்த்ததும் அந்தப் பூட்டெல்லாம் சுக்குநூறா உடைஞ்சு போச்சு,” என்று அருளின் குரல் கோபத்திலிருந்து இறங்கி, தவிப்பின் உச்சத்தைத் தொட்டது.
ராஷி இனிமேலும் அவனைச் சோதிக்க விரும்பவில்லை.
அவனது முகத்தை தன் இரு கரங்களாலும் ஏந்தி, “பார்த்தீங்களா அருள்… உங்கள் வாயாலேயே இதைச் சொல்ல வைக்கத்தான் நான் இந்த ரெண்டு வாரமும் வரலை. உங்கள் மனசுல இருக்கிற இந்தக் காதலை விட, எந்த அந்தஸ்தும் எனக்குப் பெருசு இல்லை,” என்று ஆழமான குரலில் சொன்னாள்.
அருளின் கண்கள் கலங்கின. தன் பிடிவாதத்தை உடைத்து, அவளது கரங்களில் தன் முகத்தைப் புதைக்க முற்பட்ட நொடி…
தோட்டத்துப் பக்கமிருந்து, “டி ராஷி… கிணத்துல தண்ணி ஜில்லுனு சூப்பரா இருக்குடி! நீயும் வர்றியா?” என்றபடி சாருவின் குரலும், அவளது காலடிச் சத்தமும் வீட்டை நோக்கி வரத் தொடங்கியது!
சட்டென்று சுயநினைவுக்கு வந்த அருளும் ராஷியும் ஒருவரையொருவர் பார்த்து விலகி நின்றார்கள்.
இருவரின் முகத்திலும் ஒரு ரகசியப் புன்னகையும், ஆழமானக் காதலின் கதகதப்பும் மிளிர்ந்தன!
காதலால் உருகி, அவனது காதலை ஒப்புக் கொள்ள வைத்த மகிழ்ச்சியில் இருந்தவளுக்கு, “என்னை விட்டு போகமாட்டியேடி…” என்று அவன் லேசான சந்தேகத்தோடும், அந்தஸ்தைப் சுட்டிக்காட்டும் விதமாகவும் கேட்ட கேள்வி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.அருளின் இந்த வார்த்தைகள் ராஷியின் மனதைச் சுக்கென்று தைத்தன!
தன் உண்மையான அன்பை, தன் காதலின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாமல், இன்னும் அதே பழைய சந்தேகக் கண்ணோட்டத்தோடு அவன் பார்க்கிறான் என்பதை அவளால் கொஞ்சம் கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளது முகத்தில் இருந்த மென்மை நொடியில் மறைந்து, ஆத்திரமும் வேதனையும் குடிகொண்டன.
கண்களில் கோபக் கனல் தெறிக்க, அருளின் நெஞ்சில் கையை வைத்துப் பலமாகப் பின்னுக்குத் தள்ளினாள்.
“வெளியே போங்க!” என்று பற்களைக் கடித்தபடி, சீறும் குரலில் கத்தினாள் ராஷி.
அருள் நிலைகுலைந்து ஓரடி பின்வாங்கினான். அவளது இந்தத் திடீர் ஆவேசத்தையும், சிவந்த கண்களையும் பார்த்ததும் அவன் அதிர்ந்துபோனான்.
“ராஷி… நான்… நான் சும்மா…” என்று அருள் தடுமாற்றத்துடன் ஏதோ விளக்க முயன்றான்.
“ஒன்னும் பேசாதீங்க! இறங்கி வெளியே போங்க முதல்ல!” என்று வாசலை நோக்கிக் கையைக் காட்டினாள். அவளது குரலில் இருந்த உறுதியும் கோபமும் அருளை மேற்கொண்டு ஒரு வார்த்தை கூடப் பேசவிடாமல் தடுத்தன.
தான் அவசரப்பட்டுப் பேசி, அவளது தூய்மையான அன்பைக் காயப்படுத்திவிட்டோம் என்பதை அருள் நொடியில் உணர்ந்தான். அவளது முகத்தைப் பார்க்கத் தயங்கி, தலைகுனிந்தபடியே மெதுவாக வீட்டை விட்டு வெளியேறினான்.
அருள் வெளியேறிய அடுத்த நொடி, ராஷி கதவை ஓங்கிச் சாத்திப் பூட்டினாள். கதவில் சாய்ந்தபடியே நின்று, தன் கோபத்தையும் தாண்டி அவனுக்காக நெஞ்சில் சுரக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் விம்மத் தொடங்கினாள்.
