மணப்பெண் மண்டபத்துக்கு வந்தபோது அவளோடுதான் கானவியும் வந்தாள். அவர்களின் திருமணத்தின்போது நிமிர்ந்து பார்க்கவும் மறுத்தவன் இன்று அவள் மேலிருந்து விழிகளை அசைக்க முடியாமல் நின்றான்.
சிவரூபனின் திருமணத்திற்கு என்று அவன் எடுத்துக்கொடுத்த சேலையில், அளவான அலங்காரத்தில் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள் அவள். இது, அவள் மனதும் மாறுகிறது என்பதன் அடையாளமா?
அவளைக் கண்டுவிட்ட நிலவன், “அம்மா… ம்மா” என்று அவளிடம் ஓடிவிடத் துடித்தான். அவர்கள் புறமாகத் திரும்பிய கானவி, கணவனின் பார்வையைக் கண்டு ஒருகணம் தடுமாறி, வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள்.
செந்தாளனுக்குள் புது இரத்தம் பாய்ந்த உணர்வு. இப்படியொரு பார்வைப் பரிமாற்றத்தைப் பரிமாறி எத்தனை நாள்களாயிற்று? அவன் விழிகள் அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவளையே தொடர்ந்தன.
நல்லபடியாகவே திருமணம் முடிந்தது. சேலையை முறையாக மடிப்பெடுத்து, அயர்ன் செய்து, வெகு நேர்த்தியாக அணிவித்து, முக அலங்காரம், சிகை அலங்காரம் என்று அனைத்திலும் வெகு நேர்த்தியைக் கையாண்டிருந்தாள் கானவி. பிடித்ததை முறையாகக் கற்றுச் செய்கையில் அது வெளிப்படும் அழகு தனி என்பது பார்க்கவே தெரிந்தது.
“சும்மாவே இந்த விசயத்தில அவள் கெட்டிக்காரிதானே.” என்று, அவளை அறிந்தவர்கள் பெருமையாகப் பேசி மகிழ்ந்தனர். எல்லோரும் பாராட்டியபோது அவள் முகத்தில் அத்தனை பெருமிதமும் பூரிப்பும். இந்த ஒரு அங்கீகாரத்துக்காகத்தானே அத்தனை போராட்டமும்.
அவளும் கணவன் மகனோடு மேடையேறி மணமக்களுக்குப் பரிசு கொடுத்து வாழ்த்தினாள். செந்தாளனும் குமரனை அணைத்துத் தன் வாழ்த்தைத் தெரிவித்தான்.
“லதா, அண்ணாவை விடாத. முழு இலங்கையும் டூர் கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்னவர் எல்லா? கலியாணம் முடிஞ்ச கையோட ஆள இழுத்துக்கொண்டு போயிடு.” என்று தூண்டிவிட்டுச் சிரித்தாள் கானவி.
“என்ர மனுசி ஆசைப்பட்டாள் எண்டா இலங்கை டூர் என்ன ஐரோப்பா டூரே கூட்டிக்கொண்டு போவன். அவளின்ர கண்ணில ஒரு துளி கண்ணீர் கூட வரவிடமாட்டன், பார்.” காதல் கைகூடிவிட்ட சந்தோசத்தில் துள்ளலாகச் சொன்னான் குமரன்.
“அடியேய் அண்ணி, இத மட்டும் நம்பாத! சின்ன வலி, ஏமாற்றம், துயர், துன்பம், துரோகம், காயம் எல்லாத்துக்கும் ரெடியா போ. காலியாண வாழ்க்கை எண்டதும் சும்மா கண்ணை மூடிக் கனவு காணாத. கைல வச்சுத் தாங்குவன், கண்ணுக்க வச்சுப் பாப்பன் எண்டு சொல்லுறது எல்லாம் பொய். நாங்க வளக்கிற கற்பனைகளும் பொய். சண்டை, சச்சரவு, சமாதானம் இதுதான் வாழ்க்கை. அண்ணாவை நம்பாத. திரும்ப திரும்பச் சொல்லுறன் கேளு நம்பாத நம்பாத நம்பாத!” என்று அவள் என்னவோ வாழ்வின் நிதர்சனத்தைப் பகடியாகத்தான் சொன்னாள்.
