அத்தியாயம் 21
அன்றும் அவனுக்கு உறக்கமில்லை. அடிக்கடி கைப்பேசியை எடுத்தெடுத்துப் பார்த்தான். இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதாக அம்மா சொன்னது நினைவில் வந்தாலும் ஒரு பயம் அவனைப்போட்டு ஆட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உறக்கமற்ற இரவாகவே அந்த இரவு கடந்துவிட அடுத்த நாளும் விடிந்திருந்தது.
எப்போதுமே வகுப்பு நேரங்களில் கைப்பேசியின் சத்தத்தை முழுமையாக நிறுத்தி, ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வான். இன்று சத்தத்தை நிறுத்தியிருந்தாலும் திரை தெளிவாகக் கண்ணில் படுவது போன்று மேசையில் வைத்துவிட்டுப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று அருந்தவராஜாவின் பெயர் மின்னி மின்னி மறைந்தது. “ஒரு நிமிசம் பிள்ளைகள்!” என்றுவிட்டுக் கைப்பேசியை எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட வெளியே ஓடிவந்து அழைப்பை ஏற்றான்.
“தம்பி, பிள்ளைக்கு வயித்துக்குத்து வந்திட்டுது. ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு வந்திட்டம்.” என்று தகவல் சொன்னார் அவர்.
இவனுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
“ச…சரி மாமா. நான் இப்பவே வாறன்.” என்றவன் உடனேயே அன்னைக்கு அழைத்துத் தகவல் சொல்லி, அவர்களை நேராக வைத்தியசாலைக்கு வரச் சொன்னான். பாடசாலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தபோது அவனுக்கு மகன் பிறந்திருந்தான்.
கானவிக்குக் கணவனைக் கண்டதும் காரணமே இல்லாது மூக்கு விடைத்துக் கண்ணோரங்கள் கரித்தன.
அதுவரையில் உடல் நோகச் சின்ன வேலை கூடச் செய்திராதவள் பிள்ளைப் பேற்று வலியில் செத்துப் பிழைத்திருந்தாள். தாங்க முடியாமல் கத்தி, கதறி, கண்ணீர் விட்டு, முக்கு முக்கென்று முக்கி, அப்போதும் முடியாமல் உயிரைக் கொடுத்துத்தான் மகனைப் பெற்றிருந்தாள். அதன் பிறகும்கூட உடல் முழுவதும் வலி. கசங்கிய துணியாகக் கட்டிலில் கிடந்தவள் தான் பட்ட பாட்டையெல்லாம் அவனிடம் பகிர்ந்து, அவனின் அணைப்புக்குள் அடங்கிவிட ஏங்கினாள்.
அவனும் வந்ததும் வராததுமாக அவளைத்தான் பார்த்தான். இரத்தப்பசை இழந்த முகமும், வறண்ட உதடுகளும், வாரப்படாத தலையுமாகக் கிடந்தவளைக் கண்டவனின் உள்ளத்திலும் பெரும் துடிப்பு. “பரவாயில்லையா உனக்கு?” என்றான் அவளை நெருங்கி.
“ம்!” எனும்போதே அவள் விழிகள் கசிந்தன.
“அதான் தம்பி பிறந்திட்டான்தானே. அழாத!” என்றான் அவள் கரம்பற்றி அழுத்தி. அவளால் முடியவில்லை. அவனைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. முடியாதே! அவர்களைச் சுற்றி இருபக்கத்து ஆட்களும் இருந்தார்கள் என்றால் அவர்களுக்கிடையிலும் ஏதோ ஒரு இடைவெளி இருந்ததே!
அவனும் அவளை உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் மகனைக் காணச் சென்றான்.
அவன் குருத்து. மென் நீல விரிப்புக்குள் அப்போதுதான் கண்களைச் சிமிட்டி சிமிட்டி பார்க்கப் பழகிக்கொண்டிருந்தான். தேகமெல்லாம் புல்லரித்தது. ஒருவிதப் பரவசம் அவனுக்குள். கூடவே கண்ணீரும் அரும்பப் பார்த்தது.
இந்த மகன் உருவானபோது பக்கத்திலேயே இவன் இருந்தும் அவளாகச் சொல்லவில்லை. இடையில் ஒரு ஒன்றரை மாதங்களைத் தவிர்த்து அவள் வயிற்றில் பிள்ளையின் வளர்ச்சியை அவன் அருகிருந்து பார்த்ததும் இல்லை, தொட்டுணர்ந்து ரசித்ததும் இல்லை.
