எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 16

அத்தியாயம் 16

மேகத்தில் முகம் மறைக்கும் முழுமதி வேண்டாம்…

இரவில் மட்டும் எட்டிப் பார்க்கும் நட்சத்திரம் வேண்டாம்…

விசை இருந்தால் மட்டும் வீசிச் செல்லும் தென்றலும் வேண்டாம்…

நித்தமும் என் உயிர் தொட்டு, உணர்வுகளில் நிறைந்த என்னவள் வேண்டும்… என

அந்த மொட்டை மாடியில், ஒற்றையாக தவித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

நிச்சய விருந்து முடிந்து அனைவரும் கிளம்பி விட, இவனும் காயத்ரியை பார்க்க முயற்சித்து விட்டான்,” டேய்! படுடா…” என கமலம் விரட்டி விட்டார்.

அது பரவாயில்லை என இரவில் எப்போதும் போல் மொட்டை மாடிக்கு காயத்ரி வருவாள் என எதிர்பார்க்க, அவளும் வரவில்லை. அவள் எப்படி வர முடியும், பகலில் அமுதினியையும் இரவில் பத்மினியையும் காவலுக்கு வைத்து விட்டார் கமலம்.

அறையில் படுத்திருந்த காயத்ரிக்குமே தூக்கம் வருவேனா என்றது. ஆறு வருடங்கள் கழித்து இந்த இரவிலாவது அவன் மார்பில் இதமாக, நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைத்திருக்க, இப்போது தாயுடன் தூங்கும் நிலைமை. “மாமா!” என்று முனகியவள் முயன்று விழிகளை மூட,

அவள் குரல் கேட்டது போல் தலைக்கு கையை கொடுத்து, வானை பார்த்து படுத்திருந்த ஸ்ரீதர் நெஞ்சை நீவிக் கொண்டே “சின்ன குட்டி என்னடி பண்ற?…” என்று தன் ஏக்கங்களை புலம்பிய படி தூங்கினார்.

அடுத்த நாளிலிருந்து வீட்டினர் அனைவருக்கும் திருமண வேலைகள் வரிசை கட்டி நின்றது. ஸ்ரீதர் முதலில் திண்டுக்கல்லில் இருக்கும் மிகப்பெரிய மண்டபத்தை புக் செய்து, மற்ற வேலைகளை ஈவன் மேனேஜ்மென்ட் குழுவிடம் ஒப்படைத்து விட்டான்.

அவனுக்கும் காயத்ரிக்கும் பிரத்தியோகமாக ஆடை வடிவமைக்க சொல்லிவிட்டான். அது சென்னையில் இருந்து நான்கு நாட்களில் வந்து விடும் என்று இருக்க, மற்றவர்களுக்கு ஆடை எடுக்க, நகை வாங்க, சடங்கு சம்பிரதாயங்களுக்கான ஏற்பாடுகளை கவனிக்க என்று கல்யாண மாப்பிள்ளையான ஸ்ரீதருக்குமே பொறுப்புக்கள் நிறைய இருந்தது.

இதில் அவன் காயத்ரியுடன் தனியாக பேசிவிடக் கூடாது என்று கண்காணிக்க ஐங்கரன் வேறு, நண்பனையும் காயத்ரிக்கு துணை இருக்கும் பெண்களையும் ஏமாற்றிவிட்டு தனிமையில் பார்த்து பேசவோ, அள்ளிக் கொஞ்சி கொள்ளவோ முடியாமல் போனது.

ஆனாலும் காயத்ரியின் பிடிவாதத்தால், அவன் கையினால் தான் பொட்டு வைத்துக் கொள்வேன் என்பவளை சமாளிக்க முடியாமல், திருமண பெண் எப்படியோ போ என்று விடவும் முடியாமல், அனைவர் முன்னிலையில் ஹாலில் வைத்து பொட்டு வைத்து விட அனுமதி வழங்கப்பட்டது.

இடையில் நந்தியாக அருகில் ஐங்கரனும் அமுதினியும் வேறு, அவர்கள் கண்களை மறைத்து அந்த நெற்றி பொட்டுக்கு முத்தம் வைப்பது கூட முடியாத காரியமானது.

