இடைவெளி வலிக்குதே 27 – 1

அத்தியாயம் 27

தைப் பொங்கல் நாளும் வந்து சேர்ந்திருந்தது. அதிகாலையிலேயே எழுந்து, குளித்துத் தயாராகி வந்தவனுக்கு அவன் வாங்கிக் கொடுத்ததை அணிவாளா என்பதிலேயே முழுக் கவனமும் இருந்தது.

அதை அறிந்தோ என்னவோ தன் நேரத்தை மகனோடு செலவழித்துக்கொண்டிருந்தாள் கானவி. புவனாம்பிகை எத்தனையோ முறை சொல்லியும், “ஓம் மாமி. இந்தா போறன்.” என்றாளே தவிர அசைந்தாள் இல்லை. கடைசியில் மகனைக் கொண்டுபோய்த் தந்தையிடம் கொடுத்துவிட்டு வந்து, “போ வெளிக்கிடு!” என்று அவன் சொன்ன பிறகுதான் அசைந்தாள்.

அவன் வாங்கித் தந்ததை அணிய எந்தளவில் விருப்பம் இல்லாமல் இருந்தாளோ அதேயளவுக்கு வேறொன்றை அணியப் பயந்தாள் கானவி. அவன் கோபம் அவள் அறிந்ததாயிற்றே! மீண்டும் ஒரு சண்டையா என்று மனம் முரண்டியது. அதற்கென்று ரோசம் கெட்டு அவன் வாங்கித் தந்ததைப் போடுவதா? ஒரு பிடிவாதத்துடன் அவளிடம் இருந்த வேறொரு சுடிதாரினைப் போட்டு முடிக்கையில் அவன் அறைக்குள் உள்ளிட்டான். ஒற்றைப் பார்வையில் அவளை அளந்தவன் வேறு யோசிக்கவில்லை.

அவளை நெருங்கி, அவள் அணிந்திருந்ததைக் கழற்ற முயலவும், “அச்சோ என்ன செய்றீங்க?” என்று பதறி, அவன் கையைப் பற்றினாள் கானவி.

“அப்ப அதப் போடு!”

“இல்ல, போடமாட்டன்.” அவன் செய்கையில் அவளுக்குக் கோபம் வந்திருந்தது.

“ஏன்?”

அவள் பதில் சொல்லாமல் நின்றாள்.

“சொல்லு கானவி, ஏன் போடமாட்டாய்?”

“நீயும் வேணாம் உன்ர சீதனமும் வேண்டாம் எண்டு சொல்ல எவ்வளவு நேரமாகும் எண்டு கேட்டவரிட்ட இருந்து எனக்கு ஒண்டும் வேண்டாம்.” என்றாள் அவள் அதற்குமேல் முடியாமல்.

அவனிடம் ஒருகணம் அசைவற்றுப் போனது. வேகமாகச் சமாளித்துக்கொண்டு, “தென்னந்தோப்பு வாங்கித் தாறன், என்ர மகளோட சந்தோசமா வாழு எண்டு சொன்னது என்னைக் கேவலப் படுத்தாதா கானவி?” என்றதும் அவள் விழிகள் கலங்கிச் சிவந்தன.

“நீங்க எடுத்துச் சொல்லுற வரைக்கும் அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏன் நீங்க என்னட்ட ஒரு வார்த்த கேக்கேல்ல? நடந்தது தெரியாம வார்த்தைகளை நீங்க வீசுவீங்க. நான் ரோசம் கெட்டு நீங்க வாங்கித் தந்ததைப் போடோணுமா?” என்று அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.

“அப்ப காலத்துக்கும் நான் வாங்கித் தாறதைப் போட மாட்டியா நீ?” என்றதும் அவள் பார்வையை அகற்றினாள். அதற்கு விடாமல் அவள் முகம் பற்றி நிமிர்த்தினான் அவன். “சொல்லு, இனி நான் வாங்கித் தாறதைப் போடவே மாட்டியா?”

இதற்கு என்ன பதிலைச் சொல்வது? அவளுக்குத் தெரியவில்லை.

“சரி, நான் கதைச்சது எல்லாம் பிழைதான். இப்ப உடுப்பை மாத்து.” என்றான் அவனும் சமாதானமாக.

அப்போதும் பேசாமல் நின்று தன் மறுப்பைக் காட்டினாள்.

“நீ போடாம நானும் நீயும் இந்த அறைய விட்டு வெளில போகப்போறேல்ல கானவி!” அவன் குரலில் மீண்டும் சூடேற ஆரம்பித்தது.

அவள் விழிகள் கலங்கிப் போயின. “எனக்கு விருப்பம் இல்லாததை வலுக்கட்டாயமா இப்பிடிச் செய்ய வைக்காதீங்க, ப்ளீஸ்.” என்றாள் கண்ணீருடன்.

ஒரு கணம் அவளையே பார்த்தவன் பேசாமல் வெளியில் சென்றுவிட்டான். அந்தப் பார்வை அவளை என்னவோ செய்தது. அதற்கென்று உடையை மாற்றிக்கொள்ளவும் இல்லை.

அதன்பிறகு மற்றவர்களிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லையே தவிர்த்து அவள் பக்கம் திரும்பவே இல்லை செந்தாளன்.

நல்லபடியாகப் பொங்கி, கும்பிட்டு, பொங்கல் உண்டனர். கடம்பன் அழைத்து எல்லோருக்கும் வாழ்த்தினான்.

“அங்க பொங்க இல்லையாடா?” என்று விசாரித்தாள் கானவி.

“பொங்குறதோ? இங்க பார், ஸ்னோ கொட்டுது.” என்று கண்ணாடி வழியே அவன் வாழும் நகரத்தைக் காட்டினான்.

