கையிலிருந்த ஃபோனை உருட்டிக் கொண்டே செழியனை ஆழ்ந்துப் பார்த்தவளோ, “அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு.” என்றாள்
அதிர்ச்சியடைந்த செழியனோ,
“யாரு? மதர் சொன்னாங்களா?” என்று கேட்டான்.
“இல்ல. நமக்குத் தெரிஞ்சவங்க கேட்டாங்க.”
“அவ இப்பதானே படிச்சிட்டு இருக்கா? அதுக்குள்ள என்ன அவசரம்?”
“அவசரம் எல்லாம் இல்லைடா. நாம்தானே அவளுக்கு எல்லாமே பார்த்து, பார்த்து செய்யுறோம்.நம்ம வீட்ல ஒருத்தி மாதிரி அடிக்கடி வர்றா. டூருக்குக் கூட அனுப்புறோம். அவளோட எல்லா பொறுப்பும் நமக்கு இருக்குல்ல? அதே மாதிரி அவளோட கல்யாணத்தையும் நாம்தானே பண்ணணும்.”
“அவ நம்ம சாரிட்டியில இருக்கிற பொண்ணு என்பதற்காக அவளுக்கு எல்லாம் செய்தோம். அதுக்காக கல்யாணம்…” என்று செழியன் வேகமாகப் பேச ஆரம்பிக்க,
“சரி, சரி… நீ டென்ஷன் ஆகாதடா. நான் சொல்லிடுறேன். இப்போ வேண்டாம்னு சொல்லிடுறேன்,” என்று அவனை சமாதானப்படுத்தினாள் சிந்துஜா.
அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவனோ,”இதுக்காகத்தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தியா அக்கா? அவ சின்ன பொண்ணு. இன்னும் படிப்பே முடிக்கல. அவ சொந்தக் கால்ல நிக்கணும். அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நீயே வேண்டாம்னு சொல்லி இருக்கலாமே!” என்றான்.
“எனக்கு என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியல. அதான் உன் கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம்னு பார்த்தேன். ஓகே டா. குட்நைட்.” என்றவள்,
“அந்தப் பொண்ணு நம்மளோட சாரிட்டியில இருக்கிறவங்க. அதுக்காகத்தான் அவளுக்கு எல்லாம் செய்றோம். அதுக்காகத் திருமணம்னு…”
“சரி சரி… டென்ஷன் ஆகாதே செழியா.” என்றதை மட்டும் கட் செய்து, நித்யமயூரிக்கு அனுப்பி வைத்தாள்.
********
ஆழினியோ ஆசிரமத்தில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். நித்தியமயூரி வீட்டில் தன் அண்ணனிடம் பேசுவதாகக் கூறிவிட்டு சென்றிருந்தாள்.
செழியன் என்ன பதில் சொல்வானோ என்ற படபடப்பு ஆழினியின் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அந்தத் தவிப்பில் அவளுக்குத் தூக்கமும் வருவேனா என்றிருந்தது.
“எப்போதடா பொழுது விடியும்… கல்லூரிக்குச் செல்லலாம்?” என்று ஆவலுடன் காத்திருந்தவளுக்கு, மறுநாள் பெரும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
நித்யமயூரி கல்லூரிக்கே வரவில்லை.
‘ஒருவேளை அவளுக்கு உடம்பு சரியில்லையோ.’ என்று நினைத்து தன்னை சமாதானம் செய்துக் கொண்டாள் ஆழினி.
ஆனால் அடுத்த நாளும் அவள் வரவில்லை என்றதும் நெஞ்சில் பயம் கவ்விக் கொண்டது.
இரண்டு நாள் கழித்து கல்லூரிக்கு வந்த நித்யமயூரியைப்
பார்த்ததுமே, ஆழினிக்கு ஏதோ சரியில்லை என்பது புரிந்துவிட்டது.
“என்னாச்சு?” என்று அவள் பதற்றத்துடன் கேட்க.
அவள் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
அவளது முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்ததும், ஆழினியின் மனதுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல இருந்தது.
