ஏதனின் இலஞ்சியவள் 15 – 1

விரிவுரை நேரத்தில் ஏதன் வந்து குழப்புவானோ என்றதே அதுவரை துர்காவை நிலையற்றுத் தவிக்க வைத்திருந்தது. 

அப்படி என்ன அவசரமாக அவளோடு கதைக்கக் கிடக்காம்? ஏதாவது கதைக்கட்டும், ‘உனக்கும் உன்ர ரெஸ்டோரண்டுக்கும் கும்பிடு’ என்று, நறுக்கென்று சொல்லிவிட்டுத்தான் மறுவேலை என்ற முடிவில் இருந்தாள்.  யோசிக்க யோசிக்க ஏதன் குடும்பத்தினர் துச்சமாகப் பார்த்தது, பேசியது எல்லாம் அவளை வெகுவாகவே சீண்டின. அதுவோ என்னவோ, என்ன என்றாலும் முகம் கொடுக்கலாம் என்ற மனநிலையைக் கொடுத்திட்டு. 

உன்னிடம் அளவுக்கு அதிகமாகவே காசு இருக்கோ பதவியும் பொறுப்பும் பிரபல்யமும் இருக்கோ இருக்கட்டும். அது இல்லை என்றதில், அவர்களை விடவும் குறைவாக இருப்பதில் இங்கு ஒருவரும் குறைந்து போகவில்லையே! அதை அவனுக்கு நான்கு வார்த்தைகளில் சரி உணர்த்திட வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

அப்படி இருக்க இப்போது நடப்பது என்ன?  சர்ரென்று துளைத்து மனத்தை அலசிவிடும் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலாது இவள் பார்வைதான் அங்கும் இங்குமாக அலைந்தது. கால்கள் மட்டும் அவனை நோக்கி வேகமாகச் சென்றன. 

அவளுள் இக்கணம் உழன்று திரிவது எவ்வகையிலான உணர்வுகளென்று அவளுக்குச் சட்டென்று இனம் காண முடியவில்லை. 

இவள் நிலை தெரியாது அவள் கரம் பற்றிக்கொண்டு வேகமாக நடந்தாள் இவள் நண்பி. 

“ஓ கோட் துர்கா,  உன்னைத் தேடியா ஆரோன்ட மகன் வந்திருக்கிறார்?” என்றவள் துள்ளிக்குதிக்காத குறைதான். 

“துர்கா துர்கா துர்கா என்னையும் அறிமுகம் செய்து வை சரியோ?” அவள் கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, அவளையும் தள்ளிக்கொண்டு பாதையைக் கடந்தாள்.

 “எனக்கும் ஒரு வேலை எடுத்துத் தா துர்கா.” என்றபடி வந்தவளுக்கு, நண்பியில் நம்பிக்கை வரவில்லை. இவளை முந்திச்சென்று தன்னைத்தானே அவனிடம் அறிமுகம் செய்துகொண்டாள்.

அவளோடு கதைத்தாலும் ஏதன் பார்வை துர்காவில்.  துளைத்தது. 

அவள் நெருங்கவும் “கெட் இன் துர்கா!” கார் கதவைத் திறந்துவிட்டு சற்றே விலகி நின்றான்.  நண்பியோ  இருவரையும் ஆவென்று பார்த்தாள்.

“ஹேய்ய்ய் துர்கா, இதெல்லாம் எப்பிடி? நீ சொல்லவே இல்ல. மிஸ்டர் ஏதன்… உனக்கு… எப்பிடி இந்தளவுக்குப் பழக்கம்? சொல்லு சொல்லு?” துர்கா கைப்பற்றி அவள் கேட்கையில், அவனோ, அவள் கேட்ட விதம் ஏற்படுத்திய முறுவல் அடக்கத்தோடு உதடுகளை உரச,  அவளுக்கு ஒரு தலையசைப்பைக்  கொடுத்துவிட்டுச் சுற்றி வந்து சாரதி ஆசனத்தை நிறைத்திருந்தான். கார் கூட உயிர்பெற்றிருந்தது.

துர்கா அப்படியே நின்றாள். ஏதனை இங்குக் கண்ட போதிருந்த மனநிலை மெல்ல மெல்ல மாறிவிட்டிருந்தது. அவன் பார்வை ஏற்படுத்திய தாக்கம் மெல்ல மெல்ல விலகிச்சென்றிட்டு. அவன் உதிர்த்த ‘கெட் இன்’ என்ற இரு வார்த்தைகளும் அவன் உடல்மொழி, பார்வையும் அவள் மனநிலையை ஒரு நிலைப்படுத்தி இறுக்கத்தைப் போர்த்திக்கொள்ள வைத்திருந்தது.  

