காதல் நெய்த வர்ணம் – 12

வர்ணம் 12.

ராஷி தறியை இயக்கும்போது ஏதேனும் தவறு செய்தால் கூட, முன்பு போல அவளது கைகளைப் பற்றிச் சரி செய்யாமல், மரக்குச்சியால் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடத்துல நூலை இப்படித் திருப்புங்க” என்று மிகக் கண்ணியமான இடைவெளியோடு சொல்லிவிட்டுத் தன் வேலைக்குப் போய்விடுவான்.

அருளின் இந்த திடீர் விலகலும், தொழில்முறையான மாற்றமும் ராஷியை உள்ளுக்குள் இன்னும் உலுக்கியது.

அவன் தன் பின்னால் சுற்றி வந்து மன்னிப்பு கேட்பான், தன் கோபத்தைத் தணிப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்க… அவனோ முற்றிலும் மாறி, தன் கடமையில் மட்டும் கவனமாக இருப்பதைப் பார்த்தபோது அவளுக்குள் ஒருவிதமான ஏமாற்றமும், விவரிக்க முடியாத வலியும் உருவானது.

‘உண்மையிலேயே என் மேல இருந்த ஆசையை விட்டுட்டாரா? இல்ல என்னை விட்டு விலக இதுதான் சரியான வழினு நினைச்சிட்டாரா?’ என்று ராஷியின் மனது அவனது இந்த அமைதியைக் கண்டு தவிக்கத் தொடங்கியது!

வழக்கம் போல அன்றைக்குத் தறிக்கூடத்தில் நெசவுக் கலையின் அடுத்த கட்ட நுணுக்கங்களை அருள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். ராஷியிடம் முன்பைப் போலத் தனிப்பட்ட முறையில் பேசுவதைத் தவிர்த்து, ஒரு ஆசிரியரின் கண்ணியத்தோடு மட்டுமே அவன் நடந்து கொண்டான். அந்த மௌனமான இடைவெளி ராஷியின் நெஞ்சில் முள்ளாய்க் குத்தினாலும், அவள் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் மும்முரமாகப் பாடங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், திடீரென வீட்டின் வாசலில் ஒரு குரல் கேட்டது.

“சார்… போஸ்ட்!”

வீட்டின் உள்ளிருந்து பார்வதி அம்மாள் துரிதமாக வெளியே வந்து வாசலில் நின்றார். அங்கே தபால்காரர் கையில் ஒரு வெள்ளை நிறக் கடிதத்தோடு நின்றுகொண்டிருந்தார்.

“அம்மா… அருள்மொழிவர்மன் வீடு தானே? இது பதிவுத் தபால் . நேரில் கையெழுத்து போட்டுத்தான் வாங்கணும்,” என்றார் தபால்காரர்.

பதிவுத் தபால் என்றதும் பார்வதி அம்மாளுக்குச் சற்றே தயக்கம் கலந்த அச்சம் உண்டானது. கிராமங்களில் வழக்கமாகப் பதிவுத் தபால் என்றாலே ஏதேனும் முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.

“என்ன இது… என்னவாவிருக்கும்? அருள்… இங்கே பாருப்பா, உனக்கு எங்கேயிருந்தோ பதிவுத் தபால் வந்திருக்கு!” என்று குரல் கொடுத்து மகனை அழைத்தார் பார்வதி அம்மாள்.

தறியின் அருகில் நின்றிருந்த அருள், அம்மாவின் குரலைக் கேட்டுவிட்டுத் தன் கைகளில் இருந்த நூலை வைத்துவிட்டு வாசலை நோக்கி வந்தான். ராஷியும் சாருவும் என்னவென்று ஆர்வம் கலந்த திகைப்போடு அவனைப் பார்த்தார்கள்.

அருள் வாசலுக்கு வந்து தபால்காரரிடம் அந்தப் பதிவுத் தபாலைப் பெற்றுக் கொண்டான். அதில் இருந்த முகவரியையும், முத்திரையையும் பார்த்த அவனது முகத்தில் ஒரு வினாடி திகைப்பும், அடுத்த கணத்தில் தீவிரமான யோசனையும் நிழலாடின.

