இடைவெளி வலிக்குதே 23 – 2

பயிற்சி எடுத்த மாணவர்கள் எல்லோரும் வெள்ளைக் கரையிட்ட கறுப்புச் சேலையோடு, அங்கே பயிற்சியெடுத்த சிகையலங்காரங்களில் ஒன்றைத் தலையில் சுமந்தபடி, ஓடியாடி விழாவுக்கான வேலைகளைப் பார்ப்பதைக் கண்ட பெரியவர்கள் இருவருக்கும் வியப்பாய்ப் போயிற்று.

அந்தப் பயிச்சியை வழங்கியவர்கள் தம்மிடம் பயிற்சியெடுத்த எல்லோருக்கும் நன்றி சொல்லினர். கூடவே தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். இவர்களைப் போலவே பயிற்சி மாணவர்களாக இத்துறையில் காலடி எடுத்து வைத்து, எப்படியான கடுமையான சூழ்நிலைகளை எல்லாம் கடந்து, இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள். அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காக இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியை, சமூக வலைத்தளங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்றெல்லாம் சொல்லி, கடைசியில் போட்டி போன்று ஒன்று நடத்தினார்கள்.

அதாவது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகக் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வழங்கி, பதினைந்து வகையான சிகையலங்காரங்கள் செய்யச் சொன்னார்கள். ஒவ்வொரு பயிற்சியாளரும் தம் முன்னே இருந்த பொம்மையோடு மின்னலாகச் சுழன்றார்கள். கடைசியில் எத்தனை சிகையலங்காரங்களை அவர்கள் கொடுத்த நேரத்தில் முழுமையாக முடித்தார்கள் என்கிற எண்ணிக்கையின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

அந்தப் போட்டியில் கானவி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தாள். அவள் பரிசு வாங்கச் சென்றபோது, பிறந்த குழந்தையையும் தூக்கிக்கொண்டு வகுப்புக்கு அவள் வந்ததைக் குறிப்பிட்டு, அவளின் மன உறுதியை, விடாமுயற்சியை அந்த நிறுவனர் பிரத்தியேகமாகக் பாராட்டியபோது, எதையோ பெரிதாகச் சாதித்த உணர்வு அவளுக்குள்.

அதைவிட, தன்னுடைய இந்த வெற்றிக்குத் துணையிருந்தவர்கள் என்று புவனாம்பிகையையும் விசாலாட்சியையும் நிலவனோடு சேர்த்து அவள் மேடையேற்றிவிட, அந்த வெற்றி இன்னொரு வடிவமெடுத்து பெரியவர்கள் இருவரின் மனத்தையும் கூட நிறைத்து நின்றது.

வீடு வந்தபோது அவளுக்கு மட்டுமில்லை புவனாம்பிகைக்குமே மனம் விம்மிப்பு பூரித்திருந்தது. அவரின் பிள்ளைகள் படித்தவர்கள்தான். அவரவர் இருக்கும் துறைகளில் திறமையானவர்கள்தான். ஆனால், இப்படி ஒரு விழாவுக்குச் சென்றதும் இல்லை, இப்படியானவற்றை அவர் பார்த்ததும் இல்லை.

அவரே மருமகளை இப்படியே இருக்க விட்டுவிடக் கூடாது, அவளை இந்தத் துறையில் இன்னுமின்னும் மேலே வரவைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார். தன் பிள்ளைகளிடம் சொல்லி சொல்லிப் பூரித்தார்.

சிந்துஜாவும் சிவரூபனும் அவளை வாழ்த்தினார்கள். அவள் கணவன் மட்டும் அன்னை சொன்னது எதுவுமே காதில் விழவில்லை என்பதுபோல் இருந்துகொண்டான்.

நிலவனுக்கு ஆறாம் மாதம் தொடங்கியிருந்தது. இன்னுமே ஒரே அறை, ஒரே கட்டில். ஆனாலும் இருவரும் இரு எல்லையத் தம் ஆதிக்கமாக வைத்திருந்தனர். அவனும் நெருங்கவில்லை. அவளும் நெருங்கவில்லை.

வகுப்பு முடிந்துவிட்டதால் பெரிதாக வேலை என்று கானவிக்கு எதுவும் இல்லை. மகனைக் கவனிக்கும் நேரம் தவிர்த்துப் புவனாம்பிகைக்குச் சமையலில் உதவி செய்தாள். உள்ளூர ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் உணர்ந்தாலும், “நீங்க போய்த் தம்பியோட இருங்கோம்மா. நான் இங்க பாப்பன்.” என்று சொன்னதை அவள் கேட்கவில்லை. உதவி செய்வது மாத்திரமல்லாமல் சமையலையும் அவரிடம் கேட்டு கேட்டுப் பழகினாள்.