இதோ, இன்று கூட வயிற்றுவலி வந்தவுடன் அவளாக இவனுக்கு அழைக்கவுமில்லை. சொல்லியிருக்க ஓடி வந்து உடன் நின்றிருப்பான். குழந்தை விடயத்தில் எந்த ஒரு தருணத்தையும் அவன் அனுபவிக்கவில்லை. அவள் அதற்கு அனுமதிக்கவில்லை. ஏதோ மூன்றாவது மனிதன் போன்று அவளையும் மகனையும் பார்க்க வந்திருக்கிறான்.
அதையெல்லாம் யோசிக்க யோசிக்க அவனுள்ளம் ஒருவிதமாகக் கொதிக்க ஆரம்பித்தது. மற்றவர்கள் புது வரவின் ஆரவாரத்தில் இவனைக் கவனிக்காதபோதும் கணவனையே பார்வையால் தொடர்ந்துகொண்டிருந்த கானவி அவன் முக மாற்றத்தைக் கண்டுகொண்டாள்.
நெஞ்சில் என்னவோ திகில் போன்ற ஒன்று பரவிற்று. எல்லோரையும் வைத்துக்கொண்டு என்ன என்று கேட்கவும் முடியவில்லை. அவள் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்தவனின் தாடை இன்னுமே இறுகிப் போயிற்று.
செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது என்ன பார்வை?
அவர்கள் இருவரையும் கவனித்த மற்றவர்கள், அவர்கள் தனியாகப் பேசிக்கொள்ளட்டும் என்று விலகிப் போனார்கள். இனியாவது கதைப்பானா என்று பார்த்தாள் கானவி.
அவன் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் புறம் திரும்பவே இல்லை. வந்தபோது நன்றாகத்தானே இருந்தான். “தம்பி எப்பிடி இருக்கிறான்?” தயங்கி வினவினாள்.
அவன் தாடை இறுகிய விதத்திலேயே அவன் கோபம் புரிந்துவிட, இந்த நேரத்திலுமா என்று திகைத்தாள் கானவி. அவளால் இதை ஏற்கவே முடியவில்லை. அவளை ஒருவித விரக்தி சூழ்ந்தது. அப்படியே விட முடியாமல், “ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்றாள் மீண்டும் கரகரத்த குரலில்.
ஆத்திரம் மேலோங்க ஒருமுறை விழிகளை இறுக்கி மூடித் திறந்தவன் வேகமாக வாசலை நோக்கி நடந்தான். விக்கித்துப்போய்க் கணவனைப் பார்த்தாள் கானவி.
“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…” அவள் கைப்பேசி மெலிதாய் இசைத்தது. கடம்பன் அழைத்துக்கொண்டிருந்தான்.
அவன் நடை நின்று போயிற்று. அவனால் அவளைத் தாண்டி அடுத்த அடியை எடுத்துவைக்க முடியவில்லை. அவளும் நொடியில் நிலைகுலைந்தாள். அடக்கி வைத்த உணர்வுகள் எல்லாம் வெடித்துக்கொண்டு கிளம்பின. இருவருக்குள்ளும் பெரும் போராட்டம். அவர்களின் உணர்வுகள் விளிம்பு நிலையில் தளும்பி நின்றன.
இருவரில் ஒருவர் மற்றவர் புறமாய் ஒரேயொரு காலடி எடுத்து வைத்தாலே போதும். அவர்களுக்குள் எழுந்து நிற்கும் அந்தச் சுவர் உடைந்துவிடும். அந்த இடைவெளி இல்லாமல் போய்விடும். ஆனால், இருவரும் அசையவில்லை.
செவிகளை நனைத்துக்கொண்டு ஓடிய கண்ணீரோடு விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு அவள் அப்படியே படுத்துக் கிடந்தாள். அவன் ஒரு முறை விழிகளை இறுக்கி மூடித் திறந்துவிட்டு முதலையும் விட வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
குடும்பத்தினர் திகைத்து நின்றனர். யாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
கலக்கத்தோடு புவனாம்பிகையைப் பார்த்தனர் கானவியின் பெற்றோர். அதற்குமேல் அவராலும் அமைதியாக இருக்க முடியவில்லை.