‘இந்த நேரத்தில் நமக்கு எங்குிருந்து பதிவுத் தபால் வந்திருக்கும்?’ என்ற கேள்வியோடு, தபால்காரர் நீட்டிய பதிவேட்டில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டுக் கடிதத்தைப் பிரித்தான்.

அதை வாசிக்கத் தொடங்கிய அருளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன! அங்கிருந்தவர்கள் அனைவரும் மூச்சை அடக்கிக்கொண்டு அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அருள் அந்தப் பதிவுக் கடிதத்தின் ஒவ்வொரு வரியையும் உற்றுப் பார்த்தான்.

தமிழ்நாடு மாநில அரசு சார்பில் தலைநகரில் நடத்தப்படும் மிகப்பெரிய பாரம்பரிய நெசவுக் கலைக் கண்காட்சியில், அவனது சிறந்த நெசவுத் திறமையைப் பாராட்டி, அவனைக் கலந்து கொள்ளச் சொல்லி அதிகாரப்பூர்வமான அழைப்புக் கடிதம் அது!

அவனது முகத்தில் பரவிய புன்னகையைப் பார்த்ததும் பார்வதி அம்மாள் பொறுமை இழந்து, “என்னப்பா அருளு? கடிதத்துல அப்படி என்ன போட்டிருக்கு?” என்று ஆவலுடன் கேட்டார்.

அருள் தன் தாயைப் பார்த்து பெருமிதத்துடன், “அம்மா… மாநில அளவுல நடக்குற பெரிய நெசவுக் கண்காட்சியில நம்ம தறி நெசவு முறையைச் செஞ்சு காட்டவும், நம்ம கைத்தறி சேலைகளைக் காட்சிப்படுத்தவும் அரசாங்கத்துல இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கம்மா!” என்றான்.

செய்தியைக் கேட்டதும் பார்வதி அம்மாளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. “என் புள்ளையோட உழைப்புக்குக் கிடைச்ச பெருமைப்பா இது!” என்று நெகிழ்ந்தார்.

அப்போது வரை கடிதத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சாரு, திடீரென ஒரு ஆச்சரியத்தோடு, “அண்ணா… கடிதத்துல ‘அருள்மொழிவர்மன்’னு போட்டிருக்கே… உங்கள் முழு பேரு அருள்மொழிவர்மனா?!” என்று ஆர்வமாகக் கேட்டாள்.

அருள் லேசாகச் சிரித்துக்கொண்டே, “ஆமா பாப்பா… என் தாத்தா வச்ச பேரு இது. ஆனா ஊர்ல எல்லாரும் சுருக்கமா அருள்னே கூப்பிட்டுப் பழகிட்டாங்க,” என்றான்.

அருகில் நின்றிருந்த ராஷிக்கு அந்தப் பெயரைக் கேட்டதும் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு மின்னல் வெட்டியது போலிருந்தது.

‘அருள்மொழிவர்மன்…’

அவனது கம்பீரமான தோற்றத்திற்கும், அவனது நிமிர்ந்த குணத்திற்கும் அந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று தோற்றியது. ‘வர்மன்… அருள்மொழி வர்மன்…’ என்று மனதிற்குள் அந்தப் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

அவள் வீசிய கோபப் பார்வையையும் தாண்டி, அவனது பெயரின் கம்பீரமும், அவனுக்குக் கிடைத்திருக்கும் இந்த மாபெரும் அங்கீகாரமும் ராஷியின் மனதிற்குள் பூரிப்பையும், அடக்கி வைக்க முடியாத பெருமிதத்தையும் ஏற்படுத்தியது!அன்று மாலையே அந்தக் கிராமம் முழுவதும் அருள்மொழிவர்மனுக்கு வந்த அரசாங்க அழைப்பைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது.

மகன் மாநில அளவில் நெசவுக் கண்காட்சிக்குத் தேர்வாகியிருக்கிறான் என்ற செய்தி கேட்டதும் முத்தையா ஐயா பூரித்துப் போனார். “என் தாத்தா காலத்துத் தறிக்கு இன்னைக்கு மாநில அளவுல பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்குப்பா!” என்று அருளின் தோளைத் தட்டி மகிழ்ந்தார்.