இருந்தும் விடுவானா காதல் கள்ளன், ஒற்றை கையினால் அவள் கன்னம் பற்றி, அழுத்தமாக ஆசையாக தடவி, நெற்றியில் பொட்டு வைக்கின்றேன் என்று அவள் புருவம் நீவி, கண்கள் தொட்டு, காது மடல் தீண்டி என்று ஸ்ரீதர் செய்யும் சில்மிஷங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

நாணத்தில் உடல் சிலிர்த்து சிவந்து போகும் காயத்ரிக்கு. அந்த இதம் வேண்டும் என்பதற்காக ஒரு நாளில் பலமுறை முகம் கழுவினாள். அப்போது தானே புதிதாக பொட்டு வைத்துவிட சொல்லி மாமனின் முன்பு போய் நிக்க முடியும்.

ஒரே நாளில் இருவரின் கள்ளத்தனத்தை கண்டு கொண்டனர் ஐங்கரனும் அமுதினியும். எனவே அடுத்த நாள் ஐங்கரனோ “அடேய் அவ கனனம் தொடாம இத்துனூண்டு பொட்ட வச்சு விட முடியாதா?…” என்று ஸ்ரீதரின் மற்றைய கையைப் பிடித்துக் கொள்ள,

ஸ்ரீதரோ “டேய்! ஒரு பிடிமானத்துக்கு கன்னத்த புடிச்சிக்கிறேன் அது ஒரு குத்தமா?…” என்று கேட்க

“ம்க்கும்! மலைய புரட்டி போட போற பிடிமானத்துக்கு எதையாவது பிடிச்சுக்க.. நீ கன்னத்தையே கட்டிப்பிடிக்கிற மாதிரி தான் புடிக்கிற.. இப்படியே வச்சு விடு…” என்று ஸ்ரீதரை இழுத்து பிடிக்க

அழுத்துக் கொண்டு ஏக்கமாக எட்டி நின்று பொட்டை வைத்து விட்டான். அதை பொறுக்க முடியாத காயத்ரி, அரை மணி நேரத்தில் முகத்தை கழுவ போக, முற்கூட்டியே சுதாரிச்ச அமுதினி, அவள் நெற்றியில் இருந்த பொட்டை எடுத்து தன் கையில் ஒட்டிக்கொண்டவள்,

“இப்ப போய் முகத்த கழுவு.. ஓயாம உன் மாமன் முன்னாடி உன்ன கொண்டு போய் நிறுத்த முடியாது.. எந்த பொட்ட வைக்கிறது என்ற குழப்பத்துல தானே அண்ணன் முன்னாடி போற.. இனி அந்த குழப்பமே வேணாம் காலையில வைக்கிற பொட்ட இரவு வரைக்கும் உன நெத்தில வச்சுக்க…” என்று காயத்ரியின் திட்டத்தில் மண்ணள்ளி போட, முகத்தை சுருக்கி அவளை முளைத்தவள் வேறு வழியில்லாமல் அடங்கிவிட்டாள்.

அடுத்து வந்த நாட்கள் ஸ்ரீதருக்கும் வேலை அதிகமாகிவிட, அவன் வீட்டில் தங்குவது இரவில் தான். ஆடி, ஓடி ஓய்ந்து வருபவனுக்கு, அவன் பிரியமானவள் மடியில் சிறிது நேரம் தலையை சாய்க்க வேண்டும் போல் தான் இருக்கும். ஆனால் முடியாதே.

இருந்தும் அவளின் மலர்ந்த முகமும், விரிந்த புன்னகையுமே அவனை ஊட்டப்படுத்த போதுமாக இருந்தது.

அப்படியே மூன்று நாட்கள் கடந்து இருக்க, அன்று ஸ்ரீதர் வீட்டிற்கு வரவே இரவும் மணி பன்னிரண்டை கடந்து விட்டிருந்தது.