அடுத்த நொடியே, தன் தோழியை அணைத்தாள் நித்யமயூரி.
இரண்டு நாட்களாக அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது.
சற்று நேரத்தில் தன்னை சமாளித்தவள் தன் கையில் இருந்த போனை எடுத்து, “இதைக் கேளு ஆழி! ” என்று நடுங்கிய குரலில் கூறினாள்.
அந்த ஆடியோவை ஆன் செய்தாள்.
அதில் ஒலித்த ஒவ்வொரு வார்த்தையும், அவளது இதயத்தை நொறுக்கியது.
‘நம்ம அவங்களோட சாரிட்டியா… அதுக்காகத்தான் எல்லாம் செய்யுறாங்களா?’ என்று எண்ணியவளின்,
மனதிற்குள் வைத்திருந்த சிறு நம்பிக்கை கூட அந்த நொடியில் உடைந்துப் போனது.
“ஆழி சாரிடி.” என்றாள்.
“ம்…” என்ற ஒற்றைச் சத்தம் மட்டுமே அவளிடமிருந்து வந்தது.
ஆனால் அந்த ஒரு, “‘ம்.” என்றதிலே , செழியன் தன்னை விரும்பவில்லை என்ற வலியும்… தன்னுடைய மனதில் முளைத்திருந்த காதலை யாரிடமும் சொல்ல முடியாத தவிப்பும்… கண்ணீராக மாறி நின்றது.’ அதையெல்லாம் நினைவுக் கூர்ந்த நித்யமயூரி, செழியனிடம் அதையெல்லாம் கூறினாள்.
“அண்ணா! அக்கா அந்த ஆடியோவை அனுப்புனதோடு மட்டும் இல்லாமல் என் கிட்ட வந்து பேசுனாங்க.
தனுவுக்கும், செழியனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும் என்று சொன்னாங்க. சின்ன வயசுல இருந்தே பாட்டி அப்படியே சொல்லிச் சொல்லி, உங்க ரெண்டு பேரோட மனசுலயும் அந்த எண்ணத்தை ஆழமா பதிய வச்சுட்டாங்கன்னு சொன்னாங்க. இருந்தாலும் நீ சொன்னியேனு தான் நான் கேட்டேன். செழியன் டென்ஷனாகிட்டானு சொன்னாங்க.
ஆழினி இந்த வீட்டுக்கு வர்றதுக்கு வாய்ப்பே இல்ல. ஆனா… அவ மனசு மாறணும். அப்போதான் அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும். அதான் அந்த ஆடியோவை ஆழிக்கு போட்டு காண்பிச்சேன்.
அதைக் கேட்டா, அவ மனசு மாறிடுவான்னு நினைச்சேன்.
நான் நினைச்சது போலவே அவளும் மனசை மாத்திக்கிட்டா. அப்படித்தான் நான் நினைச்சேன். ஆனா அவ உன்னை நினைச்சுக்கிட்டே தான் இருந்திருக்கா. ஆனா அதை எனக்குத் தெரியாம பார்த்துக்கிட்டே
உன் கல்யாணத்துக்கு அவளை இன்வைட் பண்ணும் போது தான் அவ உன்னை மறக்காததையே உணர முடிஞ்சது. அதான் சான்ஸ் கிடைக்கவும் உனக்கே அவளை கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்தேன்.”
என்று பெருமூச்சு விட்யவாறு செழியனிடம் கூறினாள் நித்யமயூரி.
செழியனோ உறைந்துப் போய் நின்றான்.
தொண்டையை செறுமி, “மய்யூ! அக்கா ஆழினிக்கு வரன் வந்திருக்குன்னு சொன்னாங்க. அதான் இப்ப எதுக்கு திருமணம் கோவப்பட்டேன். ஆனா அதுல பாதியை மட்டும் அக்கா அனுப்பி இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல. ஏன் அக்கா இப்படிப் பண்ணாங்கன்னு எனக்கே தெரியல,” என்று செழியன் வருத்தத்துடன் கூறினான்.