“சுப்பரா இருக்கு என்னடா?” கண்கள் விரியச் சொன்னாள் தமக்கை.

“சுப்பரா இருக்கா? அதெல்லாம் வீட்டுக்க இருந்து பாத்தா மட்டும்தான். வெளில இறங்கினியோ குளிர்ல உயிர் போகும். வேலைக்குப் போறத நினைக்கவே எனக்கு விசரா இருக்கு.” என்று சலித்தான் அவன்.

அவளுக்கு வருத்தமாய்ப் போயிற்று. “என்னடா தம்பி? உனக்கு அங்க பிடிக்கேல்லையா?” என்றாள் கவலையோடு.

“உண்மையாப் பிடிக்கேல்ல. உடுப்பு, செருப்பு, மொழி, சாப்பாடு, வெதர் எண்டு எல்லாமே வித்தியாசம். உனக்குத் தெரியுமா இங்க இருக்கிற தமிழ் ஆக்கள் கூட ஐரோப்பாக்கும் ஆசியாக்கும் கலந்து பிறந்த மனுசர் மாதிரி மாறிப்போய் இருக்கினம். எனக்கு ஒண்டுமே பிடிக்கேல்ல.” என்றான் வெறுப்புடன்.

“அப்ப ஏன் இன்னும் அங்க இருக்கிறாய்? திரும்பி வா!” என்றதும் அவன் சிரித்தான்.

“என்னக்கா நீ, என்னவிடச் சின்னப்பிள்ளை மாதிரிக் கதைக்கிறாய். எவ்வளவு காசு சொல்லு? இப்பிடியே வந்தா எங்கட வீட்டு நிலைமை என்ன?”

“அப்பிடியெல்லாம் யோசிச்சுக் கஷ்டப்படாத. இங்க ஏதாவது தொழில் செய்யலாம். அப்பா ஹெல்ப் பண்ணுவார். என்ர சீதனக் காணி இருக்கு. நகை நட்டு இருக்கு. பிறகென்ன?”

தமக்கையின் பாசத்தில் உண்டான சிரிப்புடன், “நானும் திரும்பி வரத்தான் இருக்கிறன். கடனெல்லாம் முடிச்சு, அப்பா அம்மாக்குக் கொஞ்சம் போட்டுட்டு, தொழில் ஏதும் செய்ற அளவுக்குக் காசு சேத்துக்கொண்டு வரப்போறன். இங்க எனக்குச் சரி வராது.” என்றான் அவன்.

“பெரியாளா வளந்திட்டாய் தம்பி.” பொறுப்பான அவன் பேச்சு உள்ளத்தை நெகிழ செய்யச் சொன்னாள் கானவி.

“அநாதை மாதிரி ஆறு மாதம் இங்க வந்து இருந்தாய் எண்டு வை, நீயும் வளந்திடுவாய். மாமா இருந்தாலும் அவரும் பாவம் அக்கா. அவர் ஒரு பக்கத்தால மாமி இன்னொரு பக்கத்தால எண்டு ரெண்டு பேரும் வேல. அப்பிடி அனுப்பின காசை வச்சுத்தான் நாங்க இவ்வளவு காலமும் சொகுசா வாழ்ந்திருக்கிறம் எண்டு நினைக்க வெக்கமா இருக்கு.” என்றதும் அவளுக்கு வாயடைத்துப் போயிற்று.

“அக்கா, வெளிநாட்டுக்காரர் எடுத்து அனுப்புற போட்டோக்களுக்கும் அவே வாழுற வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்ல எண்டுறதே எனக்கு இங்க வந்த பிறகுதான் தெரியுது.” என்றான் அவன் சின்ன சிரிப்புடன்.

அவளுக்கு விழிகள் கலங்கிப் போயிற்று.

“விடக்கா, எல்லாம் ஒரு கண்திறப்புத்தான்.” என்று இயல்பாய்ச் சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான் அவன்.

சிந்துஜாவும் மனோகரனும் எடுத்து வாழ்த்தினார்கள். அருந்தவராஜாவும் விசாலாட்சியும் மாலை வருவதாகச் சொல்லிவிட்டு வைத்தார்கள். நந்தினியோடு அவள் வீட்டுக்குப் புறப்பட்டான் சிவரூபன். ஆளுக்கொரு பக்கம் என்று இருந்த இவர்கள் இருவரையும் பார்க்கக் கவலையாக இருந்தது சற்குணத்தாருக்கு.

“பெரியவரையும் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு எங்கயாவது போயிற்று வரச் சொல்லுங்கோவன்.” என்றார் மனைவியிடம்.

“இதெல்லாம் நாங்க சொல்லியாப்பா தெரியோணும்?” என்று அவருக்குப் பதில் சொன்னாலும் மனம் கேளாமல் சொல்லிப் பார்த்தார்.

“தம்பி, வெளில எங்கயும் போயிற்று வாங்கோவன்.”

“எங்க அம்மா போறது? மாமியாக்களும் பின்னேரம் இங்க வருகினம்தானே.” என்றான் அவன் அக்கறையற்ற குரலில்.

‘பாத்தீங்களா’ என்பதுபோல் கணவரைப் பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்துகொண்டார் அவர்.

பின் மதியத்தில் நந்தினி வீட்டினர் வந்தனர். சிவரூபனும் நந்தினியும் தியேட்டருக்குச் சென்றுவிட்டார்களாம் என்று கதைத்துக்கொண்டு இருந்தவர்களின் கவனத்தை நிலவனின் சிரிப்பும் துடினமும் கவர்ந்தது. கூடவே, ஒரு சிரிப்போ, பேச்சோ இல்லாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இன்னும் முழுதாக ஒன்றும் சரியாகவில்லை என்பதும் தெரிந்தது.

error: Alert: Content selection is disabled!!