ஆனால், அதிலிருந்த உண்மை செந்தாளனைச் சுட்டது. அவனுக்கு முகம் சுண்டிப் போயிற்று. அதுவரையில் அவனை ஆட்கொண்டிருந்த ஒருவித உல்லாச மனநிலை அப்படியே மறைந்துவிட, மேடையை விட்டு இறங்கியவன் சிணுங்கிய மகனோடு அங்கிருந்த மாப்பிள்ளையின் அறைக்குள் புகுந்துகொண்டான்.
மகளை அப்படிக் குடும்பமாகப் பார்ப்பது விசாலாட்சிக்கு மிகுந்த நிறைவைக் கொடுத்திருந்தது. அதில் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவர் மேடையில் வைத்து மகள் தமையனிடம் என்னவோ சொன்னதையும், அதைக் கேட்ட செந்தாளனின் முகம் மாறிப்போனதையும் கவனித்திருந்தார். இதில் அவன் மகனோடு ஒதுங்கிக்கொண்டதும் சேர மகளைத் தனியாகப் பிடித்தார்.
“அம்மாச்சி, இப்ப என்னவோ தம்பி இறங்கி வந்திருக்க நீங்க முரண்டு பிடிக்கிற மாதிரி இருக்கு. முதல் அவர் முரண்டு பிடிக்கேக்க உங்களுக்கு எவ்வளவு வலிச்சது எண்டு யோசிங்கோ. அதே மாதிரித்தான் இப்ப அவருக்கும் இருக்கும். இப்பிடியே ரெண்டு பேரும் காலத்துக்கும் முகம் பாக்காம இருக்கப் போறீங்களா? இல்லைதானே? அவரும் மாறி இருக்கிறார். இண்டு முழுக்கத் தம்பிய அவர்தான் வச்சிருந்தவர், பசிக்கும் நித்திரைக்கும் உங்களிட்ட வரப்போறன் எண்டு அழுதும் விடேல்ல. அதின்ர அர்த்தம் நீங்க உங்கட வேலைய எந்தத் தொந்தரவும் இல்லாமச் செய்யட்டும் எண்டு அவர் நினைக்கிறார் எண்டுறதுதான். அப்பிடி உங்கள விளங்கி நடக்கிறவரை நீங்க திரும்ப திரும்பக் காயப்படுத்தக் கூடாது.” அதற்குமேல் அங்கே வைத்துப் பேச முடியாது என்பதில், “குமரன் வெளிக்கிட்ட அறைக்கதான் போனவர். என்ன எண்டு போய்ப் பாருங்கோ.” என்றுவிட்டுப் போனார்.
தன் வாழ்க்கையில் உணர்ந்த உண்மையை அவள் என்னவோ இயல்பாய்த்தான் சொன்னாள். அதற்குக் கணவனின் முகம் மாறியதையும் கவனிக்காமல் இல்லை. உள்ளுக்குள் திக் என்று இருந்தாலும் ‘நான் ஒண்டும் பொய்யைச் சொல்லேல்லையே’ என்றுதான் உள்ளுக்குள் சிலுப்பிக்கொண்டாள். அதுவே அன்னை எடுத்துச் சொன்னபிறகும் அப்படி இருக்க முடியவில்லை. மகனையும் பசியாற்றவேண்டி இருந்ததில் அவர்களிடம் சென்றாள்.
நிலவன் உறங்கியிருந்தாலும் என்று அந்த அறையின் கதவைச் சத்தமில்லாமல் திறந்து, எட்டிப் பார்த்தாள். பால் போத்தல் அருந்தப்படாமல் பக்கத்தில் கிடக்க, வாயில் சூப்பியை அடைத்துக்கொண்டு, மல்லாந்து கிடந்த தந்தையின் நெஞ்சில் முகம் புதைத்து, குப்புறப் படுத்தபடி உறங்க முயன்றுகொண்டிருந்தான் நிலவன். அவன் சூப்பியைச் சூப்பும் வேகமும், அதனால் ‘ம்ம்’ என்று எழும்பும் சத்தமும் அவன் பசியின் அளவைச் சொல்ல, அவள் நெஞ்சு தவித்தே போயிற்று. கோவிப்பானோ என்று கலக்கத்துடன் கணவனைப் பார்த்தாள்.
ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து, வேட்டி சட்டையில் கட்டிலில் குறுக்காகப் படுத்துக் கிடந்தவன் நெஞ்சில் படுத்திருந்த மகனின் முதுகை வருடி விட்டுக்கொண்டிருந்தான். இவள் வந்ததும் விழிகளைத் திறந்து பார்த்தான். அவளுக்குள் மெல்லிய பதற்றம். அவர்களை நெருங்கி, அவன் முகம் பாராமல் மகனைத் தூக்கிக்கொண்டு கட்டிலின் மற்ற பக்கத்தில் சென்று அமர்ந்து, பசியாற்றினாள்.
அதுவரைக்கும் அப்படியே கிடந்தான் செந்தாளன். அசையவில்லை. கோபமோ, மகனுக்குப் பசியாற்றி முடிக்கட்டும் கதைப்போம் என்று காத்திருக்கிறானோ என்று ஓட, “தம்பி போத்தல் பால் குடிச்சிருப்பான் எண்டு நினைச்சன்.” என்றாள் மெல்லிய குரலில். அவன் அதற்கும் ஏதும் சொன்னான் இல்லை.
நல்ல பசியில் இருந்ததாலோ என்னவோ, பசியாறி முடியும் நேரத்திலேயே உறங்கி வழிந்தான் நிலவன். ஆனாலும் ஏவறை எடுக்க வைத்து, கொஞ்ச நேரம் தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடி அங்கும் இங்குமாக நடந்தாள். அவன் நன்றாக உறங்கிவிட்டான் என்றதும் சத்தமில்லாமல் கொண்டு வந்து, கணவனின் அருகில் மெதுவாகக் கிடத்தினாள்.
அவன் பார்வை அவள் மீதே இருந்தது காரணமா, இன்று முழுக்க வேட்டி சட்டையில் கம்பீரமும் களையுமாக நடமாடியவன் அவளையும் பாதித்தது காரணமா தெரியவில்லை, மகனைக் கிடத்திவிட்டு நிமிர்ந்தவள் தடுமாறி, சமாளிக்கப் பார்த்தும் முடியாமல் கணவனின் மீதே விழுந்திருந்தாள்.
“பாத்து!” என்றான் அவன் அவளை விடாமல் பிடித்தபடி. அவளுக்கு முகம் சிவந்தே போயிற்று.
அவளை எழுப்பிவிட அவன் முயலவே இல்லை. சற்று முன்னர் மகனை எப்படி மார்பில் தாங்கி இருந்தானோ இப்போதும் அப்படியே அவளை ஒற்றைக் கரத்தால் அணைத்தபடி அப்படியே கிடந்தான். அவளுக்குத்தான் படபடவென்று ஆகிப் போயிற்று.
எழுந்துகொள்ள முயன்றாள். முடியவில்லை. அவள் தடுமாறுவதைப் பார்த்தவன் அவளோடு சேர்ந்து மகனுக்கு மற்றப்பக்கம் சரிந்து அவளைக் கட்டிலில் கிடத்தினான். நிறைய நாள்களுக்குப் பிறகு அனுபவித்த கணவனின் அண்மையில் அவளுக்கு மூச்சடைத்த நிலை. மெல்ல எழுந்து பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டாள். உள்ளம் படபடத்தது. அதைச் சமாளிக்கவே அவளுக்குக் கொஞ்ச நேரம் தேவைப் பட்டது.
பழையபடி மல்லாந்து படுத்துக் கண்களை மூடிக்கொண்ட செந்தாளனின் கண்களுக்குள் சற்றுமுன் நிகழ்ந்த நிகழ்வே ஓடிற்று. உதட்டோரம் குட்டிச் சிரிப்புடன் மார்பை நீவி விட்டான். அவள் வெளியே வந்தபோதும் அவன் விழிகளைத் திறந்தான் இல்லை.
நடந்தது இவனைப் பாதிக்கவே இல்லையா? குழப்பத்துடன் அவள் பார்க்க, “என்னைப் பாத்தது காணும். போய்ப் பாக்கிற வேலையப் பார்.” என்றான் அவன் அப்போதும் விழிகளைத் திறக்காது.
அவளுக்கு மீண்டும் முகம் சிவக்கும் நிலை. அங்கிருந்து கிட்டத்தட்ட ஓடினாள். அவன் முறுவல் இப்போது நன்றாகவே விரிந்து போயிற்று. மீண்டும் மனத்தில் இதம் பரவிற்று.