இரவு வேளையில்… ராஷியும் சாருவும் தங்கள் அறையில் அமர்ந்திருந்தனர்.

சாரு மெல்ல ராஷியின் அருகில் வந்து அமர்ந்து, “டி ராஷி… அருள் அண்ணாவோட முழுப் பேரு எவ்வளவு கம்பீரமா இருக்குல? ‘அருள்மொழிவர்மன்’… ஏதோ ராஜராஜ சோழன் பேரு மாதிரி கெத்தா இருக்கு!” என்று சொல்லிச் சிரித்தாள்.

ராஷி மெத்தையில் சாய்ந்தபடி, தன் மனதில் ஓடிக்கொண்டிருந்த உணர்வுகளை மறைக்க முயன்று, “ம்ம்… நல்லாத்தான் இருக்கு,” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டாள்.

ஆனால், அவளது மனதுக்குள் ‘வர்மன்…’ என்ற பெயர் இதய மாளிகையில் மணி போல ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கு… அவருக்கு நேர்ல வாழ்த்து சொல்லணும் போல இருக்கே,’ என்று அவளது காதல் மனது துடித்தது. ஆனால், அவனது அந்த பழைய சந்தேகப் பேச்சும், அவனது தற்போதைய தொழில்முறை விலகலும் அவளைத் தடுத்தன.

மறுநாள் காலை…

கண்காட்சிக்குக் கொண்டு செல்ல வேண்டிய அரிய வகை கைத்தறிச் சேலைகளையும், நூல்களையும் அருள் பெட்டிகளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

அங்கே சாரு வந்து அவனுக்கு உதவத் தொடங்கினாள். ராஷியும் தூரத்திலேயே நின்று, அவனுக்குத் தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அருள் ஒவ்வொரு சேலையையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைக்கும் அழகையும், அவனது முகத்தில் தெரிந்த அந்த உழைப்பின் பெருமிதத்தையும் பார்க்கும்போது ராஷியின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருந்தது.

அப்போது, சாரு ஏதோ வேலையாக வெளியே செல்ல, அருள் பெட்டியைப் பூட்ட முயன்றபோது அதன் பூட்டுச் சங்கிலி சட்டென்று சிக்கிக்கொண்டது.

அருள் அதைச் சரிசெய்யப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராஷி, தன்னை அறியாமல் அவனருகே சென்றாள்.

“இருங்க… நான் பார்க்கிறேன்,” என்று மெல்லிய குரலில் சொன்னபடி, அவனது கைக்கு அருகே தன் கரங்களைக் கொண்டு சென்றாள்.

திடீரெனக் கேட்ட அவளது குரலிலும், அவளது கைப்பட்ட சிலிர்ப்பிலும் அருள் நிமிர்ந்து பார்த்தான்.

இருவரின் விழிகளும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக அருகில் நேருக்கு நேர் சந்தித்தன!

“ராஷி…” என்று அருள் மெதுவாக அழைத்தான். அவனது கண்களில் ‘என்னை மன்னித்துவிடு’ என்ற கெஞ்சலும், ‘உன் வாழ்த்து எனக்கு வேணும்’ என்ற ஏகப்பட்ட தவிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தன.

ராஷி பூட்டைச் சரிசெய்துவிட்டு நிமிர்ந்து நின்று, அவனது கண்களைப் பார்த்தபடி…

“வாழ்த்துகள் அருள்மொழிவர்மன் சார்! சென்னை கண்காட்சியில உங்களோட நெசவுக்கலைக்கு பெரிய வெற்றி கிடைக்கணும்,” என்று மிகக் கம்பீரமாகவும், அதே சமயம் இதயத்தின் ஆழத்திலிருந்தும் சொன்னாள்.

அவளது வாயால் தன் முழுப் பெயரைக் கேட்டதும், அவளது வாழ்த்தைப் பெற்றதும் அருளின் நெஞ்சில் இருந்த கன பாரம் சட்டென்று குறைந்ததைப் போலிருந்தது!

கண்காட்சி முடிந்து இரண்டாம் நாள் மாலை… அருள் ஊருக்குத் திரும்பியிருந்தான்.