“அண்ணா, எனக்குத் தெரிஞ்சது எல்லாம் கடம்பனை வழியனுப்பிப்போட்டு வாறன் எண்டு வந்த பிள்ளை உங்களோடயே இருந்துகொண்டது மட்டும்தான். அதுக்கு அவான்ர உடல்நிலை மட்டும்தான் காரணமா எண்டு எனக்குத் தெரியாது. அப்பிடி எண்டாலும் அதைச் சொல்லிப்போட்டு வந்திருக்க வேணும். அவா வரேக்க தம்பி வீட்டில இருக்கவும் இல்ல. இதெல்லாம் எனக்கு மனதில இருந்தாலும் முதல் சுகமா பிள்ளை பிறக்கட்டும், பிறகு கதைப்பம் எண்டுதான் நானும் நினைச்சுக்கொண்டு இருந்தனான். இனி என்ன எண்டு நீங்கதான் சொல்லோணும்.” என்றார் நேராகவே.
அவர் என்னவோ தன் மனத்தில் இருப்பதைத்தான் சொன்னார். அதுவே, தம் மகள் மீதுதான் தவறு என்று சொல்கிறாரோ என்று தோன்றிவிட, “நாங்க எவ்வளவோ கேட்டுப் பாத்தனாங்க. ஒண்டும் இல்லை எண்டுதான் சாதிச்சவா. ஆனா, தம்பியும் இவ்வளவு நாளும் பிள்ளையைப் பாக்க வரவே இல்லைதானே. முதலும் அப்பிடித்தான். பிள்ளை பிறந்திருக்கிற இந்த நேரத்திலையும் கோபத்தைக் காட்டினா…” என்ற அருந்தவராஜாக்கு மேலே என்ன கதைப்பது என்று தெரியவே இல்லை.
“உண்மைதான் அண்ணா. எனக்கும் விளங்குது. ஆனா, எங்களுக்கு இது மட்டும்தானே தெரியுது. இதுக்கு முதல் என்ன நடந்தது, அவே ரெண்டு பேருக்கையும் என்ன சண்டை எண்டு தெரியாது எல்லோ.” என்ற புவனாம்பிகை மேலே பேச்சை வளர்க்கப் போகவில்லை.
கோபமாகவோ குற்றம் சாட்டுதலாகவோ கதைக்காதபோதும் இரு தரப்புக்கும் இடையே இருந்துவந்த ஒரு இணக்கமான நிலை அறுபட்டுப் போயிற்று. அதன் பிறகு இரு தரப்புமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீடு வந்த புவனாம்பிகை, அங்கு அவர்கள் பேசியவற்றைச் சொல்லி அவன் கோபத்தைக் கூட்டிவிடாதபோதும், “ஏன் தம்பி இப்பிடி இருக்கிறீங்க? பிள்ளை பிறந்திருக்கிற இந்த நேரத்தில நீங்க நடக்கிற முறை கொஞ்சமும் சரியில்ல!” என்று கடிந்துகொண்டார்.
அவன் அசைய வேண்டுமே!
அங்கே கானவியும் அதேதான். “இவ்வளவு நாளும் ஒண்டுமில்லை ஒண்டுமில்லை எண்டு பொய் சொல்லி இருக்கிறீங்க என்னம்மா? இனியாவது நடந்ததைச் சொல்லுங்கோ பிள்ளை.” என்று விசாலாட்சி கேட்டும் வாயைத் திறக்க மறுத்தாள்.
நடந்ததைச் சொன்னால், உடனடியாக நகையை மீட்பதற்கு முயல்வார்கள். இன்றைய நிலையில் அவளின் அப்பாவிடம் மருந்துக்கும் பணமில்லை என்று தெரியும். கடம்பனுமே இப்போதுதான் வேலை கிடைத்திருப்பதாகச் சொல்லியிருந்தான். ஆக நகையை மீட்க எப்படியும் கொஞ்ச நாள்களாகும். கூடவே, கணவனின் செய்கை அவளை மிகவுமே காயப்படுத்தியிருந்தது. அதில் வைத்தியசாலையிலிருந்து நேராகத் தங்கள் வீட்டுக்கே சென்றாள்.
மருமகனின் செய்கையில் மிகுந்த அதிருப்தி கொண்டிருந்த அருந்தவராஜாவும் அதையேதான் விரும்பினார். கணேசன் கூட அதைத்தான் சொன்னார்.
*****
குழந்தைக்கு மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. இன்னும் கானவி தாய் வீட்டில்தான் இருந்தாள். வைத்தியசாலையிலிருந்து வீடு வந்த பிறகு துடக்குக் கழிவுக்கு மட்டும் வந்தவன் குழந்தையைக் கையிலேயே வைத்திருந்தான். அதன் பிறகு அந்தப் பக்கம் எட்டியே பார்க்கவில்லை.