ஆசையாக அவனவள் முகம் பார்க்க ஓடி வந்தவனுக்கு, காயத்ரி தூங்கிவிட்டாள் என்று கமலம் சொல்ல, தலைவலி வேறு வந்து விட்டது. சலிப்பாக தன் அறைக்கு வந்தவனுக்கு தூக்கம் வரவில்லை. தலைவலிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டும் குறையவில்லை. தைலம் பூசல் என்றால் அதன் வாசனை அவனுக்கு பிடிக்கவில்லை.

அவள் வாசனை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. படுக்கையில் இருந்து எழுந்தவன், “ச்சே! கொஞ்ச நேரம் என் சின்ன குட்டிய கட்டியணைச்சு, அவ வாசனைய எனக்குள்ள நிறைச்சிக்கிட்டு.. உதட்டோடு உதடு வச்சு முத்தத்துல புதைஞ்சு போனா போதும்.. இத்தனை நாள் மீறாத கட்டுப்பாட்டையா இந்த நாலு நாள்ல மீற போறேன்.. இவனுங்க சாங்கியமும் இவங்களும்…” என்று பெரியவர்களுக்கு திட்டியவன் எழுந்து வெளியே வந்தான்.

வீடு நிசப்தமாக இருந்தது. மெதுவாக பதுங்கி பதுங்கி காயத்ரியின் அறையின் முன் வந்தவன், மூடி இருந்த கதவை மெதுவாக திறக்க, அவன் அதிர்ஷ்டம் திறந்து கொண்டது. உள்ளுக்குள் தாழ்ப்பாள் போடவில்லை போலும்.

‘அட இது தெரியாம இத்தன நாள் வேஸ்ட் பண்ணிட்டேனே…’ என்று மனதில் நினைத்த ஸ்ரீதர், சத்தம் போடாமல் அடி மேல் அடிவைத்து கட்டிலை நெருங்க,

காயத்ரியும் பத்மினியும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர். அவன் நல்ல நேரம் போலும் இருவரும் தள்ளி தள்ளி தான் படுத்திருந்தனர்.

மெல்லிய வெளிச்சத்தில் தன் சொந்தமானவளை தலை முதல் கால் வரை உரிமையாக ரசித்தான். திருமணமாகப் போகும் பெண் அல்லவா புடவையில் தான் இருந்தாள்.

மெரூன் நிறத்தில் புடவையும், விரித்து விட்ட கூந்தலும், அணிந்திருந்த தங்கை நகைகளும், அப்சரஸாக காயத்ரியை காட்ட, ஒரு நொடி சொக்கிபோய் காதல் மயக்கத்தில் நின்றான் ஸ்ரீதர்.

மறுக்கணமே வந்த வேலை என்ன என்பது புரிய, அழுகாமல் குலுங்காமல் தன் கைகளில் அள்ளிக் கொண்டான் அணங்கவளை.

வந்தது போன்றே சத்தம் காட்டாமல், அவளை தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேற, காயத்ரிக்கு முழிப்பு வந்து விட்டது.

கண் விழித்தவள் தான் தன் கண்ணாளனின் கைகளில் மிதப்பதை உணர்ந்து “மாமா! என்ன பண்ற?…” என்று கிசுகிசுப்பாக கேட்க

“அஹ்! உன்ன கடத்திட்டு போய் கசமுசா பண்ண போறேன்.. நான் உன்ன நெருங்க முடியாம தவிச்சு போய் சுத்துனா.. நீ பாட்டுக்கு நிம்மதியா தூங்குற ராட்சசி…” என்று அவன் அவள் கன்னத்தை கடிக்க

“ஸ்ஆ! விளையாடத மாமா.. இன்னும் மூணு நாள் தானே, அதுக்கு பிறகு உன் கைக்குள்ள தானே இருக்க போறேன்.. அந்த சந்தோஷத்துல தூங்கிட்டேன்…”

“இன்னும் மூணு நாள் தானேவா.. இதுக்கு மேல தாங்காதுடி…” என்றவன் படிகளில் ஏறுவதற்கு காலை வைக்க, அவனுக்கு பின்னே “ஸ்ரீ!…” என பத்மினியின் குரல்.

இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து பார்த்துக்கொள்ள, காயத்ரி “போச்சு போ…” என்று பதட்டமாக, ஸ்ரீதர் அசடு வழித்தபடி திரும்பினான்.

“அக்கா நீ என்ன இந்த நேரத்துல.. தூக்கம் வரலையா?…” என்று கேட்க

“நான் தூங்குறது இருக்கட்டும்.. நீ அவள தூக்கிட்டு எங்க போற?…” என்று பத்மினி கேட்க

“அது.. அது..ஹா காயூ குட்டிக்கு தூக்கம் வரலையாம்.. வெளிய வந்து நடந்துட்டு இருந்தா.. அந்த சத்தத்துல தான் தூங்கிட்டு இருந்த நான் எழுந்து வந்தேன்.. ரொம்ப நடந்தா கால் வலிக்கும்ல.. அதான் நான் தூக்கிட்டு நடந்தேன்.. இவ தூங்குனதும் நானே அறையில கொண்டு வந்து படுக்க வச்சிடுறேன்.. நீ போய் தூங்கு…” என்று வாய்க்கு வந்ததை உளற,

“எது மேல படுத்திருந்த உனக்கு கீழ இவ நடந்த சத்தம் கேட்டுச்சு.. அது கூட பரவால்ல இவ தூக்கத்துக்கு இவ நடந்தா பரவால்ல.. இவள தூக்கிட்டு நீ நடந்தா இவளுக்கு தூக்கம் வருமா..? ரெண்டு பேரும் மொட்ட மாடியில போய் கொட்டமாடிக்க வேணாம்.. கல்யாண வேலையில அலஞ்சி திரியுற நீ நேரத்துக்கு தூங்க வேணாமா?.. அவள இறக்கி விட்டுட்டு போய் தூங்கு…” என்று சொல்ல

முகத்தை சுருக்கி சலித்துக் கொண்டவன், விருப்பமே இல்லாமல் காயத்ரியை இறக்கிவிட்டு “ரெண்டு வருஷமா இந்த வீட்டுக்குள்ளேயே இவள லவ் பண்ணி.. ஆறு மாசமா மொட்டை மாடிக்கு தூக்கிட்டு போய் கொட்ட மடிச்சேன்.. அப்போல்லாம் கண்டுபிடிக்கல இப்போ என்கிட்ட இருந்து காவல் பண்றீங்களா?…” என்று போற போக்கில் உண்மையை சொல்லிவிட்டு செல்ல

பத்மினி மகளைத்தான் அதிர்ந்து பார்த்தார். காயத்ரியோ “ரொம்ப அதிர்ச்சியாகாத..அதுதான் பிரிச்சி விட்டியே…” என்று அறைக்குள் போக

“அடியே உன் பாட்டி தான் சாங்கியம்னு சொன்னாங்க.. நான் என்ன பண்றது?…” என்று பத்மினியும் மகளுடன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டார்.

ஸ்ரீதர் தான், தன் அக்கா மகளை அள்ளி தூக்கியதே போதும் என்ற ஒரு மனநிலையும், கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லையே என்ற மற்றுமொரு மனநிலையும் என்று தவித்து தாமதமாக தூங்கினான்.

இருந்தும் அடுத்த நாள் நேரத்துக்கு எழுந்து திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான். இன்னும் இரண்டு தினங்களில் திருமணம் என்பதால் தூரத்து உறவுகள் வர ஆரம்பித்து விட்டனர்.

வீட்டில் அலங்காரம், மண்டபத்தில் அலங்காரம் என்று அனைத்தையும் மேற்பார்வை பார்க்க ஓடிக்கொண்டிருந்தான் ஸ்ரீதர் ஐங்கரனுடன். அப்படி வெளியே வந்திருந்தவன் பைக் ஓரிடத்தில் திடீரென நின்று விட,

“என்னடா என்னாச்சு?…” என்று ஸ்ரீதர் கேட்க

“தெரியலடா திடீர்னு நின்னுருச்சி…” என்ற ஐங்கரனும் ஸ்டார்ட் செய்ய முயற்சித்துப் பார்க்க முடியவில்லை.