இணைய வழியாக நடக்கும் சில மேக்கப் வகுப்புகளில் இணைந்துகொண்டாள் கானவி. இதற்கெல்லாம் செந்தாளனிடம் பணம் கேட்கவில்லை. அவளின் சீதனக்காசில் குறிப்பிட்ட தொகையை மட்டும் நிரந்தர வைப்பில் போட்டுவிட்டு, செலவுக்கென்று கொஞ்சம் புத்தகத்தில் வைத்திருந்தாள். கூடவே, அவள் இங்கே வரப்போகிறாள் என்றதும் அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கடம்பனும் பணம் அனுப்பியிருந்தான். அதுவும் இருந்தது.

இணையவழி என்பதால் மகன் பக்கத்திலேயே இருப்பது அவளுக்குத் தொந்தரவாகவே இல்லை. புவனாம்பிகையும் எப்போதுமே உதவிக்கு இருந்தார்.

அன்று மாலை வகுப்புகள் முடிந்து வீடு வந்த செந்தாளன் அறைக்குள் வந்தபோது, அவனது புத்தக செல்பில் ஒரு இடம் ஒதுக்கி, அதில் அவளது லாப்டாப்பை வைத்திருந்தாள் கானவி. அதில் மேக்கப் வகுப்பு நடந்துகொண்டிருந்தது.

இங்கே இவள் அறை நடுவில் நின்று மகனை நித்திரைக்கு ஆட்டியபடி வகுப்பைக் கவனித்துக்கொண்டிருந்தாள். காதில் ஹெட்போன்கள். அப்படி அவளைக் கண்டவனால் சற்று நேரத்துக்கு அசைய முடியாமல் போயிற்று. இப்படி ஒரு தீவிரத்தை நிச்சயம் அவன் எதிர்பார்க்கவில்லை. ஹெட்போன்கள் காதில் இருந்ததாலும் அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்ததாலும் அவன் வந்ததை அவள் உணரவில்லை என்று விளங்கிற்று.

அவள் கையில் இருந்த நிலவன் சிணுங்கினான். “அம்மான்ர செல்லக் கண்ணன் நித்திரை கொள்ளாம ஏன் அழுறான்?” என்று மெலிதாகச் செல்லம் கொஞ்சியபடி அவன் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் அவள்.

மகன் சிரித்திருக்க வேண்டும். “பாரடா! அம்மா கொஞ்சினதும் குட்டியன் சிரிக்கிறான். அம்மான்ர செல்லம். அம்மான்ர குஞ்சு. நித்தா கொள்ளுங்கடி!” என்று அன்னையாய்க் கொஞ்சியவளின் கொஞ்சல் அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்தவனின் உள்ளத்தையும் தொட்டது.

அங்கே பின் பக்கத்திலிருந்து புவனாம்பிகை வீட்டுக்குள் வருவது தெரியவும் அறைக்குள் வந்தான். ஏதோ அரவத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவள், அவனை எதிர்பாராத அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள்.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்று, மேசையில் தன் புத்தகங்களை வைத்தவன் மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான்.

மகனைக் கவனிப்பதை விட இதுவா உனக்கு முக்கியம் என்று சூடாக எதையும் சொல்லிவிடுவானோ என்று பயந்த கானவி, அவன் பேசாமல் போகவும் தான் மூச்சை இழுத்துவிட்டாள்.

மீண்டும் வகுப்பில் கவனத்தைக் குவித்தாலும் அவன் பார்வை கண்முன்னே வந்து நின்று கவனத்தைச் சிதறடித்தது. ஏனோ முதன் முதலில் டவுனில் வைத்து அவன் பார்த்த பார்வை நினைவில் வந்தது. அதில் ஒருவிதக் கோபம் தெரிந்தது என்றால் இன்றைய பார்வையில் என்ன இருந்தது? ஆராய்ச்சி, என்ன செய்கிறாய் என்கிற கேள்வி? அவளுக்கு விளங்கவே இல்லை. நெஞ்சு படபடக்க நிற்கமுடியாமல் சென்று கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

நிலவனோ எழுந்து நின்று ஆட்டு என்று சிணுங்கினான்.

“அடேய்! அப்பாவும் மகனுமாச் சேந்து என்னை ஏனடா இந்தப் பாடு படுத்துறீங்க?” என்றுகொண்டு எழும்பப் போனவள் உள்ளே வந்தவனைக் கண்டு, ‘அம்மாடி!’ என்று உள்ளுக்குள் அலறியபடி மீண்டும் தொப்பென்று அமர்ந்துவிட்டாள்.

சொன்னதைக் கேட்டிருப்பானா என்கிற பயத்தில் நெஞ்சு அடித்துக்கொள்ள, இப்போதும் அவனையே பார்த்தாள். மறந்துவிட்டுப் போன துவாயை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தவனின் உதட்டோரம், நிறைய நாள்களுக்குப் பிறகு மெல்லிய சிரிப்பில் துடித்தது. ‘கிட்டப் போகவே இல்ல. இதுல பாடு படுத்திறனாம்!’