அவனைப் பார்த்த நித்யமயூரியோ,
“தனு மேல இருக்கிற அக்கறையில்தான் அக்கா இப்படி சொல்லியிருப்பாங்க.” என்றாள்.
அதைக் கேட்ட செழியனின் முகம் வாடியது.
“அப்போ… என் மேல அவங்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? பாசமும் இல்லையா?” என்று வருத்தத்துடன் கேட்டான்.
நித்யமயூரியும், செழியனும் பேசியதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த தன்ஷிகாவோ,”அதெல்லாம் எதுவும் இல்லை. அவங்களுக்கு யார் மேலயும் உண்மையான அக்கறை கிடையாது. அவங்க சுயநலவாதி. அவங்களைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். அவங்க எப்போதும் அவங்களைப் பற்றி மட்டும்தான் யோசிப்பாங்க.
நான் சொன்னாலும் நீங்க எல்லாம் நம்ப மாட்டீங்க. அது எனக்கும் தேவையில்லை. நான் மச்சானைக் கட்டிக்கிட்டா அதுல ஏதாவது ஒரு ஆதாயம் இருக்கும்னு நினைச்சுத்தான் இப்படி பண்ணியிருக்காங்க. அதுக்கெல்லாம் அவங்கதான் பதில் சொல்லணும்.
அவங்க குணம் தெரிஞ்சுதான் நான் இந்த வீட்டுக்கு மருமகளாக வரக்கூடாதுன்னு முடிவு எடுத்தேன். ஆனால்… நான் எடுத்த முடிவுதான் தப்பா போயிடுச்சு…” என்று கூறியவளின் குரல் உடைந்து, கண்களில் கண்ணீர் வழிந்தது.
“அழாத தனு” என்று செழியன் அவளை சமாதானப்படுத்தினான்.
அவளோ அடுத்த நொடியே செழியனின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
“எவ்வளவு நாள் கழிச்சு என்கிட்ட பேசுறீங்க மச்சான்…” என்று கேவ.
செழியனின் மனமும் கனத்தது.
“சாரி மச்சான். நான் உங்ககிட்ட அன்னைக்கே எல்லாமே சொல்லி, உங்க உதவியைக் கேட்டிருக்கணும். உங்களை நான் கஷ்டப்படுத்தி இருக்கக் கூடாது…” என்றாள்.
செழியன் எதுவும் பேசாமல் அவளது தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்தான்.
ஆனால்…
இந்தக் காட்சியை எல்லாம் மாடியில் தனதறை பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆழினியின் மனம் மட்டும் வலியில் துடித்துக் கொண்டிருந்தது.
செழியன் தன்ஷிகாவை சமாதானப்படுத்திய விதம்… அவளது கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆதரவாகத் தோள் கொடுத்த விதம்…
எல்லாமே ஆழினியின் மனதில் ஏதோ ஒன்றை உடைத்துக் கொண்டிருந்தது.
அவள் கண்கள் கலங்கின.
‘இவ்வளவு பாசம்… இவ்வளவு உரிமை… இவர்களுக்குள் இத்தனை இருக்கிறதா?’
என்று எண்ணியவளால் அந்தக் காட்சியை அதற்கு மேல் பார்க்க முடியவில்லை.
மனதை அழுத்திய வலியோடு மெதுவாகத் திரும்பிச் சென்றாள் ஆழினி.
தான் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தது சரிதான் என்று ஆழினிக்கு அந்த நொடி தோன்றியது.
செழியனின் மனதில் தனக்கென்று எந்த இடமும் இல்லை.
தன்ஷிகாவிடம் அவன் காட்டும் அக்கறையும் பாசமும், தன்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை அந்தக் காட்சி அவளுக்கு உணர்த்திவிட்டது.
அவளால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை.
கண்களில் தேங்கியிருந்த கண்ணீர், அவளது மனவலியைத் தாங்க முடியாமல் கன்னங்களில் வழிந்தோடியது.