ஸ்ரீதரும் முயற்சி செய்து பார்த்தவன் “மெக்கானிக்க வரச்சொல்லிதான்டா பாக்கணும்…” என்க

“ம்ம், ஆமா.. நான் ஃபோன் போட்டு வரச் சொல்றேன்…” என்ற ஐங்கரன் மெக்கானிக்கு அழைத்து தாங்கள் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்ல,

அது சரியாக ஸ்ரீதரின் தென்னந் தோப்புக்கு எதிர் வீதி என்பதால் “டேய் தோப்புக்கு வரச் சொல்லு.. வெயிலா வேற இருக்கு…” என்று சொன்ன ஸ்ரீதர் மெதுவாக தோப்பினுள் நுழைந்தான்.

ஐங்கரன் மெக்கானிக் வரவும் வண்டியை அவனிடம் விட்டவன், ஸ்ரீதரை தேடி தோப்பினுள் வர, அவன் மோட்டார் அறையின் பின், கொன்றை மரத்திற்கு கீழே கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்தான்.

“என்னடா வெயில் ரொம்ப வாட்டுதோ?…” என்று ஐங்கரன் கேட்க

“இல்லடா வேல களைப்பு தான்.. இளநீ பறிக்க சொல்லுடா?…” என்று ஸ்ரீதர் சொல்ல, ஐங்கரன் அங்கு வேலை செய்பவர்களை தேடிச் சென்றான்.

இதே சமயம் கோயிலுக்கு சென்று விட்டு அமுதினியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த காயத்ரி கண்ணில் ஐங்கரன் வண்டியை சரி செய்யும் மெக்கானிக் பட்டுவிட

“அண்ணா! இது ஐங்கரன் அண்ணா வண்டி தானே?…” என்று கேட்க

“ஆமாம்மா..ஐங்கரனும் உன் மாமாவும் தோப்புக்குள்ள தான் இருக்காங்க…” என்று சொல்ல

காயத்ரி அமுதினியிடம் “ஏய் வாடி போய் மாமாவ பாத்துட்டு போகலாம்…” என்று அழைக்க

“அடியே இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல.. ஒரே வீட்டுல இருக்கிற மாமன, என்னவோ ஓராயிரம் வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி பாக்க துடிக்கிற…” என்று கேட்க

“அது உனக்கு சொன்னா புரியாது.. இப்ப வரப் போறியா இல்லையா?…” என்று காயத்ரி ஆடம் பிடிக்க

“நீ போய் பாரு.. நான் அந்த டெய்லர் அக்கா வீட்ட போய் ஜாக்கெட் ரெடியானு கேட்டுவிட்டு வாரேன்…” என்று ஐங்கரன் கூட இருக்கின்றான் தானே என்று நினைத்து காயத்ரியை தனியாக அனுப்பி வைக்க,

மாமனைத் தேடிக் கொண்டே, கொலுசு சினுங்க தனியாக வரும் அக்கா மகளை பார்த்தவன் கண்கள் ஜொலிக்க, குதூகலமானான்.

ஆறு வருடங்களுக்கு முன் இதே கொன்றை மரத்தின் கீழ் இருவரும் கயிற்று கட்டிலில் கட்டிக்கொண்டு கிடந்தது நினைவுக்கு வர, அவள் பார்க்கும் முன் தூங்குவது போல் கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டான்.

கள்ளத்தனமாக அவளை பார்க்க வேண்டும் என்பதால் ஒற்றை கையை மடித்து முகத்தை மூடிக்கொண்டான்.

காயத்ரியும் மோட்டார் அறையின் பின், கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் மாமனை கண்டு புன்னகைத்தவள், மகிழ்ச்சியாக துள்ளிக் கொண்டு அவன் அருகில் வந்தாள். அவளையுமே பழைய இனிய நினைவுகள் தாக்கின.