“அடேய் தம்புடு! உங்கட அப்பாக்கு நான் சொன்னது கேட்டிருக்குமாடா?” என்று தன்னை மறந்து மகனிடம் கேட்டவள் விசுக்கென்று திரும்பி அறை வாசலைப் பார்த்தாள். இந்தமுறை அவன் வரவில்லை. அதன்பிறகுதான் ஆசுவாசமானாள். எழுந்து நின்று மகனை ஆட்டியபடி மீண்டும் வகுப்பில் கவனம் செலுத்தினாள்.

குளித்து உடைமாற்றி வந்த செந்தாளன், நேராக வந்து அவளிடமிருந்து மகனை வாங்கினான். நடப்பதை நம்ப முடியாமல் திகைத்து, இப்போதும் அவனையே பார்த்தாள் கானவி.

இதுவரையில் அவனாக அவளிடமிருந்து மகனை வாங்கியதில்லை. நிலவன் கட்டிலிலோ தரையிலோ படுத்திருந்தால் தூக்கிக்கொள்ளுவான். அவள் கையில் இருந்தால், “அம்மா, தம்பியத் தாங்க.” என்பான். அவரும் பேரனை வாங்கி அவனிடம் கொடுப்பார். முதல் இரண்டு நாள்கள் இதைக் கவனித்துவிட்டு, அவன் குளித்து உடைமாற்றி சோபாவில் அமர்ந்ததும் அவளே அவன் முன்னால் விரிப்பை விரித்து மகனைக் கிடத்திவிட்டு வந்துவிடுவாள். இதுதான் அவர்களுக்குள் வழக்கம்.

இன்றென்ன புதிதாக?

இங்கே செந்தாளன் மகனோடு விளையாடிக்கொண்டிருந்தாலும் ‘அப்பாவும் மகனுமாச் சேந்து என்னை ஏனடா இந்தப் பாடு படுத்துறீங்க?’ என்று அவள் கேட்டதே திரும்ப திரும்ப காதில் கேட்டது. மனத்தில் இருக்கும் அத்தனை கோபதாபங்களையும் மீறி, சில்லென்று ஒரு உணர்வு பரவுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சற்று நேரத்தில் நிலவன் நன்றாக உறங்கியிருந்தான். மெல்ல தூக்கிக்கொண்டு போய்க் கட்டிலில் கிடத்தினான். அறையில் அவள் இல்லை. மகனுக்குப் போர்த்திவிட்டுத் திரும்பியவனின் பார்வையில் லாப்டாப்பும் அதன் மேலே இருந்த கொப்பியும் பட்டது. ஏதோ ஒரு உந்துதலில் அதை எடுத்துப் பார்த்தான்.

முதல் பக்கத்திலேயே, ‘கானவி செந்தாளன்’ என்று பெரிதாக எழுதியிருந்தாள். சில கணங்களுக்கு அந்தப் பெயரில் பார்வையை நிலைக்க விட்டவன் அடுத்த பக்கத்தைப் பிரட்டினான.

மிக நேர்த்தியாய்ப் புருவங்கள் வரைந்து என்னென்னவோ குறித்து வைத்திருந்தாள். கண்களும் அப்படித்தான். அழகழகாய் வரைந்து, இமை மடல்களில் ஒவ்வொரு வடிவத்தில் கலரும் கொடுத்திருந்தாள். ஒடுக்கமான, வட்டமான, ஒரு வகை சதுரம் போன்ற முக வடிவங்களைக் கோட்டோவியம் போன்று பென்சிலால் வரைந்து, அவற்றுக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்றும் எழுதியிருந்தாள்.

அனைத்தும் மிகுந்த நேர்த்தியாய் இருந்தன.

அவளின் இந்த ஆர்வத்தைக் கவனித்து ஊக்குவித்திருக்க வேண்டுமோ? ஒரு ஆசிரியனாக இருந்தும் அவளுக்கு அதைச் செய்யாமல் விட்டுவிட்டானோ? என்னவோ அன்றைக்கு அவள் பற்றிய நினைவுகள் அவனுக்குள் கிளறுபட்டுக்கொண்டே இருந்தன.

பாசமிகு அன்னையாய் அவள் நிலவனைக் கொஞ்சிய காட்சி உண்டாக்கிய மாற்றமா, இல்லை, ‘அடேய்! அப்பாவும் மகனுமாச் சேந்து என்னை ஏனடா இந்தப் பாடு படுத்துறீங்க?’ என்று கேட்டது காரணமா என்று தெரியவில்லை.

அவள் வரும் அரவம் கேட்கவும் கொப்பியை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, பேசாமல் அறையை விட்டு வெளியே வந்துவிட்டான்.

error: Alert: Content selection is disabled!!