இடைவெளி வலிக்குதே 24 – 1

அத்தியாயம் 24

இன்னும் இரண்டு மாதங்களில் சிவரூபனின் திருமணம் என்னும் அளவில் நாள்கள் நெருங்கியிருந்தன. அது ஒரு மாலைப்பொழுது. சிந்துஜாவும் புவனாம்பிகையும் விறாந்தையில் தரையில் அமர்ந்திருந்து நிலவனோடு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, கைகொள்ளாப் பைகளோடு வந்தான் சிவரூபன்.

“என்னடா இது?” கலியாணத்துக்கானவற்றைத் தனியாகச் சென்று வாங்கிவிட்டானோ என்று திகைத்து வினவினாள் சிந்துஜா.

“நந்தினிக்கு அக்கா. சப்ரைஸா இருக்கட்டும் எண்டு வாங்கினான்.” முகம் கொள்ளாப் பூரிப்புடன் சொன்னவன் பிரித்துக் காட்டினான். சேலைகள், சல்வார்கள், பாவாடை சட்டைகள் என்று நிறைந்து கிடந்தன. கூடவே நகைகளும். பார்த்தவர்களுக்கு மெல்லிய திகைப்பு. நிச்சயம் பெரும் தொகை செலவு செய்திருப்பான் என்று தெரிந்தது.

‘சப்ரைஸுக்கே’ இவ்வளவு என்றால் இனித் திருமணத்துக்கு?

அவன் முகத்தில் தெரிந்த சந்தோசத்தையும் பூரிப்பையும் கவனித்த புவனாம்பிகையும் சிந்துஜாவும் ஒன்றும் சொல்லவில்லையே தவிர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“எல்லாம் நல்ல வடிவா இருக்கு. கவனமா எடுத்து வை.” என்று மட்டும் சொன்னார் புவனாம்பிகை.

அவனும் அவன் அறையில் வைத்துவிட்டுக் குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தான். கொஞ்ச நேரம் நிலவனோடு விளையாடினான். அப்படியே புவனாம்பிகை கொடுத்த தேநீரைப் பருகிவிட்டு, “வேலை இருக்கம்மா.” என்றுவிட்டு மீண்டும் புறப்பட்டிருந்தான்.

அவன் போவதையே பார்த்திருந்த சிந்துஜா, அவன் பைக் வீட்டின் கேட்டை தாண்டியதும், “என்னம்மா இவன் இப்பிடி இருக்கிறான்? விட்டா நந்தினின்ர பெயர்ல முழுச் சொத்தையும் எழுதி வைப்பான் போல. உழைக்கிறதை எல்லாம் இப்பிடிச் சிலவு செய்துபோட்டு, நாளைக்கு ஒரு தேவை எண்டு வரேக்க என்ன செய்வானாம்?” என்றாள் மெய்யான கவலையோடு.

புவனாம்பிகையும் அதை எண்ணித்தான் பயந்தார். ஆனாலும், “விடுங்கோம்மா. நந்தினிய விரும்பினாலும் இவ்வளவு காலம் பொறுத்திருந்து கட்டுறான். அந்தச் சந்தோசத்தில் செய்றான். அவனாவது சந்தோசமா இருக்கட்டும்.” என்றார்.

“இப்ப ஆருக்கு என்னம்மா குறை?”

“குறை எண்டு இல்ல பிள்ளை. நிறை எண்டும் இல்லையே.”

சிந்துஜாவும் அதைக்கேட்டு அமைதியாகிப் போனாள். இப்போதெல்லாம் குழந்தைக்காக வைத்தியம் பார்த்துப் பார்த்தே அவளுக்கு உடம்பு முடிவதில்லை. மனோகரன் வீட்டில் சாடை மாடைப் பேச்சுகள் அதிகரித்திருந்தன. அவனுமே நிலவனைப் பார்த்து இன்னும் அதிகமாக ஒரு குழந்தைக்கு ஏங்குவது தெரிந்தது. செந்தாளனின் வாழ்க்கையும் தண்ணீரும் எண்ணெயும் போல் ஒட்டாமல் இருக்கிறது. அப்படி இருக்க அவர் சொல்வது சரிதானே.

“எல்லாம் சரியா வரும் அம்மா.” நிலவனின் பிஞ்சு விரல்களுக்குள் தன் ஒற்றை விரலைப் பிடிக்கக் கொடுத்தபடி சொன்னாள்.

“சரியா வரோணுமாச்சி. வேற என்ன எங்களுக்கு வேணும் சொல்லுங்கோ? அப்பாக்கும் வர வர ஏலாம வருது. நாங்க இருக்கிற காலத்திலேயே நீங்க எல்லாரும் ஒரு குறையும் இல்லாம சந்தோசமா வாழுறதைப் பாத்திடோணும்.” என்று சொல்லவும் சிந்துஜாவுக்கு வருத்தமாயிற்று.

“இப்பிடியெல்லாம் சொல்லாதீங்க அம்மா. நீங்களும் அப்பாவும் நிறையக் காலத்துக்கு இருப்பீங்க. நாங்களும் நல்லாருப்போம்.” என்றாள் நம்பிக்கையோடு.

*****

பழகிய சிகையலங்காரங்களில் இரண்டு அல்லது மூன்றை தினமும் நேரம் கிடைக்கையில் போட்டுப் பார்த்துப் பயிற்சி எடுத்துக்கொள்வாள் கானவி. அவற்றைப் புகைப்படமாக எடுத்து முகப்புத்தகம், இன்ஸ்டா என்று பதிவேற்றவும் செய்வாள்.