அதே நேரம், தோட்டத்திலிருந்து குளித்து முடித்துத் தலையைத் துவட்டியபடி உள்ளே வந்த சாரு, கதவு சாத்தப்படும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தாள்.
“ராஷி… என்ன ஆச்சுடி? ஏன் கதவை அப்படிச் சாத்துற? யார் வந்துட்டுப் போறா?” என்று பதற்றத்தோடு கேட்டாள்.
ராஷி தன் கண்ணீரை அவசர அவசரமாகத் துடைத்துக்கொண்டு, மூச்சை ஆழமாக இழுத்துச் சரிசெய்தாள்.
“ஒன்னுமில்லைடி சாரு… சும்மா ஒருத்தர் வழி கேட்டு வந்தாரு. நாங்களே ஊருக்கு புதுசுனு சொன்னேன்.நீ போய் டிரஸ் மாத்திட்டு வா,” என்று தன் குரல் நடுங்காமல் சமாளித்தாள்.
வெளியே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அருளின் மனதோ ரணகளமாகி இருந்தது. ‘அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டோமே… அவளோட உண்மையான காதலைப் போய் இப்படி சந்தேகப்பட்டுட்டேனே!’ என்று தன் தலையிலேயே அடித்துக்கொள்ளாத குறையாகத் தவித்தபடி தன் தறிக்கூடத்தை நோக்கி நடந்தான்.அடுத்தடுத்து வந்த நாட்களில் ராஷி மிகவும் கவனமாக இருந்தாள். அருளுக்குத் தன் முகத்தில் கூட விழ வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
எப்பொழுதும் சாருவைத் தன் நிழல் போலக் கூடவே வைத்துக்கொண்டாள். சாரு இல்லாமல் ஒரு அடி கூட வெளியே எடுத்து வைக்கவில்லை.
அருளோ அவளிடம் தனியாக ஒரு வார்த்தையாவது பேசித் தன் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று தவித்துப் போனான்.
அவள் தறிக்கூடத்திற்கு வரும்போதும், தெருவில் நடந்து செல்லும்போதும், அருளின் தாய் பார்வதி அம்மாளிடம் பேசும்போதும்… என ஒவ்வொரு தருணத்திலும் அருளின் கண்கள் அவளையே சுற்றிச் சுற்றி வந்தன.
அவள் தனியாகச் சிக்கும் ஒரு சிறிய நொடிக்காக அவன் ஏங்கித் தவித்தான். ஆனால், ராஷி அவனை முற்றிலும் கண்டுகொள்ளாதது போலவே நடந்து கொண்டாள். அவன் பக்கமாகப் பார்வையைத் திருப்புவதைக் கூடத் மொத்தமாக தவிர்த்தாள்.
ஒருநாள் மதிய வேளை… தறிக்கூடத்தில் சாரு ஏதோ வேலையாகப் பார்வதி அம்மாளுடன் வீட்டிற்குள் செல்ல, ராஷி மட்டும் நூல்களை அடுக்கி வைப்பதற்காகத் தனியாக நின்றிருந்தாள்.
இதைத்தான் சமயம் என்று எதிர்பார்த்திருந்த அருள், நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள மெதுவாக அவளை நோக்கி முன்னேறி வந்தான்.
“ராஷி… ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க… அன்னைக்கு நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது,” என்று தாழ்ந்த குரலில் கெஞ்சும் தொனியில் அருளத் தொடங்கினான்.
ஆனால் ராஷி அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. கையிலிருந்த நூல் கண்டுகளை அப்படியே மேஜை மீது வைத்துவிட்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சட்டென்று அங்கிருந்து விலகி, சாரு இருந்த வீட்டிற்குள் வேகமாகச் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற பாதையையே பார்த்தபடி நின்றிருந்த அருளுக்கு ஏமாற்றமும் வேதனையும் தொண்டையை அடைத்தது.
தன் அவசரப் பேச்சால் அவளது தூய்மையான அன்பை எந்தளவுக்குக் காயப்படுத்திவிட்டோம் என்பதை நினைத்து, தன் தறிக்கூடத்து மரத்தூணில் தலையைச் சாய்த்துக்கொண்டு பெருமூச்சு விட்டான் அருள்.
இருவருக்குள்ளும் இருந்த இந்தக் மௌனப் போர், அந்தச் சிறிய நெசவுக் கிராமத்தின் காற்றிலும் ஒரு கனமான அமைதியைப் பரப்பியிருந்தது!இரவின் நிசப்தம் முழு கிராமத்தையும் ஆக்கிரமித்திருந்தது.