சென்னைப் பயணம் அவனுக்குப் பெரிய அங்கீகாரத்தைத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அவனது முகம் முற்றிலும் வாடிப்போய், கவலையும் விரக்தியும் குடிகொண்டிருந்தது. தோளில் கிடந்த பையைத் திண்ணையில் தூக்கிப் போட்டுவிட்டு, சோர்ந்து போய் உட்கார்ந்தான்.

அவனது முக மாற்றத்தைக் கண்ட பார்வதி அம்மாளும், முத்தையா ஐயாவும் பதறிப்போய் ஓடிவந்தார்கள். கூடவே சாருவும், சற்றுத் தள்ளி நின்றபடி கவலையோடு ராஷியும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னப்பா அருள்… மெட்ராஸ் போயிட்டு வந்தவன் மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? கண்காட்சி நல்லபடியா முடிஞ்சதா? சேலைகளெல்லாம் எல்லாரும் மெச்சிப் பார்த்தாங்களா?” என்று ஆர்வத்துடன் கேட்டார் பார்வதி அம்மாள்.

அருள் விரக்தியாகச் சிரித்தான்.

“எங்கேம்மா மெச்சிப் பாக்குறாங்க? நம்ம கையால நெய்த பட்டுச் சேலைகளோட அருமையோ, அந்த நெசவுல இருக்குற உழைப்போ அங்க யாருக்குமே புரியலையம்மா!” என்று புலம்பத் தொடங்கினான்.

“என்னப்பா சொல்ற? அரசாங்கமே கூப்பிட்டுத்தானே உங்களுக்கு இடம் கொடுத்துச்சு?” என்றார் முத்தையா ஐயா ஆச்சரியத்துடன்.

“அரசாங்கம் இடம் கொடுத்துச்சுதான்ப்பா… ஆனா அங்க வந்த பெரிய பெரிய பணக்காரங்க எல்லாரும் மெஷின்ல நெய்த, மினுமினுன்னு இருக்குற போலிச் சேலைகளைத்தான் ஆச்சரியமா பார்த்து வாங்கிட்டுப் போறாங்க. நாம மாசக்கணக்குல ரத்தத்தை வேர்வையா சிந்தி நெய்த தூய கைத்தறிப் பட்டுச் சேலையோட விலையைக் கேட்டுட்டு, ‘ஏன் இவ்வளவு ரேட்? மெஷின் சேலை கம்மியா கிடைக்குதே’னு அசால்ட்டா கேட்டுட்டுப் போறாங்க…”

அருளின் குரலில் கோபமும் வேதனையும் கலந்திருந்தது.

“நாம பாரம்பரியத்தைக் காப்பாத்தணும்னு இரவு பகலா தறியில உக்காந்து உழைக்கிறோம். ஆனா, நம்ம படைப்போட அருமை அவங்களுக்குத் தெரியவே இல்லை! அவங்களுக்கு வெறும் டிசைனும், மினுமினுப்பும் இருந்தா போதும்… உழைப்புக்கும் கலைக்கும் அங்க எந்த மதிப்பும் இல்லை!” என்று மனக் குமுறலோடு தன் தறிக் கூடத்துப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தான்.

இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த ராஷிக்கு நெஞ்சு திக் என்றது.

கலைக்கும் உழைப்பிற்கும் மதிப்புத் தெரியாத மனிதர்களை நினைத்து அருளுக்கு ஏற்பட்டிருந்த அந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அவளை மிகவும் காயப்படுத்தியது.

அருள் தன் கலையின் மீது வைத்திருக்கும் காதலையும், அது நிராகரிக்கப்பட்டபோது அவன் அனுபவிக்கும் வேதனையையும் பார்த்த ராஷியின் மனதிலிருந்த பழைய கோபம், ஆத்திரமெல்லாம் பனிபோல விலகி ஓடின.

அவனது புலம்பலையும், உடைந்த அவனது முகத்தையும் பார்த்த ராஷிக்கு, அவன் அருகே சென்று அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தவித்தது!

வர்ணம் மிளிரும்…

error: Alert: Content selection is disabled!!