அன்றும் அப்படித்தான் மகனை அறையின் தரையில் விளையாடக் கிடத்திவிட்டு, அவளின் இடுப்பளவு உயரத்துக்கு இருந்த பொம்மையின் முடியில் ஒரு சிகையலங்காரம் போட்டுக்கொண்டிருந்தாள்

அப்போது வீடு வந்த செந்தாளனின் முகம் சரியாக இல்லை. நேராகச் சென்று குளித்துவிட்டு வந்தான். மகனோடு சோபாவுக்குச் சொல்லப்போகிறான் என்று அவள் நினைத்திருக்க, அங்கேயே நிலவனின் அருகிலேயே தரையில் படுத்துக்கொண்டான். என்னவோ என்று ஓடிற்று அவளுக்குள்.

சின்னவன் தகப்பனைக் கண்டு கையைக் காலை அடித்துக் குதூகலித்தான். அது மனத்துக்கு இதம் சேர்க்க மகனோடு சற்று நேரம் விளையாடினான். இரண்டு முட்டை விழிகளும், அவற்றோடு போட்டி போடும் பெரிய கரிய நிற நெற்றிப் பொட்டும், குண்டுக் கன்னங்களும், செப்பு இதழ்ச் சிரிப்புமாய் இருந்த மகனைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை. அவன் முகமும் கொஞ்சமாய்த் தெளிந்தது.

அப்படி அவனும் அறையில் இருப்பது ஒரு மாதிரிக் குறுகுறுத்தாலும் சிகையலங்காரத்தைப் போட்டு முடித்தாள் கானவி. மிகவும் திருப்தியாக வந்ததில் பல கோணங்களில் புகைப்படமும் எடுத்துக்கொண்டாள்.

மகனின் சின்ன சத்தத்தில் தன்னிச்சையாய்த் திரும்பிப் பார்த்தாள். ஒரு கையைத் தலைக்குக் கொடுத்துப் படுத்திருந்த செந்தாளனின் பார்வை மகன் மீது இருந்தாலும் சிந்தனை இங்கில்லை என்று நெரித்திருந்த புருவங்கள் சொல்லின.

ஏதும் பெரிய பிரச்சனையோ? அந்த யோசனையோடே அந்த இடத்தை ஒதுக்கி, பயன்படுத்திய பொருள்களை எல்லாம் எடுத்து அதனதன் இடத்தில் வைத்து, பொம்மையையும் தூக்கி அலமாரியின் மேலே வைத்தாள்.

செந்தாளனுக்குள் நடந்துகொண்டிருந்தது சுய அலசல்.

அவள் அங்கிருக்கும் வரையிலாவது ஒரு கோபம் அவனைச் சுற்றிக்கொண்டே இருந்தது. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கதைத்து இங்கே கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். அதன் பிறகாவது மனது நிம்மதி அடைந்ததா என்றால் இல்லை.

மகன் அருகில் இருந்தாலும் அந்த மகிழ்ச்சியை, மகனின் சின்ன சின்ன அசைவுகளை அவளோடு பகிராமல் என்னவோ எதுவுமே முழுமையடையாத ஒரு உணர்வு. அவள் அவள்பாடு அவன் அவன் பாடு. அவர்களுக்குப் பொதுவில் மகன். தான் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்கிற சலிப்பு.

அதற்குக் காரணம் சிவரூபன். இன்று நந்தினியோடு அவனை டவுனில் கண்டிருந்தான். அவர்கள் இருவர் முகங்களிலும் அத்தனை சந்தோசம். நகைக்கடை ஒன்றுக்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

என்ன இவன் கடையைத் திறந்து வைத்துவிட்டு இப்படித் திரிகிறான் என்று தோன்றினாலும் அவர்கள் முகங்களில் தெரிந்த அந்தப் பூரிப்பும் சந்தோசமும் அவன் வாயைக் கட்டிப் போட்டிருந்தன. அதுவே அவன் வாழும் வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்க வைத்தது.

கானவி மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு குளிக்கச் செல்வது தெரிய சித்தனை கலைந்தான். ஒரு நெடிய மூச்சுடன் மகனைத் தூக்கில் மார்பில் போட்டபடி மல்லாந்து படுத்துக்கொண்டான். சின்னவன் அவன் மேலே ஏறுவதும் இறங்குவதும் அவனிடம் என்னவெல்லாமோ சொல்வதும் என்று மனத்தின் பாரத்துக்குப் பெரும் ஆறுதலாய் இருந்தான்.

அவள் குளித்துவிட்டு வந்தபோது நிலவன் சினுங்க ஆரம்பித்திருந்தான். பசியாற்றும் நேரம். ஆனால், தலைக்குக் கைகள் கொடுத்து அவன் கண்மூடிப் படுத்திருக்க, அவன் மார்பில் கிடந்த மகனைத் தூக்கத் தயங்கி நின்றாள்.

மகனோடான அவனின் அந்த நொடிகளைக் கலைக்க மனமும் வரவில்லை. எப்படி அவளை உணர்ந்தானோ மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தான். கானவியால் ஏனோ பார்வையை அகற்ற முடியாமல் போயிற்று.

“தம்பிக்குப் பசி.” என்றாள் முணுமுணுப்பாக.

மகனை மார்போடு அணைத்தபடியே எழுந்து அமர்ந்து, அப்படியே அவனைத் தூக்கி அவளிடம் கொடுத்தான். இருவர் கைகளும் தொட்டுக்கொண்ட நொடிகளில் இருவருக்குள்ளும் என்னென்னவோ உணர்வுகள் பொங்கி அலையடித்தன. எதையும் காட்டிக்கொள்ளாமல் சென்று கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து பசியாற்றினாள்.

error: Alert: Content selection is disabled!!