ஆனால் ஐங்கரன் கூட இருப்பதாக மெக்கானிக் சொன்னதால், சுற்றி முற்றி அவனை தேடிக் கொண்டிருக்க, ஸ்ரீதரோ கள்ளத்தனமாக தன் காயூ குட்டியை பார்த்தவன், ‘செம்மையா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சும் சுத்திமுத்தி என்னத்த தேடி நேரத்த வேஸ்ட் பண்ற…’ என்று கடுப்பானவன்

நின்றிருந்தவளின் காலை தன் காலால் இடறி விட, அதை எதிர்பாக்காதவள் அவன் மீதே மலர் கொத்தாக விழுந்தாள். அவளை தன்னில் தாங்கி பிடித்தவன், அவளின் மெல்லிடையோடு கையை போட்டு இறுக்கிக் கொண்டவன், “ஏன்டி என்ன பாத்ததும் ஓடி வந்து என்மேல விழுந்து.. இறுக்கி அணைச்சு உம்மா தருவனு பாத்தா.. சும்மா நேரத்த கடத்துற…” என்று கேட்க

“ஐயோ! விடு மாமா.. யாராச்சும் பாக்க போறாங்க…” என்று காயத்ரி நெளிய,

“அதத்தான் நானும் சொல்றேன்.. யாராச்சும் வர முன்னாடி அழுத்தமா ஒரு முத்தம் குடு…” என புடவையினூடு தெரிந்த அவள் வெற்றிடையில் அழுத்தத்தை கொடுக்க,

அதற்குள் ஐங்குரன் “ஸ்ரீ!” என இளநீருடன் வந்தான். ஐங்கரனின் சத்தம் கேட்டு ஐயோ என எழுந்து கொள்ள முயன்ற காயத்ரியை விடாமல் சட்டமாக ஸ்ரீதர் படுத்திருக்க,

மோட்டார் அறையை சுற்றி வந்த ஐங்கரன் “என்னடா இது!…” என்று அதிர்ந்து நிற்க

“பாத்தா தெரியல.. லவ் பண்றேன்…” ஸ்ரீதர் அசராமல் பதில் சொல்ல

காயத்ரிக்கு தான் அய்யோ டா என்று இருந்தது. நல்ல வேலையாக ஸ்ரீதரின் கைய அவளின் தோளில் தான் இப்போது இருந்தது. மொத்தமா அவன் மேல் இல்லாமல் சற்று சரித்து படுக்க வைத்திருந்தான்.

ஆனாலும் அவள் தலை அவன் மார்பில் தானே இருந்தது. பெண்ணவள் கூச்சத்தில் நெளிய,

கட்டிலில் படுத்திருக்கும் இருவரையும், அவர்களை இரு கைகளிலும் இளநீருடன் அதிர்ந்து பார்த்திருக்கும் ஐங்கரனையும் பார்த்தபடி வந்த அமுதினி “யோவ்! கூறுகெட்ட மாமா!.. உங்கள நம்பி தானே இவள தனியா அனுப்பினேன்.. இப்படி ஒட்டிக்கிட்டு கிடக்காங்க பாத்துட்டு இருக்கீங்க…” என்று ஐங்கரனுக்கு திட்ட

“எது யோவ் மாமாவா! சரிதான்.. உன்ன நம்பி தானே காயத்ரிய பாத்துக்க சொன்னாங்க நீ என்ன பண்ணுன?…” என்று ஐங்கரன் கேட்க

“நான் சரியாத்தான் பாத்துகிட்டேன்.. நீங்கதான் பேயன் பிராக்கு பாக்குற மாதிரி விட்டுட்டு இருக்கீங்க…” என்று இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க

காதல் கிளிகள் இருவரும் எழுந்து கொள்ளும் எண்ணமே இன்றி ஒருவரை ஒருவர் கொஞ்சிக் கொண்டிருக்க, திரும்பி பார்த்தா ஐங்கரன் “நம்ம ரெண்டு பேர் சண்டைய பிறகு பாத்துக்கலாம்.. முதல்ல இதுங்கள பிரிச்சு விடு…” என்று சொல்ல

அமுதினி காயத்ரியை பிடித்து இழுக்க, ஐங்கரன் ஸ்ரீதரை பிடித்து இழுக்க என்று இருவரையும் பிரித்து ஆளுக்கு ஒரு பக்கம் அழைத்து சென்றனர்.

error: Alert: Content selection is disabled!!