அவன் காரில் ஏறும் நோக்கம் எல்லாம் அவளிடம் இல்லை. நண்பியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் எண்ணமும் இல்லை.

தன் வலக்கை மணிக்கட்டில் அழுத்தப் பற்றியிருந்த தோழியின் கரத்தைப் பிரித்தெடுத்துவிட்டவளுக்கு நல்ல நிதானம் வந்திருந்தது. 

“ப்ளீஸ், கொஞ்ச நேரம் வாயை மூடிக்கொண்டு நில்லு. இந்தா வாறன்.” என்றவள், விறுவிறுவென்று சாரதியாசனத்தின் பக்கமாக நகர்ந்தாள். 

ஏதன் பார்வை அவளில்தானே இருந்தது. புருவங்கள் கேள்வியாக உயர, அவன் புறக் கண்ணாடியும் கீழே இறங்கியது. 

அதே துளைக்கும் பார்வைதான், சற்றே குனிந்து அவன் பார்வையைத் தீர்க்கமாக எதிர்கொண்டாள்.

துர்க்காவின் நண்பி மறுபுற யன்னலால் தலையை விட்டாள். “எனக்கும் பார்ட் டைம் வேலை ஒண்டு தாங்கோ ஏதன்.” அவள் சந்தர்ப்பத்தை விடுவதாக இல்லை.

அதற்குத் துர்காவைப் பார்த்தவன் சிரித்தான். “ஏன் இல்லாமல்? துர்காட ஃப்ரெண்ட் எண்ட ஒண்டுக்காகவே வேலை ரெடியா இருக்கு. ஒண்டு செய்யுங்களன், இண்டைக்குப் பின்னேரம் துர்கா வேலைக்கு வரேக்க நீங்களும் வாங்க. அப்ப மற்ற விபரங்களையெல்லாம் கதைக்கலாம். ” என்றதும் அவளோ, “ஓ  மை கோஷ்!” நெஞ்சில் கை வைத்துக்கொண்டு நின்றாள்.

துர்கா முகம் இறுகியது. ‘உனக்கு இருக்கு.’ தோழியை முறைத்தாள்.

“எனக்கு இப்ப வேற வேலை இருக்கு சேர். லைப்ரரிக்கு போகோணும். உங்களுக்கு அப்பிடி என்ன என்னோட கதைக்க இருக்கு எண்டு தெரியாது. என்ன எண்டாலும்  பின்னேரம் ரெஸ்டோரண்ட் வருவன், கதைக்கலாம். பை சேர்” என்றவள் உதடுகள், மனத்தை எட்டாத சிறு முறுவலையும் சிந்தியிருந்தது. 

நகர எத்தனித்தாள். முடியவில்லை. எப்போது அவன் இறங்கினான் என்று உணர முதல் இறங்கியிருந்தான், ஏதன். அது மட்டுமா? அவள் வலது கை அவன் கைக்குள் அகப்பட்டிருந்தது. 

அதிர்ந்து போய்ப் பார்த்தாள்  துர்கா. ஏதன் மிதப்பான பார்வையோடு நின்றான் என்றால், வாயைக் கையால் பொத்திக்கொண்டு முழியை உருட்டிக்கொண்டு நின்றாள், இவள் நண்பி. 

“ஏதன் இதென்ன விளையாட்டு?” அடிக்குரலில் சீறினாள், துர்கா.

“இப்பதான் நான் ஏதன் எண்டு நினைவு வருது போல!” அநியாயத்திற்கு வியப்புக்குக் காட்டினான்.

“இஞ்ச பார் துர்கா,  எனக்கும் உன்னோடு விளையாட விருப்பம் இல்ல. நேரமும் இல்ல. எனக்கு இப்பவே உன்னோட கதைக்கோணும், வந்து கார்ல ஏறு.” என்றவன், “இல்லையோ…” என்றபடி பிடியை அழுத்தினான். “தூக்கி இருத்திட்டுப்  போய்க்கொண்டே இருப்பன்.” அவள் முகத்தருகில் வந்து முணுமுணுத்தவன், அதே நிலையில் நின்று  அந்தச் சுற்றத்தில்  பார்வையை ஓட்டியவன்  விழிகள் சுருங்க நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

 

error: Alert: Content selection is disabled!!