பக்கத்தில் சாரு நல்ல உறக்கத்தில் சீரான மூச்சுவிட்டுப் படுத்துக்கொண்டிருக்க, ராஷிக்கு மட்டும் கண்ணிமை கூட மூடவில்லை. ஜன்னல் வழியாக உள்ளே விழுந்த மெல்லிய நிலவொளியில், அவளது கண்கள் நீரால் நிறைந்திருந்தன.
சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி, தன் உதடுகளைக் கடித்துக் கொண்டு, சத்தம் வெளியே கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அழுது வடிந்த கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துக்கொண்டாள்.
“ஏன்… பணக்காரங்கன்னா அவங்க உண்மையா காதலிக்கக்கூடாதா? வசதியான வீட்ல பொறந்தது நான் பண்ண தப்பா? என் காதல்ல எந்தப் போலியும் இல்லையே… அவரோட உழைப்பையும், குணத்தையும் பார்த்துதானே நான் ஆசைப்பட்டேன்… அப்புறம் ஏன் என்னை ஏதோ வேடிக்கை பாக்க வந்த பொண்ணு மாதிரி நினைச்சு, ‘என்னை விட்டுப் போக மாட்டியேடி’னு சந்தேகப்படணும்?” என்று மனதிற்குள் கதறி அழுதாள்.
அவளது நெஞ்சில் அருளின் அந்த வார்த்தைகள் ஆறாத வடுவாகக் கிடந்து உறுத்தின. அவன் மீது கோபம் இருந்தாலும், அவளது ஆழமான காதல் அவனைக் வெறுக்கவும் விடவில்லை; அதே சமயம் அவனது சந்தேகப் பேச்சை ஏற்றுக்கொள்ளவும் விடவில்லை.
அதே நேரத்தில்…
அங்கிருந்து சில தெருக்கள் தள்ளி இருந்த அருளின் வீட்டிலும் நிலைமை வேறாக இல்லை. திண்ணையில் படுத்திருந்த அருளுக்குத் தூக்கம் வரவில்லை. கைகளைத் தலைக்கு அணைப்பாக வைத்துக்கொண்டு வெறித்துப் பார்த்தபடி கிடந்தான்.
‘அவளோட அன்புல எந்தக் கலப்படமும் இல்லைனு தெரிஞ்சும், என் சுயமரியாதையும் பயமும் சேர்ந்து அவளைப் காயப்படுத்திருச்சே… அவளோட கண்ணீர் சிந்தின அந்தச் சிவந்த கண்கள் என்னை நிம்மதியாவே இருக்க விடலையே,’ என்று தன்னையே நொந்துகொண்டான்.
இருவரும் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு கூரைகளின் கீழ் இருந்தாலும்… அந்த இரவில் இருவரின் இதயங்களும் ஒரே காதலின் வலியில்தான் தவித்துக் கொண்டிருந்தன.அதன் பின்னர், அருளின் போக்கிலும் ஒரு பெரிய மாற்றம் வந்தது.
தன் வார்த்தையால் ராஷியின் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கிறது என்பதையும், அவள் தன்னை முற்றிலும் தவிர்க்கிறாள் என்பதையும் உணர்ந்தவன், தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவளுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவும் தன் கவனத்தை முழுக்க நெசவின் பக்கம் திருப்பினான்.
அதற்குப் பிறகு வந்த நாட்களில், அவன் ராஷியைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பதையோ, அவளிடம் பேச முயல்வதையோ முற்றிலும் நிறுத்திவிட்டான்.
தறிக்கூடத்திற்கு அவர்கள் வரும்போது, ஒரு தொழில்முறை ஆசிரியராக மட்டுமே நடந்து கொண்டான். நெசவுக்கலையின் நுணுக்கங்களை, நூல்களின் தரத்தை, வண்ணங்களின் சேர்க்கையை இருவருக்கும் பொதுவான குரலில், இயல்பான தூரத்தோடு நின்று கற்றுக்கொடுத்தான்.
அவனது பார்வையில் முன்பு இருந்த காதலின் தவிப்போ, ஆசையோ மறைந்து… ஒரு நெசவுக் கலைஞனுக்குரிய கவனமும் அமைதியும் மட்டுமே குடிகொண்டிருந்தன.
வர்ணம் மிளிரும்…

